Kalandhai Abdul Rahman
சிறுகதை வரிசை எண்
# 310
முதல் அத்தியாயம் - களந்தை அப்துல் ரஹ்மான்
இஷா தொழுவை முடிந்து அடுத்த அரை மணிநேரத்தில் தைக்கா கிரவுண்ட் பக்கம் ஆத்தூரில் கச்சேரிப் பார்க்கப் போகும் கூட்டம் கூடியது. முதல் ஆளாக பைசல் வர, அவனைத் தொடர்ந்து செவல சாதிக், சாவுல், துபாய் காதர், சட்டிச் சோறு, சிங்காரப்பா, பைசல், சேவாத்து, ரம்மி ரசாக், ஆத்தூரான் என மொத்தம் பத்து டிக்கெட்டுகள் தேறியது. துபாய் காதரும் காரோடு வந்திருந்தான். துபாய் காதரிடம் இருந்த கார் சாவியை வாங்கிய செவல சாதிக், அதை பைசலிடம் கொடுத்து “நீ வண்டி எடு மாப்ள… அப்பத்தான் கச்சேரி இங்கருந்தே களைகட்டும்” என உசுப்பிவிட மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
கார் சாவி பைசல் கையில் போனதுமே காதருக்கு நெஞ்சு உதறித் தள்ளியது. “இன்னிக்கு கண்டிப்பா செரைதான்… நம்ம கார் கச்சேரிக்கு போவுற மாதிரி திரும்பி வருமா? இல்ல இத வச்சே ஒரு கச்சேரி பண்ணி வரும்போது சந்தாக்குல வச்சி தூக்கிட்டு வரப் போறானுவளான்னு தெரியலயே?. சின்ன தம்பி கவுண்டமணியாவது கண்ணு தெரியாம தான் லாரிக்கு நடுவாக்குல போய் பைக்க நிறுத்துவாப்ல. ஆனா, இந்த பைசலு வேணும்ன்னே போய் லாரிக்கு முன்னாடிப் போய் வெட்டிட்டுப் போவான். சரி நடக்குறது நடக்கட்டும்… போனமாதிரி வந்தா கார விக்கலாம்… இல்லைன்னா காயலான் காடைக்கு தான்” என தனக்குத்தானே பேசிக் கொண்டான். பைசல் டிரைவர் சீட்டில் உக்கார, அடுத்து பத்து பேருடன் கார் கிளம்பியது. தெருமுக்கு தாண்டி கார் ரோட்டில் ஏறவும் செவல சாதிக்கும் பைசலும் ஒரே நேரத்தில் “அஸ் ஸலாத்துல் ஜனாஸா” என சொல்ல, காதரை தவிர மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். இறந்தவர்களின் மையத்தை எடுக்கும் போது “அஸ் ஸலாத்துல் ஜனாஸா” என சொல்வது வழக்கம்.
ஆழ்வாரில் இருந்து கார் புறப்பட்டு அடுத்த அரைமணி நேரத்தில் ஆத்தூர் சென்றடைந்தது. பாடகர் ஆழ்வை உஸ்மானும் சரியாக கச்சேரிக்கான மேடையில் ஏறுகிறார். இன்னொரு பக்கம் “ஹலோ… ஹலோ… லோ… லோ… லொ… லொ… மைக் டெஸ்ட்டிங் மைக் டெஸ்ட்டிங்… டெஸ்… டிங்… டிங்… ங்ங்… ங்ங்…” என மைக், ஸ்பீக்கர்கள் சரிசெய்யும் வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருந்தன. அன்னா இன்னாவென்று பத்து மணிவாக்கில் உஸ்மான் பாடத் தொடங்கினார்.
