தமிழ்ச்செல்வன்
சிறுகதை வரிசை எண்
# 312
தலைப்பு : துள்ளித்திரிந்த நினைவுகள்
சென்னையின் ஒரு ஐந்தாவது மாடிக்கு மேல் நீல நிற ஷீட் போட்டு கட்டப்பட்ட
தன் அறையில் படுத்திருந்த டில்லியைக் கதவை தட்டி எழுப்பினான் குமார்.
"மாமே, தலீவர் படத்துக்கு டிக்கெட் உசார் பண்ட்டேன். டைம் ஆச்சு. கெளம்பு கெளம்பு"
"ஏய் எப்புட்றா? முதல்லியே போன்ல சொல்றதுக்கின்னா கொமாரு"
"உன் மூஞ்சுல லைட் எரியுற அயக போன்ல பேசச்சொல்லோ பாக்க முடியுமா? அதான் நேர்லயே வந்தேன். இப்போ கெளம்பு உள்ளே போயி சீட் பாத்து உக்காந்து படம் ஆரம்பிக்க டைம் கரீட்டா இருக்கும்"
டில்லி தயார் ஆனான்.
"போலாம் கொமாரு"
"அய்யீயே இன்னாதிது. பூமர் அங்கிளாட்டம் லுங்கி கட்னு வர. புள்ளிங்கோ மேரி கெத்தா பேண்ட் எதுனா மாட்டினு வரத்தாவில்ல. லோக்கல் தியேட்டர்னு நினைச்சுகினியா. மல்டிபிளேஸ் போறம் மாமே. மால் உள்ள போனா கண்ணுக்கும் ஜிலுஜிலுனு இருக்கும். உடம்பும் ஜிலுஜிலுனு இருக்கும். டீசண்டா போணும்"
"சர்தான் போடா. லுங்கி அருமை உனுக்கின்னா தெரியும். கயிதைக்கு தெரிமா.. இன்னவோ சொல்லுவானுங்களே . அவனுங்கோ கிடக்கறானுங்கோ. நீ மூடினு வண்டிய உடு"
நகரத்தின் பரபரப்பான மால் ஒன்றின் வாசலுக்கு வந்தார்கள்.
"கொமாரு. இந்த மாலா? படம் முடிஞ்சு போக சொல்லோ நீயே மெர்சல் ஆவற மேரி ஒரு விஷயம் சொல்றேன்"
காவலாளி சோதனைக்காக நிறுத்தினான். இவர்கள் இருவரையும் ஒருமுறை மேலிருந்து கீழ் பார்த்தான்.
"ஏ டிரஸ் கோட் நஹி செலேகா. லுங்கி நாட் அளவுட்"
"இன்னாடா நஹி, தஹிங்கிறான்"
"நீ இரு. நான் பேசுறேன். பய்யா பய்யா. பஸ்ட் டைம் உள்ள வுடு, அடுத்த தபா வரச்சொல்லோ ப்ராமிஸ்ஸா பேண்ட் மாட்டினு வருவாரு. இப்போ வுடு பய்யா."
"ரூல்ஸ் ரூல்ஸ் ஹே, டிரஸ் கோட். லுங்கி நாட் அலோவட்"
"இன்னாடா சொல்றான், நான் கோடு போட்ட லுங்கி கட்டினா அவனுக்கு எங்க எரியுதாம். இவனுக்கோசரம் ஊட்டாண்ட போயி பூப்போட்ட லுங்கி கட்டினா வரமுடியும்"
"புரியாத பேசாத மாமே. எந்த லுங்கியும் கட்டக்கூடாதாம். உள்ளே உட மாட்டானாம். இங்க இவனுங்க வச்சது தான் சட்டம்"
"டேய் , யார் இடத்துல வந்து யார் சட்டம் போடறது. இன்னுமாடா இதெல்லாம் பாத்துனு கீறீங்கோ. உள்ள பாரு ஆம்பள பொம்பள எல்லாம் தம்மாத்தூண்டு டவுசர் போட்டுன்னு சுத்தினு கீதுங்கோ. நம்ம கைல ஒண்டி ரூல்ஸ் பேசறான்"
"மாமே மாமே ,ஒரு நிமிஷம் இரு. நீ லுங்கி உள்ளே டவுசர் போட்டுனுகீறீயா. கட் ஜட்டி சொல்லல. கொஞ்சம் பெரிய டவுசர் தானே போட்டுனு கீற"
"அஆன்டா கொமாரு. அது இன்னாத்துக்கு கேக்கற"
" வேற லெவல் ஐடியா ஒன்னு கீது மாமே.இப்போ வெளீல போறோம். ஒரு பங்க் கடைல கவரு ஒன்னு வாங்கறோம் "
"இன்னா கவுருடா அண்ணாக்கவுரா, என்னாண்டையே கீதுறா "
"புரியாத ஆளா கீறியே மாமே, கவுரு இல்ல கவர்ர்ர்"
"சரிபா. அண்ணாத்தே ஒரு கவர் கொடு"
"தாத்தா காலத்து பேச்சை மாத்து மாமே. நான் எப்படி கேக்கறேன் பாரு. ப்ரோ ஒரு கேரி பேக் கொடுங்க. 2 ரூபீஸ் 5ரூபீஸ் எது இருந்தாலும் பரவால்ல எதுனா ஒரு கேரி பேக் கொடுங்க ப்ரோ.
