க.புவனேஸ்வரி
சிறுகதை வரிசை எண்
# 306
சிறுகதை
நீதானே என் பொன் வசந்தம்
அலுவலக மதிய உணவு இடைவேளை. சாப்பாட்டு அறையில் அன்று
செய்தித்தாளில் வந்த செய்திகளும் முதல் நாள் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளையும், ஒரு சிலர் தங்கள் குழந்தைகளின் படிப்பு பற்றியும் அலசிக்
கொண்டிருக்க அவையெல்லாம் அரைகுறையாய் தன் காதில் விழுந்தாலும்
ஆனந்தியின் மனம் மட்டும் நாளை தன் மாமியார் ஊருக்குச் செல்வதால்
குழந்தை ப்ரியாவை ஒரு வாரத்திற்கு பள்ளியிலிருந்து வந்ததும் கவனித்துக்
கொள்ள ஆள் தேட வேண்டிய கவலையிலேயே சுற்றி வந்தது. ஏதோ
சாப்பிட்டோம் என்ற பேருக்கு சாப்பிட்டு, டப்பாவை மூடி மதியம் அலுவலக
வேலைகளை கவனிக்கச் சென்றாள். சற்று நேரத்தில் சங்கப் பொறுப்பில் உள்ள
ஊழியர் ஒருவர் ஆனந்தியின் மேசை அருகில் வந்தார். என்ன சார்? என்ன
விஷயம்? என்றாள் ஆனந்தி. மேடம், நாளை நம் அலுவலகத்தில் ஒரு கூட்டம்
நடைபெற உள்ளது. அதில் பெண்ணுரிமை என்ற தலைப்பில் தாங்கள் பேச
வேண்டும். தாங்கள் பேசுவதில் வல்லவர் என்பதால் அனைத்து ஊழியர்களும்
தங்களைத்தான் பேச வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள் என்றார்.
ஆனந்தியோ சற்றும் தாமதிக்காமல், சார் நாளை நிச்சயமாக என்னால்
முடியாது. என் குழந்தையை கவனிக்க நான்கு மணிக்கே நான் வீடூ செல்ல
வேண்டும் என்றாள். அவரோ, ப்ளீஸ் மேடம். வேறு ஏதாவது ஏற்பாடு செய்து
விட்டு இதற்கு ஒப்புக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்தவே அரை மனதுடன்
சம்மதித்தாள். முல்லை வீடு திரும்பியதும் அனைத்து வேலைகளையும்
அவசரமாக முடித்து தன்னை ஆசுவாசப்படுத்தும் வகையில் சிறிது அமர்ந்தாள்.
கணவர் பிரபு வீடு திரும்பியதும் சற்று நேரம் கழித்து நாளை மாலை சற்று
அனுமதி பெற்று அலுவலகத்தில் இருந்து முன்னதாகவே வந்துவிடுங்கள்.
குழந்தை ப்ரியாவைப் பார்த்துக்கொள்வதற்கு என்றாள். பிரபு உடனே, வாய்ப்பே
இல்லை. ஏனெனில் அலுவலகத்தில் எனக்கு ஏகப்பட்ட வேலை என்றான்.
ஆனந்திக்கோ சுருக்கென்று கோபம் வந்துவிட்டது. நான் உங்களை நம்பித்தான்
நாளை கூட்டத்தில் பேச ஒத்துக்கொண்டு வந்துள்ளேன் என்று கடிந்து கூறினாள்.
உடனே பிரபு என்ன கூட்டம் எதைப் பற்றிப் பேசப் போகிறாய் அமைதியாகச்
சொல் என்றான். ஏனெனில் பிரபுவிற்கு தன் மனைவி எதிலும் முன்னனியில்
இருக்க வேண்டும் என்பது பிடித்த ஒன்று. எனவே ஆனந்தி விளக்கிக் கூறியதும்
தானும் முயற்சிப்பதாக அவளுக்கு ஒப்புதல் அளித்தாள். மறுநாள் மாலை குழந்தையைக் கவனிக்க சற்று முன்னதாகவே வந்துவிட்டான். குழந்தை
பள்ளியில் இருந்து வந்ததும் அம்மா எங்கேப்பா? என்றது. அம்மா இன்று சற்று
தாமதமாக வருவாள் என்றதும் குழந்தையின் முகம் சற்று வாடியது. பின்
குழந்தைக்கு மாற்றுடை அணிவித்து, புத்தகப்பை அனைத்தையும்
ஒழுங்குபடுத்துவதற்குள் பிரபுவிற்கு போதும் என்றாகிவிட்டது. குழந்தை சற்று
விளையாடி விட்டு வந்து பசிக்கிறது என்றது. உடனே பிரபு குழந்தைக்கு
பிஸ்கட் எடுத்து தரவே குழந்தை அம்மா இருந்தாள் ஏதாவது டிபன் செய்து
தருவாள் என்றது. பின் அப்பா ஹோம் ஒர்க் சொல்லிக் கொடு என்றது. பிரபுவும்
குழந்தைக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்க முயற்சித்தான். பொறுமை
எல்லை மீறவே மீதத்தை அம்மா வந்ததும் படிக்கலாம் செல்லம். அப்பாவிற்கு
முடியவில்லை என்றான். பின் எதிர் வீட்டில் குடியிருக்கும் வீட்டில் உள்ள +2
படிக்கும் குழந்தை, அங்கிள், வீட்டில் ஆன்ட்டி இல்லையா, கணக்குப் பாடம்
படித்துப்போக வந்தேன் என்றது. உடனே பிரபுவிற்கு ஆனந்தி நம்மைப் போல்
அலுவலகம் சென்று வந்தாலும் இவ்வளவு வேலைகளையும் சமாளிக்கிறாள்.