ஒவ்வொரு பாடலையும் பாடி முடித்த உஸ்மானுக்கு பார்வையாளர்களிடம் இருந்து விருப்பப் பாடல் எழுதிய விண்ணப்பங்களும், அன்பளிப்பும் சென்று கொண்டே இருந்தன. அதுவரை சுற்றியிருந்த பெண்கள் கூட்டம் பக்கமும், வீட்டு தட்டாடிகளில் நின்றுகொண்டிருந்த கொமரு பெண்கள் மீதும் பார்வைகளை படரவிட்டுக் கொண்டிருந்த பைசலும் செவல சாதிக்கும், இயல்புநிலைக்கு திரும்பினர். பைசல் ஏற்கனவே காலேஜ் கொண்டுபோன சிம்ரனின் அட்டைப் படம் கொண்ட நோட்டை வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்தான். அதிலிருந்து சில தாள்களைக் கிழித்த பைசல், முதல் மூன்று நான்கு அன்பளிப்பிள் “ஒருநாள் மதினா நகர்தனிலே”. “பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை” என தேர்ந்தெடுத்த பாடல்களோடு இருபது ரூபாய் நோட்டுகளையும் உஸ்மான் கைகளில் கிடைக்குமாறு மேடைக்கு அனுப்பி வைத்தான்.
அன்னைக்கு பைசல் கேட்ட பாடல்கள் எதையும் அதுவரை ஆழ்வை உஸ்மான் பாடவில்லை. அந்தளவுக்கு பாடல்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருந்தன. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த பைசல் தனது சைத்தான் வேலையை காட்டத் தொடங்கினார். அவசரம் அவசரமாக ஒரு தாளை கிழித்து சடசடவென பாட்டு பேரையும், அதுக்கு கீழ எதையோ எழுதி கச்சேரி மேடைக்கு அனுப்பி வைத்தான்.
மேடையில் முகவை S.A.சீனி முஹம்மதின் மருதநாயகம் பாடலை வீரம் முழங்க பாடிமுடித்த ஆழ்வை உஸ்மான் கைகளில் இருக்கும் தாள்களைப் பிரித்து அன்பளிப்பு விவரங்களையும் விருப்பப் பாடல்களையும் மைக்கில் தனது கணீர் குரலில் அறிவித்துக்கொண்டிருக்கிறார். அப்போது பைசலிடம் இருந்து சென்ற தாளை பிரித்ததும் உள்ளே என்ன எழுதியிருக்குன்னு படிச்சுப் பார்க்காமல் அப்படியே வாசிக்கத் தொடங்கினார். “ரூவாய் ஐம்பது அன்பளிப்புடன் கப்பலுக்குப் போன மச்சான் பாடலை பாடும் படி விரும்பிக் கேட்டுள்ளனர், அகில ஆழ்வை ஷகிலா ரசிகர்மன்ற நண்பர்கள்” என்று முடிக்கவும், கூடியிருந்த பெண்கள் கூட்டத்தில் இருந்து சிரிப்பும் ஏச்சும் ஒருசேர வருகிறது. ஆழ்வை உஸ்மானுக்கு ‘கப்பலுக்கு போன மச்சான்’ பாடலில் இருக்கும் வில்லங்கம் புரிந்தாலும், அந்த ஷகிலா யாரென்று உடனே புடிபடவில்லை.
அதேநேரம் கந்தூரி கமிட்டியினரும் ஆத்தூரைச் சேர்ந்த வாலிப பையலுவள்களும் அம்பாசிடரை நோக்கிச் சாடி வருகின்றனர். செவல சாதிக்கும் பைசலும் முதல் ஆளாக காரில் ஏறிவிட மற்றவர்கள் எல்லாம் அடித்துபிடித்து உள்ளே நுழைந்தனர். துபாய் காதருக்கு இடமே இல்லை. கடைசியாக பைசல் காரை ஸ்டார்ட் செய்கிறான், கார் கிளம்பவில்லை. “எலே கார் செல்ஃப் எடுக்கல… சட்டுன்னு இறங்கி கார தள்ளுங்கலே” என்று பைசலும் செவல சாதிக்கும் கத்துகின்றனர். ”எலே ஆழ்வார்காரனுவள விடாதீங்கள… இவனுவோ கச்சேரிக்கு வந்தாலே இந்த எழவு தான்” என்று கூச்சலுடன் ஆத்துர்காரனுங்கள் விரட்டுகின்றனர். பத்து இருவது அடி தூரத்தில் கூட்டம் சாடி வர கர் அங்கிருந்து மாயமாகியது.
