மைதிலி இராமையா
சிறுகதை வரிசை எண்
# 303
அழியாத கலாச்சாரம்.
வாயே ஓயாமல் வீட்டிலும் சரி வெளியிடங்களிலும் சரி இன்றைய இளம் தலை முறைகளின் நடவடிக்கைகள், உடைகள் பற்றி குறை பேசிக் கொண்டே இருக்கும் சிவகாமி வாயடைத்து உட்கார்ந்திருந்தாள் கடந்த அரைமணி நேரமாக.
அவளுக்கே அது அதிர்ச்சியாக இருந்தது. மூன்று உயிர்களை இந்த இளம் பிள்ளைகள் என்னமாய் காப்பாற்றி விட்டார்கள். நினைக்க நினைக்க அவளுக்கு தன்னைப் பற்றியே அருவருப்பாக இருந்தது. காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பும் போது கூட பேத்தி ஹன்சினியிடம் ஆதங்கத்துடன் பேசி விட்டுத்தான் கிளம்பினாள்.
"என்ன ஹன்சி இது எங்கே கிளம்பினாலும் தலையை விரிச்சுப் போட்டுகிட்டு, அங்கங்கே எலி குதறின மாதிரி ஒரு டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டே கிளம்பற பாக்க நல்லாவா இருக்கு. ஊரைப் பழிச்சதெல்லாம் எனக்கே வாச்சிருக்கு.
கலாச்சாரம் கெட்டுப் போச்சுன்னு எல்லாரையும் சொல்லிட்டிருந்தேன் நம்ம வீடே அப்படி ஆகும்னு கனவிலேயும் நினைக்கலம்மா நான்.
பாவாடை தாவணி புடவை எல்லாமே வழக்கொழிஞ்சு போயிடும் போல இருக்கு. போயிடும் போல என்ன போயே போச்சு" என்று புலம்பித் தள்ளி விட்டாள்.
"பாட்டி! நாம என்ன கோவிலுக்கா போறோம் மாலுக்குத்தானே போறோம் ஏன் இப்படி புலம்பிட்டே இருக்கே. உனக்கு கண் டெஸ்ட் பண்ணிட்டு அப்படியே மாலுக்குப் போய் கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணிட்டு வரலாம் ரிலாக்ஸ்டாவும் இருக்கும்னு கிளம்பினா இப்படி மூட் அவுட் பண்றியே" என்று பதிலுக்கு ஹன்சினியும் கத்த, இடையில் அவள் அம்மா கமலா தான் புகுந்து இரண்டு பேரையும் சமாதானம் செய்து கூட்டி வந்தாள்.
சிவகாமியை ஒரு இடத்தில் உட்கார வைத்து விட்டு மற்றவர்கள் மாலைச் சுற்றக் கிளம்பி விட்டார்கள்.
அங்கே வந்து ஹன்சியின் ஃபிரெண்ட்ஸெல்லாமும் சேர்ந்து கொண்டார்கள்.
போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருந்த சிவகாமி, என்ன நாகரீகமோ என்ன கண்றாவியோ, அண்ணன் தங்கச்சியா, ப்ரெண்ட்ஸா, லவ்வர்ஸா, கணவன் மனைவியா ஒண்ணுமே புரியலை. கை கோத்துக்கிட்டு, கட்டிப்பிடிச்சுக்கிட்டு, உரசிக்கிட்டு சே என்ன கலாச்சரமோ.
ஆம்பளையா பொம்பளையான்னே கண்டுபிடிக்க முடியாத ஒரு உடுப்பு வேற என நொந்து கொண்டிருந்தபோது, நிறை மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
வயிறு மிகப் பெரியதாக இருந்தது நிச்சயம் இரட்டைக் குழந்தையாகத் தான் இருக்கும். என்ன இது பயித்தியக்காரத் தனம் வயிறு சொடிந்து நன்கு கீழிறங்கி உள்ளது. இப்பவோ அப்பவோன்னு இருக்கும் போது என்ன மால் வேண்டிக் கிடக்கோ என மனதிற்குள் சலித்துக் கொண்டு இருந்த போது,
அந்தப் பெண் வலியை கட்டுப்படுத்த பிரயத்தனம் பட்டுக் கொண்டிருந்ததைக் கவனித்தாள்.
"ஏம்மா இந்த நேரத்தில இங்க எதுக்கு வந்தியாம். கூட யாரும் வரலையா ஏன் தான் இப்படியெல்லாம் நடந்துக்கறீங்களோ" என்று வழக்கம் போல் சிவகாமி வாயைத்திறந்தபோது,
ஹன்சினியும் அவள் ஃபிரெண்ட்ஸும் வந்து விட்டார்கள். நிலைமையின் தீவிரம் புரிந்து விட்டது அவர்களுக்கு. ஒருத்தி ஆம்புலன்சுக்கு ஃபோன் போட, ஒருத்தி, அந்தப் பெண்ணை கைத்தாங்கலாக அழைத்துப் போய் ஓர் கடை வாசலில் இருந்த பென்ஞ்சில் சற்று வசதியாகப் படுக்க வைக்க, அந்தப் பெண்ணுக்கோ பிரசவ வலி அதிகமாகி விட்டது.
