logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Jayaraman G

சிறுகதை வரிசை எண் # 307


''காற்றில் போட்டக் கணக்கு!'' -ஜெரா ''இதுல உனக்கொண்னும் ஆட்சேபனை இல்லையே'' ஹரி பிசிறு தட்டும் பலவீனக் குரலில் வினவிய போது அனுஷாவுக்கு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை. கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல கம்யூட்டரில் பிரிண்ட் செய்து அவன் கொடுத்திருந்த பேப்பர் கடற்கரைக் காற்றில் தலையசைத்து சிரித்தது. ஹரி இப்படி ஒரு குழந்தைத்தனமான முடிவெடுத்து, செயல்படுத்தவும் முனைந்திருப்பது அவளைப் பொறுத்தவரை அதிர்ச்சியாகத்தான் இருந்தது- ஆனால் அதற்கு அவன் சொன்ன காரணங்கள் தர்க்கரீதியாக ஏதோ ஒரு மூலையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய இயல்பைப் பெற்றிருந்ததால் அவளால் எதிர்த்து வாதிட முடியவில்லை. அதுவும் கல்யாணமான இருபது நாட்களில் எதிர்மறை அணுகுமுறையை கையாள எந்தப் பெண்ணுக்குதான் தைரியம் வரும்! இதில் நடைமுறைசாத்தியம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை ஹரி யோசித்திருக்கக் கூடுமா என்பது அவளுக்குத் தெரியவில்லை- ஆனால்... அவன் முடிவை மறுத்துப்பேசி ஆவது ஒன்றுமில்லை என்பதாலேயே மௌனம் காத்தாள் அனுஷா. “என்ன பதிலே காணோம்! உனக்கு இது பிடிக்கலே! சரிதானே'' அனுஷா சட்டென அவனைத் திரும்பிப்பார்த்து வசீகரமாக புன்னகைத்தாள். ''நாட் அட் ஆல்'' என்று மென்மையாக பதில் உதிர்த்தாள். அவன் கண்கள் நிதானமாக கையிலிருந்த பேப்பரில் படிந்தன - அவன் மிகவும் தெளிவாக வேலைகளைப்பிரித்துப், பொறுப்புக்களை வகைப்படுத்தி வரிசைக்கிரமமாக கொடுத்திருந்தான் - காலையில் படுக்கையை விட்டு எழுந்து பெட்ஷீட்டை உதறி மடித்து வைப்பதில் தொடங்கி, இரவு காஸ்சிலிண்டரின் ரெகுலேட்டர் மூடப்பட்டிருக்கிறதா என்பதைச் சோதித்து விட்டு, விளக்கை அணைப்பதுவரை இருவருக்குமான வேலைகளையும், பொறுப்புகளையும் பாரபட்சமின்றி, கிட்டத்தட்ட சரிசமமாக பிரித்திருந்தான் - கூடவே இருவருக்குமான சமூகரீதியான உறவு எந்த சூழ்நிலையிலும் கையை உதறிக் கொள்ளாத வகையில், மிகவும் எச்சரிக்கையாக, பொறுப்புகளை கையாளுவதற்கான விதிமுறைகளையும் வகுத்திருத்தான்! அவனுடைய விசாலமான அறிவு அவளுக்கு பிரமிப்பையும், அச்சத்தையும் ஒருசேர வழங்கியதில் அனுஷா வார்த்தைகளைத் தேடி பெரும்பாலும் வாய்மூடி இருந்தாள். ''நீ என்னை புரிஞ்சுக்கணும் அனு! எந்த சூழ்நிலையிலும் நமக்குள்ளே பிரச்சனைகளே வரக்கூடாது! அதுக்காகத்தான் இதெல்லாம்! என்ன புரியுதா'' அனுஷா அதற்கும் ஒரு புன்னகையை பதிலாக்கிவிட்டு “போலாமா” என்றாள்- இருவரும் எழுந்தார்கள்- சற்றுத் தூரத்தில் சிவந்து கொண்டிருந்த