ஒருவழியாக வீடு வந்த சேர்ந்த பைசல் காலையில் தூக்கத்தில் இருந்து எழும்பும் முன்னாடியே ஆத்தூர் கச்சேரியில் நடந்த களேபரம் ஊரெங்கும் முக்கியச் செய்தியாகிவிட்டது. போர்வையைத் தூக்கி தலையை எட்டிப் பார்க்கும் பைசலுக்கு எதிராக அவனது கண்ணா மீராள் உக்கார்ந்திருந்தாள். “நேத்து ஆத்தூர் கந்தூரிக்குப் போய் என்ன எழவுல இழுத்துட்டு வந்த?... ஊரெல்லாம் உன்னையும் ஓன் கூட்டாளிமார்வளையும் திட்டி பெட்டில அள்ளிட்டு இருக்குது. கச்சேரி பார்க்க போனோமா வந்தோமான்னு இல்லாம..” என வாயிக்குள் மொனங்கிக் கொண்டே இருந்தாள்.
எதிரில் இருந்த மீரா கண்ணாவிடம் துபாய் காதரின் அம்பாசிடர் கார் பற்றி பேச்சை எடுத்தான். திரும்பவும் துபாய்க்கு பயணம் செல்லும் முன், அந்தக் காரை காதர் விக்கப் போறது வரையிலும் எல்லாத்தையும் சொல்லி முடித்தான். மீரா கண்ணாவிற்கு சொந்தமாக ஒரு ப்ளஸர் கார் வாங்கி அதில் பீமாத் தாய் பள்ளிக்கு போய்வரணும்ன்னு பல வருட ஆசை. “எங்கூட்டுகாரர் இப்படி ஒரு ப்ளஸர் கார் வாங்கி என்னைய பீமாத் தாய் பள்ளிக்கு கூட்டிப் போறேன்னு சொல்லிருந்தாங்கோ. அந்த மனுசன் போனதும் எனக்கும் அந்த ஆசை அந்தாக்குல அப்படியே போய்டுச்சு. அதுக்கு அப்புறம் நானும் இன்னும் பீமாத் தாய் போய் பார்த்தபாடு இல்ல” என தனக்குள் இருந்த ஏக்கத்தை சொல்லி முடித்தாள். அந்த மனுசன் தான் சொன்னத மறந்து படைச்சவன்ட்ட போய் சேர்ந்துட்டார்… நீயாவது கூட்டிப் போயம்ல… என்ன செலவு ஆவுதோ அத நான் தாரேன்” என பாவமாக கேட்டாள். கணேசன் கடையில போய் பக்கோடா வாங்கிட்டு வர சொல்லி மீரா கண்ணா பலதடவை மன்றாடிய போதெல்லாம் கண்டுக்காமல் போன பைசலுக்கு, இதை அப்படி விட்டுவிட மனமில்லை.
அடுத்த பத்தாவது நிமிசம் அந்த அம்பாசிடர் காரை வீட்டு முத்தத்தில் கொண்டு போய் நிறுத்தினான் பைசல். வாசலில் உக்காந்து மீன்கார சாச்சாவிடம் கதை பேசிக்கொண்டிருந்த மீரா கண்ணாவுக்கு தலையும் புரியல காலும் புரியல. “எலே என்னா இது?... நல்லாயீந்துருவான் (நல்லா இருந்துருவான்) கார் எவ்ளோ வெலைன்னு தானே கேக்கச் சொன்னேன்… நீ போன வேகத்துல காரோட வந்து நிக்குற… வெலைபேசி கார எடுத்துட்டு வந்தீயா இல்ல காதருக்கு தெரியாம கள்ளச் சாவிப் போட்டு ஓட்டிட்டு வந்துட்டியா?” எனக் கேட்டாள்.