கண்டுக்கினியா இப்படித்தான் ஸ்டைலா பேசணும். தமிழ்க்காரன் மேரி தெரிஞ்சா ப்ரோ. இந்திக்காரன் மேரி தெரிஞ்சா பய்யா. டீக்கடை நாயர்னா சேட்டா .பில்பீங்கோ சும்மானாச்சுக்கும் சீன் போடறதுக் கோசரம் நம்மல்ல அண்ணாங்கும் அத ஃப்ரீயா உட்டுனு போயினே இருக்கனும்"
"அவன் நம்ம இடத்துக்கு பொழைக்க வந்தான்னா நமக்கோசரம் அவன் மாறனும். அவனுக்கோசரம் நாம மாறக்கூடாது.புரிதா. இப்போ இன்னாத்துக்குடா இந்த கவரு வாங்கின"
"லுங்கி அவுத்து கவர்ல வை "
"டாய், பப்ளிக்ல எப்புட்றா"
"பப்ளிக்கே டவுசர்ல தான் மாமே சுத்துது. நீ தூணான்டா மறைவா போயி அவுத்து போட்டு வா"
"மொறைக்காத மாமே. லுங்கிய -அவுத்து கவர்ல- போட்டு வான்னு சுருக்கமா சொன்னேன்"
இப்போது அவர்கள் உள்ளே சென்ற போது காவலாளி அந்த பையை பரிசோதித்து உள்ளே அனுப்பினான்.
"உள்ள போயி லுங்கி எடுத்து கட்டிக்கோ, எவனும் கேட்கமாட்டான்.உள்ளே போனதுக்கு அப்பறம் எவனுக்கும் கேக்கறதுக்கு ரைட்ஸ் கிடையாது. மீறி எவனாச்சும் கேட்டானு வை. பகுள்ளியே ஒன்னு உடு. கேஸ் ஆச்சுன்னா நான் பாத்துக்கிறேன்"
பையில் லுங்கியை வைத்துக்கொண்டே படம் பார்த்து முடித்தார்கள். முடிந்த பின் டில்லி லுங்கி கட்டிக்கொண்டான்.
"தலீவர் வேற லெவல், செம மாஸ் இன்னா மாமே சொல்ற "
"அஆன்டா கொமாரு, இந்த மேரி படம் பார்த்து எம்மா நாளாச்சு தெர்மா "
"அப்படியே லுங்கி கட்டினு நம்ம செக்கியூரிட்டி பய்யாவாண்ட ஒரு சலாம் போட்டுனே போலாம்"
"பய்யா, லுங்கில கோடு சோக்கா கீதுல .வர்ட்டா"
"பய்யாக்கு செம பல்பு"
"கொமாரு, நான் உள்ளே போக சொல்லோ உன்னாண்ட ஒரு விஷயம் சொல்றேன்னு சொன்னேனே அது இன்னா தெரியுமா. இந்த மால் கட்டின இடம் எங்க பரம்பரை சொத்து. இப்போ நிக்கிறோமே இதே இடத்துல எங்க தாத்தா பசு மாடு எரும மாடு எல்லாம் கொட்டா கட்டி வளத்தாருடா 25 வருஷம் முன்னாடி நான் தவ்லூண்டு பையன். தோஸ்துங்களோட கில்லி,கோலி,பம்பரம், காத்தாடி, முதுகு பஞ்சர் எல்லாம் விளாடின இடம்டா. எங்க தாத்தா கீறான் பாரு .ஒரு சாராயம் காசற சோமாறி ஊத்தி கொடுத்து ஏமாத்தி கைநாட்டு வாங்கிகினான்டா. இப்போ என்னியே வெளியூர் காரப்பசங்க லுங்கி அவுத்து டவுசரோட உள்ளே வாடான்னுட்டாங்கோ. "
"பழசை நினைச்சு ஃபீலிங் ஆவத மாமே. மாற்றம் ஒன்றே மாறாதுனு பெரிய தலீங்கோ சொல்லிக்கிறாங்கோ"
"வாட்தெ . அவனுங்க சொல்லிட்டு போயிடுவானுங்க. நாம தானே அனுபவிக்கிறோம் "
"வாட் தெ ஹெல் ,வாட் தெ பக் எல்லாம் இங்க்லிஷ் கெட்ட வார்தையாச்சே. நீயும் மாறிட்டியே மாமே "
"நான் சொன்னது தமிழ்ல தான். வெள்ளைக்காரனுங்க தான் அதை காப்பி அடிச்சு பேசறானுங்க. தமிழ்ல பேசினா கலீஜ்ஜின்றீங்க. அதை இங்கிலிஷ்ல சொன்னா ஸ்டைலுங்கறீங்க"
குமாரின் வண்டி அந்த இடத்தை சுற்றிக்கொண்டு சென்றது. டில்லி தன் தாத்தாவின் கன்றுக்குட்டிகள் துள்ளி விளையாடிய இடத்தை ரசித்தபடியே சென்றான்.
[ முற்றும் ]
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்