logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

செந்தில்குமார் ந

சிறுகதை வரிசை எண் # 309


சரிந்த பகுதி வினோத் அப்பொழுதுதான் வயிறு நிறையத் தண்ணீர் குடித்திருந்தான். இருந்தாலும் நாவில் தொடர்ந்து எச்சில் ஊறி அவனது தொண்டைக்குழியை நனைத்துக்கொண்டிருந்தது. விழுங்கும் எச்சில்கள் அவனுடைய பயத்திற்குப் போதுமானதாக இல்லாமல், நாவைத் தொடர்ந்து ஈரமாக்கிக் கொண்டேயிருந்தது. இதயத் துடிப்பு நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டே சென்றது. இந்நொடி அவனுக்கு வடியும் வியர்வையைப் பார்ப்பவர்கள், ‘இது மார்கழி மாதம்தானா? இல்லை சித்தரை மாதமா?’ என ஐயம் கொள்வார்கள். சிறிய வயதிலிருந்து ஓடி, ஆடி வளர்ந்த வீட்டிற்குள் செல்வதைப்போலில்லாமல், ஏதோவொரு பெரிய மந்திரவாதியின் குகைக்குள் செல்வதையொத்த பயத்துடன், மனதைத் திடப்படுத்திக்கொண்டு தனது வீட்டிற்குள் செல்லத்தயாரானான். வினோத் இருபத்தேழு வயது இளைஞன். சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐ.டி. ஊழியராகப் பணிபுரிகிறான். சிறுவயதிலிருந்தே அப்பாவின் கண்டிப்பான வளர்ப்பில் வளர்ந்தவன். வினோத் மட்டுமல்ல அவனின் அக்கா, அம்மாவென அனைவரும் அவர் தந்தையின் வார்த்தைக்கு இமியும் மறுப்பு சொல்லாதவர்கள். சொல்லப்போனால் அவரின் வார்த்தையின்படி தலையாட்டும் பதுமை பொம்மைகள். எல்லோரையும் போலவே வினோத்துக்கும் ஒரு கனவு இருக்கிறது. அதை வெறும் கனவென்று சொல்லிவிடமுடியாது. அதுவொரு கோட்டை. பதினைந்து வயதிலிருந்து மனதில் சிறுகச் சிறுக அவன் கட்டிய கனவுக்கோட்டை. அவனுடைய மணவாழ்க்கையைப் பற்றிய கனவுகளடங்கிய கோட்டையது. திருமண வாழ்க்கையை விருப்பப்பட்ட ஒருவருடன் கைகோர்க்கையில்தான் அக்கனவுக்கோட்டை முழுமைபெறும் என நம்பிக்கொண்டிருந்தான். தனது வருங்கால திருமணத்தைக் குறித்து, திருமணத்தில் வரும் துணை இப்படியிருக்க வேண்டுமென்பதைக் குறித்து, வாலிப வயதின் தொடக்கத்திலிருந்தே, பலமுறை தனது அம்மாவிடமும், உடனிருக்கும் நண்பர்களிடமும் தெரிவித்திருக்கிறான். ஆனால், அப்பொழுதெல்லாம் வளர்ந்துவரும் அவனின் ஆசையைப் பற்றியறியாது "போய் வேற வேலை ஏதாச்சும் இருந்தாப் பாருலே. நடக்கற காரியத்தைப் பத்திப் பேசுலே" என்று சொல்லிவிட்டு அனைவரும் கடந்துவிடுவர். ஆனால், இப்போதைய நிலைமை அப்படிப்பட்டதல்ல. அவனுக்காக வரன் பார்க்கும் படலம் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தமுறை தனது விருப்பத்தைத் தீர்க்கமாகப் பெற்றோரிடம் எடுத்துத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கிருக்கிறது. எண்ணத்தைத் தீர்க்கமாகத் தெரிவிக்கும் உரிமை எப்படி அவனுக்கிருக்கிறதோ? அதைப்போலவே அதை மறுப்பதற்கான உரிமையும் பெற்றோருக்கு இருக்கிறது