logo

கவிச்சுடர் விருது


இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை கவிஞர் யாழ் தண்விகா அவர்கள் பெருகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.     

 

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கவிதை உலகில் இயங்கி வரும் கவிஞர், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர். பெரியகுளம் ஒன்றியம், பொம்மிநாயக்கன்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். 

 

அழகியலே (2009)

 சாம்பல் எரிகிறது (2016)

 மௌனமாகக் கடக்கும் மேகம் (2019)

 மழை முத்தம் (2021)

 ப்பா… ப்பா... ப்பா… (2021)

 நான் உன்னைக் காதலிக்கிறேன் (2021)

ஆகிய ஆறு கவிதைத் தொகுப்புகள் இதுவரை அவரது படைப்புகளாக வெளிவந்துள்ளன.

 

அவர் தம் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வியோடு, ஒயிலாட்டம், சாட்டைக் குச்சி ஆட்டம், பறை உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் கற்றுத் தருவதையும்  பெரும் விருப்பமாக செய்து வருகிறார்.  கவிஞர் ஒரு   நாடகக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது,  இவரது கவிதைகள்  வெகுஜன இதழ்களிலும், சிற்றிதழ்களிலும், படைப்பு குழுமம் போன்ற மின்னிதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தேனி  மாவட்டப் பொருளாளராக, பெரியகுளம் கிளையின் தலைவராகவும் பொறுப்பில் உள்ளார்.

 

கவிஞரின் கவிதை பயணம் குறித்து அவரே குறிப்பிட கவனிப்போம் :

 கவிதை என்பது ஓர் ஊற்று. அதன் இயல்பில் அதன் போக்கு அமையவேண்டும். நீரற்ற ஊற்றின்மேல் பாவிக்கிடக்கும் சிறு மணற் துகள்களும் கவிதைகளே. மெனக்கெடுத்து எழுதுவது என்பதை விட கண நேரத்தில் பூக்கும் உணர்ச்சிதான் ஆழமான வலியைச் சொல்லும் கவிதையாக இருக்கும் மற்றவை ஜிகினாத்தனம் மிக்கவை. மேலும் மேதாவித்தனம் மிகுந்த வரிகள் கொண்டாடப்படலாம். புரட்சிக்கான வரிகள் எளிமையானதாகவே இருக்கும். நான் எளிமையான சொற்களில் என்னுடைய கவிதைகளைப் படைக்கவே விரும்புகிறேன்.

 எழுத்து எனக்கான வடிகால். மகிழ்வோ துயரோ அதன் தோளில் நான் சாய்ந்து கொள்கிறேன்,  தாய் மடியில் கண்ணயரும் குழந்தையைப் போல. அதனை நீங்கள் வாசிக்கும்போது உண்டாகும் உணர்வில் என் எழுத்தின் இடம் முடிவாகும்.

 

எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவு படைப்பாளர் விருது (2017)

க.சீ.சிவக்குமார் நினைவு சிறுகதைக்கான விருது (2018)

படைப்புக் குழுமம் மாதாந்திர சிறந்த படைப்பாளிக்கான விருது (2019)

திண்ணை மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை வழங்கிய அந்தோணிராஜ் ஆசிரியர் நினைவு வளரும் படைப்பாளர் கலை இலக்கிய விருது (2022) உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள கவிஞர்  தனது முக்கிய இலக்காக கருதுவது ; குழந்தைகள் இலக்கியம் படைத்தலை ஊக்குவித்து குழந்தைகள் சார்ந்த கூட்டங்கள் ஒருங்கிணைத்தலுக்கான தளம் அமைக்க வேண்டும் என்பதாகும்.

 

இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம்.

 

 ஒரு கவிஞன் எப்போது பிறக்கிறான். எப்போது இறக்கிறான் என்பது அவன் கவிதைகளைக் கொண்டுதான்  வாய்க்கிறது.  சில கவிதைகளின் முதல் வரியிலேயே இறந்து விடும் கவிஞர்களும்  உண்டு.  ஆனாலும்  முதல் வரியில்  பிறப்பெடுத்து ஆற்றொழுக்காக வளரும் கவிஞன் ; அந்தக் கவிதையின் கடைசி வரியில் மரணிப்பதுதான் அந்த கவிதைக்கு அவன் செய்யும் நியாயம் ஆகும். அப்போதுதான் கவிதை தானாக வாழத் தொடங்கும். இதோ அந்த கவிதை….

 

ஆயுள் எனப்படுவது...

 

அதை இப்போது கவிதையில்லை

என நான் நினைக்கலாம்.

எழுதிய நான் கவிஞனில்லை என

கவிதை நினைக்கலாம்.

எழுதப்படும்போது

அது எனக்குள்ளும்

நான் அதற்குள்ளும்

மூழ்கிக் கிடந்தோம்.

அது கவிதையாக இருந்தது.

நான் கவிஞனாக இருந்தேன்.

கவிதைக்கும் எனக்குமிடையில்

பெரு மயக்கம் பூத்திருந்தது.

அன்றைய நினைப்பிற்கும்

இன்றைய நினைப்பிற்கும்

இடைப்பட்ட காலம் தான்

கவிதை வாழ்ந்த காலம்.

கவிஞன் வாழ்ந்த காலம்.

 

மூச்சை நிறுத்திப் போனபின்பு;  முகவுரை எழுதினால் என்ன? தெளிவுரை எழுதினால் என்ன? முடிவுரை முக்கியம் வகிக்கும்வயோதிகம் எல்லோருடைய வாசலையும் ஒரு நாள் தட்டத்தான் செய்யும்தாய் தந்தையரை அநாதை விடுதிகளில் சேர்க்கும் மகனுக்கும் கூட கருணை ஒரு துளி இருந்திருக்கும்.  கூடவே அவர்களை  வைத்துக் கொண்டு அவர்களை கவனிக்காமல் இருப்பவர்கள் இம்மையின் பாவிகள். எனக்கு கருணை இருக்கிறது மனைவிக்காக கவனிக்கவில்லை என்கிறவன் கொடுங்கோலன்

 

மழை வழி

மலை வலி...

