சிவமணி
சிறுகதை வரிசை எண்
# 314
"அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதை பரிசுப்போட்டி"
யாழினி எப்போ வருவாளோ?
**********************************
மகள் யாழினிக்கு வருகிற அக்டோபர் வந்தால் பதினொன்று முடிந்து பன்னிரண்டு துவங்க போகிறது. அந்த பிறந்த தினத்தை நினைத்து தான் வருந்தி கொண்டிருக்கிறாள் பூவிழி. இந்த வருத்தம் இன்றோ, நேற்றோ வரவில்லை. யாழினி ஒன்பது முடிந்து பத்து ஆரம்பிக்கும் போதே உருவாக ஆரம்பித்தது.
இது மனஉளைச்சலா? பயமா? பதட்டமா? என்று கேட்டா சொல்ல தெரியாது அவளுக்கு. அந்த உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மனதை அரிக்க ஆரம்பித்தது.
இது பற்றி புருசனிடம் கலந்து கொள்ளலாம் என்றால், சொல்லி அவருக்கும் ஏன் சங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தனக்குள்ளேயே அமுக்கி வைத்து விட்டாள்.
லாவா எனப்படும் தீக்குழம்பு போல எப்போது உடைந்து போவாள். உருகி போவாள். சில நேரம் அது அழுகையில் முடியும். எப்போதும் எந்த சங்கடம் வந்தாலும் யாரிடமாவது சொல்லி அழுதிடும் வழக்கம் கொண்டவளுக்கு, இதை நினைத்தால் மட்டும் தன்னை தானே அழுது தீர்க்கவே விரும்பினாள். இதை விரும்பினாள் என்று சொல்வதை விட பிறரிடம் இந்த கண்ணீரைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்ப வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இன்னும் ஒரு வருஷத்திலோ அல்லது இரண்டு வருஷத்திலோ நடக்கப் போகிறது. அது நடந்து விட்டால் என்ன செய்வேன் என்ற பதட்டம் அவளைத் தொற்றி கொண்டு பாடாய் படுத்துகிறது. "ஒரு தாயாய் இப்படி நினைப்பது எத்தகைய முரண். இப்படி எந்த ஒரு தாயும் நினைத்திட மாட்டாள். அப்படி நடந்து விட்டால் எனக்கு என்ன கஷ்டம். யாழினி சின்ன பொண்ணு. எப்படி சமாளிப்பா? எப்படி அவளை மேற்கொண்டு சமாதானம் படுத்துவோம்? எப்படி புரிய வைப்பேன்? நான் இப்படி நினைப்பதிலும் எந்த தவறும் இல்லையே" என்றும் பூவிழி புலம்பி கொண்டிருந்தாள்.
எப்போது முதல் முதலில் அது பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டாளோ அதிலிருந்து யாழினிக்கு வெங்காயம், பூண்டு எல்லாம் தருவதை நிப்பாட்டினாள். முடிந்த வரை அரை உப்பு போட்ட உணவையே தந்தாள். துப்புரவாக இனிப்பு பண்டங்களை வாங்குவதைத் தவிர்த்தாள். உறவினர்கள் தின்பண்டம் வாங்கி வந்தால், யாழினிக்கு முன்பு பூவிழி ஓடிச் சென்று வாங்கி விடுவாள். பல சமயங்களில் அவர்களிடமே கொடுத்தும் அனுப்பி விடுவாள்.
அன்று முதல் எப்படி எல்லாம் உணவில் கட்டுபாட்டைக் கொண்டு வர முடியுமோ, அப்படி எல்லாம் செய்ய ஆரம்பித்தாள். யாழினி சிறப்பு பிள்ளை என்று தெரிவதற்கு முன்பு இருந்தே சத்தான உணவாய் தர ஆரம்பித்திருந்ததும், எல்லா வகையான உணவுப் பொருட்களைத் தந்து பழக்கியதும், இன்று பூவிழிக்கு எளிதாக இருந்தது.
“பிள்ளை எது கொடுத்தாலும் சாப்பிடுது. வாய்க்கு ருசியாய் சமைத்து போட முடியல. ஆனா ரொம்ப சத்தானது கொடுத்தா உடம்பு போட்டுடுமுன்னு வாத்தியார் சொல்லுறார். ஒரு முறை உடம்பு எறிச்சுன்னா, அப்புறம் குறைக்கவே முடியாது. இது மாதிரி பிள்ளைகளுக்கு எனர்ஜி அதிகமாக இருக்கும். அப்புறம் தூங்க லேட் ஆகும். உங்க ரெண்டு பேரு தூக்கமும் போச்சுன்னா காலமும் கஷ்டப்படணும்” என்று அவர் சொன்னதில் இருந்து மாதத்திற்கு ஒரு முறை எடைப் போட்டு பார்த்துக் கொள்வாள். வாத்தியாரிடமும் உறுதிப் படுத்திக் கொள்வாள்.
