logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

S. Mohan S. Mohan

சிறுகதை வரிசை எண் # 308


படைப்பு சிறுகதை போட்டி - 2O23 உதிரம் ( சிறுகதை ) ____________________________ விடிந்து வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், சரி ! காய்ச்சல்காரி, எந்திரிக்க முடியாம கெடக்குறாளாட்டுக்கும் என்று அக்கம் பக்கத்தில் யாரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. வீட்டின் தெக்கால பட்டியில் இருந்த ஆடுகள் மட்டும் வழக்கத்திற்கு மாறாகக் கத்திக்கொண்டிருந்தன. கடேசியா கணேசன்தான் கதவை முட்டித் திறந்தான். அந்தக் கூரை வீட்டின் பழைய கதவு, அதிக சிரமில்லாமல் திறந்துகொண்டது. உள்ளே தரையில் பொண்ணு, கால்களை அகலப் பராத்திக்கொண்டு அலங்கோலமாகக் கிடந்தாள். தொசுக்குங்கறத்துக்குள்ள பொண்ணுவின் வீட்டுக்கு முன்பு கூட்டம் கூடி விட்டது. ***** " எலேய் ! காச வறுத்துத் தின்னா காச்ச வுட்றுமாடா... ம் ! கண்ணாலம் காச்சின்னு எனக்கும் அந்த பெரியாண்டவன் நல்ல அமுசம் போட்ருந்தான்னா, இப்படி கெடந்து சின்னப்படுவானா. எல்லான் ஏன் தலயெழுத்து " என்று நோப்பாளித்துக்கொண்டே, கணேசன் தொப்புளானிடம் கொடுத்துவிட்டிருந்த காசை வாங்கி தலவாணிக்கு அடியில் வைத்தாள் போதும்பொண்ணு. பொண்ணுவின் மனசுக்குள் என்னென்னல்லாமோ ஓடின. இப்படியொரு ஈன வாழ்க்கை வாழ்வதை விட எங்கயாவது ஆறு கொளம் குட்டையில வுழுந்து செத்துப்போய்விடலாம் என்று கூட, ஆரம்பத்தில் நினைத்திருக்கிறாள். ஆனால், முழுக்க நெனஞ்சப்பறம் முக்காடு எதுக்குங்கிற கணக்காய் அவள் உடம்பில் மிஞ்சியிருந்த வாலிபம் அவளை இந்த சீ்ப்பட்ட வாழ்க்கைக்குப் பழக்கிவிட்டது. "தாயாலி மவன், ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனா என்ன ... கொறஞ்சாப்பூடுவான். இவன் என்னய வச்சிகிட்டிருக்கறது ஊருல எவனுக்குமே தெரியாது பாரு...." ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்த தொப்புளான், கிழிஞ்ச ட்ரவுசரைக் கையில் பிடித்துக்கொண்டே சிட்டாகப் பறந்து போய்விட்டான். ***** நாலாவதாகப் பிறந்த குழந்தையும் பொட்டப்புள்ளையா போச்சேன்னு அந்தக் குழந்தைக்கு போதும்பொண்ணு என்று பெயர் வைத்தார்கள். சீக்குல கோழிக்குஞ்சுங்க சாவுற கணக்கா, நாலுல ரெண்டு காலராவுல தொள்ளிப் போச்சு. மிச்ச இருந்த ரெண்டும் வளந்த பொறவும் கூட, அம்மாக்காரி கோக்கொல்லேன்னு பொழுதினிக்கும் கத்திக்கொண்டேதான் கிடப்பாள். "சீ...