logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

இயற்கையின்ரசிகை சிவரஞ்சினி

சிறுகதை வரிசை எண் # 302


தற்கொலை விளிம்பில் இன்னும் **************************************** ஏம்பா வெள்ளச்சாமி அந்த மாட்ட அடிச்சி ஓட்டுப்பா.. எங்க ஐயா எவ்வளவு தான் அடிச்சி ஓட்டுறது அதுங்களும் பாவம் வாயில்லா ஜிவனுக வாய் விட்டு சொல்ல முடியாமத்தானே அழுகுதுங்க. நெலத்துல நீர் இல்ல வானத்துல கருமேகமும் கூடுதில்ல உழுவ சிரமமா இருக்கு வெயிலு மண்டைய பொளக்குது கண்ணெல்லாம் இருட்டுது வருணபகவா(ன்) கண்ணுதொறக்குதில்ல. மாடுக அடியெடுத்து வைக்கவே சிரம படுதுங்கய்யா. உண்மதானப்பா நீ சொல்றது முன்னபோல இல்லையே விவசாய நெலம. பச்ச நிலமெல்லாம் காஞ்ச நிலமாகிப்போச்சி. மலைப்போல இருக்கும் வைக்கப்போர் எங்கோ ஓரிடத்தில் சிலைப்போலத்தான் இருக்கு. நெல்லடிக்கிற காட்சியெல்லாம் ஓவியமாப் போச்சி விலைவாசி உயர்வு விவசாயி வாழ்க்கைய சாலையில நஞ்சி கிடக்கிற புளியா இல்லையா மாத்திரிச்சி. ஆமாங்கய்யா இந்த அரசாங்கமும் பெரிசா ஒன்னும் இத கண்டுக்கிற மாதிரி தெரியலையே. என்னப்பா செய்றது பசிக்கிற நேரம் மட்டும் தான் வயிறு இருக்குறதையே நெனைக்கிறான் முக்காவாசி பேரு சாப்பிடுற நேரத்துலயாவது விவசாயிய நெனைக்கிறானா இல்லையே. வேர்வையெல்லாம் நிலத்துல ரெத்தமா கொட்டி நெல்லையும் கொள்ளையும் வெளைய வச்சி எடுத்தா விவசாயிய மலாட்ட தோல ஊதி தள்ளுற மாதிரி இல்லையா தள்ளுறாங்க. நெசந்தானுங்கய்யா நீங்க சொல்லுறது. விவசாயமெல்லாம் ரசாயணமாகிரிச்சி பழத்த சாப்ட்டு கொட்டைய துப்புறதுக்கு கூட கஷ்டப்படுற தலைமுறை தான் இப்ப வளர்றவங்க. அது என்னோமோ கார்பட்டோ ஹைப்ரட்டோனு இப்ப எந்தப் பழத்த பார்த்தாலும் இந்தப்பேரா தானே கெடக்கு. மனுச உசரத்துக்கு கூட வளருதில்லையே அதுக்குள்ள பழம் பழுத்துறுது. ஒரு மரத்த பெத்த புள்ளைய வளக்கன பார்த்து பார்த்து வளர்த்தது நம்ம காலம். இப்ப உலகமே கம்ப்யூட்டரா போச்சே மாடித்தோட்டம் மவுசா போச்சே ஐயா. இவங்களுக்கு எங்க புரியப்போகுது விவசாயம் செத்தா உலகமே ஊனமாகிறும்னு. பொண்ண மலடினு கேட்ட காலம் ஒன்னு மண்ண மலடியா பார்க்குற காலம் வந்து இடியெல்லாம் இதயத்துல விழுதே ஐயா. கவலபடாத வெள்ளச்சாமி நமக்கும் ஒரு நல்லா காலம் வரும். வரும் வரைக்கும் முடியும் மட்டும் இந்த மண்ண விட்டுறாம மூச்சிபுடிச்சி வாழ்ந்து பாப்பம் அதுக்குமேல கடவுள் விட்ட வழி நடக்குறது