என்பதை அவன் அறிந்திருந்தான். மனதிற்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்வதென்பது எப்படி அவனின் மனக்கோட்டையின் ஒரு பகுதியோ? பெற்றோரின் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொள்வதென்பது மற்றொரு பகுதியாக இருந்தது. அவனது கண்ணில் பத்து, பன்னிரெண்டு வருடங்களாகச் சாதாரணமாகத் தெரியும் ஒரு விஷயம், மற்றவர்களின் மனதில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல், அசாதாரணமாகவே தெரிவது அவனுக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. ஏன்? இவன் வயதை ஒத்த பலருக்குக் கூட அது அசாதாரணமாகத்தான் தெரிகிறது. ஏனெனில், அவன் கற்பனை செய்திருக்கும் துணையின் மீதான சமூகத்தின் பிம்பம் அது. ஒரு தம்பியாகவோ? தங்கையாகவோ? அண்ணனாகவோ? அக்காவாகவோ? அப்பாவாகவோ? அம்மாவாகவோ? அவர்களை ஏற்றுக்கொண்ட சமூகம் அவர்களை ஒரு துணையாக ஏற்றுக்கொள்வதற்கு மட்டும் தயக்கப்பட்டு விலகி நிற்கிறது. சில விஷயங்கள் பொதுவெளியில் உரக்கப் பேசப்படும். அந்த விஷயங்கள் பேசப்படுகையில் பெரும்பாலான நபர்களிடமிருந்து நேர்மறையான பதில்களும், பின்னூட்டங்களும் வரும். கண்ணுக்குத்தெரியாத, முகம்தெரியாத யாரோவொரு நபர் அந்த விஷயத்தைச் செய்தால், அந்த விஷயம் சமூக ஊடகத்தில் காணொளியாகப் பரவினால், "நீதான்டா உண்மையான ஆண்மகன்", "சூப்பர் டா" என்ற வாசகங்கள் பின்னூட்டப் பகுதியை நிறைக்கும், லைக் பட்டன்களும், லவ் குறியீட்டு ஈமோஜிக்களும் குவியும், பகிர்வுகளின் எண்ணிக்கையும் ஆயிரத்தைத் தாண்டும். ஏன் உணர்ச்சிப் பெருக்கில் பல நபர்களின் கண்ணிலிருந்து சில துளிக்கண்ணீரும் கூட வரும். ஆனால், அவையெல்லாம் சமூக ஊடகத்திலும், புறவெளியிலும் பேசுவதற்கு மட்டும்தான் சரி. தான், தன் குடும்பம் என்று வந்துவிட்டால் பெரும்பாலானோர் எடுக்கும் முடிவுகளும், தெரிவுகளும் மேற்சொன்னவைகளுக்கு நேர்எதிர்மறையாகத்தான் இருக்கும். இரண்டு வாரத்திற்கு முன்புவரை, ஊருக்குச் செல்கையில் இதைப்பற்றிப் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் அவனுக்கிருக்கவில்லை. ஆனால், இப்பொழுது நிலைமை அப்படிப்பட்டதல்ல. ‘பழம் நழுவிப் பாலில் விழுவது' என்று சொல்வார்களே அப்படித்தான் திருமணத்திற்காகப் பதிவு செய்து வைத்திருந்த திருமணத் தகவல் பதிவுமையத்தின் தளத்தில், இரண்டு வாரத்திற்கு முன்பு வந்திருந்தது அந்த ரெக்வஸ்ட் நோட்டிபிகேசன். இக்கட்டான நிலைமையில், இந்த நிமிடம் அவன் நின்றுகொண்டிருப்பதற்கும் அந்த ரெக்வஸ்ட் நோட்டிபிகேசன்தான் காரணம். அந்த ரெக்வஸ்ட்டில் வினோத்தின் ப்ரொபைலுக்கு விருப்பம் தெரிவித்திருந்த பெண்ணின் பெயர் வசுந்தலா. அவளைக் குறித்துப் பெற்றோரிடம் தெரிவிக்கத்தான் இத்தனை பயமும், தடுமாற்றமும் அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. வசுந்தலாவின் சொந்த ஊர் கம்பம், தேனி மாவட்டம். சென்னையிலிருக்கும் ஒரு பிரபல தனியார் கம்பெனியில்தான் அவளும் ஐ.