 

எப்போதோ மாரியம்மன் கோவிலுக்குத்

தீச்சட்டி எடுக்க வாங்கிய

மஞ்சள் நிற வாயில் சேலை தான்

கடந்த சில மாதங்களாக

காளிக்கிழவிக்கு

 

நடை தளர்ந்து

விழும் இடங்களிலிருந்து

யாரோ ஒரு சிலரால்

வீட்டின் தாழ்வாரத்திற்குள்

அவ்வப்போது கிடத்தப்படுவாள்

 

அங்கங்கள் தெரிய

உடலொட்டிக் கிடக்கும் அச்சேலையில்

பாதி சாக்கடையிலும் பாதி பாதையிலுமாக

நீண்ட நேரம் கிடக்க

ஜன்னி வந்து செத்துப்போனாள்

 

எதுக்கு மழைகாலத்தில் செத்துத் தொலைஞ்சா

கெழட்டு முண்ட என்னும்

பொண்டாட்டியின் முன்னால்

கைகட்டி நின்றிருந்தான்

கிழவி மகன்.

 

பெருங்குரலெடுத்து

அழுதுகொண்டிருக்கிறது மழை

நெடுநேரமாக.

 

இரவுகளின்  குணாதிசயங்கள் என்பது மனிதர்களின் மனவோட்டங்களைப் பொருத்தே அமைகிறதுவசதி வாய்ப்புள்ள ஒருவனை  அவனுக்கென்ன என நாம் வியக்கஅவன் தன் மறைமுக வறுமையால் தூக்கத்தை கழுவிவிட்டு கல்லறைகள் பற்றிய குறிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கலாம். இவன் பசித்தவன் என முத்திரையிடப்பட்ட ஒருவன் தன் பாதாள மனசுக்கு தாலாட்டுப் பாடி உறங்க வைத்துக் கொண்டும் இருக்கலாம்

இந்த கவிதை என்ன  சொல்கிறது என கவனிப்போம்

 

இரவென்பது எப்போதும் பயம்

ஆந்தைகள் வவ்வால் பறக்கும்

கரப்பான்கள் ஓடும்

மேகங்களின் பயணம் காணாமலிருப்போம்

பூனை இரை தேடும்

நாய்கள் குரைக்கும்

சூரியன் தெரியாது

எல்லோரும் நல்லவர்களாக உறங்குவார்கள்

பறவைகள் சிறகொடுக்கும்

நீர்நிலைகளின் அலை

அமைதியாகும்

கூடு விட்டுக் கூடு பாய்தல்

அரங்கேறும் அல்லது அரங்கேற்றப்படும்

மின்மினிப் பூச்சிகளுக்கு என

இருட்டு தேவைப்படும்

யாருக்காகத் துடிக்கிறோம் என்றே தெரியாமல் இதயம் துடிக்கும்

நாமே ஒரு பேயாக எழுந்து நடப்போம்

அதிகாலை நெருங்க நெருங்க உறக்கம்

நெட்டித் தள்ளும்

காணுமிடம் யாவும் இருளாயிருக்கும்

வானத்திற்கும் மேலுள்ள பெருஞ்சூரிய வெளிச்சம் நட்சத்திர ஓட்டைகள் வழியே தெரியும்

துரோகிகளைக் கணக்கெடுக்கலாம்

அணக்கமில்லாமல் காற்று ஊரை மயக்கலாம்

கவிதை எழுதித் தொலைக்கலாம்...

உயிரை கனவு வருடும் அரற்றும்

பசித்தாலும் அரை உறக்கத்துடன் உறங்கவும் செய்யலாம்

யாரும் அறியாமல் கண்ணீர் சிந்தலாம்

தன்னைத்தானே அழித்துக்கொள்ளத் துணிந்திடலாம்

எல்லாவற்றிற்கும் மேலாக

இறந்தாலும்

யாருக்கும் தெரியாமல் போய்விடலாம்...

 

சருகாக வாழ்தல் கேவலமா? ஒரு காலத்தில் பச்சையம் பூசி தளிராக துளிர்விட்டபோது பச்சையிலைகள் தொட்டுத்தடவ காற்றுத்  தாலாட்டும். இலையாய் கிளைத்த போதும் ஆயிரம் கதைகள் அம் மரத்தோடும் வேரோடும் பேசிய மிளிர்வுகள். சருகாகும் போது மரம் கை விட்டதென கருதினாலும் பற்றும் ஆற்றல் பரவசம் இல்லாமல் போனதும் கூட காரணமாகும். சருகாக  விழுந்தால்தான் என்ன மரத்திற்கு உரமாகலாம்தானே….

 

சருகாக உதிர்தலில்

வீழ்ந்தே கிடத்தலில்

காற்றினசைவிற்கேற்ப அசைதலில்

ஒருபோதும் வருத்தமில்லை எனக்கு

நீங்கள்தான் எனக்கு சருகு என்று

பெயரிட்டுள்ளீர்கள்

வாழ்வைக் கிளைதனில்

ஒட்டிக்கொண்டு வாழ்ந்த இலை தான் நான்

இப்போது கிளையைப் பற்றுதலை

தவற விடவில்லை

கிளையோடு  வாழ்ந்த வாழ்வை

போதும் என்றிருக்கவில்லை

கிளை என்னைத் தவற விட்டுவிட்டது

கிளை பற்றியிருக்க எனக்கு வலிமையில்லை

வாழ்வின் எல்லையில் நின்று

வாழ்ந்துகொண்டிருப்பதாகவே

இப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்

கிளையின் ஞாபகம் ஏற்படுத்திய தழும்போடு...