நடக்கட்டும். அதுவும் சரிதானுங்க ஐயா. மண் புழுவுக்கப்பறம் அதிகமா இந்த மண்ண நேசிச்சவன் விவசாயி தானுங்களே முடிஞ்சவன் முட்டிப்மோதி போராடாடிப் பார்க்குறான் முடியாதவன் ஒன்னு மண்ண விட்டுர்றான் இல்லனா உசுரையே விட்டுர்றான். எங்கையோ தூரத்து மாநிலத்துல தொடங்கி இப்ப ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்ட தொடங்கிருச்சி விவசாய தற்கொலை. உரத்தோட விலை அந்த நிலவு இருக்க உசரத்துக்கு இல்லையா போய்க்கிடக்கு... அது ஒன்னும் இல்ல வெள்ளச்சாமி அதிகார வர்க்கத்தோட அட்டூழியம் எல்லாம். விவசாயி கழுத்த இலகுவா நெரிச்சிபுடலாம் இல்லையா கேட்க ஒரு பய வரமாட்டன்ல. விவசாயப் பிரச்சனைனா வயிறு இருக்க எல்லா பயலுமே போராடனும் ஆனா இங்க அப்பிடியா விவசாயத்துக்காக விவசாயியேதான் போராடிக்கனும். பட்டினிச் சாவு சோமாலியா மாதிரி நம்மூருப்பக்கம் திரும்புனா தான் விவசாயத்தோட அருமை தெரியுமோ என்னவோ. ரெண்டு இளநீர் வெட்டு வெள்ளச்சாமி அடிக்கிற வெயிலுக்கு கொஞ்சம் தொண்டைய நனச்சுக்கலாம் களப்பா வருது. கொஞ்சம் பொறுங்கய்யா இப்பவே வெட்டித் தாரேன்.... இந்தாங்கய்யா.. மெதுவா குடிங்க.. நீயும் சாப்பிடு வெள்ளச்சாமி.. சரிங்கய்யா.. என்னா ருசிங்கய்யா இந்த இளநீரு. ஆனா கூப்பிட்டு கூப்பிட்டு வித்தாலும் வாங்குறதுக்கு மேலயும் கீழயும் இல்லையா பாக்குறாங்க. பாட்டில்லயும் டின்லயும் அடச்சி விக்கிற கேஸ் டிரிங்ஸ் தானப்பா பலருக்கும் பவுசா இருக்கு அதுனாலதான் என்னவோ இளநீர் சீவுற பக்கம் வந்து நிக்கிறது இல்ல இவங்கெல்லாம். இளநீர் வாங்கவே இம்புட்டு யோசிக்கிறவங்க உரவிலைக்கு எதிரா எதிர்ப்பு தெரிவிப்பாங்களா. எல்லா கட்டண உயர்வுக்கும் தெருக்கோடிவரை நின்று போராட்டம் நடத்துவாங்க நள்ளிரவு விலையேற்றம் பெட்டோல் டீசலுக்கும் போர்க்கொடி தூக்குவாங்க. எல்லோர் வயிறையும் நிறைக்கிற உழவன் வயிறு பற்றி எரிந்தால் என்ன மண்ணோடு மண்ணாய் மக்கிப் புதைந்தால் என்ன உழவனுக்கெதிரான எதிர்ப்பை யார் ஆழமாய் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை லென்ஸ் வைத்துத் தேடினாலும் கிடைக்காத ரகசியமாய் புதைந்துப் போயிருக்கும் வெள்ளச்சாமி. பீஷா பர்க்கரைப் போல பிராய்லர் கோழிகளைப் போல கம்பங்கூலையும் சிவப்பரிசியையும் நேசிக்கும் காலம் இனிவருமா. பாவம் விவசாயி ஏமாற்றத் தெரியாதவன் சகதிக்குள்ள கால்களை புதைக்கத் தெரிந்தவனுக்கு இதயத்தை தந்திரத்திற்குள் மறைக்கத் தெரியலையே. மீனவன் கடலை