இதில் இன்னொரு கஷ்டம் வேறு. இப்படி கறாராக இருந்தால் ஹீமோகுளோபின் அளவு வேறு குறைந்து விடுகிறது. மீண்டும் அதை ஏற்ற வேறு சிரமப் பட வேண்டி உள்ளது. பல சமயங்களில் குழம்பி போய் விடுவாள். “என்னத்த தான் பண்ணி தொலையுறது. ஒண்ணு கிடக்க ஒண்ணு வருது” என்ற புலம்பலும் அவ்வபோது அடுப்படியில் கேக்கும்.
ஏன் இப்படி அடிக்கடி யாழினிக்கு ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. அதற்கான விடையைத் தேடி அன்றொரு நாள் பள்ளிக்கு ஓடினாள்.
“யாழினி மாதிரி பிள்ளைகளுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவது சாதாரணம் தான். வருத்தப்பட ஒண்ணுமில்ல. சத்தானதும் கொடுக்க முடியாது. ஆனா சத்தாவும் தரனும். இரண்டுகட்டான் நிலமை தான். இது இப்படி தான்னு சொல்லிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமா நாமா தான் தெரிஞ்சுக்கணும். ஏன்னா அவங்களுக்கு சொல்ல தெரியாது. ஆனாலும் இன்னொரு விஷயமும் இருக்கு. சிறப்புப் பிள்ளைகளுக்கு நாக்கின் உணர்வு திறன் குறைவாக இருக்கும். அவளுக்கு பிடிச்சதுன்னு ஏதும் இருக்கா” என்று கேட்டார் வாத்தியார்.
“அவளே விரும்பி ஏதும் சாப்பிடறதும் இல்லை. அவ ரொம்ப பிடிச்சு கேட்பதே புளிப்பு மிட்டாய் மட்டும் தான். நாக்கின் திறன் கம்மின்னு சொன்னப் பிறகு தான் நியாபகம் வருது. கொதிக்குற டீ டம்ளர்ல கை விடுறா. முப்பது செகண்டு வச்சு இருப்பா. பெறவு சிரிப்பா. கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஃபிரிஜ்ல இருந்து பச்சை மிளகாய் எடுத்து சாப்பிட்டா. காரம் இல்லாத மிளகாயாக இருக்குமுன்னு விட்டுட்டேன். வாயில ஒரு நாள் வெள்ளையா ஒட்டி இருந்தது. என்னான்னு பார்த்தா அது வாஷிங் பவுடர். நுனி விரல் ல தொட்டு தொட்டு வாயில வச்சுருக்கா. ஒரு நாள் களிம்பு எடுத்து சாப்பிட்டு இருக்கா. இப்போஎல்லாம் வெங்காயம் சாப்பிடுறா. என்ன சாப்பாடு கொடுத்தாலும் சாப்பிடுறான்னு இப்போ தான் புரியுதுன்னு” வாத்தியாரைப் பார்த்தாள்.
எல்லாத்தையும் கடந்து வந்தாலும், இன்று பள்ளியில் அட்சயா அம்மாவைப் பார்த்து பேசினது தான் அவளின் புலம்பலுக்கு காரணம். இரண்டு வருஷமாக போகும் போது, வரும் போது பார்த்து இருந்தாலும் சிரிப்பதோடு சரி. அட்சயா பேரழகி. பதிமூன்று வயது தான். ஆனால் ஐந்து அடி ஏழு அங்குலம் இருப்பாள். கட்டைக்குரல் அவளுக்கு. “அத்தே வன்கம். குட் மோர்னிங்” என்ற குரலை ஒவ்வொரு காலைப் பொழுதிலும் கேட்டு இருக்கிறாள் பூவிழி.
இன்று காலையில் பூவிழியும், , அட்சயா அம்மாவும் ஒரே நேரத்தில் பள்ளியில் சந்தித்தார்கள். அன்றாட வேலைகள் பற்றிய பேச்சு ஆரம்பித்தது. கணவன்மார்களின் பணி பற்றியும், பள்ளி பற்றியும், செலவுகள் பற்றியும் எழுந்த பேச்சு அட்சயாவிடம் வந்து நின்றது.
“நல்ல நாளு, பெரிய நாளுக்கு வெளில எங்கும் போக முடியுதா? இந்த புள்ளைகளுக்கு எந்த இடம் உகந்ததா இருக்குமுன்னே தெரியல. பஸ் ல கொஞ்சம் கூட்டமா இருந்தா போதும் ஒரே அலறல். எல்லாரும் நம்மயே பார்க்கும் போது ஒரே சங்கட்டம். பஸ்ச வேற நிறுத்திட்டாங்க. யாரோ சில்மிஷம் பண்ணிட்டாங்கன்னு நெனைச்சுட்டாங்க. அப்புறம் யாரோ பேசுனது காதில் விழுந்தது இதுகள எல்லாம் ஏன் பஸ் ல கூட்டி வராங்கன்னு” அட்சயா அம்மா இதுவரை பேசியது பூவிழிக்கு பெரிதாக பாதிக்க வில்லை தான்.