மாலைச்சூரியனின் சரிவில் கடல் அலைகள் கம்பீரமாக கரையை அறைந்து கொண்டிருந்தன. காற்றும் கடலும் கை கோர்த்துக் கொண்டாலே அலைகள் அடுக்கடுக்காக வரத்தானே செய்யும்! அதற்காக அவை என்ன ‘அகிரிமெண்ட்’ போட்டுக் கொள்ள முடியுமா! இதை ஹரிக்கு யார் புரிய வைக்கப்போகிறார்கள்?. தன் திருமண வாழ்க்கையின் தொடக்கமே ஒரு சவாலான திருப்பமாக அமைந்துவிட்டதை எண்ணி அனுஷாவுக்கு சற்று திகிலாக இருந்தாலும், இதை எதிர்கொள்வதில் ஒருவித ‘திரில்’ இருப்பதையும் அவளால் உணர முடிந்தது- ஆனால் ஹரி தீர்மானமாக இருந்தான்- இருவரும் வேலைக்குப் போகும் தம்பதிகளாக இருப்பவர்களின் குடும்பங்களில் எத்தனைக் குழப்பங்கள், குமுறல்கள், குதறல்கள், கொடுமைகள் இருக்கின்றன என்பதை அவன் நேரிடையாக அனுபவித்தது மற்றும் இன்றி நிறைய கண்டும், கேட்டும் கண்கலங்கி இருக்கிறான்- தனக்கு கல்யாணம் என்று ஓன்று நடந்தால் அதை கூடியவரை பிரச்சனைகளற்ற அமைதியான வாழ்க்கை முறையில் அமைத்துக்கொள்ள மிகவும் உறுதியாக இருந்தான்.அவன் பெற்றோர்களின் வாழ்க்கை அவன் கல்யாணத்துக்கான உத்தரவாதத்தை அளிப்பதாயில்லை. ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு பெரும்பாலும் பேசாமடந்தைகளாகத்தான் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்தார்கள்.ஒரு நாள் யாருக்கு அதிகாரம் அதிகம் என்பதற்காக அடித்துக் கொள்வார்கள்! மறுநாள் யார் இந்தப் பொறுப்பை ஏற்று செயல்படுத்தி இருக்கவேண்டும் என்பதற்காக இடித்துக் கொள்வார்கள்! ஆக, இருவருக்கும் இடையே இடைவெளி தான் நிரந்தரமாக இருக்குமே தவிர எழுந்து நிற்கும் பிரச்சனையோ, கடமையோ, நிறைவுபெற்றதாக சரித்திரமே இல்லை! சிறுவயதிலிருந்தே இதை எல்லாம் பார்த்து பார்த்து சலித்துப்போனது ஹரிஹரனுக்கு! அப்புறம் ஹாஸ்டல் வாழ்க்கை! தனிமை! வாரத்துக்கு ஒரு முறையோ, மாதத்துக்கு ஒரு முறையோ சௌகரியப்பட்டபடி தனித்தனியாக வந்து சம்பிரதாய நலம் விசாரித்துவிட்டுப்போகும் அப்பா, அம்மாவிடம் ஹரிக்கு. எந்த ஈர்ப்பும் இல்லை!இருவரும் நல்ல அரசு உத்யோகத்தில் வெவ்வேறு ஊர்களில் எதிர்திசையில் இருப்பார்கள். விரும்பினால் சந்தித்து கொள்பார்கள்- சந்திப்பு நிச்சயமாக ஏதேனும் ஒரு சங்கடத்தில் முடியும்! மீண்டும் ஆளுக்கொரு பக்கம் இருந்துக்கொண்டு அந்தர்தியானமாகிவிடுவார்கள்.இவர்களைப் பொறுத்தவரை கல்யாணம் ஒரு பொருளற்ற பந்தமாகத்தான் தோன்றியது ஹரிக்கு- ஆனால் அவனுக்கு திருமணபந்தத்தின் மீது தனிமதிப்பிருந்தது- அதைப் போற்றிப்பாதுகாத்து புகழ்சேர்க்கும் தம்பதிகளையும் கடந்துவந்து பூரித்துப்போயிருக்கிறான்- பொருளாதாரச் சுதந்திரம் உள்ள தம்பதிகள் தமக்குள் சில வரைமுறைகளை வகுத்துக் கொள்ள தவறிவிட்டதால்தான் சரிவுகளைச் சந்தித்து சங்கடப்படுகிறார்கள் என்று