 இனி கவிஞரின் மற்ற கவிதைகள்:

 

பூனைக்_கடவுள்

 

பிடிபடினும் நழுவி ஓடும் லாவகத்துடன் உள்நுழைந்த பூனையின் கூர் கண்கள் சிவப்பு நிற பல்பின் வெளிச்சத்தை பதட்டமாக்கிச் சுழற்றியடிக்கும் மின்விசிறியைச் சற்றும் சலனமின்றிக் கடக்கிறது

 

கருப்பு நதிக்குள் தடம் பதிக்கும் பூனையின் பாதங்களும் நாசித் துளையும் காமத்தின் பின்தொடரும் ரசனைக்குரிய முத்த சுகந்தம்

 

எங்கோ குரைக்கும் நாயின் சத்தத்தில் முன் வந்து நிற்கும் பதப்பற்கள்

பூனைக்கு ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தாதிருக்கிறது

 

மின்கம்பத்தின் ஆந்தைக் குரலும்

இரவுப் பூச்சிகளின் சலசலப்பும்

இருள் சுவாசிக்கும் தாலாட்டொலி

 

ஏகாந்த நிலையில் கிடக்கும் உடல்களின் விட்டேத்தித்தனம் குறித்த புரிதலற்ற பூனை சுவாரஸ்யமற்ற தேடலை முடித்துக் கிளம்ப தெரு விளக்குகள் ஆங்காங்கே அப்படியே நின்று பார்க்கின்றன

 

வெயிலேறத் தொடங்கிய பொழுதில் கடும் அலறலுடன் வீட்டினுள்ளிலிருந்து எடுத்துவரப்பட்ட உடல்களுடன் மொய்த்து விழுகின்றன எத்தனையோ பசிக்கதைகள்

 

இத்தனையையும் தூரத்துச் சந்து முனையில் நின்று பார்க்கும் பூனைக்கு இன்று இரவும் பசிக்கும்

@@@

 

மழை என்பதை வேறெப்படியும் சொல்லத் தேவையில்லை

அது பொழிகிறது

மண் மரம் வீடு உயிர்கள் இத்யாதிகள்

எல்லாம் விதிவிலக்கல்ல

யாரை எப்படி நனைக்கிறது

யார் எப்படி நனைகிறார்கள்

என்பதில்தான் இருக்கிறது எல்லாம்.

மழையை மறைத்தபடி

தார்ச்சாலையில் வரைந்திருந்த ஆஞ்சநேயர் ஓவியத்தின் மேல் படுத்திருந்தவன்

சஞ்சீவி மலையை விட எடையுடையவனா என்ன?

ஆஞ்சநேயருக்கு மழையின் நிறமும்

வரைந்தவனுக்கு பாலையின் நிறமும் வாய்த்துவிட்டது.

பெய்யெனப் பெய்யும் மழை

எல்லோருக்கும் ஒன்றல்ல.

 

@@@

நிலா இல்லாத

வானத்து நட்சத்திரங்களைக்

கையிலெடுத்து வந்துவிட்டேன்.

நிலா வரும் முன்னர்

வானத்தில் எறிந்துவிட்டு

வந்துவிடவேண்டும் என்ற

எச்சரிக்கை உணர்வோடுதான்

அவற்றை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தேன்.

மெல்ல முனைகள் மழுங்கத் தொடங்கிய

நட்சத்திரங்கள் வால்  நட்சத்திரங்களாகி

மறையத் தொடங்கிய நேரத்தில்தான்

கூண்டுக் கிளிகளின் கண்களிலிருந்து

மெல்ல மறையத் தொடங்கிய வனம்

நினைவைச் சுடத் தொடங்கியது.

 

@@@

பேரன்பின் நிலத்திலிருந்து

பச்சையம் துளிர்க்கிறது

நிறைய மலர்கள்

நிறைய கனிகள்

நிறைய வாசனை

எல்லாம் நிறைய நிறைய.

வேரின் தூரத்திற்கு நீண்ட

மேல்நோக்கிய மரம்.

சொல்லாமல் அடித்த காற்றொன்றில்

அடியோடு சாய்கிறது.

இப்போதும் மரத்திலிருக்கும் மலர்கள்

வாசனை பூக்கின்றன.

கனிகளின் சுவை

அதீதமாக இருக்கின்றன.

அதே காற்றிற்கு மரம் அனுப்புகிற

நீராவி முத்தத்திற்கு

பதில் முத்தம் வருகிறது.

மனிதன் தான் கோடாரியோடு வருகிறான்.

 

@@@@

 

ஒரு வீடு ஒரு தொழில் ஒரு கிழவன்

 

சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதான தோரணை

வாயில் எப்போதும் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும்

இரவு பகல்

மழை வெயில் பனி

எல்லாக் காலமும் வேலைக் காலம்

நோகாமல் நொங்கு தின்பது போலில்லை

நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்

முக்கியமாக வீட்டார் ஒத்துக்கொள்ளவேண்டும்

சொந்த வீட்டை ஒதுக்கித் தள்ளுங்கள்

பக்கத்துவீட்டுக்காரன் ஒத்துக்கொள்ளவேண்டும்

பகையாளியாக என்றும் மாறிவிடக்கூடாது

இதயத்திற்கு தான் பிணமில்லை என்றுணர்த்த

மெயின் வீதிக்குச் செல்லாமல்

கொஞ்சநேர நடை வீடுகளுக்கு இடையேயே நடப்பார்

முட்டுச் சந்தின் பக்கத்திலேயே வீடு

போலீஸ் அது இது என்றால் தப்பித்து ஓடவேண்டும்

பெரும்பாலும் அதற்கு வாய்ப்பு வந்ததே இல்லை

ஒருநாளும் சத்தம் அதிகம் வந்ததேயில்லை அவ்வீட்டில்

கஸ்டமர்கள் கேட்கும் சரக்கு இருக்கும்

இல்லையென்றாலும் வேறொன்றை வாங்கிக்கொள்ளும்

கஸ்டமர்கள் வரம்தானே.

போதை தான் அங்கு கதாநாயகன்.

எதிலிருந்து வந்தால் என்ன?

எப்படிச் சரக்கு வருகிறது என்பது

தெரியவே தெரியாது

தீர்வது பற்றிச் சொல்லிவிடலாம்

பெரும்பாலும் நாற்பது கடந்தவர்கள்தான்

ரெகுலர் கஸ்டமர்கள்

அதிலும் பலர் நடந்தும் சைக்கிளிலும் வருவார்கள்

சரக்கை வாங்கி இடுப்பில் சொருகிக் கொள்வார்கள்

கிளம்பி விடுவார்கள்

விற்பவரின் சொந்தமென யாரையும் வீட்டிற்குள் பார்த்ததில்லை

எம்ஜியார் பாடல்கள் மிகப்பிடித்தம் விற்பவருக்கு.