நம்பி அழுறான் விவசாயி மழையை நம்பி அழுறான். ரெண்டு பேரோட நெலமையும் ஒரே கடல்ல தத்தத்தளிக்கிற படகு மாதிரிதான் வெள்ளச்சாமி. ஆமாங்கய்யா அரசாங்கம் கொண்டுவந்த அவசர சட்டம் பற்றியெல்லாம் யாருக்கு என்ன கவலை. உள்ளாட்டு மதிப்பில் வேளாண்மை என்ன வெறும் பதினைந்து சதவீதம் தானேனு கண்டுக்காம விட்டுட்டாங்க போல. இயந்தி கட்டுமானங்கள் அதிகமான வளர்ச்சி விகிதத்தை வச்சிருக்கனால மதிப்பு கவனமெல்லாம் முதல் அங்கதானே குடுக்குறாங்க. இருக்கவனுக்கு தானே தங்கத்தட்டுல சோறு கிடைக்கும் இல்லாதவனுக்கு ஏளனச் சட்டில தானே சோறு கிடைக்கும் என்ன செய்றது யார நோகுறது வயிறு நிறைக்கிற உணவுக்கு தன்னிறைவ காணோம் கட்டுமான நிர்மாணம் செய்றதில் தொழில்புரட்சி காணுறதுக்கு ஆர்வ பாலம் கட்டுறதுல தானே மும்மரமா நிக்குது அரசாங்கம். பச்சக் கொடில படுத்துருக்க பச்சப்பாம்பு தெரியாத மாதிரி மழை வரும்போது மணக்குற மண்வாசமும் தெரியல பசி வரும்போது உணவில் ருசிக்கிற விவசாயமும் தெரியலையே ஐயா. நீ சொல்றது சத்திய வார்த்தை வெள்ளச்சாமி. உம் பையனோட படிப்பு முடிஞ்சிருச்சா... இல்லங்கய்யா.. இன்னும் ஒரு வருஷம் இருக்கு. அதுக்குள்ள என்னோட உசுறு இருக்குமானுதான் தெரியல. ஏம்ப்பா இப்பிடி பேசுற .. அப்பிடியெல்லாம் ஒன்னும் நடக்காது கவலபடாம இரு.. தெம்பில்லைங்கய்யா எம் மகனுக்காகத்தான் வெயில்ல வெந்தாலும் பரவாயில்ல இன்னும் கொஞ்சகால படிப்பு முடிக்கும் வரைக்கும் என் சக்தியெல்லாம் திரட்டி உழக்கனும் பாப்பம் அந்த ஐயனாரப்பன் தான் துணையிருக்கனும். ஒன்னும் யோசிக்காத வெள்ளச்சாமி மண்ண நம்புன நம்ம பொளப்பு மண்ணாகிப் போகாது...நீ போயிட்டு நாளைக்கு வா நான் சந்(தை)த வரைக்கும் போயிட்டு நெல்லு மூட்டைய இறக்கிட்டு வாரேன். சரி.. நல்லதுங்கய்யா...புறப்படுறன்.. வெள்ளச்சாமி சைக்கிள் கருவேலம்பட்டிக்கு ஓடுது. அவரோட சொந்த ஊர் அது. மகனோட படிப்புக்காக நிலத்தை விற்றுவிட்டு பக்கத்து ஊரு தலைவர் கிட்ட வேலை செய்கிறவர். தினமும் சைக்கிளில் வந்து வந்து போறது வழக்கம். நிலத்தை விற்ற ரணத்தை இங்குதான் ஆற்றிக்கொள்ளுவார். வேறொரு நிலத்தில் வேலை செய்கிறோம் என்ற எண்ணத்தையே மறந்து விட்டார். ஊர்த்தலைவருக்கு மிகுந்த நம்பிக்கையானவர். சொந்த மண்ணைப் பிரிந்து அகதியாக வாழ்வதற்கும் மண்ணை விற்றுவிட்டு வாழ்வதற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இரண்டுமே வலிகள் நிரம்பிய