logo

இலக்கியச்சுடர் விருது


இலக்கியச்சுடர் விருது - வாருங்கள் வாழ்த்துவோம்

==================================

படைப்பாளி  பிருந்தா சாரதி அவர்கள் இதுவரை எழுதிய படைப்புகளை ஆய்வு செய்து அவரின் இலக்கியத் திறனை போற்றும் வகையில் அவர்களுக்கு 2022க்கான "இலக்கியச்சுடர்" எனும் உயரிய விருதை அளித்து படைப்பு குழுமம் பெருமை கொள்கிறது.

 

அவர் இன்னும் பல விருதுகளும் பாராட்டுகளும் இலக்கிய உலகத்தில் பெறவும் மேலும் பல படைப்புகளை இந்த சமூகத்திற்கு தந்து தமிழ் வளர்க்கவும் வாழ்த்துகிறது படைப்பு குழுமம்...

 

இப்படி விருது பெறுவோர் அனைவரும் நாம் ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கும் விழாவில் மேடையில் வைத்து சிறப்பிக்கப்படுவதுடன் ஒரு ஆளுமைமிக்க படைப்பாளியின் கையிலிருந்து விருதும் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப் படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...

 

இனி இந்த விருதை வாங்கப் போகும் எழுத்தாளர் யார் யார் என்பதை உங்களின் படைப்புகளே தீர்மானிக்கும்…

 

ஆகவே இந்த குழுவில் பதியப்படும் படைப்புகளையும், மற்றும் பயணிக்கும் படைப்பாளிகளையும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அதை ஒரு குழு தனியாக இருந்து அலசி ஆராய்ந்து தேர்வு செய்கிறது என்பதை எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

நல்ல படைப்புகளை படைப்போம்...

நம் சமூகத்தை நாமே தமிழால் இணைப்போம்...

 

வாழ்த்துக்கள் இலக்கியச்சுடர்  பிருந்தா சாரதி.

 

ஒரு மகிழ்ச்சியான செய்தி....

இனி இந்த இலக்கியச்சுடர் விருது பெரும் படைப்பாளிகளை பற்றிய குறிப்பும் நாம் ஆய்வு செய்த முறையையும் இணைத்து இதனுடன் ஒரு கட்டுரை வடிவில் இணைக்கப்படும்.

 

கவிதைகளில் சிறந்து விளங்குவோருக்கு மாதம்தோறும் கவிச்சுடர் விருது வழங்கும் படைப்பு குழுமம்

கவிதைகளோடு, மற்ற இலக்கிய வகைமைகளிலும் தொடர்ந்து சிறந்த முறையில் பங்களிக்கும் படைப்பாளிக்கு வருடத்திற்கு ஒரு முறை ஒருவருக்கு மட்டுமே வழங்கும் உயரிய விருது இலக்கியச் சுடர்என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாகவும் மற்ற படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கும். ஒரு படைப்பாளி தனக்கான ஒரு அங்கீகாரம் பெறுவதற்கு எவ்வளவு தூரம் எப்படி எல்லாம் கடந்து வருகிறார் என்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. 

 

இலக்கியச்சுடர் கவிஞர் பிருந்தா சாரதிஒரு அறிமுகம்

 

பெயர்                    

:

 

பிருந்தா சாரதி

 

இயற்பெயர்              

:

நா.சுப்பிரமணியன்

 

வசிப்பிடம்       :                                       

:

சென்னை

 

பிறப்பிடம்

:

கும்பகோணம்

 

பூர்வீகம்

:

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சண்முகநாதபுரம் கிராமம்

 

பணி

:

எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா,பாடலாசிரியர், கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், திரைப்படங்க்களில் வசனம் எழுதுதல் குறித்து பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்.

 

படித்தது

:

BSc.,(Physics) M.A.,(Tamizh)

 

படித்துக் கொண்டிருப்பது

:

ஜென்,ஓஷோ, மிக்கேல் நைமி, கலீல் ஜிப்ரான், பெரியார், கலைஞர், பாரதி, உமர் கயாம், பாஷோ, பூஸன், ஆண்டன் செக்காவ், தாகூர், பால் சக்காரியா, தாஸ்தாவேஸ்கி, பாரதிதாசன், புவியரசு, கி.ரா, தி.ஜா, ஈரோடு தமிழன்பன், கவிக்கோ அப்துல் ரகுமான், தஞ்சை ப்ரகாஷ், அருந்ததி ராய், தொ.பரமசிவன், மார்க்ஸ், இறையன்பு, வைரமுத்து, தகழி சிவசங்கரன், எஸ்.ரா….