டி. ஊழியராகப் பணிபுரிகிறாள். கை நிறையைச் சம்பளம், அழகான முகம், நல்ல படிப்பு, வீட்டில் போதுமான அளவு வசதி, அப்பா, அம்மா, தம்பி என அழகான சிறிய குடும்பம், ஒரே சாதி, ஏன் சாதகம் கூட அவனுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி, சிறுவயதிலிருந்தே ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டுமென்றிருந்த அவனுடைய எதிர்பார்ப்பையும் அவள் பூர்த்தி செய்திருந்தாள். ஆம், வசுந்தலா வாய் பேசவியலாத ஒரு மாற்றுத் திறனாளிப்பெண். வசுந்தலா தனது எதிர்பார்ப்புக் கட்டத்தில் ஒன்றே ஒன்றை மட்டும்தான் தெரிவித்திருந்தாள். பெற்றோர் முழு சம்மதம் தெரிவித்திருந்தால் மட்டும் தொடர்புகொள்ளவும் என்பதே அது. தட்டச்சு செய்யப்பட்ட அந்த வார்த்தைகளை அலைபேசியில் தடவிப் பார்த்தான், ஒவ்வொரு எழுத்திலும் இறந்து காலத்தில் ஏற்பட்ட புண்ணின் ஆறாத இரணங்களிலிருந்தன. சிறுவயதிலிருந்தே தான் கட்டிய கனவுக்கோட்டையின் ஒரு பகுதியை வருங்காலத்தில் துணையாக வந்து பூர்த்தி செய்யப்போகிறவள் இவள்தான் என்று ஏறக்குறைய முடிவு செய்துவிட்டான். இதற்குமுன், இப்படியொரு ஆசை மனதின் ஆழத்திலிருந்தும் அதற்கான வாய்ப்புக்கதவுகள் திறக்கவில்லை. ஆனால், இந்த நோட்டிபிகேசன் மூலம் அந்தக் கதவுகள் திறந்திருக்கின்றன. அவளுடைய பெற்றோரின் அலைபேசி எண்ணையும் அந்தத் தளத்திலிருந்து எடுத்து அலைபேசியில் சேமித்துக்கொண்டான். இனி வசுந்தலாவின் குடும்பத்தை அழைத்துப் பேசவேண்டியதுதான் மீதமிருந்தது. வசுந்தலாவின் குடும்பத்தை அழைத்துப்பேசலாம் என ஒவ்வொருமுறை அவன் அலைபேசியை எடுக்கும்பொழுதும் மனதில் உதித்த யோசனை ஒன்றே ஒன்றுதான். எந்தவிதத்திலும் அவளின் மனதிலோ? இல்லை அவளின் குடும்ப உறுப்பினர்களின் மனதிலோ? ஓர் ஆசைவிதையை விதைத்து, அது துளிர்விடும் நாளில், தன் குடும்பத்தின் முடிவுக்கரங்களால் அந்தத் தளிரைக் கிள்ளிப்போட்டுவிடக்கூடாது என்பதே அது. முதலில் தனது பெற்றோரைச் சந்தித்துச் சம்மதம் வாங்கிவிட்டு பிறகு வசுந்தலாவின் வீட்டிற்கு அழைத்துப் பேசலாம் என மனதிற்குள் முடிவெடுத்திருந்தான். வழக்கமாகச் சொந்த ஊருக்கு வருகையில், முன்கூட்டியே பெற்றோருக்குத் தெரியப்படுத்திவிட்டு வருபவன், இந்த விஷயத்தைத் தெரிவிக்கும் பதட்டத்திலும், பயத்திலும் இந்தமுறை எந்தவொரு முன்னறிவிப்பும் செய்யாமல் வந்திருந்தான். "ஏலே தம்பி வாலே. ஒரு வார்த்தைகூடச் சொல்லாமாக் கொள்ளாமா வந்திருக்க? உள்ள வாலே" வீட்டின் படியில் கால் வைப்பதற்கு முன்னரே அழைத்தாள் அவனின் அக்கா ரேவதி. "வா ரேவதி. நீ எப்ப வந்த