ஏனோ நம்பினான் ஹரி- அவன் பெற்றோர்கள் அதிசயமாக ஒருங்கிணைந்து அவனுக்கு பெண் தேட முயன்றபோது தீர்மானமாக சொல்லியிருந்தான் வேலைக்குப்போகாத பெண்தான் வேண்டுமென்று! அப்படி ஒரு தேடலில் இருவருக்கும் பிடித்த அல்லது இருவரும் ஒப்புக்கொள்ளும் அமைப்புள்ள பெண்ணாக அனுஷா கிடைத்தாள்- ஆனால்.... அவள் வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாள்!- அவள் சம்பாதித்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லாத, ஓரளவுக்கு வசதியான பெற்றோருக்கு ஒரே பெண்ணாக இருந்தாலும் திருமணத்திற்காக வேலையை விடவேண்டும் என்ற வேண்டுகோளை அனுஷா ஏற்றுக்கொள்வதாயில்லை! விஷயம் ஹரிக்கு தெரிவிக்கப்பட்டது- ''சரி- சொல்லிப்பார்ப்போம்- ஒப்புக்கொண்டால் கல்யாணம்- இல்லையா குட்பை சொல்லிவிட்டு அடுத்த தேடலுக்கு அடிக்கல் நாட்டுவோம்'' என்று நினைத்து கொண்டுதான் அனுஷாவின் வீட்டுக்கு வந்தான் ஹரி- ஆனால் அவளைப் பார்த்தமாத்திரத்தில் அவனுக்கு ஒரேயடியாகப் பிடித்துப்போனது- அவளைச் சந்தித்து விருப்பத்தைக் சொன்னபோது அவள் திடமாகவும், தீர்க்கசிந்தனையோடும், அதேசமயம் வலிக்காதபடி மென்மையாகவும் தன் பதிலைச் சொன்னவிதம் அவனுக்குத் திருப்தியாக இருந்தது- “வேலைக்குப் போய் கொண்டே உங்களுக்கு ஒரு நல்ல மனைவியாக இருக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது மிஸ்டர் ஹரி! வேலை என்ற பலத்தை இழந்தால்தான் அந்தத் தகுதி எனக்கு வரும் என்கிற அவநம்பிக்கை உங்களுக்கு இருக்கும்பட்சத்தில் ஐ யம் வெரி ஸாரி…”. ஹரிஹரன்- அனுஷா தம்பதிகளின் வாழ்க்கை தொடங்கி ஒரு மாதம் போல ஓடிப்போனது- எந்த நெருடலும் இன்றி வாழ்க்கை விதித்தபடி நாட்களை விழுங்கிக் கொண்டிருந்தது- இருவரும் அலுவலகம் போக தொடங்கி, இயல்புநிலைமைக்கு திரும்பிக் இருந்தார்கள்- வகுத்துக் கொண்ட வரைமுறைபடி கடமைகளும், பொறுப்புகளும் முறையாக பகிர்ந்து கொள்ளப்பட்டது. பிசிறில்லாமல் பின்பற்றப்பட்டன. அவன் பால் வாங்கி வந்தான்- இவள் காபி போட்டாள்! அவன் காய்கறி நறுக்கிக் கொடுத்தான்- இவள் சமையல் செய்தாள்- அவள் துணி துவைத்தால், இவன் அதைக் காயப் போட்டான்- மாத முடிவில் வரவுசெலவு சரிபார்க்கப்பட்டு, அவரவர் கடமைகள் அட்சரம் பிசகாமல் நிறைவேற்றப்பட்டன- ஹரி எதிர்பார்த்த எந்த பிரச்சனைகளும் தலை தூக்கவில்லை. அவர்கள் வழக்கம்போல வந்தார்கள்; சென்றார்கள்; வாழ்ந்தார்கள்; சில போது சிரித்தார்கள்! சிலபோது மகிழ்ந்தார்கள் பெரும்பாலும் மௌனம் காத்தார்கள். ஆனால் எந்த செயல்களிலும் ‘நிஜம் ஒன்று மட்டும் நிச்சயமாக இல்லாததை அனுஷா நிழலாக உணர்ந்தாள்! எத்தனை நாளைக்கு இந்த காற்றிலே கணக்கு போடும் பாசாங்கு என்பது மட்டும் அவளுக்கு விளங்கவில்லை- அன்று அனுஷா கண்விழிக்கும் போது விடிந்து வெகுநேரமாகிவிட்டிருந்தது- முந்தைய நாள் ஆபீஸில் ஆடிட்டிங் என்பதால் வேலை ஆளைச் சாப்பிட்டுவிட்டது- தலைவலியும் சுற்றலுமாக இருந்ததால் சற்று அயர்ந்துவிட்டாள்!