நூல் பெயர் : புளிப்புக்கனிகள்
(சிறுகதைகள்)
ஆசிரியர் : சி.எம்.முத்து
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
208
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 300
வாய்மொழி மரபில் பரவிய கதைகளே இன்றும் பெரும்பான்மை மக்களால் பேசப்பட்டும்,
வாழ்க்கை நெறியாக மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. தமிழ் மரபு, காவியங்களை அடிப்படையாகக்
கொண்டிருந்த காலத்தில் வாய்மொழி மரபு கதைகளை விஞ்சும் வகையில் எழுத்தில் கதைகள் உருவாக்கப்படவில்லை.
இருப்பினும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழில் உரைநடை இலக்கியம் அறிமுகமானபோது
சிறுகதையும் தனக்கென தனி வடிவம் பெற்று வளரத்தொடங்கியது. வாய்மொழி மரபையும் ஆங்கில
இலக்கியத்தின் வழியாகப் பெறப்பட்ட வடிவத்தையும் கொண்டு உருவானதுதான் நவீன சிறுகதை வடிவம்.
கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்தில் சிறுகதை என்ற வடிவம் பெற்றுள்ள மாற்றம், செழுமை,
வளர்ச்சி, வடிவச்சோதனைகள், பரிசோதனை முயற்சிகள் போன்றவை பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன.
அதில் ஏராளமான படைப்பாளிகளும் அவர்களின் படைப்புகளும் தோன்றி இன்று, சிறுகதை என்பது
தமிழ் இலக்கிய வரலாற்றில் பிரிக்க முடியாத சக்தியாக உருவாகி முத்திரைப் பதித்துக்கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட முத்திரைப் பதிக்கும்படியான சிறுகதைகளை எழுதிவரும் எழுத்தாளர் சி.எம்.
முத்து அவர்களின் சிறுகதைகளை ஒன்றுதிரட்டி உருவாக்கியிருப்பதே “புளிப்புக்கனிகள்” நூல்.
தஞ்சாவூர் மாவட்டம், இடையிருப்பு கிராமத்தில் பிறந்த எழுத்தாளர் சி.எம். முத்து
அவர்கள், 1970 முதல் இன்று வரை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும், எழுதிக்கொண்டிருக்கும்
பாடைப்பாளர். தன் இலக்கியப்பயணத்தில் 300 க்கும் அதிகமான சிறுகதைகளையும், 11 நாவல்களையும்
எழுதி தடம் பதித்திருக்கிறார். தன் எழுத்திற்காக கதா விருது, இலக்கியச் சிந்தனை விருது,
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வருகை தரு இலக்கிய ஆளுமை விருது, பேசும் புதிய
சக்தியின் சிறந்த எழுத்தாளுமை விருது, இந்து தமிழ் திசையின் தமிழ் திரு விருது
2022 என பல விருதுகள் இவரை அலங்கரிக்கின்றன.
பாசாங்குத்தனமில்லாத எழுத்து நடை சி.எம்.முத்துவினுடையது. தஞ்சை மண்ணின் அடித்தள
அழகை அதன் முரண்களை அற்புதமாக வெளிக்கொணர்ந்த மண்மணம் மிக்க வீரியமான படைப்பாளர். இவரின்
எழுத்து நேர்த்தியான எளிய நடையில் ஒருவித இனிமை தரும் பேச்சுமொழியில் தஞ்சை வட்டாரத்
தமிழின் வெவ்வேறு சாயல்களுடன் கூடியது. எதார்த்தமாகக் கண்டதை எதார்த்தமாகக் பதிவு செய்வதில்
வல்லவரான சி.எம்.முத்து அவர்கள், காவிரிப் படுகையின் கதையை உலகிற்கு சொல்லவேண்டுமென்ற
உயிர்த்தவிப்போடு எழுதி வருபவர்களில் முதன்மையானவர். மேலும், இவர் எழுதிய ‘மிராசு’
மற்றும் ‘சோழகர்’ நாவல்கள் சாகித்திய அகாதமி பட்டியலில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.