ஓம் மூஞ்சில முழிச்சா பொடிக்கு பொயலை கூட அம்புடாதுடி ... அந்த மவராசன் இருக்கமாட்டாம பெத்துப் போட்டுட்டு போயிட்டான். இவுளுககிட்ட மாரடிக்க எவளால ஆவும். கம்மனாட்டி வளத்த கழுவாயிடக்கூடாதேன்னுதான் இப்படி கெடந்து அல்லாடுறேன்.. அந்தக் கூக்கரையை எல்லாம் பெரியவள் காதிலேயே வாங்கிக்கொள்ளமாட்டாள். ஆனால் போதும்பொண்ணுக்கு மட்டும் அம்மாக்காரியின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வரும். " ஓம் பெரிய மவ தின்ன தட்டக் கூட கழுவமாட்டா. மேனாமினுக்கி வாக்கப்பட்டு பூட்டான்னா, ஒன்ன திரும்பிக்கூட பாக்கமாட்டா. கடேசி காலத்துல நாந்தான் ஒனக்கு பீ மூத்திரம் அள்ளணும். இரு இரு ஒன்ன அப்ப வெச்சிக்கிறேன்.. " பொண்ணுவின் மயிரைக் கொத்தாகப் பிடித்து முதுகில் ஒன்னு வைப்பாள் அம்மாக்காரி. ஆயிக்கும் மவளுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம்தான் ! சிலநேரம் ஈஞ்சி வெளக்கமாறு கூட பிஞ்சிவிடும். பொண்ணுவுக்கு மயிரு கொஞ்சம் அடர்த்திதான். சடை பின்னிவிட்டால் சூத்தாமட்டையில் வந்து விழும். கருப்புதானென்றாலும் பொண்ணு கொஞ்சம் லட்சணமானவள்தான். அந்த லட்சணமெல்லாம் கரைந்துபோய் இப்போது பொண்ணுவின் கண்ணுக்குக் கீழே கருவளையம் பூக்கத் தொடங்கிவிட்டது. அத்தோடு இதுநாள் வரையில் இல்லாத கவலைகளும் அவளுக்குள்ளே வேர் விடத் தொடங்கிவிட்டிருந்தன. குறுவெசனம் பிடித்துப்போய், சுய இரக்கம் அவள் கண்களிலிருந்து நீராய் கசிய, ஒரு குழந்தையைப் போல் கட்டிலில் மடங்கிக் கிடந்தாள். **** எட்டாவது படிக்கும் வரை சட்டப் பாவாடதான். ஒம்பதாவதில் தாவணிக்கு மாறியபோதுதான் பொண்ணு குறுகுறுத்துப் போனாள். தன் சோட்டுப் பிள்ளைகள் எல்லோரும் வயசுக்கு வந்துவிட்ட நிலையில், வயசுக்கு வராத பொண்ணு தாவணியணிந்து போக வெட்கப்பட்டாள். வகுப்பறையில் எல்லோர் கூடவும் இருந்தாலும் அவள் மட்டும் வெறுமை கலந்த ஒரு தனிமையை உணர்ந்துகொண்டிருந்தாள். தான் மட்டும் எங்கோ தொலைந்து போய்விட்டதாக நினைத்துக் கொள்வாள். அந்த வருசமும் பொண்ணு வயசுக்கு வராமல் போனதால், அதற்கு மேல் பள்ளிக்கூடம் போக வெட்கப்பட்டுக் கொண்டு, படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு அம்மாக்காரியுடன் ஆடு மேய்க்கப் போய்விட்டாள். பதின்ம வயதிலிருந்தே காடு கரம்புன்னு கையில் வாங்கறுவாளுடன் திரிந்துகொண்டிருந்தாள். அந்துசா இருக்க வேண்டிய அம்மாக்காரியே பொழுது விடிஞ்சு பொழுது சாஞ்சா, மகளை மானாங்கண்ணியா