கனம். இளங்கோ... வாங்கப்பா.. இந்தா.. சைக்கிளை மரத்துப்பக்கமா நிறுத்திட்டு வாப்பா... சரிப்பா.. வெள்ளச்சாமி குளித்து முடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்... அப்பா.. என்னப்பா இளங்கோ சொல்லு... இல்லப்பா .. இன்னும் நீங்க எவ்வளவு நாள்தாப்பா தனியா கஷ்டப்படுவிங்க விடுமுறை கிடைக்கும்போது நானும் ஏதாவதொரு வேலைக்கு போறேன்ப்பா.. இளங்கோ இன்னும் உன்னோட படிப்பு முடிய ஒருவருடம் தானே இருக்கு நீ கலெக்டரா வந்ததும் நான் ஓய்வெடுக்கத்தானே போறேன் பரவாயில்லப்பா நீ படிப்புல மட்டும் உன்னோட கவனத்தை செலுத்து அப்பாவோட கஷ்டத்த நினைக்காத போ.. போய் படி போ... சரிப்பா... இருவரும் தூங்குவதற்குப் போய்விட்டார்கள். காலை மீண்டும் சைக்கிளை எடுத்துப் புறப்பட்டுவிட்டார் வெள்ளச்சாமி வேலைக்கு.. வா வெள்ளச்சாமி.. சாப்பிட்டியா... ஆ...ஆ..ஆச்சிங்கய்யா... வெள்ளச்சாமி அந்த வரப்ப மாத்தி கட்டு வெள்ளச்சாமி.. சரிங்கய்யா.. உங்க ஊர்ல விவசாய கடனுக்கு யாரோ விண்ணப்பிக்கிறாங்கனு சொன்னியே வெள்ளச்சாமி கடன் கிடச்சதா.. அந்தக் கொடுமைய என்னனு சொல்லய்யா... ஏம்ப்பா ... என்னாச்சி.. அதுதான் விவசாயிகளுக்கு பயிர் கடனா ஒரு லட்சம் வரைக்கும் கடன் குடுக்குறாங்களேப்பா... அட ... நீங்க வேறய்யா.. வங்கிகளில் என்னவோ அப்பிடிதான் சொல்றாங்க ஆனா அந்தக் கடன விவசாயிங்க வாங்குறதென்னவோ மலைய குடையுற வேலையாத்தானே இருக்கு. ஒரு தெளிவில்லாத படிவம் அரசு ஆவணத்தை வங்கி அதிகாரிக கேட்குறாங்க. மண்ணப்பத்தி கேட்டா விவசாயி சொல்லுவான் இவங்க என்னென்னவோ படிவம்னா பயிர்க்கடன் அவ்வளவுதான். பொண்டாட்டி புள்ளைக நகையெல்லாம் வித்து மண்ணக் காப்பாத்த நெனைப்பான் விவசாயி கடைசியில தன்னையோ காப்பாத்திக்க முடியாம தற்கொலை பண்ணிக்கிறான். விவசாயியோட கண்ணீருக்கும் மதிப்பு இல்ல கடனும் கிடைக்கிறதில்ல.. உண்மதான் வெள்ளச்சாமி பயிர் கடன சரக்கீட்டுக் கடனா கேட்டாளும் கொடுக்காது இந்த அரசாங்கம் ஆனா முன்னுரிமைக் கடன் என்ற பேருல தனியார் நிறுவனங்களுக்கு பணத்த அள்ளி வீசுறாங்க கோடிக்கணக்குல. சரக்கீட்டுக் கடனா மாத்தினா சரி வட்டிகட்டி வட்டிக்கட்டி நொந்துப்போகாத கந்தத்துணியா சரி இருப்பாங்க விவசாயிங்க அதுக்கும் வழி இல்லாம போச்சே வெள்ளச்சாமி. இருக்குற நிலமைய பார்த்து பலரும் விவசாயமே வேனாம்னு ஓடுறாங்க. இயற்கை விவசாயத்துக்கு மாறச்சொன்ன இருக்குற நேரத்துக்கு அதெல்லாம் சரிவராதுனு ரசாயணத்துல