 

இலக்கு/முயற்சி/கனவு

 

:

சமூகத்திற்கு பயன்தரும் படைப்புகளை தொடர்ந்து படைத்தல், சிறந்த திரைப்படம் மூலம் இயற்கை சார்ந்த சிந்தனைகளை மக்களிடம் சேர்ப்பது.

 

இயல்பு

:

அமைதி, நிதானம்,பணிவு, நிகழ்வில் வாழ்வது என்ற தன் ஜென் இயல்புகள் மிளிரும் கவிதைகள் படைப்பது

 

 

எழுதத் தொடங்கியது

:

 

இருபதாவது வயதில்

 

பெருமிதம்இலக்கியத்தில் மற்றும் திரைத்துறையில்.

:

கல்கிபொன்விழா கவிதை போட்டியிலும் கம்பன் கழகம் நடத்திய அனைத்து கல்லூரி கவிதைப் போட்டியிலும் தமிழ்நாடு அளவில் பரிசு பெற்றவர். 1992-ஆம் ஆண்டு இவரது முதல் கவிதை நூலான நடைவண்டிவெளியானது.

 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2007-ஆம் ஆண்டு வெளியிட்ட ‘TAMIL POETRY TODAY’ எனும் புதுக்கவிதைத் தொகை நூலில் இவரது ஊமைஎன்ற கவிதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது.

 

இவரது ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம்கவிதைத் தொகுதி 2016ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது பெற்றது.

மீன்கள் உறங்கும் குளம்என்ற ஹைக்கூ கவிதை தொகுதி 2017-ஆம் ஆண்டுக்கான அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான முதல் பரிசையும் பெற்றது.

 

'இருளும் ஒளியும்' கவிதை நூலுக்கான  சௌமா இலக்கிய விருது 2020 பெற்றது.

 

எண்களைத் தலைப்பாகக் கொண்டு எண்களின் பின் மறைந்திருக்கும் தத்துவத்தையும், புதிர்களையும், தர்க்கத்தையும், அன்றாட வாழ்வையும் கவிதைகளாக இவர் எழுதியஎண்ணும் எழுத்தும்நூல் படைப்பு குழும விருது (2017) பெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான் கவிஞர் விக்ரமாதித்யன் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோரின் பாராட்டுகளைப் பெற்ற நூல் இது

 

கொரோனா ஊரடங்கு நாட்களில் இவர் எழுதிய கவிதை டாக்டர் கே. எஸ். சுப்ரமணியம் அவர்களின் Lock down Poems நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. நாள்தோறும் இவர் முகநூலில் எழுதும் கவிதைகள் தொடர்ந்து ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது.

 

கல்லூரிப் பாட நூல்களிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

 

நடிகர் நாசர் இயக்கிய அவதாரம்’, ‘தேவதைஇயக்குநர் என்.லிங்குசாமி இயக்கிய ஆனந்தம்மற்றும் கவிஞர் வைரமுத்து இயக்கிய கவிதை பாருங்கள்என்ற கவிதைகளைக் காட்சிப்படுத்தும் தொலைக்காட்சித் தொடர் ஆகியவற்றில்  உதவி மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்..

 

2003-ஆம் ஆண்டு தித்திக்குதேஎன்ற திரைப்படத்தை இயக்கிய இவர், இயக்குநர் என். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம்’, ‘பையா’, ‘வேட்டை’, ‘அஞ்சான்’, சண்டக்கோழி -2 ஆகிய திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதியுள்ளார்.

 

தற்சமயம் “The Warrior” திரைப்பட உருவாக்கத்தில் வசனக் கர்த்தாவாக பணியாற்றி வருகிறார்.

 

படைப்புகள்:

 

:

நடைவண்டி,

ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்,

பறவையின் நிழல்,

மீன்கள் உறங்கும் குளம்

எண்ணும் எழுத்தும்,

இருளும் ஒளியும்,

பச்சையம் என்பது பச்சை ரத்தம்,

பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்,

முக்கோண மனிதன்.