ஊர்லிருந்து? மச்சா, பாப்பா, தம்பி எல்லாம் எப்படி இருக்காவ?" "எல்லாரும் நல்லா இருக்காவ. தம்பியும், பாப்பாவும் உள்ளதான் தூங்கிட்டு இருக்காவ. ஏலே இப்படி எளச்சுப் போயிருக்க? நல்லாச் சாப்பர்றது இல்லையோ?" என்ன பதில் சொல்வதென்று அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே அம்மா பச்சையம்மாள் சமையல் கட்டிலிருந்து வெளியே வந்தாள். "அடக் கிறுக்குப்பய மவனே! எப்பவும் சொல்லிட்டுத்தாலே ஊருக்கு வருவ. இன்னைக்கென்ன திடீர்னு. சொல்லிருந்தா வர நேரத்துக்கு அம்மா தண்ணி கீது காயப்போட்டு வெச்சுருப்பல்லலே . சரி இந்தா காப்பியப் புடி. நா போயி தண்ணி காய போடுத" அம்மா சத்தமாகப் பேசுவதிலிருந்தே தந்தை மருதுச்சாமி வீட்டில் இல்லையென்பதை வினோத் அறிந்துகொண்டான். "ம்ம் ச்சரிம்மா" "அந்த மனுச எங்க போயித் தொலஞ்சாவ. காலைல விடிஞ்சா டீக்கடையும், கழனியுமே கெதியா இருக்காவ" என்று கணவனைத் திட்டியபடியே தண்ணீர் காயப்போடச் சென்றாள் பச்சையம்மாள். …. அன்று மதிய உணவு உண்டபின், அனைவரின் முன்னிலையிலும் மெதுவாக விஷயத்தை ஆரம்பித்தான் வினோத். "அப்பா" "ம்ம் சொல்லுவே" கம்பீரமான தனது மீசையைத் தடவிவிட்டபடியே கேட்டார் மருதுச்சாமி. "நா மேட்ரிமோனில, பதிவு செஞ்சு வெச்சிருந்தனல்லப்பா" "ஆமா" "அதுல ஒரு ரெக்வஸ்ட் வந்துருக்குப்பா" "சரிலே, சரிலே. பொண்ணு உனக்குப் பிடிச்சிருக்கா? நம்ம சனம் தானவே?" "ம்ம் ஆமாப்பா" பெண்ணின் பெயரைக்கூடக் கேட்காமல் சாதியைப் பற்றிக் கேட்கும் அவனின் தந்தையை ஏற இறங்கப் பார்த்தான். "பொண்ணு பேரு என்னவே? எந்த ஊர்க்காரவ?” "பொண்ணு பேரு வசுந்தலாப்பா. ஊரு கம்பம், தேனிப்பக்கம் " "அப்போ நம்ம ஊரிலிருந்து சித்த தூரம்தான். இருக்கட்டும்" “புள்ள நல்லாப் படுச்சுருக்காளா? வேலைக்கேதாச்சும் போறாளா?" "ம்ம் ஆமாம்மா. சென்னைலதான் வேலை செய்றாங்க. நல்ல சம்பளமும்கூட" "எங்க பொண்ணு போட்டோவக் காட்டு பாப்பம்?" கேட்டபடியே அருகில் வந்தாள் ரேவதி. "இந்தாக்கா" என்று தனது அலைபேசியை நீட்டினான் வினோத் ரேவதி, பச்சையம்மாள், மருதுச்சாமி என அனைவரும் ஒவொருவராக அலைபேசியை வாங்கிப்பார்த்தனர். அவர்களின் முகத்தில் தோன்றிய சிரிப்பு, அவளின் முகம் அவர்களை முதல் பார்வையிலேயே வசீகரம் செய்திருப்பதை சொல்லாமல் சொல்லியது. "ம்ம்… பொண்ணு நல்லா இருக்கா?" "ஜாதகத்தப் பிரிண்ட் போட்டயாவே? கொடுத்தீனா நானும் அம்மாவும் போயிக் காலைல பொருத்தம் இருக்கானு பாத்துட்டு வந்துருவம்." "பொருத்தம் எல்லாம் இருக்குப்பா. நானே பாத்துட்டேன். அந்தப் பொண்ணப் பத்தி இன்னொரு விஷயம் உங்ககிட்டச் சொல்லணும்ப்பா" "என்னவே வசதி இல்லையோ? பரவா இல்லலே. பொண்ணு மஹாலட்சுமி மாதிரி இருக்கா. வேலைல வேற இருக்காவனு சொல்லுதே, ஒன்னும் பிரச்சன இல்ல. போகுறப்போ நாம