“கல்யாணம் கச்சேரிக்கு போன, போற இடத்துல எல்லாம் அவளையே பாக்க வேண்டி இருக்கு. ஓட, ஒடியாற. அவ கூட ஓட முடியல. நல்ல காரியம் நடக்கும் போது ஏடாகூடமா ஏதாவது செய்துட்டா, காரியம் பண்ணுறவங்க வேற வருத்தப்படுறாங்க. மேஜர் ஆகுற வயசுல உட்காரவும் தெரியல. சேருல கால தூக்கி வச்சுக்குறா. தொடை தெரிய அவ உட்கார்ந்து இருக்கும் போது கோவம் பொத்துகிட்டு வருது. நெஞ்சும் படபடன்னு வருது. எப்படி கரைச் சேர்க்க போறோமோன்னு மண்டக்குள்ள போட்டு குடையுதுன்னு” நிறுத்தினாள் அட்சயா அம்மா.
இங்கே இருந்து தான் பூவிழி யோசிக்க ஆரம்பித்தாள். இது நாளைக்கு யாழினிக்கும் பொருந்தும். அங்கிருந்து அவளால் நகர முடியவில்லை. அட்சயா அம்மாவின் முகம் முழுக்க ஆறுதல் தேடித் திரிவதாக தோன்றியது. ஆனாலும் அவள் தொடர்ந்து பேசுவதையும், அதை கேட்பதையும் மனமில்லை.
“உன்கிட்ட சொல்லாம யாருக்கிட்ட சொல்ல முடியும். யாரு கேட்பா? சொல்லு”
“ம்ம்” என்றாள் பூவிழி
“அட்சயா வயசாக வயசாக ரொம்ப திமிறுறா. போன மாசம் டிரஸ் எல்லாம் கழட்டிட்டு வாசல் கதவுக்கிட்ட நின்னுகிட்டு இருந்தா. நெஞ்சே வெடிச்சுருச்சு. பாய்ஞ்சு போய் அவள பிடிக்குறதுக்குள்ள கைத்தட்டி விளையாடுற. நான் காட்டுக்கத்து கத்தினேன். அவ சிரிச்சுக்கிட்டே நின்னா.”
பூவிழிக்கு வியர்க்க ஆரம்பித்தது.
“அட்சயாவுக்கு அவளுக்கு தெரிஞ்சு ஏதும் அழுக்கு ஒட்டி இருந்தா துடைக்கவே விட மாட்டா. என்ன என்னமோ செஞ்சு அதை தொடைக்க போன, அவ ஆங்காரமா கத்தினா பைத்தியம் பிடிச்ச மாதிரி கத்துவா. வயசுக்கு எல்லாம் வந்துட்டா என்ன பண்ண போறேன்னு, என்ன பாடுபடப் போறேன்னு தெரியல.. எங்க வீட்டுக்காரர் ஒரு தடவ பள்ளிக்கூடத்துல தான் பேச சொல்லி இருக்கார்ன்னு” கண்ணீர் சொட்டு சொட்டாய் விழுந்தது.
பூவிழி கண்ணிலும் கண்ணீர். யாருக்கு யாரு ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் பள்ளிக்கூடத்தின் வெப்ப மரத்தடியில் தற்காலிகமாக கவலை கரைந்தது அட்சயா அம்மாவுக்கு. அந்த கவலை ரேகை பூவிழியைத் தொற்றி கொண்டது.
பூவிழிக்கு வயசுக்கு வந்தா என்ன பண்ண போறேன்னு அட்சயா அம்மா சொன்னது தான் இன்று காலையில் இருந்து ஓடிக் கொண்டிருந்தது. பித்து பிடிச்சு போயிருந்தாள். தான் வயசுக்கு வந்த போது இருந்த வலி, வேதனை எல்லாம் நினைவுக்கு வந்து அழுத்தியது. ஒவ்வொரு மாதமும் வரும் கால்வலி, சோர்வு, மனபிறழ்சி எல்லாம் தாங்கி, அதற்கு ஏற்ற கைவைத்தியமும் செய்தது எல்லாம் யாழினியால் செய்ய முடியுமா? அதை சொல்ல தான் முடியுமா? யாழினி அதை சொல்ல தெரியுமா எப்படி எல்லாம் துடிப்பாளோ? எப்படி எல்லாம் அலறுவாளோ? என்று பித்து பிடித்தது போல இருந்தாள் பூவிழி.