 

 

இவரது படைப்பின் மீதான ஆய்வுக் கட்டுரை நூல்கள்

:

எளிமை போர்த்திய கவித்துவம்- தொகுப்பு மு.வேடியப்பன்

 

பிருந்தா சாரதி கவிதைகள் ஆய்வுக்கோவை தொகுப்பு முனைவர் நம்.சீனிவாசன்.

 

ஹைக்கூ தூண்டிலில் ஜென்

(இயக்குநர்,கவிஞர் பிருந்தா சாரதியின் கவிதைகளை முன் வைத்து)- கோ.லீலா.

 

கவிதைகள் & கட்டுரைகள்

வெளியான இதழ்கள்

:

2000-2020 சிறந்த படைப்பாக்கங்கள், குமுதம், கணையாழி, ஆன்ந்தவிகடன், தை, கவிதை உறவு, தகவு, கல்வெட்டு, இனிய உதயம், ரௌத்திரம், பேசும் புதியசக்தி, அருவி, கல்வெட்டு பேசுகிறது, மகாகவி, சொல்நதி, அயல் சினிமா, Behind woods, சங்கமம், மக்கள் வெளிச்சம், பூவையர் மலர், ராணி, கவிமாலை, ஏனைய வாராந்திர இதழ்கள்

 

இவரின் நூல்கள் பற்றிய விமர்சனங்கள் வெளிவந்த இதழ்கள்

:

கணையாழி, தமிழ் நெஞ்சம், அரிமா நோக்கு, தகவு,இனிய உதயம், பேசும் புதிய சக்தி,காற்றுவெளி, தமிழ்வெளி

படைப்பு குழுமத்தில் பங்களிப்பு:

 

:

 

 

கவிதைகள் உணர்வுகளை மட்டுமே சொல்லும் என்ற பொது கட்டமைபிலிருந்து விலகி, அறிவியல், புவியியல், வாழ்வியல்,தத்துவம்,ஜென் தன்மை, மனோவியல் என பல்வேறு‌ கூறுகளையும் உள்ளடக்கிய கவிதைகளை சுருக்கமான சொற்களில் சுருக்கென தரும் வல்லமை பெற்றவர்.இயற்கையின் அழகை ஆராதிப்பது யாவருக்கும் பிடித்தமான ஒன்று என்றாலும், கவிஞர் பிருந்தா சாரதி அவர்களின் கவிதைகள் இயற்கையை பாதுகாக்கவும், அவற்றின் சீரழிவால் இந்த மனிதகுலத்திற்கு ஏற்பட்டிருக்கும், ஏற்படவிருக்கும் ஆபத்துகளை பாடக்கூடியவை.

 

ஒரு கவிதை என்ன செய்யவேண்டும், வாசிப்பவனை தொந்தரவு செய்ய வேண்டும், சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும்... அத்தனையையும் செய்யும் சூட்சமம் அறிந்தவைகள் இவரது கவிதைகள். சொற்சிக்கனம் இருந்தாலும், பொருண்மை சிக்கனமின்றி வானளவு விரியும்.

இவரது கவிதையின் தனிச்சிறப்புகளில் மேலுமொரு மணிமகுடம் புத்திசாலித்தனம் தெறிக்கும் சொற்களும், பொருண்மையும் ஆகும். இவரது காதல் கவிதைகள் கூட இயற்கையோடு இயைந்தவை... பெண்ணின் மூடிய இமையை சிப்பியாக காணும் கலாரசிகர்.

எண்ணலாங்கார கவிதைகளை பாடி எண்ணும் எழுத்தும்‌ என்ற கவிதை மூலம், கவிதையுலகில் புதுமையை பரீசார்த்த முறையில் அறிமுகம் செய்து வெற்றியும்‌கண்டவர்

இயல்பிலேயே இவரது கவிதைகள் ஜென் தன்மை மிளிரும். ஒரு வேளை கவிதையே தன்னை படைப்பதற்காக, இவரை படைத்துக் கொண்டுவிட்டதா? என்று தோன்றுமளவிற்கு ரசனை ததும்பும் கவிதைகளில் சங்கத்தமிழும் நவீனத்துவமும் கைகுலுக்கி கொள்ளும் பேரழகை தரிசிக்க வாசகர்களுக்கென திறந்த வைக்கப்பட்டிருக்கும்‌ கலைகோயில் இவரது கவிதைகள் என்றால் மிகையல்ல...