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை...

அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்... போன்ற பாடல்கள்

சுற்று வீட்டின் காதுகளை அடைக்குமாறு மாலை ஏழு மணிக்கு மேல் ஒலிக்கத் தொடங்கும்.

விக்கிறது சாராயம். இதுல தத்துவப் பாட்டு வேற

என்ற முணுமுணுப்பு எழுந்து அடங்கும்.

ஆனாலும் நேரடியாக யாரும் கேட்டு சண்டை பிடிப்பதில்லை.

அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

விடிந்தும் திறக்காத கதவைத் தட்டி

எட்டிப்பார்த்த முதல் குடிகாரன்தான்

கிழவன் இறந்துகிடந்ததை முதலில் பார்த்தவன்.

பக்கத்து வீட்டுக்காரர்களைக் கூப்பிட்டும்

யாரும் வீட்டிற்குள் வரவில்லை

குடிகாரன்தான் கிழவன் பக்கத்தில் சென்று

மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கிடந்த கிழவனின்

கைலியைச் சரி செய்தான்

பாயில் நேராகப் படுக்க வைத்தான்

தலையணையைத் தலைக்கு அண்டக் கொடுத்தான்

கிழவன் எப்போதும் சரக்கெடுத்துத் தரும் இடத்தில்

தனக்கான சரக்கை முதன்முதலாக

அவனே எடுத்துக்கொண்டான்

கிழவனின் தலைமாட்டில் சரக்குக்கான பணத்தை

எண்ணி வைத்தான்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்கொண்டான்

வீட்டின் வெளியில் வேடிக்கை பார்ப்பவர்களிடம்

ஏழு மணிக்கெல்லாம் சரக்கு அடிக்கலைன்னா

எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் கொடுத்திடும்

செத்துடலாம்போல இருக்கும்

போனவுடனே வந்துடுறேன்

ஏதும் உதவின்னா பண்ணுறேன் என்று சொல்லிக்கொண்டே சென்றுகொண்டிருந்தான்

கிழவனின் ரெகுலர் கஸ்டமர்

எவனோ ஒருவனிடமிருந்து ரோஜாப்பூ மாலையொன்று

பாடையில் போகும்போது

நிச்சயமாகக் கிழவனின் கழுத்தில் கிடக்குமென்று

நம்பிக்கை பிறந்துவிட்டது இப்போது.

யாருக்கு?

கிழவனுக்கு.

எப்படி இறந்தவனுக்கு நம்பிக்கை பிறக்கும்?

இறந்தவனுக்கு உள்ளே போய்ப் பார். தெரியும்…

 

@@@@

விடைபெறலின் போதான மது

 

உடல் என்பது உடல் மட்டுமாக

உயிர் மட்டுமாக

இரண்டும் இணைந்த நிலையில்

என ஒவ்வொரு நிலையில்

இருக்கிறது

 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியில்

சயனித்துக் கொள்ள

ஒவ்வொருவருக்கும் குடும்பம் ஒவ்வொருவருக்கும் ஆசை ஒவ்வொருவருக்கும் வடிகால் ஒவ்வொருவருக்கும் சுகானுபவம் ஒவ்வொருவருக்கும் பகலும் இருளும்

 

எல்லோருக்கும்

எல்லா இரவிலும் இல்லை என்றாலும்

அவ்வப்போதான இரவு யாரேனும் ஓரிணைக்குத் துணையாக

காமம் அத்தியாவசியமாக

இரவை ஒரு பொருட்டாக மதிக்காமல் அரங்கேறிக் கொண்டுதானிருந்தது

 

மாவட்டம் விட்டு மாவட்டம் தாண்டி

கொத்தடிமைகளாக கரும்பு வெட்ட வரும் கூட்டம்

தலைவனும் தலைவியுமாய்

அண்ணனும் தங்கையுமாய்

அக்காவும் தம்பியுமாக

தம்பியும் அண்ணனுமாய்

தகப்பனும் மகளுமாக மகனுமாக

தாயும் மகனுமாக அல்லது மகளுமாக

அல்லது தனித்து வறுமைக்கு வாழ்க்கைப்பட்டு

இப்போது செய்யும் வேலைக்கென முன்கூட்டியே பணம் பெற்று வீட்டில் கொடுத்துவிட்டு தூரத்து ஊரில்

வேலை செய்யும் இவ்விடத்தில்

கூட்டம் மட்டுமே சொந்தம்

கூட்டம் மட்டுமே வாழ்க்கை

என்று வாழும் நாட்கள்

 

எல்லோருக்கும் சமைக்க ஒருத்தி

அவளுக்கும் வயிறுருக்கிறது

அவளுக்கும் பணத்தின் அவசியத் தேவை இருக்கும்

என்றெண்ணிய சிலரால் கழிவிரக்கத்துடன் அழைத்து வரப்பட்டவள்

தவழ்ந்து நடக்க மட்டுமே இயலும் உடல்

கொழுத்த உடம்பும் உப்பிய மார்புகளும் இரவின் காமத்தை வேடிக்கை பார்க்கவும்

ஆக்கிக் கொட்டவும் பல நேரங்களில்

வம்படியாகத் தூங்கவும் மட்டுமே கிடந்தது.