எல்லோரும் "இப்படியா வருவா, ஏன் வந்தாளாம், இந்தக் கூட்டத்தில என்ன பண்ண முடியும், கூட யாருமில்லையா" என்றெல்லாம் பேசிக் கொணாடு ஒதுங்கினார்களே தவிர யாரும் நெருங்கி வரத் தயாராக இல்லாத போது,
பின் வரப் போகும் பிரச்சனைகள் பற்றி எந்த யோசனையும் இன்றி துப்பட்டா போட்டிருந்த பெண்கள் அதைக் கொடுக்க டெம்பரவரியாக அங்கே ஓர் மறைவிடம் உருவாக்கி, ஹன்சினியின் நண்பர்கள் ஆண் பெண் பேதமின்றி அனைவரும் இயன்ற உதவிகளைச் செய்ய, ஹன்சினியின் வற்புறுத்தலால் கமலா அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தாள்.
குழந்தைகளுக்கான டவல், தாயாருக்கு வேண்டிய துணிகள் யாவும் அங்கிருந்த கடைகளில் இருந்து பிள்ளைகள் பார்த்துப் பார்த்து ஓடி ஓடி வாங்கி வந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
இரட்டைக் குழந்தைகளும் பூமியைத் தொட்ட நொடி ஆம்புலன்ஸ் வந்துவிட தாயையும் குழந்தைகளையும் அதில் ஏற்றி அனுப்பி வைத்தனர் அந்த இளைஞர் குழாம்.
சிவகாமி வாயடைத்து இருந்தது இந்த அரைமணி நேரமாகத்தான்.
குடியிருந்த வீட்டுக்காரர் ஆறுமாத வாடகை பாக்கிக்காக காலி செய்யச் சொல்லி கெடுபிடி பண்ணவே, புதிதாக ஒரு வீட்டை அந்தப் பெண்ணின் கணவன் தேடியதில் வீட்டுச் சொந்தக்காரர் வெளியூரில் இருக்கவே ஃபோன் மூலமாகவே பேசி முடிவெடுத்துள்ளார்.
இன்று காலை வருவதாக வீட்டு ஓனர் சொன்னதால் பழைய வீட்டை இன்று காலி செய்து கொடுத்து விடுவதாக இவள் கணவர் வாக்கு கொடுத்துள்ளார்.
அதன்படி அங்கு வேறு ஒருவரை இன்று குடி வர ஏற்பாடு செய்து விட்டாராம் ஓனர்.
விதி வசத்தால் இவர்களுக்கு வீடு தருவதாகச் சொன்னவர் வரும் வழியில் விபத்தில் மாட்டிக் கொள்ளவே பெரும் சிக்கலாகி உள்ளது.
பழைய வீட்டுக்காரர் சாமான்களைத் தூக்கி வெளியில் வைத்து இவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் வெளியேறச் சொல்லி விட்டாராம்.
ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகி உள்ள வீட்டு ஓனரைப் பார்த்து சாவி வாங்கி வரலாம் என்ற நினைப்பில் இந்தப் பெண்ணின் கணவர் இவளை மாலில் உட்கார வைத்து விட்டு சென்றிருக்கிறார்.
டெலிவரிக்கு இன்னும் ஒரு வார காலம் ஆகுமென மருத்துவர் குறித்துக் கொடுத்திருந்ததால், இந்த நிகழ்வை எதிர் பார்க்காமல் இருவரும் இருந்துள்ளனர்.
இது அனைத்தும் மருத்துவ மனையில் அந்தப் பெண்ணை ஐந்து தினங்கள் தங்க வைத்து பராமரித்து வந்தபோது ஹன்சினி தெரிந்து கொண்டு வந்து சொன்ன தகவல்கள்.
அடுத்தவர்களின் சூழ்நிலை புரியாமல் கேள்வி கேட்டு குற்றம் சொல்லி குதறி விட்டு சமயம் என்று வந்த போது நமக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கும் நாம எங்கே, அழகா சூழ்நிலையைப் புரிஞ்சுகிட்டு, சமயோசிதமா,பக்குவமா, முக்கியமா மனிதாபிமானத்தோட நடந்துக்கிட்ட இந்த சின்னஞ் சிறுசுக எங்கே என்று யோசித்து மலைத்தாள் சிவகாமி.
கலாச்சாரத்தை அழிக்கிறதுகள் இந்தக்காலப் பிள்ளைகள்னு சதா சர்வமும் சொல்லிகிட்டே இருந்தோமே அது எவ்வளவு மதியீனம் என்று இப்போது நன்றாக உரைத்தது அவளுக்கு.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்