என்னத்த எடுத்துட்டுப் போகப்போறம். ஏன் ரேவதி அப்பா சொல்றது சரிதானுவே?” “சரிதாம்ப்பா” "வசதியப் பத்தியில்லப்பா? வேற ஒன்னு சொல்லணும்?" "வேற என்னுவே, மென்னு முழுங்காமச் சீக்கிரம் சொல்லுவே. கழனிப் பக்கம் அப்பாக்கு கொஞ்சம் வேல கெடக்கு" "கழனி, வயல்ன்னு அவதிப்படாம, அவ சொல்லவரதக் கொஞ்சப் பையக் கேளுவ" சத்தமாகச் சொல்லிவிட்டு, சுவரை நோக்கி முகத்தைத் திருப்பிக்கொண்டாள் பச்சையம்மாள். "பொண்ணுக்கு பேசும்திறன் இல்லப்பா” "என்னவே சொல்லுத?" அமர்ந்திருந்த ஊஞ்சலிலிருந்து இறங்கியபடி கேட்டார் மருதுச்சாமி. "ஆமாப்பா . பொண்ணுனால பேச முடியாது" "ஊமையாலே… அந்தச் சிறுக்கி... என்ன எழவுக்குலே அவ போட்டாவையும், ஜாதகத்தையும் இங்க ஆட்டிட்டு வந்திருக்க?" "அப்பா, நா தா ஏற்கனவே சொல்லிருக்கல்ல, சின்னவயசுலிருந்து எனக்கு ஒரு மாற்றுத் திறனாளிப் பொண்ணத்தான் கட்டிக்கணும்னு ஆசைன்னு" தயங்கியபடி சொல்லிமுடித்தான் வினோத். "அடுச்சா மொகர பிஞ்சிரும்லே, உன் ஆசையில தீயவிட்டுக் கொளுத்த. அப்பெல்லாம் சின்னப்பய சும்மா சொல்லுதனு விட்டம். கொஞ்சவிட்டா ஊட்டுக்கே அழச்சுட்டு வந்துருவ போலயே. நாளைக்குத் துக்கம், சந்தோஷம்னா செவுத்துக்கிட்டயாலே போய்ச் சொல்லுவ? இல்ல வெப்பாட்டிக்கிட்டச் சொல்லுவியா?" திட்டியபடி இடத்தைவிட்டு நகர்ந்தார் மருதுச்சாமி. அப்பா மருதுச்சாமியைப் பார்க்கையில் வினோத்துக்கு ஆச்சரியமாக இருந்தது. மருதுச்சாமி சாதரணமான ஓர் ஆள் இல்லை, புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர். சில பட்டிமன்றங்களில் நடுவராகவும், பல பட்டிமன்றங்களில் பேச்சாளாராகவும் இருந்துள்ளார். சமூகப்பிரச்சனைகள், பெண்ணுரிமை, தீண்டாமை என எல்லாதரப்பட்ட பட்டிமன்றங்களிலும் நரம்பு புடைக்கப் பேசுவார். தனது கம்பீரக்குரலாலும், தீர்க்கமான பேச்சாலும் தனக்கடுத்து பேச வருபவர்களைத் திணறடிப்பவர். தான் பத்தாவது படிக்கையில், பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு பட்டிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளின் மீதான சமூகத்தின் பார்வை மாறியுள்ளதா? இல்லையா? என்ற தலைப்பில் ‘மாறவில்லை’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து உணர்ச்சி பொங்க அவர் பேசிய பேச்சைப் பார்த்து அரங்கமே அழுதது. அந்தப் பட்டிமன்றம் ஒளிபரப்பு செய்கையில் வீட்டில் நான், அம்மா, ரேவதி உட்பட எல்லாரும் அழுதோம். அதற்குப் பிறகுதான் வினோத்துக்கும் ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசையும் ஏற்பட்டது. ஆனால், ‘ஊருக்குத்தான் உபதேசம், தனக்கில்லை’ என்பதைப்போல், ‘பட்டிமன்றப் பேச்சுக்கள் வீட்டுக்குள் செல்லாது’ எனச் சொல்லாமல் சொல்லிவிட்டு எழுந்து செல்லும் அப்பாவைப் பயந்தபடி பார்த்தான் வினோத். மெல்ல