யாழன்
சிறுகதை வரிசை எண்
# 313
தொழில்
அவளுடைய பெயர் மாதவி. கணவன் கோபால். ஒத்தைக்கோர் பெண் குழந்தை. பெயர் மணிமேகலை.
முதலில் வாழ்க்கை சந்தோசமாகத்தான் சென்றது. அழகான மனைவி மீது பேரன்பு கொண்ட காதலும், அழகு பெற்ற குட்டி தேவதை மீது பெரும் பாசமும் கொண்டிருந்தான்.
அவன் கொத்த வேலைக்கு கையாளாக சென்றதில் ஒரு நாளைக்கு 700 ரூபாய் கிடைக்கும்.
வாரத்துக்கு ஒரு முறை அலுப்புக்கு குடித்து வந்தவன், அதன்பிறகு தினமும் குடித்து ஒரு நாள் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து செத்து போனான்.
அவன் செத்த பிறகு அவளுடைய வாழ்க்கை பெரும் போராட்டம் ஆனது. பெண் குழந்தையை வைத்துக் கொண்டு அங்காலாய்த்து வந்தாள்.
மூன்று நாள் தான் சென்றிருப்பாள் சித்தாள் வேலைக்கு, சாந்து சட்டியுடன் கீழே விழுந்து மூட்டில் சிராய்ப்பு காயம் ஆனது. இருக்கிற பணத்திலும், நகையை அடமானம் வைத்தும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தாள்.
பக்கத்து தெருவில் மங்கைன்னு ஒரு பொம்பள உண்டு. அவள் பெண்களை சப்ளை செய்யும் வேலை செய்து வந்தாள். மங்கைக்கு எப்போதும் மாதவி மீது ஒரு கண். அவளை எப்படியும் தொழிலுக்கு கொண்டு வந்துவிடவேண்டுமென்று.
அவன் செத்து போனதும் மங்கைக்கு வசதியாக போய்விட்டது. அவளுடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து அவளிடம் அக்கரையாகவும் கரிசனமாகவும் நடந்துகொண்டாள்.
அவன் செத்த பிறகு சொந்தபந்தத்திலிருந்து ஒருவரும் வந்து ஏன் என்று கேட்கவில்லை. அவளுடன் பிறந்த ஒரு தங்கை கோதை. அவளுடைய கணவன் எப்போதும் சந்தேகப்பட்டு அடிப்பதால் அவள் இவளை பார்க்க வருவதேயில்லை. இவளும் அவளை போய் தொந்தரவு செய்வதில்லை. அதனால் மங்கையின் அக்கரையும் கரிசனமும் அவளுக்கு தேவையாக இருந்தது.
ஒரு நாள் மங்கை அவளிடம் கேட்டேவிட்டாள் “தொழிலுக்கு வா. உன்ன ராணி மாதிரி வச்சிக்கிறேன்”னு.
மாதவி உடனே மறுத்தாள்.
மாதவி “நா எப்படியாவது பொழைச்சுக்குவேன். எப்படியும் என் மகளை நல்லா படிக்க வைக்கனும்” என்று சொல்லிவிட்டாள்.
வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும் என்று முடிவெடுத்து மாதவி ஒருத்தர் வீட்டுக்கு வேலைக்கு சென்றாள். மாதம் 5000/- ரூவா தருவதாக சொன்னார்கள். இரண்டு வாரங்கள் வேலை, நன்றாகத்தான் சென்றது. ஒரு நாள் வீட்டுக்காரன், அவன் மனைவி இல்லாததால் இவளை படுக்கைக்கு கூப்பிட்டதால் அந்த வேலையையும் விட்டுவிட்டாள்.
இந்த வாழ்க்கை தன்னை இப்படி படுத்தி எடுக்கிறதேன்னு ரொம்ப விசனப்பட்டாள். மளிகை கடை அண்ணாச்சிக்கிட்ட சொல்லி வைத்திருந்தாள் வேறு யாராவது வேலைக்கு ஆள் கேட்டா சொல்லச் சொல்லி.