- பரக்க பரக்க சமையலறைக்குள் போனாள்! பால் தயாராக இருந்தது- ஆனால் காபி போடப்படவில்லை- பாத்திரங்கள் ‘ஸிங்கில்’ அப்படியே சிறைபட்டிருந்தன- காய்கறிகள் நறுக்கப்பட்டு தயாராக இருந்தன- அடுப்பு மட்டும் அமைதியாக இருந்தது- ஆக ஹரியின் பார்ட் ஓவர்!.. அனுஷா!....?! ஹரி குளித்து முடித்து கிளம்பதயாராக இருந்தான். அனுஷா குற்ற உணர்ச்சி மேலிடதலை குனிந்தாள்.. கம்மியகுரலில்… “ஸாரி…. கொஞ்சம் வெயிட் பண்ணீங்கன்னா.. நொடியில் டிபன் செஞ்சு… அவள் முடிக்கும் முன்பு… “நான் கிளம்பறேன் அனுஷா- ஸாரி- நீ பஸ்பிடிச்சு போயிடு ஆபீசுக்கு போறதா இருந்தா- ஈவினிங் போய் டாக்டரைப் பார்க்கலாம்” என்றபடி அவள் பதிலுக்குக் கூட காத்திராமல் வாசல் கடந்தான் ஹரி. அசைவற்று சற்று நேரம் நின்று விட்டாள் அனுஷா அவசர அவசரமாகக் கிளம்பத் தயாரானாள்- ஒரு மாத்திரை போட்டுக் கொண்டதும் ‘தேவலாம்’ போலிருக்கவே அனுஷா ஆபீஸ் வேலைகளில் கரைந்து போய் காலை நிகழ்ச்சியை சுத்தமாக மறந்து போனாள்! லஞ்சுக்கு சற்றுமுன்பு தீடீரென்று ஹரி போனில் வந்தான்- “அனுஷா- நான் ஹரி- உங்கப்பா என் ஆபீஸ்க்கு வந்திருக்கார்! வந்து பிக்கப் பண்ணிக்கிறியா” “அப்பாவா… ஹையா… ஹரி ஒண்ணுபண்ணுங்க! நீங்களும் அப்பாவும்….” “லிஸன் அனுஷா- இது பிஸியான ஆபீஸ் டைம்- உன்னோட விளையாடற மூட் எனக்கில்லை! உங்கப்பாவுக்கு ஹலோ சொல்லி, காபி குடுத்து, நலம் விசாரிச்சு, ரிஷப்ஷனிலே உட்கார வச்சிருக்கேன்- இனி அவரை கவனிச்சு அனுப்பி வைக்கவேண்டியது உன் கடமை- தட் இஸ் யுவர் பார்ட்- அண்டர்ஸ்டாண்ட்” ரிஸிவர் வைக்கப்பட்டது- அனுஷாவுக்கு நிமிட நேரத்தில் உடம்பெல்லாம் வியர்த்து போனது- மனது படபடக்க கனத்த இதயத்தோடு பர்மிஷன் போட்டுவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து கொண்டு ஹரியின் ஆபீசுக்கு விரைந்தாள் அனுஷா. ஏதோ ஆபீஸ் வேலையாக வந்திருந்த அப்பா கொஞ்ச நேரம் வீட்டில் ஓய்வெடுத்துவிட்டு அம்மா கொடுத்தனுப்பி இருந்த பலகார மற்றும் பொடி வகைகளை பத்திரமாக சேர்த்துவிட்டு சந்தோஷமாக கிளம்பிச் போய் விட்டார். ஹரி நெடுநேரம் வீடு திரும்பவில்லை- அனுஷாவுக்கே கொஞ்சம் பயமாக போய் விட்டது- அவன் ஆபீசுக்கு போன் போட்டு விசாரிக்களாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே வாசலில் கார் ஹாரன் ஒலித்தது. ஹரி தான் வந்திருந்தான்- கூடவே ஒரு வயதானப் பெண் யாராக இருக்கும்! உள்ளே நுழைவதற்குள்ளேயே அந்தப் பெண்ணை அழைத்து அறிமுகப்படுத்தினான் ஹரி- இவங்க பேரு கமலா ரெண்டு தெரு தள்ளி