திட்டிக் கொண்டேதான் இருப்பாள். அதென்னமோ தெரியல, அவளுக்குப் பொண்ணு என்றாலே எப்பவுமே புளிச்சக்கீரை சட்டிதான். பத்தாதுக்கு அவ வயசுப் புள்ளைங்களும் அவளை எதற்கும் துணை சேர்ப்பதில்லை. பள்ளிக்கூடத்தில் காலர் பட்டன் போட்டுக்கொண்டு பொண்ணுவைச் சுற்றிச் சுற்றி ஆலவட்டம் போட்டுக்கொண்டிருந்த இரண்டொரு பையன்களும் கூட, இப்போதெல்லாம் திரும்பிப் பார்ப்பதில்லை. தண்ணியெடுக்க, துணி தொவைக்க. கீத்துக்கொட்டாயில் படம் பார்க்கன்னு எல்லா இடத்துக்கும் பொண்ணு தனியாகத்தான் போவாள். அப்படித் தனியாகப் போவதும் கூட பொண்ணுவுக்கு நொய்த்திரியம்தான். பூன மீச வைச்ச எளவட்டங்களின் எடக்கு, ஏவுடியம் விடாமல் அவளைப் பின்னால் தொரத்தும். அவ வயசுக்கு வராததச் சொல்லி சொல்லி, தொசங்கட்டி கிண்டலடிப்பார்கள். ஆரம்பத்தில் தயங்கித் தயங்கி கடந்துபோனவள், அப்புறமெல்லாம் அவர்களை மண்டகப்பிடி பிடித்துவிடுவாள். ஏண்டா ! கட்டியத்தின்னிவளா... ஒங்களுக்கெல்லாம் அக்கா தங்கச்சியே கெடையாதாடா... வயசுக்கு வரலைன்னா அது ஏங் குத்தமாடா...! ஊர்ல புதுசா கண்ணாலம் கட்டிக் கொண்டவர்கள் ஜோடியா தெருவில் போவதைப் பார்க்கும்போது, பொண்ணுவிற்கு ஒரு மாதிரி ஆகிவிடும். அன்று முழுக்க அவளிடம் பேசும் எல்லோரிடமும் எரிந்து எரிந்து விழுவாள். அப்போதெல்லாம் காரணமே இல்லாமல் யாரையாவது பழிவாங்கவேண்டும் போல் அவளுக்குத் தோன்றும். அன்றைய ராத்திரியில் தூக்கம் வராமல் கயித்துக்கட்டிலில் சாமம் வரை புரண்டுகொண்டிருப்பாள். அந்த மாதிரி சமயங்களில், வேறு வழியில்லாமல், அவள் தன்னைத்தானே தற்காலிகமாகத் தணித்துக்கொள்வாள். பொண்ணு சொன்ன மாதிரியே அவ அக்காக்காரி வாக்கப்பட்டு போனதுக்கப்புறம் ஏதாவது வரும்படின்னாத்தான் ஊருக்கு வருவா. தங்கச்சிக்காரி வயசுக்கு வராததால், அவள் புருசன் வீட்டு ஆட்களும் கூட, ஒரு நாளு கிழமைன்னு வந்து எட்டிப் பார்ப்பதில்லை. பொண்ணுதான் அம்மாகாரிக்கு கடேசி காலத்துல சேவகம் பண்ணிக்கிட்டு. மலையங்காட்டுல ஆடுங்கள ஓட்டிகிட்டு ஒண்டியாக ஓரியாடிக்கொண்டிருந்தாள். மத்தியானதிற்கு மேல் ஆடு ஓட்டுவதற்குள், கூட்டிப் பெருக்கி, சோறாக்கி, துணி தெவைச்சி... இப்படி மங்கமாண்ட வேலைகளையும் தான் ஒருத்தியே இழுத்துப் போட்டுக்கொண்டு செஞ்சாலும், தன்னையும் தன் உடம்பில் ஊற்றெடுக்கும் தினவையும் பகலில் மட்டுமே அவளால் மடைமாற்ற முடிந்தது. மச்சி வீட்டு பவுனாம்பாள் மவளுக்கு நலுங்கு வச்சபோது பொண்ணுவும் போயிருந்தாள். பொட்டு