அண்ணாச்சியும் ஒரு வீட்டை காட்டினார். அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்தாள். சம்பளம் குறைவுதான் மாதம் 4000 ரூவா. ஒரு வாரம் தான் சென்றிருப்பாள் பக்கத்து வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி சொன்னாள் “ அந்த வீட்டிலிருக்கும் பையன் பணம் திருடுவான்னும், அத பத்தி அப்போ வேலை செஞ்ச வேலைக்காரி சொன்னப்போ, அந்த வீட்டுக்காரங்க நம்பாம, அவ தான் திருடினான்னு திருட்டுப்பட்டம் கட்டிட்டாங்கன்னும் இத மாரி நாலஞ்சி தடவ நடந்துட்டு”ன்னு சொன்னாள்.
மாதவி பயந்து போய் ஏதாவது ஏடாகூடாமா நடந்துச்சுன்னா ரொம்ப சிக்கலாகிடுமின்னு நினைச்சி அந்த வேலையும் கைய விட்டு போய்விட்டது.
சில மாதங்கள் கடந்தது. மாதவி மிகவும் சிறமப்படுகிறாள் என்பதை தெரிந்து கொண்டு திரும்பவும் மங்கை பேசினாள்.
இப்போது மங்கை ”ஏ இப்படி கிடந்து அல்லாடுற. நா சொல்ற மாறி செய் ஒரு நாளைக்கு 5000/- ரூவா கிடைக்கும் மாசம் நாலு இல்ல அஞ்சு நாள் போனா போதும். குடும்பத்தையும் பாத்துக்கிடலாம், அவளையும் படிக்க வச்சிரலாம்”.
இப்போதும் மாதவி உறுதியாக முடியாது என்று மறுத்தாள்.
மாதவி வேலையும் இல்லாமல் வயித்து பசியோடு எப்படி காலம் தள்ளுவது என்று நினைத்து உள்ளம் கருகினாள்.
தீபாவளி வேறு கிட்ட நெருங்கி வந்துகொண்டிருந்தது. அவளுக்காவது ஒரு டிரஸ்ஸும் பலகாரமும் செஞ்சி கொடுத்துருனுமின்னு ரொம்ப பிரயாசைப்பட்டாள்.
பக்கத்து வீட்டு அண்ணன் சொன்னாருன்னு ஒரு ஹோட்டலுக்கு வேலைக்கு போனா. மாசம் 6,000 ரூவா சம்பளம். காலையில எட்டு மணிக்கு போனா நைட்டு எட்டு மணிக்குத்தான் விடுவாங்க. மணிமேகலைதான் ஸ்கூலு விட்டு வந்துச்சுன்னா அம்மாவ தேடுவா. வீட்டுல ஏதாவது திங்க இருந்துச்சுன்னா சாப்பிட்டுட்டு பக்கத்துல ட்யூசனுக்கு போயிட்டு எட்டு மணிக்கு வருவா. அதனால மாதவிக்கு காலையில மணிமேகலையை ஸ்கூலுக்கு போகும்போது வேலைக்கு போயிட்டு ட்யூசன் முடிஞ்சி வீடு திரும்பும் போது வீட்டுக்கு வந்துவிடுவதில் ஒரு ஆத்ம திருப்தி.
தீபாவளிக்கு அவ நினைச்ச மாறி மணிமேகலைக்கு டிரஸ்ஸும் பலகாரமும் சுட்டு கொடுத்தாள். சந்தோசமா போச்சு.
அந்த ஹோட்டலில் நல்லாவே வேலை செஞ்சி வந்தாள். அதனால முதலாளிக்கும் ரொம்ப சந்தோசம். அவரும் அவளிடம் கலப்படமில்லாத கரிசனையோடு நடந்து கொண்டார். இதை பொறுக்க மாட்டாத யோரோ முதலாளியின் பொண்டாட்டிகிட்ட சொல்லி, அவ ஹோட்டலுக்கு வந்து ஹோட்டல பாக்குற மாரி மாதவிய பாத்துட்டு போயி, வீட்டுல முதலாளிகிட்ட என்ன சொன்னாளோ, அவரு இவ கிட்ட வந்து காலபுடிக்காத குறையா வேலைய விட்டு நிக்கச் சொல்லி கெஞ்சினார். அந்த வேலையும் நிரந்தரம் இல்லாத வேலையா போனது.
தீபாவளி முடிஞ்சி ரெண்டு வாரத்துல அவளுக்கு ஹோட்டல் வேலையும் இல்லாம போச்சு.