இருக்காங்க-நாளைக்கு காலையிலே இருந்து பத்து நாளைக்கு நம்ம வீட்டு வேலைக்கு வருவாங்க என்னம்மா.. எதெது செய்யணும்னு புரிஞ்சதுங்களா! ஹரியின் கேள்விக்கு யந்திரமாக தலையாட்டிய அந்த பெண் “அதான்-எழுதி குடுத்திருக்கீங்களே” என்று கையில் வைத்திருந்த பேப்பரைக் காட்டினாள். “சரி சரி காலையில நேரமாவந்துடுங்க” அந்தப்பெண் ‘கும்பிடு’ போட்டு விட்டு, பேசாமடந்தையாக நின்று கொண்டிருந்த அனுஷாவை வெறிக்கப்பார்த்தபடி திரும்பி நடந்தாள். “காலையில சீக்கிரமா வந்துடுங்க மாணிக்கம்” என்று ஆபீஸ் கார் டிரைவரை விடை கொடுத்து அனுப்பி விட்டு திரும்பிய ஹரி- “அனுஷா-நாளைக்கு நான் அர்ஜண்டா ஆபீஸ்டூர் போறேன்- திரும்பிவர பத்து நாளாகும். நான் செய்ய வேண்டிய வேலைகளுக்கெல்லாம் அந்த அம்மாவை ஏற்பாடு பண்ணி இருக்கேன்- தேவைப்பட்டா அவங்களையே உனக்கு துணையாவும் இருக்கச் சொல்லலாம்” என்றான்! அவள் பதிலுக்காக சில வினாடிகள் தாமதித்தவன், அவள் மௌனமாக இருக்கவே சர்யென்று உள்ளே போனான். மழைபெய்து ஒய்ந்ததைப் போலிருந்தது அனுஷாவுக்கு!ஆனால் சூழ்நிலை குளிர்ச்சியாக இருப்பதற்கு பதில் உஷ்ணமாக இருப்பதை உணர்ந்தாள். இனம்தெரியாத வெறுமை கட்டுக்கடங்காமல் வியாபித்து மூச்சைத்திணறடிப்பது போல அழுத்தியது. இது கஷ்டப்பட்டு விழுங்க வேண்டிய கசப்பு என்று நினைத்துக் கொண்டாள் அனுஷா!.. திட்டமிட்டபடி 10 நாட்களில் வேலை முடியாமல் மேலும் ஒரு வாரம் நீடித்து விட்டதில் ஹரி ரொம்பவே சோர்ந்து போனான். ஹரி தான் இரண்டொரு முறை போனில் அனுஷாவை தொடர்பு கொண்டானே ஒழிய அவளாக இவனுக்கு போன் செய்யவே இல்லை- போனில் கூட கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாள்! அந்த‌ வேலைக்காரப் பெண்ணையே தொடர்ந்து வைத்துக் கொள்ளும்படி சொன்னபோது கூட வெறும் ‘ம்ம்’ மட்டுமே அவளிடமிருந்து பதிலாக வந்தது- அவள் நிரம்ப கோபத்தில் இருக்கிறாள் என்று யூகித்துக் கொண்டான் ஹரி- ஊருக்குப் போனதும் இந்தப் போக்குக்கு எல்லாம் பக்குவப்படும்படி அவளை பதப்படுத்தி கூடவே சமாதானமும் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். வாசல்கேட் பூட்டப்பட்டிருந்தது- தன்னிடமிருந்த சாவியால் வீட்டைக் திறந்து கொண்டு ஹாலுக்கு வந்தவன் டேபிள் மேல் அவனுக்காக வைக்கப்பட்டிருந்த ‘செய்தியை’ படித்ததும் அதிர்ந்து போனான்- “ஆஷா க்ளினிக்கு வரவும்-அனுஷா”. என்னவாக இருக்கும் அனுஷாவுக்கு ஏதாவது….? அதனால்தான் அவளுடைய ‘செல்லும்’ வீட்டுப் போனும் வேலைசெய்யவில்லையா? ஆஷா க்ளினிக் இரண்டு தெரு தள்ளி பக்கத்திலேயே இருப்பதால் உடனே கிளம்பிவிட்டான் ஹரி-வழியில் அந்த வேலைக்காரப் பெண் கமலா தென்படவும், ஆவலோடு விசாரித்தான்.அவள் திருதிருவென்று விழித்தாள்! “என்ன….. நீங்க வேலைக்கு வந்துகிட்டிருக்கீங்க இல்ல.”