 

மதியத்துக்கும் சேர்த்து உணவை

வறுமைக் கூட்டம் எப்பொழுதும் எடுத்துச் சென்றுவிடும்

 

மெல்ல மெல்லப் பேச்சுக் கொடுத்து

உள்ளூரான் பேசுகிறான் அன்பொழுக தவழ்பளிடம்

வெறியேறும் காதலுமல்ல காமமுமல்ல

சதா கனவும் பேச்சும் சிரிப்பும் அவளிடம் தொற்றத் தொற்ற

வேடிக்கை பார்த்த கண்களில் படரும் ஏக்கத்தில் வட்ட வட்டமாகப் பரவுகிறது உள்ளூரான் முகம்

 

ஒப்பந்த காலம் முடிந்தவுடன் கூட்டம் லாரியில் பாத்திரம் துணி மணியுடன் குடும்பம் பார்க்கச் செல்லும் புலம் பெயர் தொழிலாளியின் ஆசையோடு மொதுமொதுவென்று ஏறுகிறது

 

சகோதரன் ஒருவனின் உதவியோடு லாரியில் ஏற்றப்பட்ட தவழ்பவள் நின்று பார்க்கிறாள் சுற்றெங்கும் உள்ளூரானை

 

ஊரோடு சேர்ந்து நின்று பார்க்கும் உள்ளூரான் கண்களிலும் அவளின் கண்களிலும் வழியும் மது

இடையிடையே ஒரு நான்கு நாட்கள் கும்பலிலிருந்து தனித்துப் புணர்ந்து கிடந்த பக்கத்துச்சந்தின் வாசத்தோடு ஒத்திருந்தது.

 

உடல் என்பது உடல் மட்டுமாக இருப்பதுவும் சரியென்று பட்டது போல

இருவரின் கையசைப்பு

கண்களில் நடந்தது

லாரி மறைகின்றவரை...

 

@@@

என் வானம் முழுதும்

உன் நட்சத்திரங்கள்

 

இறை நீ

இரை நான்

 

உன் அசைவுகள்

நினைவை அசைக்கிறது

 

பேரன்பான முத்தத்தில்

காம கிளிட்டர்ஸ்

 

நீ புல்லாங்குழல்

நான் துளைகள்

காற்றே காதல்

 

பிரிவின் நிறைவான முத்தத்தில்

கடலின் உப்பனைத்தும்

துளிக் கண்ணீரில்

 

மின்னிக்கொண்டிருக்கும்

உன்னில் எல்லாம்

 

பூ கட்டுவாய் பூப்போல

பறவைகள் கொஞ்சுவாய் பறந்தபடி

குழந்தையாவாய் குழந்தைகளோடு

காதலிக்கும்போது

எதற்காக காதலியாகிறாய்

நானாக மாறாமல்

 

உணவுண்ணும் நேரம்

எனக்கு உன் கை

உனக்கு என் கை

தாய் போலாகி ஊட்டிவிடும்

 

பிரிந்து சென்ற பின்னும்

கட்டிக் கிடக்கும் காமத்திற்கும்

காதல் என்றே பெயர்

 

@@@@

மழைக்கு_ஒதுங்கிய_வானம்...

 

குரூரமாகப் பதுங்கியொதுங்கிய அவ்வானத்தின்

அகாலத்தில் மிதந்துகொண்டிருந்த பிம்பங்கள்

மழையின் வன்புணர்வில் சிக்கி

மண்ணிலிருந்து தூர்த்தெறியப்பட்டவை.

 

பனிக்குடம் உடைத்த ஏரியிலிருந்து

பிரசவிக்கின்றன ஓயாத கொலைச் சொற்கள்

 

கண்ணெதிரே நிர்மூலமாகும் வாழ்வை

முலை பிய்த்தெறியும் கண்ணகியென

வெஞ்சினத்துடன் வெறுத்தொதுக்க

எத்தனிக்கவிடாது குதூகலிக்கிறது

மௌனமாகச் சிரித்துதிரும் மழைக்கூர்மை...

 

செம்புலப்பெயல் நீரின் நிச்சலனத்தில்

மரணித்த இறைச்சியின் ருசி...

 

ஆதி வானின் மண்ணின் நிர்வாணத்தில்

லிங்கங்களும் யோனிகளும்

கடலுப்பு தின்னப்பணித்த அம்மழையிரவில்

மண்ணாண்டவர்களின் அந்தரங்க மயிர் நீண்டுகொண்டிருத்தபோது

பிண உதடுகளின் ஸ்டிக்கருக்குள்

ஊறிக்கொண்டிருந்தன ஈக்கூட்டங்கள்...

 

@@@

இரவை மேயும் நாய்...

 

தெருவின் நீள அகலம்

ஓடினால் நடந்தால்

எத்தனை அடியென்பதை

அந்த நாய் அறியும்

 

இரவில் பெய்யும் மழை

இரவில் பொழியும் பனி

இரவில் பேசும் வெக்கை

யாவற்றையும் ரசித்தும் வெறுத்தும்

வெறுமையுடன் பார்க்கும்

அதன் உலகமே தனி.

 

தூரத்தில் எங்கோ தெரியும் ஒளியையும்

இரு விளக்காக கண்களில்

மிளிரச் செய்யும் வல்லமை...

 

யாரின் வாரிசு அது

வாங்கியவனுக்குத் தெரியாதிருக்கலாம்

எந்த ஊரிலிருந்து

தனித்து விடப்பட்டது

நாயும் தெரியாதிருக்கலாம்

 

நடந்தும் அல்லது வாகனத்தில் செல்பவரை

தெருவில் நுழைந்த அல்லது வீடு கடக்கும் நாயை

எதன் பொருட்டு குரைத்திருக்கும்

 

குரைக்கவேண்டிய தருணமொன்றில்

முறைப்பை மட்டுமே காண்பித்திருக்கும்

 

சிரிப்பை மகிழ்வை உரைப்பதற்கான சொல்லற்று

இயல்பாகயிருந்திருப்பதாக

தோற்றமளித்திருக்கலாம்

 

சாவை உரைக்க

சாகப்போவதை உரைக்க

குரைப்பை ஊளையிடுவதாக

மாற்றியிருக்கலாம்

 

பலநாள் விரட்டியபின் உண்டு களித்த எலியைப் பற்றி

எசமானனுக்குச் சொல்லாதிருந்திருக்கலாம்

 

இரவைப் பேசவிடாது

கடந்த பொழுதுகளின் உறக்கத்தில் வந்த

கனவொன்றின் சொர்க்கம்

நாய்க்கு எந்த தேசத்திலிருக்கும்...