இப்படியிருக்கும்போது, பக்கத்து வீட்டு சரசம்மா பாண்டிச்சேரில காண்டிரக்ட்டு பேஸிஸ்ல வேலைக்கு ஆள் கூட்டிட்டு போறாங்க ஒரு நாளைக்கு 300 ரூவா தருவாங்க காலையில 7 மணிக்கெல்லாம் ரெடியா இருக்கனும், திரும்ப சாயங்காலம் 7 மணி ஆவும். வேன் வந்து கூட்டிட்டு போகுமின்னு சொன்னார்கள்.
சம்பளம் போதும்தான். டைம் தான் சரியா அமையல. காலையில புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பமுடியாது. நைட்டு ரொம்ப லேட்டாயிடுமின்னு ரொம்ப கலக்கத்தில் இருந்தா. புள்ளய பாத்துக்க முடியாம போயிருமோன்னு ரொம்ப சஞ்சலப்பட்டாள். நீண்ட யோசனைக்கு பின் வேண்டாமென்று முடிவெடுத்துவிட்டாள்.
ஒரு நாள் கையில் காசு இல்லாமல், பிள்ளைக்கு எதுவும் ஆக்கி போடமுடியாமல் வயிற்று பசியோடு இருவரும் தூங்கிவிட்டார்கள். நடு ராத்திரி ரெண்டு மணிக்கு மணிமேகலை எழுந்து உட்கார்ந்து பசிக்குதுன்னு ”ஓ”ன்னு அழுதத பாத்து கதி கலங்கி போனாள் மாதவி. அப்போ அவள் மனதில் வந்து போனது மங்கையின் வார்த்தைகள். கஞ்சிக்கு வழியில்லாமல் செத்தே போய்விடுவோமா? என்று நினைத்தாள். உயிருக்கு ஆசைப்பட்டு மானத்தை விட்டுவிடலாமா? என்றும் யோசித்தாள்.
பசி வேறு ஒரு பக்கம், அந்த சிந்தனை வேறு ஒரு பக்கம், அவளை அழைக்கழித்தது. தொழிலுக்கு போனால் மானம் மருவாதி என்னாவும். பிள்ளையோட எதிர்காலம் என்னாகும் என்ற பல கேள்விகளை தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள். மானம், மருவாதி தன் வயித்தை ரொப்பவில்லையே என்று மனதிற்குள் மருவினாள். தான் தொழிலை விருப்பப்பட்டு தேர்ந்தெடுக்கவில்லை என்றும், அவ்வாறு தேர்ந்தெடுக்க தன்னை இச்சமூகம் தள்ளியது என்ற கோபமும் அவள் சிந்தனையில் இருந்தது. மங்கை தொழிலுக்கு சென்று நல்ல சம்பாத்தியத்தோடு பகட்டாகத்தான் வாழுகிறாள். அவளை இந்த ஊர் அவ்வளவு ஒன்றும் வெறுக்கவில்லையே மதிப்போடுதான் வாழ்கிறாள். ஒருவேளை பணம் இருந்தால் ஊருக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதோ என்றும் நினைத்துக்கொண்டாள். ஊர் என்ன நினைக்குமென்று வாழ்ந்தால் தானும் தன் பிள்ளையும் பட்டினி கிடந்தே செத்துவிடுவோமோ? இந்த உலகம் எவ்வளவு பெருசு தொழிலுக்கு செல்லாமல் வேறு வேலை பார்த்து வயித்து பசியை போக்கிக்கொள்ளலாமோ? ஒன்றுக்கு மூன்று இடத்தில் வேலை பாத்தாச்சு நம்ம கிரகம் நிரந்தரமா இருக்கமாட்டேங்குது. அந்த வேலைகளில் ஒரு வேலை மட்டும் நிரந்தரமாகியிருந்தால் கெளவரமா வாழ்ந்திருக்கலாம். தொழிலுக்கு போறதுக்கு பதிலா மனைவி இல்லாத போது படுக்க கூப்பிட்ட அவனுடன் படுத்து எந்திருச்சிருக்கலாமோ? அப்பவும் வெளியே தெரிஞ்சால் ஊரே நாரிடும். அதுக்கு யார் கண்ணுக்கும் தெரியாமல் வெளியூரில் எங்கோ தொழில் செய்யலாம். இவ்வாறு பல யோசனைகள் செய்துக்கொண்டே பசி கிரக்கத்தில் உறங்கி போனாள். அன்று அவளுக்கு மனப் போராட்டமாகவே விடிந்தது.