ஹைக்கூ கவிதைகளில் பாஷோ மற்றும் பூஸனின் தரங்களை ஒப்புமளவிற்கு தமிழில் ஹைக்கூ படைக்கும் ஜென் தன்மை மிக்க ஒரு கவிஞராக இவரை பார்க்கின்ற அதே வேளையில்...

இவரது நீள் கட்டுரைகள் பிரமிப்பு ஊட்டக்கூடியவை, ஈரம் நிறைந்த உணர்வுகள் தளும்ப, பல இலக்கிய ஒப்பீடுகள் கொண்ட அழகியல் நிறைந்த எழுத்து நடை மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுபவை...

சொற்களை உண்டு சொற்களை செரித்து வாழ்கிறாரோ எனுமளவிற்கு சொல்வளமும், பொருள்வளமும், நவரசம் நிறைந்த எழுத்துக்கள் வாசிப்பவரை தொந்தரவு செய்யக்கூடியவை.

பேரமைதியும், நிதானமும், பணிவும், கூர்மையான அறிவும் கொண்ட இப்பூமியின்‌ மீது பேரன்பு கொண்ட மனிதராகவும்‌ சுடரும் மாணிக்கமாக திகழும் இவரது எழுதுகோலை எடுத்து எழுதினால், நமக்கும்கூட அப்படி எழுத வருமா? எனுமளவிற்கு வாசிப்போரை கொள்ளை கொள்வதோடு, ஒரு கொள்கையையும் கொடுத்து செல்லும் இவரது எழுத்துக்கள் பூமிக்கான ஒரு பச்சை பொன்னாடையை, மானுடத்திற்கான அன்பாடையை நெய்யக்கூடியவை.

இவரது, மீன்கள் உறங்கும் குளம், இருளும் ஒளியும்,பச்சையம் என்பது பச்சை ரத்தம், பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர் பரவலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நூலாகளாகும்.

வானில் பறந்தப்படியே

நீரிலும் நீந்தும்

பறவையின் தன்மையை இவரது எழுத்துக்களில் கண்டு களிக்கலாம்.

இன்னும் இன்னும் புது புது முயற்சிகளில் தொடர வேண்டும் படைப்பாளி பிருந்தா  சாரதி அவர்களின் படைப்பின் பயணம். 

இவரது இந்த இலக்கிய பயணம் மேலும் தொடரவும்.. சிறப்பான படைப்புகளை தொடர்ந்து தமிழுக்கு அளிக்கவும்... படைப்பு குழுமம் அவரை மனதார வாழ்த்துகிறது. மேலும் "இலக்கியச்சுடர்" என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

இத்தகைய ஆக்கப்பூர்வமான, அபூர்வமான, அறிவியலை ரசனைமிகு சொற்களில் தரும் ஒரு படைப்பாளி பெறும் படைப்பின் சுடர் விருதுகள் இங்கு எழுதும் அனைவரின் கரங்களையும் தழுவ வேண்டும் என்பதே படைப்பு குழுமத்தின் அவா. அதற்கேற்ப படைப்பாளிகள் தங்கள் சிந்தனை வளத்தையும் உருவாக்கல் திறனையும் மேம்படுத்திக் கொண்டு சமூகத்திற்கான படைப்புகளைப் படைத்து மனிதம் செழிக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டு அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறது படைப்பு குழுமம்.

வளர்வோம் வளர்ப்போம்,

படைப்பு குழுமம்.

#சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Jinna Asmi Avatar
    Jinna Asmi - 2 years ago
    தகுதியான படைப்பாளருக்கு தகுதியான கிரீடம். இது வருடத்திற்கு ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் உயரிய விருது. வாழ்த்துகள் அண்ணா

திப்பு


0   894   0  
April 2022

கல்பனா ரத்தன்


0   1112   0  
October 2018

தங்கேஸ்


1   1019   0  
February 2020