….. “இல்லீங்களே அம்மாதான் ‘வேண்டாம்னு’ சொல்லிட்டாங்களே”---அவள், அவன் பதிலைக்கூட வேண்டாதவளாக திரும்பி நடந்தாள்- ஹரி நிறையக் குழம்பிப்போனான்- ஆஸ்பித்திரி வாசலிலேயே அப்பா காத்திருந்தார். ஆதரவாக அவன் தோளில் கை போட்டுக்கொண்டார். “ஆபரேஷன் முடிஞ்சு இப்ப நார்மலாயிட்டா- இனி பயப்படறத்துக்கு ஒண்ணுமில்லேன்னு டாக்டர் சொல்லியாச்சு—" உற்சாகமாக அப்பா சொன்னது எதுவும் அவன் காதில் ஏறவில்லை- வேகமாக வார்டுக்குள் நுழைந்தான்- அப்பாவும் கூடவே ஓடிவந்து ஒன்பதாம் எண் அறைக்குள் நுழைந்தார்- அங்கே அம்மா கட்டிலில் உட்கார்ந்திருக்க, அனுஷா ஹார்லிக்ஸ் கரைத்துக் கொண்டிருந்தாள். “நீ ஆபீஸ் டூர் போயிருக்கறதா அனுஷா போன் பண்ணி ரெண்டு பேத்தையும் வரச் சொன்னா! தீடீர்னு அம்மாவுக்கு தாங்கமுடியாத வயத்துவலி- டெஸ்ட் பண்ணதிலே அப்பண்டிஸிஸ்னு தெரிஞ்சு ஆப்ரேஷன் பண்ணியாச்சு!- அனுஷா இல்லைன்னா அம்மா மட்டுமில்ல – நான் கூட ரொம்ப தவிச்சு போயிருப்பேன்-“ அப்பா அப்படி ஒரு நெகிழ்ச்சியோடு பேசி ஹரி இதுவரை பார்த்ததே இல்லை- “அதுமட்டுமில்ல ஹரி- இப்படி ஒரு தங்கமான பொண்ணு உனக்கு மனைவியா கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும் – தாம்பத்ய வாழ்க்கை என்னங்கறதை இந்த தலைநரைச்சுப் போன் பருவத்திலே நாங்கரெண்டு பேரும் நல்லா புரிஞ்சுக்கறதுக்கு அனுஷாதான் காரணம்! அம்மா புகழ்ந்து கொண்டேபோக, ஹரி ஓரக்கண்ணல் அனுஷாயைப் பார்த்தான்- அவள் இன்னும் நிதானமாக கலக்கிக் கொண்டிருந்தாள் தலைநிமிராமல் - ஒருவேளை இவள் நெஞ்சத்தைக் கிள்ளி நெருப்பை அள்ளி இறைத்து விட்டோமோ என்ற காரணமற்ற பயம் நெருட, ஹரி “டாக்டரைப்பார்த்துட்டு வர்ரேம்மா” என்றபடி வெளியே வந்தான். “ஏன் இப்படி செஞ்சே அனுஷா- உன்னால இது எப்படி முடிஞ்சது” அனுஷா பேசவில்லை. “டாக்டர் ஆஷா என்கிட்டே பேசினாங்க – தாய்மையடையறதும் அதை பாதுகாத்து ஒரு உயிரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தறதும் ஒரு தவம் மாதிரி- அது நிறைய பேருக்கு கிடைக்கறதில்லை நமக்கு கிடைச்ச அந்த வாய்ப்பை இல்லாம செய்ய என்ன வழின்னு நீ டாக்டர் கிட்டே கேட்டதா நான் கேள்வி பட்டதும்…..” ஹரியின் கண்கள் கலங்க எத்தனித்தன—வார்த்தைகள் தடம் இழந்து தடுமாறின –அனுஷா நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றித் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டாள். “இப்படி சொல்றதுக்கு என்னை மன்னிக்கணும் ஹரி—தாய்மை இல்லாம இருந்தா நல்லதுன்னு நினைச்சது உங்க மேல எனக்கேற்பட்ட அவநம்பிக்கை! அதை இன்னும் செயல்படுத்தாம இருக்கிறது என் கிட்ட இருக்கிற தன்னம்பிக்கை!” ஹரி குறுகிப் போனான் –இதயம் “ட்ரம்” அடித்தது---கண்கள் கனலாகிக் கனன்றன.