 

வாலாட்டிச் சுற்றிச்சுற்றி வரினும்

உறவென நினைக்குமுயிர் பிரிந்தகணமே

அநாதையாகத் திரிபவனின் முகச்சாயல்

எப்படி எங்கிருந்து கிடைத்திருக்கும்...

 

தென்னை மரத்தின் மூட்டிலோ

சாக்கில் கட்டி ஏதோ ஓர் பாழுங்கிணற்றிலோ

மனுசனைவிட்டு அந்நியப்பட்ட

ஏதோ ஓர் புதரிலோ

வெறிபிடித்ததென்று கல்லெறிந்தோ

சாலையில் ஏதோ ஒரு வாகனத்தாலோ

எப்படியோ சாகப்போகும் அந்நாய்க்கு

எனது பெயரையும் வைத்துக்கொள்ளுங்கள்

 

எனக்கும் இரவின்மேல்

சந்தேகம் அதிகம்.

 

@@@@

 தீர்ப்பின் கரங்களை எப்போதும்

பத்திரப்படுத்தியே வைத்துள்ளேன்

கன்னிமை போக்கும் வித்தை

இங்கெல்லோருக்கும் அத்துப்படி

பிரேதப்பரிசோதனையால்

அச்சப்படாத உடல் உன்னை எப்போதும் கடந்தே செல்கிறது

தப்பியோடும் தியானம்

அமைதியாய் இருப்பதாகப்

பறைசாற்றுகிறது

சாத்தான்கள் யாரென

கழுகுகள் ஒப்பித்துவிட

சமயம் வாய்க்கவில்லை

விலக்கப்பட்ட நாட்களில் பூச்சொரியும்

காமத்தின் வேகம் முகத்தில் அறைகின்றன

கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க

உறங்காமலிருக்கவேண்டும்

நான் உறங்குகிறேன்.

காலங்களின் கைகள்

இழுத்துக்கொண்டு செல்கிறது...

இங்கொன்றும் அங்கொன்றுமாக

விரவிக்கிடக்கும் நினைவுகள்

பால்யத்தை மீட்டெடுக்கின்றன

எந்த தரிசனத்திலும் நிலைத்திருக்கும் ஆகிருதி

உன்னால் நிராகரிக்கப்பட்ட ஒவ்வொரு கவிதையிலும்

மீதமிருக்கின்றன.

வாசித்துப்பார்...

 

@@@

உயிர்போன தகவலை

ஊரெங்கும் பிரகடனம் செய்ய தயாராகிவிட்டார்கள்

அலகில் கவ்வி வரும் உணவினை

கொண்டுவந்து சேர்ப்பிக்கும் தருணம் அந்த விபத்து நேர்ந்திருக்கிறது

அவ்விடம் வரும்போது எனக்கு பறப்பதற்கு இறக்கைகள் கொடு என்று யாரிடமும் கடவுள் உட்பட

யாசிக்கக்கூட அவகாசம் இல்லை

விபத்தின் துளி நொடி கூட அவன் விருப்பப்படி இல்லை

யார் தவறு என்று சொல்ல

சாலையோர நடுகல்லாய்

சாலையோரத்தில் மிரண்டோடும்

நாய் போல

சற்று முந்தைய நேரத்தில்

தார்ச்சாலையை நனைத்துவிட்டுப்போன மழையென

கடந்துபோன வாகனமென

எதுவுமாக மாற வாய்ப்பற்று

அமைதி பூத்துக்கிடக்கிறது சவத்தில்...

யார் பாவத்தையோ வெளித்தள்ளிக்கொண்டிருக்கிறது

உடல் இரத்தம் இரத்தமாக...

எவ்வித சலனமற்றுக் கிடக்கும் சட்டைப்பையில் கிடந்த வீட்டின் முகவரியுடன் பேசினார்கள்

இறப்பினருகில் நிற்கும் மனிதர்கள்..

தன் உறவு இல்லையெனத் தெரிந்தவுடன் கடந்துசெல்லும்

பாதசாரிகள் தூரத்து உறவுக்காரன்போல வலிகளை

விடுத்துச் செல்கிறான்...

இந்தக்குரல் கேட்காது

இந்தக் கண்கள் விழிக்காது

இந்த உடல் துடிக்காது

இந்த உயிர் எழாது

இந்த வாழ்வு முடிந்துவிட்டது

இதைச் சொல்வதற்கு

அகால மரணம் என்பது தேவையாயிருக்கிறது

இறந்த நேரத்தைக் குறித்து

நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் நபர்களுக்கு

எதிர்கால தன் மரண நாள் குறித்துக்கொள்ள

ஒருபோதும் விருப்பமில்லை

அது எங்கே எப்போது எப்படியென்பது தெரியவில்லையென்பதும்

காரணமாகயிருக்கலாம்

எப்படியோ இருக்கட்டும்...

இறந்தவனின் எதிர்கால கனவுகளை

யாரிடம் கொண்டு சேர்க்கும்

அவன்மேல் மோதிய வாகனம்...

 

@@@@

 சில விதிகளின் பொருள் பிடிபடவேயில்லை

மரணத்தோடு பேசுவதுபோல அத்தனை கடினமாயிருக்கிறது

வெற்றிடம் தேடியோடும்

கால்களின் தடங்கள் யாவிலும்

வாழ்ந்த காலங்களின் எச்சங்கள்.

குறுகிப் பின் நிமிரும்

பறவையின் கழுத்தென

மரணத்துள் புதைதலும்

வாழ்தலுக்கு எழுதலும் தன்னிச்சையாய்.

வாழ்தல் என்பதன் பிரமிப்பு

உண்டாக்கும் சமிக்ஞைகள்

பருவமழை போல் பொழிகிறது.

பாலை என்பதற்கான உணர்வற்று

கானல் நனைக்கிறது உயிரை...

யாரும் கண்டுகொள்ளாத அதிகாரம் ஒன்றின் துணையோடு

வந்துவிழும் காலங்களின் ஆலிங்கனத்தில்

நிறைவேறாக் காதலொன்றின் சாயல்.