காலையில் விடிந்தும் விடியாமல் மங்கை இட்லியுடன் வீட்டுக்கு வந்துவிட்டாள். இட்லி பொட்லத்தை கொடுத்துவிட்டு இந்தா வாரேன்னுட்டு போய்விட்டாள். தான் பசியோடு இருக்கிறோம் என்பது இவளுக்கு எப்படி தெரிந்தது என்று ஒரு நிமிடம் தலை சுற்றியது. மற்ற எந்த சிந்தனைக்கும் அவளால் செல்ல முடியவில்லை பசி அவளை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது. பிள்ளையை எழுப்பி பல்லு விளக்க சொல்லிவிட்டு தானும் விளக்கிவிட்டு இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.
மங்கை உள்ளே நுழைந்தாள். ஜாக்கெட்டிலிருந்து இரண்டு ஐநூறு தாளை எடுத்து மாதவியிடம் கொடுத்துவிட்டு ”எதுநாளும் என்கிட்ட தயங்காம கேளு”ன்னு சொல்லிட்டு மாதவியின் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டாள்.
அந்த ஆயிரம் ரூபாயை வைத்து 8 நாட்களை ஓட்டிவிட்டிருந்தாள் மாதவி. இனி ஒரு இரவு கூட பசியோடு படுக்க கூடாதுன்னு முடிவு செய்தாள். மங்கைக்கு ஆள் சொல்லிவிட்டாள்.
மங்கை வந்தாள். கிறிஸ்த்துமஸுக்கு இன்னும் நாளு நாள் தான் இருக்கு. பாண்டிச்சேரிக்கு வெளி மாநிலத்திருந்து நிறைய பேர் வருவாங்க. கிறிஸ்த்துமஸ்ஸிலிருந்து நியூ இயர் வரை டூரிஸ்ட் களை கட்டும். காலையில் பத்து மணிக்கு போயிட்டு சாயங்காலம் 4 மணிக்கு வந்துவிடலாம். ஒரு நாளைக்கு ஐயாயிரம். ஓடைத்தெருவில் வெல்கம் பாண்டின்னு ஒரு ஹோட்டல் இருக்கு. அங்க தான் வேலை. பாண்டி பஸ்டாண்டில் இறங்கினால் கூட்டி போக ஆள் வரும். அதே மாதிரி திரும்பவும் பஸ்டாண்டில் கொண்டு விட்டுவிடுவார்கள். யார்கிட்டையும் பேசாத. ரிசப்சன்ல டேவிட்ன்னு ஒருத்தர் இருப்பான் அவன் விபரம் சொல்வான். அதன்படி செய். நாலு மணிக்கு பணத்த வாங்கிட்டு கிளம்பி வந்துரு. நா பாண்டிலதான் இருப்பேன். ஏதாவதுன்னா உடனே போன் போடு உடனே வந்துடுவேன். நாளைக்கு காலையில பத்து மணிக்கு அங்க இருக்குற மாரி போயிடு. ஒரே மூச்சில் சொல்லி முடித்து ஒரு ஐநூறு ரூபாயை மாதவி கையில் தினித்தாள்.
மாதவி ஒரே முடிவோடு இரவு தூங்கினாள். தூங்குவதற்கு முன்பு என்னென்ன செய்யனுமின்னு மணிமேகலைக்கு விளக்கி சொல்லியிருந்தாள். காலை எழுந்து மணிமேகலையையும் கிளப்பினாள். போகும் வழியில் சரசம்மா வீட்டில் விட்டுவிட்டு வேலை விசயமா பாண்டி வரைக்கும் போயிட்டு ஆறு மணிக்கு வந்துவிடுவதாக சொல்லிவிட்டு பாண்டிக்கு பஸ் ஏறினாள். மங்கை சொன்னதுபோல் ஒரு ஆள் பஸ்ஸ்டாண்டிற்கு வந்து அழைத்து சென்று ஹோட்டலில் விட்டான். அங்கு டேவிட் இருந்தான் அவனிடம் விபரத்தை சொன்னாள். டேவிட் அவளை ஒரு அறைக்கு கூட்டி சென்று அங்கு இருக்கும்படியும் கஸ்டமர் வந்தால் சொல்வதாக சொல்லிவிட்டு சென்றாள்.