வைக்கக் கூட அவளை யாருமே கூப்பிடவில்லை. வந்த அழுகையை வாயோடு அடக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டாள். அன்றிலிருந்து கண்ணாலம் காதுக்குத்து கருமாதி என்று எதற்கும் பொண்ணு போவதுமில்லை. அவளை யாரும் அழைப்பதுமில்லை. பள்ளிப்படிப்பைத் தாண்டாவிட்டாலும் பொண்ணு சில விசயங்களில் பக்குவப்பட்டுதானிருந்தாள். வயதுக்கு வராத தன்னை புறக்கணிப்பவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள சிடுமூஞ்சியாய் மாறிப்போனாள். அவள் முகத்தில் எப்போதுமே ஒரு அசமந்த இறுக்கம் ஒட்டிக்கிடக்கும். ஆனால் தன் உடம்பின் தேவைகளை அவளால் அப்படி அத்தனை சுளுவாய் புறக்கணித்து விட முடியவில்லை. வேக்காடாய் இருக்கும் ராத்திரிகளில் அவளது அடிவயிற்றில் லேசாகக் குறுகுறுக்கும். கைகளைப் பிசைந்து கொண்டு கண்களை மூடிக் கொள்வாள். உடம்புக்குள் வழியும் அனலையும் கண்ணுக்குள் கசியும் புனலையும் ஆற்றத் தெரியாமல் அல்லாடியபடி, கரையில் வீசப்பட்ட மீனாய் கட்டிலில் நெளிந்து கிடப்பாள். வழியும் அவளின் வியர்வை கூட அனலாகிப் போகும். ஆனால் கொஞ்ச காலத்திற்கு மேல் தன் உடம்பை வெல்ல முடியாத பொண்ணுவிற்கு, மாட்டு யேவாரி கணேசனுடன் எப்படியோ தொடுப்பு ஏற்பட்டுவிட்டது. பாவம் ! அவளும் மனுசிதானே.. ! பொண்ணுவின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டுதான் கணேசன் எப்பவும் யேவாரம் பேசுவான். திண்ணையோர வேம்பின் நிழல் அவனுக்கு ஒரு நொண்டிச் சாக்கு. " நாலு பல்லு பட்டுருக்குது ரெண்டாயிரத்துக்கு ஒரு நயா பைசா கொறைக்க முடியாதுப்பா... " " யோவ் செனை மாடுய்யா. போடுற கன்னு கெடேரியா இருந்தா உனக்கு யோகந்தான்...' " இப்படி சொல்லிக்கொண்டே. ஏ ! புள்ள.. பொண்ணு ஒரு சொம்பு தண்ணி குடேன் என்பான். தண்ணி கொடுக்கும்போது பொண்ணுவையும் அறியாமல் அவள் கண்கள் கணேசனை ரசிக்கும். கருகருன்னு கிருதா மீசை. சட்டையில் ரெண்டு பட்டனை எப்பவும் போட மாட்டான். மாரிலும் மயிர் வனம்தான். அவன் உட்கார்ந்திருக்கும் உசரத்துக்குத்தான் பொண்ணு வருவாள். கணேசனுக்கும் வேறு போக்கிடம் இல்லை. ஆனால் நல்ல வரும்படிக்காரன். என்ன ! குடிச்சிட்டு அப்பப்ப கொஞ்சம் அலம்பல் பண்ணுவான். அவ்வளவுதான். பொண்ணுவின் அம்மாக்காரி உசுரோட இருக்கு மட்டும் ஏடக்குறுக்க வந்து போனவன். கெழவி செத்த பிறகு கூரை வீட்டுத் திண்ணையிலேயே ஐக்கியமாகிவிட்டான். கெழவியின் சாவுக்கும் கருமாதிக்கும் கணேசன்தான் மறைமுகமாக செலவு செய்தான் என்று