அமானுஷ்யத் திகைப்பொன்றில்

வெளிப்பட்ட ரத்தத் தெறிப்புகள்

முகமெங்கும்.

கடைசி இரவோ

விடியும் பகலோ

விடுவிடுப்பின் கணம்

ரசித்துக் கடக்கிறேன்...

வெளியெங்கும் சிதறிக்கிடக்கிறது

வலியோடு போராடும்

உயிரின் எல்லைகள்.

என் இறத்தல் குறிப்புகளின்

மீதோடிக்கொண்டிருக்கின்றன

அதிகாலைக்கு முன்னதான

தீவிரத் தூக்கப்பொழுதாய்

வாழ்வு தள்ளிவிட்ட அந்தி.

என்னை எதிர்பார்த்துக்

கடற்கரையொன்றின்

அலைகள் பார்த்து

வீடு திரும்பும் அகால இரவொன்றில்

உன் முன்னால்

மரணமெனக் கிடப்பேன்

பதட்டமின்றிச் சுகித்துவிடு

நான் சக்கையாகவே

போக விரும்புகிறேன்...

@@@

அஞ்சலி ஊர்வலம்

 

ஊழிக்காற்றின் பேரிரைச்சல்

மௌனம் படிந்த கூகையொன்றின்

குரூரத்திற்கொவ்வாத ஜந்தொன்று

சாலையிலூர்கிறது

விருட்டென்று தரைநோக்கிப் பறந்த

கூகையை முந்திய வாகனத்தின் சக்கரங்கள்

சாலைக்குப் படையலிடுகிறது ஜந்தினை...

தார் பூசியிருக்கும்

குருதியின் வாசத்திலிருந்தெழுந்து

கிளையமரும் கூகைக்குத் தெரிந்திருக்கலாம்

அவ்வாசம் பிரசவித்த குட்டிகளின்

அஞ்சலியூர்வலப் பிரவாகம்

இனிதான் தொடங்குமென்று...

 

@@@

உன்னைப்பிடிக்கும்

என்பது வரை மட்டும்தான்

இந்த வாழ்வு

 

உன் முத்தத்தால்

நான் மீண்டும்

பிறக்கிறேன்

மலர்கிறேன்

படர்கிறேன்

 

அதென்னமோ தெரியவில்லை

உன் மச்சங்களுக்கு மட்டும்

மின்மினிகளின் பிரகாசம்!

 

உன் பின்னங்கழுத்தின் கீழ்

படர்ந்து கிடந்த முடிகளை

அள்ளிக் கொண்டை போட்டுக்கொண்டாய்

ஆங்காரத்தில் முதுகு சிவந்தது...

 

நமக்கிடையே

அதிகம் சண்டைகள் தொடங்கக் கூடிய

சமயங்கள்

சொல்லாமல் சொல்லும்

நாம் கூடி நாளாகிவிட்டது

என்பதை...

 

ஒரு முத்தம் கொடு

திருப்பித் தந்து விடுகிறேன்

அல்லது

ஒரு முத்தம் தருகிறேன்

நீ திருப்பித் தரவேண்டாம்

இரண்டில் எதுவாகிலும் ஒன்றிற்குச்

சம்மதம் சொல்...

 

என் வியர்வையில் படரும்

உன் முத்தங்களுக்கு

சிக்கிமுக்கிக்கல்லின் குணம்...

 

உன் ஸ்பரிசம் தீண்டிய பின்

என்னில் தீண்டிய பகுதிகளை

எல்லாம் பார்க்கிறேன்

வண்ணத்துப்பூச்சியின் நிறங்கள் அப்படியப்படியே...

 

என் முன் நடந்து வரும் பொழுதும்

என்னை கடந்து செல்லும் பொழுதும்

நீ எதுவுமே செய்ய மாட்டாய்

என்றாலும்

எல்லாம் செய்யும் உன் அழகு...

 

உனக்கு என்னைப் பிடிக்கும் என்றாலும் பிடிக்கவில்லை என்றாலும்

என்னிடம் ஒரே பதில் தான்

நான் உன்னை காதலிக்கிறேன்...

 

@@@@

சுயம் என்று எதுவுமில்லை

பயணத்தில் அதைச் சொல்லி

என்ன செய்துவிட முடியும்

 

பாலுக்கழும் குழந்தைக்கு மார்பில்

வெம்மை ஏறாத பால் அளித்துவிடுமா

 

ஊர் நோக்கிச் செல்லும்போது

வேடிக்கை பார்க்கும் உயிர்களிடத்தில்

நீயும் என் தோழனே

சொல்லிவிட முடிகிறதா

 

இரக்கம் பூத்து

குழந்தைகளிடம் நீட்டும் உணவுப் பொட்டலத்தை

வேண்டாம் என் பசி எனது என்று

வியாக்கியானம் பேசச் சொல்லுமா

 

வக்கற்றுப் பிழைக்கப்போனவிடத்தில்

தற்போதைக்கு ஊர் சென்று பிழைக்கப் பாருங்கள் என்றவனிடத்தில்

புரட்சி வசனம் பேசத் தூண்டுமா

 

ஒரே நாடு ஒரே மக்கள்

என்ற கோசத்தைச் சொல்லி

மூளையை மழுங்கடிக்கச் செய்த கூட்டத்திடம்

நாங்கள்

நீங்கள் சொன்ன

ஒரே மக்கள் என்பதற்குள்

அடங்குபவர்கள்

என்று எதிர்த்து நிற்க வைக்குமா

 

நவீனத்தின் கூடுகளை முடக்கி

சாலைகளை வெறித்துப் பார்த்துக் கொள்வதில்

புளகாங்கிதம் அடைய வைத்துவிடுமா

 

எதற்காக இந்த நடை

யாரால் இந்த நடை

ஊர் போய் சேருமா

இந்த நடை

என்பதற்கான முழு பதிலையும்

கேட்டறிந்து விடுமா

 

துரத்திவிட்ட ஊருக்கே

மீள பயணம் செய்வதற்கு

தாகத்திற்கும் நீரற்று

திணிக்கப்பட்ட யாத்திரைக்கு

பிஞ்சுகளையும்

முதியவர்களையும்

கர்ப்பிணிகளையும்

இழுத்துச் செல்வதற்கு

நியாயம் சேர்த்து விடுமா

 

எப்போதும் போல்

குரலற்றுத் திரிபவனை

நிர்மூலமாக்கி

அவன் மேல் கிருமி நாசினி அடித்து

அவனுக்குச் சுயம் என்ற

ஒன்றில்லை

என்பதை நிர்வாணப்படுத்தி அறிவிக்கும் அரசிற்கு

அவன் ஒரு பூணூல் அணியாதவன்

என்பது மட்டும் போதும்.