ஒரே தீர்மாணமாக கிளம்பி வந்த மாதவிக்கு அந்த அறைக்குள் சென்றபின் பயத்தில் தொண்டை அடைத்தது. நா வறண்டது. அந்த அறையே சுற்றியது அவளுக்கு. டேபிளில் இருந்த தண்ணீரை உடம்பில் வழிய குடித்தாள். தாகம் தீர்ந்தபாடில்லை. உடம்பு நடுங்கியது. சேலை முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டாள். அப்படியே அந்த கட்டிலில் உட்கார்ந்தாள். உள்ளங்கை வேர்த்து போர்வையில் ஈரமானது.
சிறிது நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டாள். மனது படபடவென அடித்துக்கொண்டது. கதவை திறந்தாள் அங்கு நான்கு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் பெண் போலீஸ். மாதவி அப்படியே மயங்கி சரிந்தாள். அந்த பெண் போலீஸ் மாதவி முகத்தில் தண்ணி தெளித்து குடிக்க கொடுத்தார். கண்விழித்து பார்த்த போது ஒரு போலீஸ்காரர் வண்டில ஏத்துங்க என்று கூறினார். மாதவி ஓவென்று ஒப்பாரி வைத்து அழத்தொடங்கினாள். பெண் போலீஸ் மாதவி தோளில் ஒரு தட்டு தட்டி சத்தம் போடக்கூடாது என்று மிரட்டினார். ஏற்கனவே வண்டியில் நாலு பேர் இருந்தார்கள் அதில் ரெண்டு பேருக்கு 20 வயதுக்குள் தான் இருக்கும்.
மாதவி ஓதியன்சாலை போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டாள். பத்து நிமிடத்தில் மங்கையும் வந்தாள். அவளை பார்த்த மாத்திரத்தில் மாதவிக்கு கோவமும் அழுகையும் ஒரு சேர வந்தது. அவள் கையை பிடித்துக்கொண்டு எப்படியாவது என்ன இங்க இருந்து கூட்டிட்டு போயிரு நல்லாயிருப்பன்னு கெஞ்சி அழுதாள். மங்கை இரு இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறேன். பணத்த கிணத்த கொடுத்து எப்படியாவது உன்ன கூட்டிட்டு போறேன் கவலைப் படாதேன்னு சொன்னாள். இன்ஸ்பெக்டரிடம் பேசினாள். அவர் மேலிடத்திலிருந்து ரெய்டு போகச் சொல்லி உத்தரவு நான் ஒன்னும் செய்ய முடியாதுன்னு கராராக சொல்லிவிட்டார்.
கொஞ்ச நேரத்தில் இன்ஸ்பெக்டர் 20 வயசுள்ள ரெண்டு பொண்ணுங்களை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டார். அப்போதே புரிந்துவிட்டது மங்கைக்கு மீதமுள்ள மூன்று பேரின் மீதும் வழக்கு பதிவு செய்ய போறாங்கன்னு. மாதவி மங்கையிடம் அவங்க ரெண்டு பேரையும் மட்டும் இன்ஸ்பெக்டர் கூட்டிட்டு போறாரே ஏன்னு, அதுக்கு மங்கை வேற எதுக்கு, ரெண்டு பேரையும் வேறொரு ஹோட்டலில் வைத்து சந்தோசமா இருந்துட்டு அவங்களை மட்டும் விட்டுடுவாருன்னு.
மாதவிக்கு அழுது அழுது முகமெல்லாம் சோர்ந்து வீங்கி காணப்பட்டது. இங்கிருந்து எப்படியாவது போய் விட வேண்டுமென்று அவள் மனம் அடித்துக்கொண்டது. மங்கை அங்கேயே இருந்தாள். அவள் யார் யாரிடமோ போனில் உதவி கேட்டுக்கொண்டிருந்தாள். எல்லோரும் நான் இன்ஸ்பெக்டரிடம் பேசுகிறேன் என்றுதான் சொன்னார்கள். அடுத்த ஐந்து மணி நேரத்துக்கு இன்ஸ்பெக்டர் போனை எடுக்கமாட்டான் என்பது மங்கைக்கு நல்லா தெரியும்.