நம்மால் ஒரு நாள் கூட சீக்கிரம் வீட்டுக்கு வராமல் நண்பர்களோடு அரட்டை
அடித்து விட்டு பின் வீட்டுக்கு வருகிறோமே என்று நினைக்கும் போது
ஆனந்தியிடம் தான் கொண்ட மதிப்பு சற்று கூடியது. இதற்கிடையில் குழந்தை
மேலும் வந்து ஏதோ கேட்க அப்பாவிற்கு ஏதும் தெரியாது. அம்மா வந்தபின்
எல்லாம் பார்த்துக் கொள்வாள் என வேகமாகக் கூறினான். உடனே குழந்தை
அப்பா உனக்குத்தான் ஒன்றும் தெரியாது என்கிறாய் ஆனால் தினம் தினம்
அம்மாவை உனக்கு ஒன்றும் தெரியாது என்று தானே சத்தம் போடுகிறாய் என
இயல்பாக கூறி ஓடியது. உடனே இவ்வளவு நாள் தனக்குப் புரியாத ஒன்றை
குழந்தை சுட்டிக்காட்டியதாக உணர்ந்தான். ஏற்கனவே ஆனந்தி எவ்வளவு
நேரமானாலும் தான் வந்து விடுவதாகவும், குழந்தையை மட்டும் கவனித்துக்
கொண்டால் போதும் என்று கூறிச் சென்றிருந்தாள். பிரபுவோ மனது கேட்காமல்
குழந்தையையும் அழைத்துக் கொண்டு ஆனந்தியின் அலுவலகத்திற்கு
புறப்பட்டான். பிரபுவைப் பார்த்து ஆனந்தியின் அலுவலக ஊழியர் ஒருவர் சார்
கூட்டத்தில் மேடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஜந்து நிமிடத்தில்
முடிந்துவிடும் என அழைத்து வந்து அமரச்செய்தார். கூட்டத்தின் நிறைவாக
ஆனந்தி பெண்ணுரிமை என்பது நாம் போராடிப் பெற்றாலும் நம் அருமை
பெருமை உணர்ந்து ஆண்கள் தாமாகவே முன் வந்து கொடுக்கும் போதுதான்
அது முழுமை பெறும் என்று முத்தாய்ப்பாக கூறி அமர்ந்ததும் அரங்கம்
நிறைந்த கைதட்டல். இதற்கிடையில் பிரபுவிற்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஆனந்தியின் அலுவலகத் தோழி மேடம் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள்
கணவர் அனைத்தையும் அனுசரித்து மேடத்திற்கு உதவுவதால்தான் அவர்களால்
கூட்டத்திற்கெல்லாம வந்து பேச முடிகிறது. இது அவர்கள் பேச்சிலும்
வெளிப்படுகிறது என்றாள். உடனே மற்றொரு தோழி அதை ஆமோதிக்க
பிரபுவிற்கு சற்று குற்ற உணர்ச்சி மேலோங்கினாலும் பெருமையாகவும் இருந்தது.
“நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே நீ நிலவைப்
போல தேய்த்து வந்தாய் எமை வளர்த்ததாலே” என்று கண்ணதாசனின்
பாடல்கள் வசனம் மாறி ஒலிக்க இருக்கையை விட்டு எழுந்து ஆனந்தியை
நோக்கி சென்றான். பிரபுவை சற்றும் எதிர்பார்க்காத ஆனந்தி சே, நேற்று
அவசரப்பட்டு கோபப்பட்டுவிட்டோமே நம் மேல் எவ்வளவு அக்கறையாக
உள்ளார் என்று மன்னிப்புக் கோர முற்படும் முன்னரே பிரபு, ஆனந்தி இனி எந்த
கூட்டமானாலும் பேசுவதற்கு தயங்காமல் ஒத்துக்கொள். குழந்தையைப் பற்றிய
கவலை வேண்டாம் உனக்கு என்று கூறினான். இந்த திடீர் மாற்றத்திற்கு
குழந்தையும் தோழியும் காரணம் என்பது தெரியாமல் கணவருக்கும்
கடவுளுக்கும் நன்றி கூறி காரில் ஏறி அமர்ந்தாள். இருவரும் காரில் வரும்
பொழுது நான் இன்று சந்தோஷமாக இருக்கேன். அந்த எப்எம்ஐ ஆன்
பண்ணுங்க என்றாள்.
நீயும் நானும் சேர்ந்திருந்தோம். நிலவும் வானும் போல நிலவைப் போல
தேய்த்து வந்தேன். நீ வளர்ந்ததாலே என கதாநாயகன் பாடுவது போல் பாடல்
வந்தது
ஆனந்திக்கோ
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
தேய்நிலவைப் போல நான் வளர்ந்து வருகிறேன் என்னுடன்
நீ இருப்பதாலே
என்று மனம் பாடியது.
க.புவனேஸ்வரி
ஸ்ரீ பவன்
44, சந்தி விநாயகர் கோவில் தெரு,
தூத்துக்குடி.
கைபேசி எண். 9442813693.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்