மீரா சொந்தமாக கார் வாங்கியதும், இன்னும் பத்து நாளையில் பீமாத் தாய் பள்ளிக்கு பயணம் போறதும் அந்த வட்டாரம் முழுக்க பேச்சானது. “கார்ல இடமிருந்தா சொல்லுங்க லாத்தா… நாங்களும் உங்கக் கூட வரோம்” என்று சிலரின் விண்ணப்பங்கள் வீடு தேடி வந்தன. விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டவர்கள் கையில் கொண்டு வந்த காணிக்கை சல்லியை மீராவிடம் கொடுத்துச் சென்றனர். அதுவரை ஹஜ், உம்ரா என மக்கா, மதினா பக்கம் போக கொடுத்து வைக்காத மீராளுக்கு, சொந்த காரில் பீமாத் தாய் பள்ளிப் போறது பரவசமாக இருந்தது. காவட்டையில் பார்த்து குறிச்சு வச்சிருந்த நாளும் நெருங்கியது.
காலையில் நாலு மணிக்கெல்லாம் கலர் கலராய் கட்டம் போட்ட சாரமும், அதன்மேல் பூப்போட்ட சீலையும் உடுத்து ரெடியான மீராள், மற்றவர்களையும் வெரட்டி வெரட்டி காரில் ஏறச் சொன்னாள். பின் சீட்டில் பைசலின் ம்மா, தங்கை, பக்கத்துவீட்டு நபிஷா மாமி, மீராளின் தோழி பவுஸியா நால்வரும் அமர்ந்துகொண்டனர். பைசல் டிரைவர் சீட்டில் உக்கார, அவன் பக்கம் நபிஷா மாமியின் மகனும் அடுத்து சன்னலோரம் மீரா கண்ணாவும் ஏறினர். ”எலே வாப்பா நல்லா ஆயத்துல்-குர்ஷி ஓதிட்டு கார்ர எடு… ஆங்…. அல்லா உன் காவல்…” என சொல்லி முடிக்கவும், கார் ஒரே அடியில் ஸ்டார்ட் ஆனது.
அதிகாலையில் நல்ல தேகத்துக்கு இதமான காற்றை சன்னலோரம் இருந்த மீரா கண்ணா நல்ல அனுபவித்தபடி பயணத்தை ரசிக்கத் தொடங்கினாள். “இத்தன வருசம் ஆவுது, இன்னிக்கு தான் கார் முன் சீட்டுல வந்து உக்காந்துருக்கேன். உங்க அப்பா இருக்கும் போதுலாம் பின்னால தான் இருக்கணும்… முன்னாடி வரவான்னு கேக்கக் கூட முடியாது. ஒருவேள கேட்டுருந்தா டிக்கில வச்சு அடைச்சிருப்பாரோ என்னவோ” என்று பைசலிடம் கதை பேசத் தொடங்கினாள். “காரு நல்ல சொகுசாதான் இருக்குது: இன்னா… இந்த கார்ர கண்டுபுடிச்சவன் முஸ்லிமா இருப்பானோ…? உனக்கு எதுவும் தெரியுமோ? எனக் கேட்டதும் பைசலுக்கு ஒன்னும் வெளங்கலை. “ஏன் கண்ணா அப்படி சொல்ற” என்று திருப்பிக் கேட்டான்.
“ஆமா இந்த கார் முன்னால இருக்குற அந்த கூட(டு) பாரு. நடுவுல பெரிய மூக்கு மாதிரி இருக்குறத பார்த்தா பள்ளிவாசல்ல மத்தில இருக்குற அந்த டூம் மாதிரியே இருக்கு. ரெண்டு பக்கமும் லைட்டுக்கு பெரிய தூண் மாதிரி நீண்டுட்டு இருக்குறத பார்த்தா, பள்ளிவாசல்ல இருக்குற மினாரா மாதிரி தெரியுது. இந்த ப்ளஸர் கார்ர எனக்கு புடிக்க காரணமே இதுதாம்ல. குலுங்காம கொள்ளாம எவ்ளோ அழகா இருக்கு. என்னான்னு தான் இதெல்லாம் கண்டுபுடிச்சு இப்படி ஓடவிட்டானுவளோ?” என்று பேசியதைக் கேட்ட பைசலுக்கு மீரா கண்ணாவின் கற்பனையை நினைத்து தூக்கிவாரிப் போட்டது. “கார்ல நாகூர் கனிபா பாட்டு போட்டு விடம்ல” என பைசலிடம் கேட்டாள் மீரா கண்ணா. ஏற்கனவே ஒரு கேசட்டு ரேடியோவில் இருந்தது. பைசல் ப்ளே பட்டனை அமுத்தியதும், காயல் ஷேக் முகம்மதுவின் “கப்பலுக்கு போன மச்சான்” பாடல் ஒலித்தது. ”என்னா அழகான பாட்டுமா இது” என மீரா கண்ணாவும் பின் சீட்டில் இருந்து பவுசிய பெத்தாவும் லயித்துப் போனார்கள்.
பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது, நாகூர் அனிபா பாடல்களை கேட்டுக்கொண்டே வந்த மீரா கண்ணா, “யாம்ல இப்படி மாதா கோயில்ல சப்பரத்த தூக்கிட்டுப் போன மாதிரி மெதுவா ஓட்டுற… மத்த கார்லாம் எப்படி வெரசலா போறானுவோ…? நீயும் அப்படி போனா என்னா?” என்று பைசலிடம் சலித்துக் கொண்டாள். “இந்தா பாரு கண்ணா, நானே கார் இவ்ளோ தூரம் நிக்காம போவுதேன்னே நிம்மதியா இருக்கேன். இது எப்போ நிக்கும்… எதுக்கு நிக்கும்ன்னு யாருக்குமே தெரியாது. அப்படியே நின்னாலும் இங்க தள்ளிவிடுற மாதிரி யாரும் இல்ல. அன்னைக்காவது ஆத்தூர் கந்தூரில ஸ்டார்ட் ஆகாலன்னதும் இருந்தவன்லாம் எறங்கி ஆளுக்கு ஒரு கைவச்சு தள்ளுனானுவோ. எனக்கு சும்மாவே நெஞ்சு கதக் கதக்ன்னு இருக்குது. நானே எதோ தைரியத்துல கார்ர எடுத்துட்டு ஒனக்காக இவ்ளோ தூரம் வந்துட்டேன்” என்று மனசுக்குள் கிடந்த பயத்தையெல்லாம் கொட்டித் தீர்த்துட்டான். ”இவ்ளோ பேசிறீயே வேணும்ன்னா நீ வந்து கார் ஓட்டுறியா?... ஒனக்கு எதாவது தெரியுமா?.... இந்த கியர் எதுக்குன்னு தெரியுமா?... ஆக்சிலேட்டர், பிரேக், கிளட்ச், ஸ்டீயரிங்ன்னு எவ்ளோ இருக்கு….?” என மீரா கண்ணாவை கேள்விக் கேட்டான் பைசல்.
”ஆமா பெரிய பிஸ்கோத்து…. அஞ்சு கிலோ கொழவிய வச்சு அம்மில தொவையல், சட்னின்னு அரைக்குற எங்களுக்கு இத்துணூண்டு இருக்குற இந்த குச்சிய ஆட்டி கியர் போடத் தெரியாதோ?. தையல் மெஷின்ல துணிய வச்சி… சரியா பெடல் அழுத்திட்டே மேல இருக்குற சின்ன சக்கரத்த சுத்தவிட்டு சுத்தவிட்டு தைக்குற மாதிரி தான் இந்த இப்போ நீ சொன்னது எல்லாமே” என்று ஒரே போடாக போட்டாள். பைசலுக்கு ஒன்னும் பேசமுடியவில்லை. கார்ரும் தையல் மிஷினும் ஒன்னா என மனசுக்குள்ளே கேள்விக் கேட்டுக்கொண்டான். ஹைவேஸ் ரோட்டை பார்த்ததும் மீண்டும் ஒரு கேள்வி மீரா கண்ணாவிடம் இருந்து வந்தது.