இன்ஸ்பெக்டர் மூன்று மணிக்கு வந்தார். முகம் ப்ரெஷ்ஷாக இருந்தது. அவர் சீட்டில் உட்கார்ந்தவுடன் ஏட்டையா சென்று கையெழுத்து வாங்கினார். மங்கை இன்ஸ்பெக்டரை பார்க்க உள்ளே சென்றாள். அவர் கேஸ் போட்டாச்சு கோர்ட்டில் மனு போட்டு கூட்டிட்டு போங்கன்னு சொல்லிவிட்டார். மங்கை அவரிடம் அந்த ரெண்டு பேரையும் விட்ட மாரி இவளையும் விட்டுருந்தீங்கன்னா உங்களை செம்மையா கவனிச்சிருப்பேன்னு சொன்னா. இன்ஸ்பெக்டர் அவள் முகத்தை ஐயோ என்பது போல் பார்த்தார். மங்கை அவரிடம் நீங்க அந்த ரெண்டு பொண்ணுங்களையும் கூட்டிட்டு பொறதிலேயே தான் குறியா இருந்தீங்க. நான் சொன்னது உங்க காதிலேயே ஏறவில்லை. இன்ஸ்பெக்டர் அமைதியாக இருந்தார். அவர் மங்கையிடம் அடுத்த மேட்டர்ல பாத்துக்கலாம். இத கோர்ட்டுல போட்டு எடுத்துக்கன்னு சொல்லி முடித்துவிட்டார்.
மங்கை இன்ஸ்பெக்டர் ரூமிலிருந்து வெளிரிய முகத்தோடு வெளியே வந்தாள். அந்த முகத்தை பார்த்தவுடன் மாதவி தாரை தாரையாக கண்ணீர் வடித்தாள். மங்கை அவளிடம், இரு கோர்ட்டில் மனு போட்டு உன்ன எப்படியாவது கூட்டிட்டு போறேன்னு சொன்னாள்.
மங்கை வக்கீலுக்கு போன் போட்டாள். அவர் இருபது நிமிடத்தில் ஸ்டேசனுக்கு வந்தார். அவர் மாதவியிடம் பெயர் மற்ற விபரங்கள் யாவற்றையும் குறித்துகொண்டு மனு தயார் செய்வதாகவும் கோர்ட்டில் வைத்து கையெழுத்து வாங்கி தாக்கல் செய்து வெளியே எடுத்துவிடலாம் என்று கூறினார். மாதவி வக்கீலை இரு கையெடுத்து கும்பிட்டாள்.
நாலு மணிக்கு கோர்ட்டுக்கு கூட்டி போனார்கள். கோர்ட் கட்டிடம் வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டு பிரமாண்டமாக இருந்தது. கோர்ட்டுன்னாலே சிகப்பு கட்டிடமாகத்தானே இருக்கும் இங்கு வெள்ளையா இருக்குன்னு மாதவி மனுதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
அங்கு வைத்து வக்கீல் கையெழுத்து வாங்கி உள்ளே தாக்கல் செய்தார். அதே போல மற்ற இரண்டு பேருக்கும் அவரே மனு தயார் செய்து கையொப்பம் வாங்கிக்கொண்டார். அப்போது மாதவி, வக்கீலுக்கு இந்த மாரி கேஸ் தான் அதிகமா வரும் போல என்று எண்ணிக்கொண்டாள்.
ஓதியன்சாலை போலீஸ்டேசன்னு மூன்று பேரோட பெயரையும் கூப்பிட்டார்கள். மாஜிஸ்டிரேட் முன்பு நிறுத்தப்பட்டார்கள். அவர் நிமிர்ந்து பார்த்தார். அவரிடம் கேஸ் பேப்பர் கொடுக்கப்பட்டது. பார்த்துவிட்டு ஒவ்வொருவரையும் தனித் தனியாக பெயர், ஊர் போன்ற விபரங்களை கேட்டு சரி பார்த்துக்கொண்டார்.