தலைவலி உயிர் எடுத்தது. எதையும் தாங்கிடும் சக்தி இல்லை என்பது போல தோன்றியது. ஏதாவது தீர்வு உண்டா? வயசுக்கு வந்தா தானே. வராவிட்டால்? என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
வயசுக்கு வராமல் இருக்க ஏதும் மருந்து இருக்கா? இல்லை மூலிகை ஏதும் இருக்குமா? என்ற எண்ணம் வர, இணையத்தில் தேடினாள். கை நடுங்கியது. ஏதாவது வழி கிடைக்காத என்ற ஏக்கம் அதிகமாக இருந்தது. இந்த வலி தீராதா? என்ற நம்பிக்கையோடு தேடினாள்.
இதை போல கேள்விகள் பல, இணையத்தில் பலர் கேட்டு இருக்கிறார்கள் என்பதை கண்டாள். இதற்கு உணவோ, மூலிகையோ ஏதும் கிடையாது. ஆனால் கார்மோனல் ஐயுடி மூலமாக தள்ளிபோடலாம் என்ற செய்தி இருந்தது. அதுபற்றி தேடி படிக்க ஆரம்பித்தாள்.
இது குழந்தைப் பிறப்பைத் தள்ளி போடவும், மாற்று திறனாளி பிள்ளைகள் வயதுக்கு வராமல் தள்ளிபோடவும் உதவும். அவள் முகத்தில் சந்தோசம் பிறந்தது. இது மருந்து எங்கு கிடைத்தாலும் வாங்கி கொடுக்க வேண்டியது தான். சேர்த்து வைத்து இருக்குற சொத்து எல்லாம் யாருக்கு கொடுக்க போகிறேன். என் பிள்ளைக்கு உதவாத சொத்து எதற்கு என்று மேலும் தேடினாள்.
அவள் படித்த செய்தி அவ்வளவு உகந்ததாக தெரியவில்லை. கார்மோனல் ஐயுடி என்பது கருப்பை வாயில் வைக்கப்படும் ஒரு சிறிய சாதனமாகும், இது மூன்று முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஹார்மோன்களை வழங்குகிறது. இது மாதவிடாயை குறைக்கலாம் அல்லது அடக்கலாம் மற்றும் ஒரு நிலையான ஹார்மோன் நிலையை உருவாக்குகிறது. இதை பொருத்துவது அத்தனை எளிது இல்லை. வலி மிகுந்தது. சிலருக்கு இந்த சாதனம் மயக்கத்தைத் தரும் என்று போட்டு இருந்தது.
இதை வாசிக்கும் போதே மயங்கினாள். பூவிழி கண் விழித்து பார்க்கும் போது பக்கத்துவீட்டு காரர்களும், பூவிழியின் கணவன் விஜய்யும் அருகில் இருந்தார்கள். யாழினி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
யாழினி “அம்மா ஓபன்” என்று அப்பாவிடம் சொல்லி கொண்டிருந்தாள்.
“என்னாச்சு, என்னாச்சு” என்று விசாரித்தார்கள்.
பூவிழிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளுக்கு கடைசியாக படிச்சது தான் நினைவுக்கு வந்தது. எப்படி இங்க வந்தோம்? யார் கொண்டு வந்து சேர்த்தார்கள்? என்று புரியவில்லை.
“ஏண்டி மா, நீ நல்லா இருந்தா தான் குடும்பத்த பார்க்க முடியும். ரொம்ப விசனப்படாத! ஒன் மனசுக்குள்ள என்ன ஓடுதோ? இருக்கட்டும் தாயி. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்”
“அடுத்த வருஷம் மக சடங்காயிருவா, இன்னும் எவ்ளோ பார்க்க வேண்டி இருக்கு. சடங்கு ஆனா நல்லது நடக்கும் பாரு” என்று பக்கத்து வீட்டு அம்மா ஆறுதல் தந்தாள்.
எப்படி சொல்வேன்? எதை சொல்வேன்? என் பயம் நியாயம் தானா? என் பயத்தை வெளிப்படுத்தினால் யாராவது உணர்வார்களா? என்று சொல்லி கொண்டே சுற்றி சுற்றி யாழினி இருக்கும் பக்கம் பார்த்தாள். கைப்பேசியில் வழக்கமாக யாழினி கேட்டிடும் “வீல்ஸ் ஆன் தி பஸ்” பாடல் ஓடிக் கொண்டிருந்தது. பூவிழி கை அசைத்தாள். யாழினி அம்மா முன் வந்து நின்றாள்.
“அம்மா, ஊச்சி.. அம்மா ஊச்சி” என்று பூவிழியிடம் சொல்லி விட்டு நகர்ந்தாள் யாழினி
இருந்தாலும் அந்த கார்மோனல் ஐயுடி எப்படி பொருத்துவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள பூவிழியின் மனசு துடித்து கொண்டிருந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்