ஊரில் பேசிக்கொண்டிருந்தார்கள். பொண்ணுவின் வீட்டில் சோறு தண்ணி பொழங்குவதில் தொடங்கி கடைசியில் பொண்ணுவையும் பொழங்கத் தொடங்கி விட்டான். பொண்ணுவிற்கும் அது தேவையாகத்தானிருந்தது. எத்தனை ராத்திரி ஏங்கிக் கிடந்திருப்பாள். ஊரில் எல்லா பெண்களுக்கும் கண்ணாலம் காட்சி என்று எல்லாம் சராசரியாய் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, தனக்கு மட்டும் ஏன் இப்படி என்று எத்தனை நாள் கண்ணீர சிந்தியிருப்பாள். எந்தப் பொறவியில என்ன பாவம் பண்ணுனோ இப்படி வயசுக்கு வராம கெடக்கறமே என்று எத்தனை நாள் புலம்பித் தீர்த்திருப்பாள். அப்படிக் கிடந்தவளுக்கு, கணேசன் வடிகாலாக வந்து சேர்ந்தான். பொண்ணுவும் அவனைப் பெலாப்பிசினாட்டம் பிடித்துக் கொண்டாள். அவனிடமிருந்த முரட்டுத்தனம் அவளுக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. விதவிதமான புணர்தலுக்குப் பிறகு அவளுடைய உடல் தேட்டமும், மனத்தேட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக தணியத் தொடங்கியது. இப்பெல்லாம் காசு பணம் அம்புட்டையும் கணேசன் பொண்ணு கையில்தான் கொடுத்து வைத்தான். அதுவரை நாலைஞ்சு பித்தளை சருவமும் ஒரேயொரு ஒரலுந்தான் அம்மாக்காரி மிச்சம் வச்சிட்டுப் போயிருந்த பரம்பரை சொத்து. தங்கச்சிக்காரி வயசுக்கு வராம கெடக்குறாளேன்னு அந்தக் கூரை வீட்டில் பாகம் கேட்காமல் நறூசாக ஒதுங்கிக்கொண்டாள் மேனாமினுக்கியான மூத்த சிறுக்கி. கணேசன் வந்த பிறகு ஆட்டாம் புழுக்கை அள்ளிக்கொண்டிருந்தவளுக்கு, வெந்தியச் செயினெல்லாம் கூட கழுத்துக்கு வாய்த்தது. பூசணம் பூத்துக்கிடந்தவளின் உள்ளே கொஞ்ச நாட்களாய் பூக்கள் பூக்கத் தொடங்கியிருந்தன. ***** ஏரிக்கரை பெரியாண்டான் கோவில் அரசமரத்தடியில் எளவட்டங்கள் சீட்டாடும் நேரங்களில் ஊர் சேதிகள் எல்லாம் ஊடாடும். எலேய் ! மாணிக்கம் ... வயசுக்கு வராத பொம்பளைக்குக் கூட ஆம்பள ஆசை வருமாடா... " ' எனக்கும் அதான்டா டவுட்டு அதெப்டிறா வரும்? ' " போடா... வயசுக்கு வர்றதுக்கும் அதுக்கும் சம்மந்தமில்லடா " என்று சேகரோ குமாரோ யாராவது ஒருவன் கூட்டத்திலிருந்து பதில் சொல்லுவான். சிரிப்புச் சத்த எக்காளத்தோடு சீட்டாட்டம் களை கட்டும். அந்தச் சிரிப்பில் அரசமரம் கூட அதிர்ந்து கிடக்கும். பொண்ணுவின் காது படாமல் இப்படிப் பேசிக்கொள்ளும் மட்டும் ஒன்றுமில்லை. ஆனால் பொண்ணுவின் காது பட கும்பக்கூட்டத்தில் எவளாவது சாடை பேசிவிட்டால் போதும். பிலுபிலுவென