வக்கீல் மூன்று மனுக்களையும் தாக்கல் செய்தார். வக்கீல் மாஜிஸ்டிரேட்டிடம் மூனு பேரும் அப்பாவிகள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இருக்கிறார்கள் அதனால் மனுவை அனுமதித்து வெளியே விடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு மனுவையும் மாஜிஸ்டிரேட் தனித் தனியாக விசாரணை செய்தார். முதல் மனு அந்த இரண்டு பேரில் ஒருவருடையது. மாஜிஸ்டிரேட்டு அவளிடம் உங்க வீட்டிலிருந்து யார் வந்திருக்காங்கன்னு கேட்டார். தன்னோட கணவர் வந்திருப்பதாக சொன்னாள். உடனே மாஜிஸ்டிரேட் அவனை கூப்பிட்டார். அவன் முன்னால் வந்து நின்றான். அவனிடம் மாஜிஸ்டிரேட் என்னப்பா நீயும் இதுக்கு உடந்தையா. நீயே கூட்டிட்டு வந்து, விட்டுட்டு கூட்டிட்டு போறீயான்னு கேட்டார். அதுக்கு அவன் இல்லையென்று மண்டையை ஆட்டினான். மாஜிஸ்டிரேட் இதான் கடைசி இதுக்கு பிறகு உன் பொண்டாட்டிக்காக வந்தா உன்னையும் ஜெயில்ல புடிச்சி போட சொல்லிருவேன்னு மிரட்டினார்.
மாதவிக்கு மாஜிஸ்டிரேட், வீட்டிலிருந்து யாரும் வரவில்லையா என்று கேட்டவுடன் குப்பென்று வியர்த்தது. மற்றொரு பெண்ணை விசாரணை செய்தார் மாஜிஸ்டிரேட். அவளுக்கு வீட்டிலிருந்து யாரும் வராததால் நான்சி ஹோம்ல இருக்கனுமின்னு உத்தரவு போட்டார்.
அடுத்ததாக மாதவி மனுவை எடுத்தார் வீட்டிலிருந்து யாரும் வந்துருக்காங்களான்னு கேட்டார். வக்கீல், இல்லை அவள் கணவர் இறந்துவிட்டார். ஒரே ஒரு பொண்ணு ஐந்தாவது படிக்கிறாள். மனுவை அனுமதிக்குனுமின்னு கேட்டார்.
மாஜிஸ்டிரேட் வீட்டிலிருந்து யாராவது வந்தால்தான் விடுவேன். இல்லைன்னா திரும்பவும் தொழிலுக்கு கூட்டிட்டு போயிடுவாங்கன்னு சொல்லி மறுத்துவிட்டார். மாதவியை நான்ஸி ஹோம்ல இருக்கனுமின்னு உத்தரவு போட்டுட்டார்.
மாதவி மங்கையிடம் தன்னுடைய மகளை சரசம்மாவிடம் விட்டுவிடும்படியும் அம்மா சீக்கிரம் வந்துவிடுவதாக சொல்லும்படியும் கேட்டுக்கொண்டாள்.
உத்தரவு போட்டவுடன் மாதவி கண்ணீரும் கம்பலையுமாக நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தாள். அவளிடம் மங்கை உன்னுடைய தங்கை ஒருத்தி உண்டே அவள் வீடு எங்க இருக்கு என்று கேட்டு முகவரி தெரிந்துக்கொண்டாள்.
ரெண்டு பேரையும் நான்ஸி ஹோமுக்கு கூட்டிட்டு போனார்கள். பெயர் முகவரி எழுதிக்கொண்டு உள்ளே அனுப்பினார்கள். உள்ளே ஏற்கனவே பத்துக்கு மேலே பெண்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரையும், போலீஸ் ஹோட்டலில் வைத்து பிடித்ததாக சொன்னார்கள். அந்த மாஜிஸ்டிரேட், வீட்டில் உள்ளவர்கள் வந்தால்தான் அனுப்புவார். வேறு யார்கிட்டயும் ஒப்படைக்கமாட்டார். அவர்கள் எல்லோருக்கும் வீட்டிலிருந்து யாரும் வராததால் இங்கேயே இருப்பதாகவும் தெரிந்துகொண்டாள். வீட்டிலிருந்து வந்து கூட்டிச்சென்றால் திரும்பவும் இவர்கள் தொழிலுக்கு வராமல் திருந்தி வேறு வேலை பார்ப்பார்கள் என்றும் வீட்டில் உள்ளவர்கள் அவர்களை நன்றாக பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை அந்த மாஜிஸ்டிரேட்டுக்கு என்று சொன்னார்கள்.