—அனுஷா அலட்டிக் கொள்ளாமல் மேலே தொடர்ந்தாள்---“ ஆரம்பத்துல ஏதோ ஆர்வக்கோளாறுல இப்படி எல்லாம் செய்யறீங்களோன்னு நினைச்சு நானும் அலட்சியமாதான் இருந்தேன்---போகப்போக நீங்க காட்டின பிடிவாதம் எனக்கு” பிரம்படி '’ கொடுத்தது--- வரவு செலவு கணக்கு போட்டு குடும்பத்தை நிர்வாகம் செய்யலாமே ஒழிய வாழ்க்கையையே கணக்காக்கி குடும்பத்தை நிலைகுலைய வைக்கிறது என்ன நியாயம்??--! அதை நீங்க செஞ்சீங்க -கட்டம் போட்டு கடமைகளைப்பிரிச்சுக்க நாம ஒண்ணும் பெயிட் பார்ட்னர்ஸ் இல்ல! பேமிலி பார்ட்னர்ஸ்!இதுல கணக்கு சரியா இருந்தா மட்டும் காரியங்கள் நடந்துடாது-ரெண்டு பேர் மனசுலயும் காதல் இருக்கணும்! எனக்கு நீ உனக்கு நான் என்கிற உரிமை இருக்கணும்-‘லிஸ்ட்’ போட ஆரம்பிச்சாலே உரிமை வராது-உறுத்தல்தான் வரும்! மூச்சு வாங்க சற்று நிறுத்திய அனுஷா ஹரியை தீர்க்கமாக பார்த்தாள் –அவன் தலை குனிந்து,உதடு கடித்து உணர்ச்சிகளை விழுங்கிக் கொண்டிருந்தான்---மென்மையான குரலில் அவள் மேலும் தொடர்ந்தாள்-- “பாதுகாக்கவும்; அரவணைச்சு அன்பு காட்டவும் தைரியம் சொல்லி வழி நடத்தவும்; கலங்கும் போது கண் துடைக்கவும் பக்கத்துல நமக்கு ஒரு ஆண் இருக்கான்ங்கற துணிச்சல் பெண்ணுக்கு வரணும்!—அதுக்குத்தான் புருஷன்!---அப்புறம் தான் புள்ளை!—அதுவே இல்லாத போது----" அனுஷா ‌உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்– ஹரி பதறிப்போய் அவளை இழுத்து அணைத்துக் கொள்ளவும்; அவள் தேம்பல் அதிகமானது—“ஸாரி---ஐயாம் வெரி ஸாரி----” அதற்கு மேல் அவனாலும் பேச முடியவில்லை.. வாசலில் நிழலாடவே இருவரும் விலகிக் கொள்ள; அம்மா நின்றிருந்தாள்----” ஹரி நானும் அப்பாவும் உன் வண்டியை எடுத்துக்கிட்டு ஷாப்பிங் போறோம் – எனி ப்ராப்ளம்--? என்றாள் மர்மமாகப் புன்னகைத்தபடி…. ஹரி திணறலாக “நத்திங் “—எனத் தடுமாறவும்;--அனுஷா அகலமாகச் சிரித்தாள்.. --------------------------------------------நிறைவு------------------------------------------------------ பின்குறிப்பு--- இந்தக் கதை “காற்றில் போட்டக் கணக்கு”—என் சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் இந்தப் போட்டி முடிவு தெரியும் வரை வேறு எந்த வகையிலும் இதை. பயன் படுத்த மாட்டேன் என்றும் இதன் மூலம் உறுதி கூறுகிறேன்..----ஜெரா---

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • இளமதி பத்மா Avatar
    இளமதி பத்மா - 2 years ago
    நீண்ட காலத்திற்குப் பின் உங்கள் எழுத்தை வாசித்ததில் மனதிற்கு நிறைவையும், மகிழ்வையும் கொடுத்தது. நல்லதை மட்டுமே சிந்திக்கும் உங்களின் மாறாத அதே குணம் கதையிலும் பிரதிபலிக்கிறது. வாழ்த்துகள் நண்பரே. தொடர்ந்து எழுதுங்கள்.