நூல் பெயர் :
தோணி
நூல் வகைமை : நாவல்
ஆசிரியர் :
ஆகிரா
பதிப்பு :
முதற் பதிப்பு - 2025
பக்கங்கள் :
178
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 250
மனிதர்களிடையே
கதை சொல்லவும், வாழ்வியலைப் பகிர்வின் வழியே கடத்தவும், கதை மாந்தர்களின் நகர்வுகளில்
கலாச்சார ரீதியாக ஒன்றிணைக்கவும் முடிகின்ற ஒரு பொக்கிஷமான மற்றும் முக்கியத்துவம்
வாய்ந்த இலக்கிய வடிவமே நாவல். பொதுவாக நிகழ்வுகளின் வரிசையைப் பின்பற்றுகின்ற நாவல்கள்,
அந்த நிகழ்வுகளை கதாபாத்திரங்கள், கதை அமைப்பு, உரையாடல்கள், கடைசியில் முடிவு அல்லது
ஒரு தீர்மானம் என பல கூறுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு நாவலும் இந்த கூறுகளை ஒன்றுக்கொன்று
வேறுபட்ட அளவுகளில் கொண்டிருந்தாலும், அவை அனைத்தும் மனித நிலை மற்றும் அனுபவத்தால்
ஈர்க்கப்பட்ட தொடர் நிகழ்வுகள் மூலம் ஒரு கதையைச் சொல்கின்றன. இந்த மரபு நாவல்களுக்கு
இருப்பதாலேயே, வெகுஜன மக்களிடம் சென்றடைவது எளிதாகிறது. அப்படிபட்ட சாமானிய மக்களின்
மூன்று தலைமுறை வாழ்வியல் கதைகளை உணர்வுகளாக ஒன்றுதிரட்டி ஒரே நாவலாக உருவாக்கப்பட்டிருப்பதே
‘தோணி’ நூல்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் வேதநகர் என்னும் ஊரை பூர்வீகமாகக் கொண்ட படைப்பாளி ஆகிரா அவர்களுக்கு இது ஐந்தாவது
நூல். விலங்கியலில் முதுகலை பட்டமும், கல்வியியலில்
இளங்கலை பட்டமும், தமிழில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். வேதநகர் புனித மிக்கேல்
உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், “வீரமாமுனிவர்
பேச்சாளர் பேரவை - நாகர்கோவில்” என்ற அமைப்பின் தற்போதைய தலைவராகவும், கடந்த 27 ஆண்டுகளுக்கு
மேலாக பட்டிமன்ற பேச்சாளராக இருப்பதுடன், பல நூல்களுக்கு விமர்சனங்கள் வழங்கியும் வருகிறார்
என்பது குறிப்பிடதக்கது.