திரும்பி பின்பக்கம் நின்றுகொண்டிருந்த ரேவதி மற்றும் பச்சையம்மாள் இருக்குமிடத்தை நோக்கினான். "வர மருமவ என்னத் தாங்கணும்லே, நா அவளத் தாங்குற மாதிரி ஒன்னப் புடுச்சுட்டு வந்துறாத" சொல்லிவிட்டு விர்ரென்று கிளம்பினாள் பச்சையம்மாள். ரேவதி மெல்ல வினோத்தின் அருகில் வந்தாள். "நல்லவேளடே தம்பி. எங்க உன்னட மொகம் செவந்து போயிருமோனு பயந்து போயிட்ட. இந்தக் காலத்துல அவுக அவுக வீட்டுச் சுமையே முதுகு மேல உக்காந்துட்டு இருக்கு, இதுல யார் வீட்டுச் சுமையலே நீ தூக்க ஆசைப்பட்டுட்டிருக்கே. நீ ஆன்லைன்ல பொண்ணு பாத்துக் கிழுச்சதெல்லாம் போதும். இங்கே பாரு மச்சாகிட்டச் சொல்லி நானே பொண்ணு பாக்கச் சொல்லுத. பொண்ணு பிடிச்சிருந்தா நீ தலைய மட்டும் ஆட்டுனாப்போதும். ஆசையாம் ஆச. குருவி தலைல பனங்காய் சுமக்க ஆசைப்பட்டுச்சாம்" திட்டிக்கொண்டே இடத்தைவிட்டு நகர்ந்தாள். வீட்டிலிருந்த அந்த இரண்டு நாளும், வீட்டில் உள்ளவர்களிடம் இந்த விஷயத்தைக் குறித்து மீண்டும் பேச வினோத் முயற்சித்துக்கொண்டே இருந்தான். அன்று இரவும், அடுத்த இரண்டு நாட்களும் மருதுச்சாமி அவனிடம் பேசத்தயாரில்லை. ரேவதி இரண்டாவது நாள் மாலை வினோத்தின் ஜாதக நகலை வாங்கிக்கொண்டு, குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு புகுந்த வீட்டிற்குச் சென்றுவிட்டாள். பச்சையம்மாள் எதுவும் நடக்காததுபோல் அடுத்தடுத்து நாட்களில் உணவைப் பரிமாறினாள். சென்னை கிளம்பும் அன்று மாலை தந்தை மருதுச்சாமிக்கு அருகில் சென்றான் வினோத். "அப்பா" "சொல்லுவே" "நா ஊருக்குக் கிளம்புத" "ம்ம் . மனசப் போட்டுக் கொழப்பிக்காதலே. நம்ம அக்காவுக்குப் பாத்த புரோக்கர்கிட்டச் சொல்லி இருக்கே. பொண்ணுப் பாக்குற வேலைய அவுக பாத்துக்குவாக. நீரு ஆபீஸ் வேலைய மட்டும் பாரும்." "அப்பா, நா சொல்ல வர்றத… ஒரு நிமிஷம்" "ஒன்னும் சொல்ல வேணாம். உனக்கு அவதான் வேணும்னு தோணுச்சுனா, அப்பா அம்மா குறுக்க நிக்குலவே. தாராளாமாப் பண்ணிக்கோ. ஆனா, அந்தச் சிறுக்கிய இழுத்துட்டு, எங்க மூஞ்சில முழிக்க வந்துராத. என்னவே நா சொல்றது? " "ம்ம் அப்படிச் சொல்லுங்க. இல்லாட்டி இவன நம்ப முடியாது பாத்துக்கங்க” அப்பாவின் இராகத்துக்கு இசைப்பாட்டு பாடினாள் அம்மா. இதற்குமேல் அவர்களிடம் சம்மதம் வாங்கமுடியாது என்பதை அவன் அறிந்திருந்தான். "ம்ம் சரிப்பா, சரிம்மா நா வரேன்" வினோத் சொன்ன அந்த வார்த்தைக்குப் பின்னால் அவன் கனவுக்கோட்டையின் ஒரு பகுதி சரிந்திருந்தது. செந்தில்குமார். ந எண்.8/12, செல்வி இல்லம், அம்பேத்கர் தெரு, ஜோசப் நகர், பழவந்தாங்கல், சென்னை-600114. அலைபேசி எண்: 7502951807 மெயில் ஐ.டி. senthilacs.333@gmail.com

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in