“எல என்னல இது… நீ பாதை மாறி போறியோ… ரோடெல்லாம் இம்புட்டு நீட்டமா இருக்கு…. நெறைய மரமெல்லாம் இருக்குமே… ரோட்டோரம்லாம் நிறைய சின்ன சின்ன கோயில்லாம் இருக்குமே…? எனக் கேட்டு முடிக்கவும், பைசல் பதில் கொடுத்தான்,
“இது இப்போ ஹைவேஸ்… ஒரே நேரத்துல நாலஞ்சி காருவோ ஒன்னா ஒரே நேட்டுக்குப் போகலாம்…”
“எப்படிப் போனாலும் எல்லாரும் போற இடத்துக்குத் தான போவானுவோ…. வேற எங்கையுமா போவப் போறானுவோ” என திட்டித் தீர்த்தாள் மீரா கண்ணா.
பைசல் மீண்டும் விளக்கம் கொடுத்து முடியவும் நாங்குநேரி டோல்கேட் வந்தது. அங்கே டோக்கன் வாங்கிவிட்டு கார் நகரவும் மீரா கண்ணாவிடம் இருந்து அடுத்த கேள்வி வந்தது. “இப்போ எதுக்கு அவனுவோகிட்ட சல்லி கொடுத்த… அவனுவோ யாரு?”
“இந்த ரோட்டுல போவுனா காசு கொடுத்து தன் போவணும்… ஓங்காலத்துல இது கிடையாது… இப்போ நான் காசு கொடுத்து போவுறேன்… எம்புள்ளையெல்லாம் கார இங்க நிப்பாட்டிட்டு நடந்து தான் போவேணும் போல… யார் கண்டா… அல்லாவுக்கு தான் வெளிச்சம்” என பைசல் மீரா கண்ணாவை சமாதனம் செய்தான்.
திருவனந்தபுரம் பீமாத் தாய் பள்ளியைப் பார்த்ததும் மீரா கண்ணாவின் கண்களில் இருந்து தாரைத் தாரையாக கண்ணீர் கொட்டியது. முக்கத்தில் அப்படியொரு சந்தோஷம், பைசல் அதுவரை பார்க்காத மீரா கண்ணாவை அன்றுப் பார்த்தான். ஜும்மா தொழுகை, மதியம் சாப்பாடு, சின்னதாக தூக்கம் என மூன்று மணி வரை பீமாத் தாய் பள்ளியில் நேரம் போனது. வெள்ளிக் கெழமை என்பதால், தமிழ்நாடு, கேரளா என இருபக்கங்களில் இருந்தும் கூட்டம் சாடி வந்திருந்தது. மீரா கண்ணா பள்ளியில் அமர்ந்து எப்படியும் ஐந்தாறு யாசின் ஓதிருப்பாள். மெதுவாக மீரா கண்ணா பக்கம் போய் உக்கார்ந்த பைசல், ”சரி இப்போ கெளம்பினா தான் ராவைக்கு 10 மணிக்குள்ளையாவது ஊர் போய்ச் சேரமுடியும்” என மெதுவாக சொன்னான். அவளும் “இன்னும் செத்த நேரம் இருந்துட்டு கெளம்புவோம்… இனிமே அல்லா இங்க வர கொடுத்து வைப்பானோ இல்லையோ” என சொன்னதும் பைசல் அதை ஆமோதித்தவனாக மீரா கண்ணா பக்கத்திலேயே உக்காந்துவிட்டான்.