பிடித்துக் கொள்வாள். " ஆமா... இவ ஊரு மேஞ்ச கதையெல்லாம் எனக்குத் தெரியாது பாரு .. வந்தேன்னா அப்டியே அறுத்துவுட்றுவண்டி ! ஓக்கியம் ஒலயில ... நண்டு வலயில ... " பேச்சிலேயே எதிராளியை சந்தி சிரிக்க வைத்துவிடுவாள் பொண்ணு. காமாஞ்சோமான்னு ஒரு பத்து வருசம் போனதே தெரியவில்லை. இப்பல்லாம் கணேசனின் போக்குவரத்து குறையத் தொடங்கிவிட்டது. அவனுக்கும் மாட்டு யேவாரம் குறைந்து விட்டது. இழுத்துப் புடிச்சி சம்பாரிக்கிற கொஞ்ச நஞ்ச காசையும் குடிச்சி தீத்துவிட்டு, போதையில் எங்காவது மல்லாந்து விடுவான். பொண்ணுவுக்கு மெலிதாய் நரை விழுந்து தோல் சுருக்கமிட்ட நாட்களில் கணேசனின் பொழக்கம், ஆடிக்கொரு நாள் அம்மாசிக்கொரு நாள்னு ஆகிப்போச்சு. ஆளு கையில சொல்லிவுட்டா கூட சிலநேரம் வந்து எட்டிப் பார்ப்பதில்லை. மொத்தத்தில் பொண்ணுவின் உடம்பு கணேசனுக்கு இப்போது பச்சநாவியாகிவிட்டது. பொண்ணுவுக்கு தன் உடம்பின் தினவு தாழஏற அடங்கிவிட்டதுதான். ஆனால் தன் பவுசு தீர்ந்ததும் தன்னிடமிருந்து விலகும் கணேசனின் மீது அவளுக்கு அவேசம் ஆவேசமாய் வந்ததது. ஆனால் அந்த ஆவேசம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து, நாள்பட்ட புண்ணாய் அவளின் மனதில் நிறைந்து போனது. ம் ! காத்தடிக்கிற வரைக்கும் தூத்திக்கிட்டுப் போயிட்டான். யாரச் சொல்லி என்னாவப் போவுது ..! பாம்பாட்டம் நீண்டு கிடந்த மயிரில் பாதி உதிர்ந்து விட்டதில் நாற்பத்தி சொச்சம் வயசிலேயே பாரப்பட்ட கிழவியாட்டம் ஆகிவிட்டாள் பொண்ணு. தன்னை நினைக்கும் பொழுது பொண்ணுவுக்கு வேகோலம் வேகோலமாய் வரும். ஆனால் அழுவதைத் தவிர அவளால் வேறொன்றும் செய்ய முடிவதில்லை. பதின்ம வயதின் கடேசியில் பொண்ணு வயசுக்கு வருவதற்காக அம்மாக்காரியும் பனவெல்லம், கருஞ்சீரவம், அம்மான் பச்சரிசின்னு என்னென்னவோ கொடுத்துப் பார்த்தாள். கடன ஓடன் வாங்கி பெரியாண்டாணுக்கு கெடா கூட வெட்டினாள். ஆனால் கடேசி வரை பொண்ணு வயசுக்கு வரவேயில்லை. பொண்ணு காய்ச்சலாய் கிடந்த இந்த பத்திருபது நாளும் கணேசன், பொண்ணுவின் வீட்டுப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. " இன்னைக்கு பிச்சை போடுற மாதிரி சின்னப்பய கையில் காச குடுத்துவுடுறான் பாவிப்பய . நானும் வயசுக்கு வந்து காலாகாலத்துல எங்கயாவது வாக்கப்பட்டு போயிருந்தன்னா ... இன்னைக்கு இப்படி அனாதையா நாதியத்துக் கெடந்திருப்பனா ... ? இல்ல, எங்க ஆயி அப்பன்தான் என்னய பெக்காமயே இருந்திருந்தா, இப்படி