ஹோமில் இருக்கும் போது முகம்மது நாச்சியார் டிரஸ்டிலருந்து ஒரு பாயம்மா வந்தார்கள். அவருக்கு ஒரு 65 வயது இருக்கும். கருப்பு பர்தா அணிந்திருந்தார். வட்ட கருணை கொண்ட முகம். அவர்கள் நிறைய அறிவுரை சொன்னார்கள் எல்லாவற்றையும் அமைதியுடன் அழுதுகொண்டே கேட்டுக்கொண்டிருந்தாள். பிள்ளைகளை பற்றி சொல்லும்போது மணிமேகலையை நினைத்து ஏங்கி ஏங்கி அழுதாள். அப்படியே அவருடைய மடியில் படுத்து தன்னை அசுவாசப்படுத்திக்கொண்டாள்.
மங்கை, மாதவியின் தங்கை கோதையை வீட்டில் போய் பார்த்தாள். விசயத்தை கேள்விப்பட்டவுடன் மங்கையை திட்டி தீர்த்தவுடன் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டாள். மங்கை நீதான் அவ தங்கைன்னு சொல்ற மாரி ஒரு டாக்குமெண்ட் வேணுமின்னு சொன்னாள்.
கோதை சரசம்மா வீட்டுக்கு சென்று மணிமேகலையை கூட்டிக்கொண்டு, மாதவி வீட்டுக்கு சென்றாள். அங்கு மாதவியின் ஆதார் அட்டை, ரேசன் கார்டு, எட்டாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, மணிமேகலையை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள்.
மறுநாள் தன்னுடைய மாற்றுச் சான்றிதழையும் எடுத்து வைத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு சென்றாள். அங்கு வக்கீலை பார்த்து விபரங்கள் சொன்னாள். வக்கீல் மனு தயார் செய்து தாக்கல் செய்தார்.
கோதையை மாஜிஸ்டிரேட் விசாரணை செய்தார். நீதான் அவ தங்கச்சின்னு சொல்றதுக்கு என்ன ஆவணம் வச்சிருக்கம்மான்னு கேட்டார். ரெண்டு பேரோட மாற்றுச் சான்றிதழ் இருக்குன்னு கொடுத்தாள். வாங்கி பாத்துட்டு அப்பா பெயர் விசாரித்தார். தங்கைதான் என்பதை உறுதி செய்துகொண்டு நல்ல புத்திமதி சொல்லி தொழிலுக்கு போகாத மாரி பாத்துக்கம்மான்னு அறிவுரை சொன்னார்.
வெளியே வந்த கோதையிடம் வக்கீல் இங்கேயே இருங்க உத்தரவு வாங்கி தருகிறேன் வாங்கிட்டு போய் நான்ஸி ஹோம்ல கொடுத்தீங்கன்னா உங்க அக்காவ விடுவாங்கன்னார்.
கோதை நீதிமன்றத்தின் வெள்ளை சுவரை வெரித்து பார்த்துக்கொண்டிருந்தாள். மதியம் மூன்று மணிக்கு வக்கீல் உத்தரவை கொடுத்தார். நீதிமன்றத்துக்கு வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து ஹோம்க்கு வந்து சேர்ந்தாள்.
ஹோமில் உத்தரவை கொடுத்து வெளியே காத்திருந்தாள். வெளியே வந்த மாதவி, கோதையை பார்த்த மாத்திரத்தில் வெடித்து அழுதாள். கோதையும் அவளை அனைத்துக்கொண்டு அழுது ஆறுதல் சொன்னாள்.
கோதை, மாதவியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தாள். குளிச்சிட்டு வந்து பிள்ளைய தொடுன்னு சொல்லிவிட்டாள். பின்பக்கமாக சென்று பாத்ரூமில் பாவமெல்லாம் தீர வேண்டும் என்ற நினைத்துக்கொண்டு நன்றாக குளித்து முடித்தாள். டிரெஸ் மாற்றிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவள், மணிமேகலையை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து அழுதாள். மணிமேகலை அவளிடம் அம்மா நீ எங்கேயும் போகாதம்மா இங்கேயே இருன்னு சொல்லி முத்தமிட்டாள்.
மறுநாள் காலையில் எழுந்து குளித்துவிட்டு கிளம்பினாள். அம்மா எழுந்தவுடன் மணிமேகலையும் எழுந்துவிட்டாள்.
மாதவி, சரசம்மா சொன்ன காண்டிராக்ட் வேலைக்கு பாண்டிச்சேரி செல்லும் வேனில் ஏறிப் போவதை மணிமேகலை, சந்தோசத்துடன் கையசைத்து வழியனுப்பி வைத்தாள்.
யாழன்
புதுச்சேரி
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்