கடைசியாக பீமாத் தாய் பள்ளியில் இருந்து வண்டியை கிளப்பியவன் ஒரே புடியில் அடுத்த அஞ்சு மணி நேரத்தில் திருநெல்வேலியை கடந்து திருச்செந்தூர் ரூட்டில் காரை விட்டான். நெடுந்தூரப் பயண களைப்பில் பைசலையும் மீரா கண்ணாவையும் தவிர மற்ற எல்லோருக்கும் நல்ல தூக்கம். கார் செய்துங்கநல்லூர் தாண்டி போய்கொண்டிருக்கும் போது மணி இரவு பதினொன்று இருக்கும். ஆதிச்சநல்லூர் இறக்கத்தில் வெள்ளை சீலை உடுத்த பாட்டி ஒருவர் ரோட்டோரம் மயக்கத்தில் கிடந்ததை பார்த்து பைசலிடம் காரை நிறுத்த சொன்னாள் மீரா கண்ணா. அவனுக்கு ஒரே பயம், “வெள்ளை சீலை உடுத்துருக்கு அது பேயா இருந்தாலும் இருக்கும்… நமக்கு எதுக்கு வம்பு? இந்த இடத்துல வேற எதோ முதுமக்கள் தாழியெல்லாம் மண்ணுக்குள்ள புதைஞ்சு கெடக்குதாம்.. நான் ஸ்கூல்ல பாடம் படிச்சிருக்கேன்… இது எரநூறு (200) வருசத்துக்கு முன்னாடிவுள்ள பேயா இருந்தாலும் இருக்கும்” என்று மன்றாடினான். ஆனால் மீரா கண்ணா நெலையாக நின்று காரை நிறுத்த சொல்லி, இருவரும் இறங்கி அந்த பாட்டியின் பக்கம் சென்றுப் பார்க்கின்றனர். பொடியனைத் தவிர காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த எல்லோரும் முழித்துவிட்டார்கள். மீரா கண்ணாவை தவிர யாருக்கும் அது சரியாக படவில்லை. எல்லோருமே “நாம நிக்க வேணாம் போய்டுவோம்: என சொல்லிப் பார்க்கிறார்கள். ஆனால், மீரா கண்ணா அதைக் கேட்பதாக இல்லை, “நான் நினைச்சுப் பார்க்காத பரக்கத்த அல்லா எனக்கு கொடுத்துருக்கான்… கடைசி காலத்துல சொந்தமா ஒரு காரு வாங்கி பீமாப் பள்ளிக்கும் போய்ட்டு வந்துட்டேன். இந்த நேரத்துல இப்படி என் வயசு ஒத்த பொம்பளைய எப்படி விட்டுட்டு போவோமுடியும். காரோ பைக்கோ மோதிருக்கும் போல… பாவம் எழம்ப (எழும்ப) சீவன் இல்லாம மயங்கி கெடக்குறா” என சொல்லிக்கொண்டே பைசல் உதவியுடன் காரில் ஏற்றி திருவைகுண்டம் தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வீடு போய் சேர்ந்தனர்.
ஒருநாள் முழுக்க இருந்த பயண மயக்கம் மறுநாள் சாயங்காலம் மெல்ல மெல்ல தெளிந்தது. அறை தூக்கத்தில் இருந்த பைசலுக்கு மீரா கண்ணாவின் முகத்தில் இருந்த முழுமதியான சந்தோஷம் மட்டும் கண்களுக்குள் நிறைவாக தெரிந்தது. பள்ளியில் இஷா தொழுவை முடிச்சிட்டு தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த பைசல், அவன் வீட்டு முன்னால் இருந்த பெருங்கூட்டத்தை பார்த்து வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தான். மொத்த கூட்டமும் காரைச் சுற்றி நின்று கொண்டிருந்தது. மஃப்டியில் வந்திருந்த ரெண்டு போலீஸ்காரர்களிடம் மீரா கண்ணா “அய்யா நாங்க இல்லையா நாங்க இல்லையா…. நாங்க அந்த அம்மாவ காப்பாத்த தான் நெனைச்சோம்… நாங்கதான்யா தர்ம ஆஸ்பத்திரில கொண்டு போய்ச் சேர்த்தோம்” என நடந்த உண்மையைச் சொல்லி மன்றாடுகிறாள். பைசலுக்கு ஒன்னும் புரியாமல் “என்னாச்சு என்னாச்சு” என போலீஸ்காரர்களிடம் கேட்கிறான். “ஓ… நீதான் நேத்து நைட்டு இந்த கார்ர ஓட்டி வந்து அந்த பாட்டி மேல மோதுனியா?... அவங்க இப்போ உயிரோட இல்ல… இந்த கார எடுத்துகிட்டு ஸ்டேஷன் வாங்க கொஞ்சம் விசாரிக்கணும்” என மிரட்டல் தொணியில் பேசினார்.