ரெண்டாட்டுல வுட்ட குட்டி கணக்காத்தான் ஆயிருப்பேனா... ? நானும் ஒரு பொறப்புன்னு பொறந்து, சே !.. ஏன் நெலமை எதிரிக்குக் கூட வரக்கூடாது " என்று நினைத்தபடியே பல்லை நறநறவென்று கடித்தாள். உடம்பில் பலம் கூட்டி கட்டிலை விட்டு தட்டுத் தடுமாறி மெல்ல எழுந்தாள். தலை கிறுகிறுக்க அந்தக் கசடு அடிவயிற்றிலிருந்து திரண்டு மேலெழுந்து பொண்ணுவின் தொண்டையை அடைத்தது. வேதனையுடன் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டவளின் ஞாபகத்தில், கணேசனுடன் கடைசியாகச் சம்போகித்தது மின்னி மறைந்தது. அவன் இரண்டு கைகளாலும் அவளின் பின்னந்தலையை பற்றி இழுத்து வாயோடு செய்த அந்த முத்தம் இன்னும் தன் உதட்டில் தொற்றிக் கொண்டிருப்பதாக அவளுக்குப் பட்டது. சீலையின் முந்தானையால் அந்த முத்தத்தை துடைத்தெறிய முயன்றவளின் கண்களின் ஓரம் அனிச்சையாய் கண்ணீர் கசியத் தொடங்கியது. பாழாப்போன இந்த ஒடம்பு சொகத்துக்காத்தானே இத்தனை அவலமும் அவமானமும். சே... ! என் ஒடம்புக்குள்ளாற இருக்கிற அந்த ரத்தக் கசடு வெளியே வராமப் போனதுதானே இது எல்லாத்துக்கும் காரணம் ... அனலும் சில்லிப்பும் ஒரே நேரத்தில் அவள் உடலெங்கும் மேவ. கள் வெறி கொண்டவளாய் கழுத்தில் கருப்பேறிக் கிடந்த வெந்தியச் செயினை ஆத்திரத்தோடு பிய்த்து எறிந்துவிட்டு, சமையக்கட்டிலிருந்த அந்த மாடாக்குழியை நோக்கி நடுங்கும் கால்களால் துவண்டு நடந்தாள். அந்த நடையில் அவளின் இயலாமை தெரிந்தது. வெளியே அந்தரத்து இருட்டில் நிலாவும் நடுங்கிக் கொண்டிருந்தது போலத்தான் தெரிந்தது. ***** ஏய்.. சேதி தெரியுமாடீ ! நம்ம கணேசன் கூத்தியா, பிளேடால மடியக் கிழிச்சிக்கிட்டு உசுர மாச்சுக்கிட்டாளாம். சீலை பூரான் ஒரே ரத்தமாம்.... என்று பொண்ணுவின் வீட்டுக்கு வெளியே தெருவில் பெண்கள் கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள். ஊழிக்காலம் போல ஊரே ஒரு மாதிரி பரபரத்துக்கிடந்தது. கூரை வீட்டுக்கு உள்ளே இடுப்புச்சீலையை நனைத்துவிட்டு தரையில் ஓடி உறைந்திருந்த பொண்ணுவின் உதிரத்தில் காலைப்பொழுதின் ஈக்கள் சாவதானமாய் மொய்த்துக்கொண்டிருக்க ... வீசியெறிப்பட்ட வெந்தியச் செயினின் கண்ணிகள் அறுபட்டு தங்க மணிகளாய் தரையில் சிதறிக் கிடந்தன. ***** • ச.மோகன் முகவரி : ______________ 5 / 352 செல்லியம்மன் நகர், கிருஷ்ணாபுரம் - 621116, பெரம்பலூர் மாவட்டம். தொடர்பு எண் : 7O948 5642O

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.