நீள் தூரம் உயிர் சுமந்து வந்தவனின் பாதங்கள்

மண்ணுக்குச் சொல்லிக்கொள்ளும்

பிழைத்தவிடத்தில்

அடுத்துச் செல்லும்

வாய்ப்பிருந்தால்

அங்கேயே மரணம் ஒன்று விளையட்டும் என்று...

 

@@@

சாகாமல் சாகிறவன்

 

இந்த வெளியை அவ்வளவு அமைதியாய் இதற்கு முன் கண்டதில்லை

திடீர் புயல் வெள்ளம் விபத்து

எங்காவது நிகழ்ந்திருக்குமா எனத் தேடிச்  சலித்து விட்டேன்

எல்லோருடனும் மயானம் தொடர்ந்தபடி இருக்கிறது

மிக கவனமாகப் பேசுகிறோம்

தொலைவில் நின்று கொள்கிறோம்

கைகளுக்குள் விரல்கள் தானாகவே ஒளிந்து கொள்கிறது

ஒரு தேநீர் சாப்பிடலாமா என்பதற்குக்கூட இப்போது சாப்பிடுவதில்லை என்று மறுத்து விடுகிறோம்

மறக்காமல் எலுமிச்சை சுக்கு மஞ்சள் சீரகம் கபசுரக் குடிநீர் சானிடைசர் வாங்கிப் பயன்படுத்துகிறோம்

எதிர்வீட்டில் கொரோனோ என்றால் பின்பக்கச் சுவரில் பாதை அமைக்கிறோம்

மயானத்தைக் காப்பதுபோல்

நிலவின் கிரணங்கள்

உயிரிகளின் சலனத்தைத் தட்டியெழுப்ப சூரியன் தவறுவதில்லை

மாலை நேரங்களில் பெரும்பாலும் மழை

இல்லையென்றால் மேகமூட்டம்

20 லட்சம் கோடிச் சத்தம் மனிதர்கள் கடந்து கடலில் கலந்து விட்டது

வள்ளுவர் பட்டை அடித்துக் கொண்டார்

பெரியார் காவி பூசிக் கொண்டார்

அம்பேத்கர் பிராமணர் ஆகிவிடுவார்

கந்தசஷ்டி கவசத்தின் பொருள் உணரச் செய்த கருப்பர் கூட்டம் பாராட்டுதலுக்குரியது என்பதை பொதுவெளியில் பகிரக்கூடாது

சூடான ரத்தம் என்பதை சாந்தப்படுத்த ஊரடங்கு என்ற யோகா போதுமானதாகிறது

அவரவர் பணி அவரவர் சம்பளம் அவரவர் வீடு

கொஞ்சம் கொஞ்சமாகப் பசி

தன்னை மறந்து மீண்டும் சிரிப்பதெல்லாம் நடக்கிறது

தொலைதூரத்திலிருந்து ஊர் செல்வோருக்கு ஏதோ ஒரு சாலையோரக் குழியின் கருணை இல்லாமலா போகும்

ரயிலின் பாதையில் உறங்குபவனுக்குத் தண்டவாளம் அதிர்வு சத்தம் கேட்காத வண்ணம் காதுகளில் சப்பாத்தி திணித்துக் கிடக்கிறார்கள்

யானை அன்னாசியில் வெடி வைத்துக் கொல்லப்பட்டது

சாத்தான்குளம் காவல் நிலையத்தில்

அடித்துக் கொன்று போடப்பட்ட நிகழ்வுகள் கொரோனோ காலப் புது அதிர்வுகள் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கவேண்டும்

பழைய திரைப்பட லாரிகளைப் போல ஆம்புலன்சுக்கு படபடப்பைக் கூட்டும் வேலையை அரசு செய்துவிட்டது

பைகளில் உடைகளை எடுத்துக் கிளம்புபவரும் வீட்டில் மீதம் இருப்போரும் கண்ணீர் வடிக்கின்றனர் அரசர் தானும் ஊர் அடங்கியிருப்பதை மீசை தாடி வளர்ப்பதில் வெளித்தோன்றி அறிவிக்கிறார்

பெரிய பெரிய பணக்காரர்களின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக மாறிவிடுகிறது

ஆழக் குழி தோண்டி

இறந்தவனைப் புதைத்துவிட்டுத் திரும்புகிறோம்

உலகெங்கிற்கும் பொதுவாக பாதிக்கப்பட்டோர் குணமடைந்தோர் சிகிச்சையில் உள்ளோர் பட்டியல் வெளியிடப்படுகிறது

கொரோனோ மனித வாழ்வையே மாற்றி அமைத்து விட்டதாக பிரபலங்கள் பேட்டி அளிக்கிறார்கள்

ஆனாலும் மேலெழுந்து பார்த்து விடாதவாறு தடுப்புகளுக்குப் பின்னால் நிறுத்தப்படுகின்றனர் ஒடுக்கப்பட்டவர்கள்

வன்புணர்வுகளுக்குத் தலித் பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதை கண்டும் காணாமல் இருங்கள் கொஞ்சமும் அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள்

உங்களுக்கும் கொரோனோ வந்துவிடும் என்பதில் மட்டும் எச்சரிக்கை தேவை...

 

 

 

 

 

 

 

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

ஐசக்


0   1089   0  
September 2018

திலக நாகராஜன்


0   329   0  
November 2023

நயினார்


1   1100   1  
March 2019

சத்திய பானு


0   410   1  
August 2023