விசயம் கேள்விப்பட்டு செவல சாதிக், சட்டிச் சோறு, சேவாத்து, ரம்மி ரசாக் எல்லாரும் சாடி வந்து போலீஸாரிடம் சமாதானம் பேசினர். வந்திருந்த இருவரில் ஒரு போலீஸுடன் செவல சாதிக்குக்கு நல்ல பழக்கம் இருந்தது. “ஏ… என்ன மாமோ இப்படி பண்றியோ?... ஏ… நான் சொல்றேன்லா அவன் அப்படி பண்ணிருக்க மாட்டான்…. எதுவா இருந்தாலும் காலைல ஸ்டேஷனுக்கு நானே கூட்டி வாரேன்” என முடிந்தவரை சமாளித்துப் பார்க்கிறான். பைசல் மீரா கண்ணாவை சமாதானம் செய்ய முயற்சிக்கிறான். இந்த களேபரத்தில் கார் சாவி எப்படியோ போலீஸ்காரன் கையில் போக, அவர் காரில் ஏறி உக்கார்ந்து ஸ்டார்ட் செய்கிறார் செல்ஃப் எடுக்கவில்லை. பைசலையும் செவல சாதிக்கையும் தவிர அந்த காரில் ஆத்தூர் கந்தூரி போய்ட்டு வந்தவர்களுக்கு ஒரே சிரிப்பு. “இது சரியா நேரம் பாத்துதான் கழுத்து அறுக்குது போலயே மாப்ளே” என லேசாக பேசி சிரித்துக் கொண்டனர்.
வெளியே நின்றுகொண்டிருந்த மீரா கண்ணா “நெஞ்சு படபடப்பா வருதும்மா…. எலா கொஞ்சம் வெந்நீ போட்டு தாங்களா…” எனக் கேட்டபடி தெருவூட்டில் கிடந்த நார் கட்டிலில் உக்கார்ந்தாள். போலீஸ்காரர் யார் சொல்றதையும் கேட்காமல் திரும்ப திரும்ப ஸ்டார்ட் செய்வதற்காக கார் சாவியை திருவிக் கொண்டே இருக்க, பானட்டில் இருந்து லேசாக கருகிய வாசம் அடிக்கத் தொடங்கியது. கட்டிலில் உக்கார்ந்த மீரா கண்ணாவின் கைகளில் வெந்நீர் கிடைக்கவும் பிஸ்மி சொல்லி ஒவ்வொரு மடக்காக “யா ரப்பே யா ரப்பே… அந்த கார் போனாலும் பரவாயில்ல… என் பேரனுக்கு எதுவும் ஆவிடக் கூடாது. அவன போலீஸ் புடிச்சுட்டுப் போகாம பார்த்துக்கோ யா அல்லாஹ்…” என துவா கேட்டபடி பதறியவள், அப்படியே மயங்கி கட்டிலில் சாய்கிறாள்.
போலீஸாரும் விசயம் வில்லங்கமாவதை புரிந்துகொண்டு “மொதல்ல அந்த பெரியம்மாவ ஆஸ்பத்திருக்கு கொண்டு போங்கடே… மத்தத காலைல பார்த்துக்கலாம்” என அங்கிருந்து நைசாக நழுவி விடுகின்றனர். செவல சாதிக் டிரைவில் சீட்டில் உக்கார்ந்துகொண்டு “காரை எல்லாரும் சேர்ந்து தள்ளுங்கல… என சொல்கிறான். செக்கு மணலில் நின்றிருந்த காரை எல்லோருமாக சேர்ந்து வேகமாக தள்ளவும், பானட்டில் இருந்த திடீரென தீ மளமளவென பிடிக்கிறது. கன நேரத்தில் கார் எலும்புக் கூடாக உருகிவிட்டது. கார் பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துப் போன பைசல், மீரா கண்ணாவிற்கு இது தெரிந்துவிடக் கூடாது என நினைத்து வீட்டின் உள்ளே சென்று கதவை மூடுகிறான். ஆனால், அங்கே கண்களில் இருந்து ஓரிரு துளிகள் கண்ணீர் கசிந்தபடியும், கைகளில் தஸ்பிஹ் மணியை உருட்டியவாறும் அப்படியே கட்டிலில் எந்த அசைவும் இன்றி மறித்து கிடந்தாள் மீரா கண்ணா!.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்