உரிஞ்சப்பட்டவர்கள் பலர். இவங்களையெல்லாம் மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு திரும்பச் சொல்லி புரியவைப்பதற்கே ஆண்டுகள் ஆகும்னுதான் தோணுது. ஒரு ஒருத்தர் பாரம்பரிய விதைகளையெல்லாம் பராமரித்து வச்சிருக்காங்க பலர் இதெல்லாம் இனி எதுக்குனு தூக்கி வீசிட்டாங்க. சொன்ன பாடு பாதினா இன்னும் சொல்லாத பாடு அதிகம். முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்வோம் வெள்ளச்சாமி இயற்கை விவசாயத்தை திருப்பி எடுக்க. என்ன வெள்ளச்சாமி எதுவுமே பேசாம நிக்கிற.. ஒன்னுமில்லைய்யா மாறிப்போன உலகத்த நினச்சன் பழையகால பசுமை கூட நினைவுளேயே கருகி போற மாதிரி இருக்கு. அதான் என்ன மறந்து நின்னுட்டங்கய்யா எதுவும் பேசாம... இயற்கை விவசாயம் நூறு சதவீதம் சாத்திப்படும்னு சொல்ல முடியாது வெள்ளச்சாமி ஆனால் இயற்கை விவசாயமே இல்லன்ற நிலையை தடுக்கனும் இல்லையா. வட்டிக் கடன் விளைநிலங்களையெல்லாம் விற்பது தற்கொலை இப்படி எவ்வளவோ பிரச்சனைகளை சந்திச்சி உயிருள்ள கருவாடா போறான் விவசாயி.. விவசாயி நெலம பலருக்குப் புரியிறதில்ல பலர் புரிஞ்சிக்க விரும்புறதில்ல. நல்லா சம்மாதிக்கனும் நல்லா சாப்பிடனும். நம்ம தினம் சாப்பிடுற உணவு விஷமா ஆரோக்கியமானு கூட பலருக்கும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் பலர் வெயில் தாங்க முடியலனா மரத்துக்கு கீழ நின்று இளைப்பாற நினைக்கிறான் ஒரு மரத்தையோ செடியையோ வளர்த்தெடுக்க நினைக்கிறதில்ல வெள்ளச்சாமி சூழ்நிலைக்கு ஏற்றார்போல் மனிதர்கள் பழையதை துரத்திவிடுகிறார்கள். எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளலாம் பசியை மாற்ற முடியாதே வயிறை நீக்க முடியாதே. விவசாயம் என்பது பூமியென்னும் உடலை அசைக்கிற உயிர் என்பதை மனிதர்கள் உணர்வார்கள். இயற்கை விவசாயம் மண்ணையும் காக்கும் மனிதனையும் காக்கும் என்பதை உள்வாங்கும் போது கடைசி மண்புழு விவசாயியைத் தேடி அலைந்து திரியுற நிலை வந்துரக்கூடாது இல்லையா உயிர் உள்ள மட்டும் விவசாயத்திற்கு உயிர்கொடுப்போம் வெள்ளச்சாமி. புரியுதுங்கய்யா மண்ணு உசுறுல கலந்த சொந்தமாச்சே விட்டுப்பிரியுற வலி தெரியுமய்யா நல்லாவே. சரி வெள்ளச்சாமி நேரமாகுது அங்க திண்ணையில கொய்யாக்காய் ஒரு ஒரு கிலோவா அளந்து கட்டி வச்சிருக்கேன் தர்பூசணியும் இருக்கு நீ அத எடுத்துப் போயி வித்துட்டு வந்துரு வெள்ளச்சாமி. சரிங்கய்யா உடனே புறப்படுறேன்.. வண்டியில போட்டு தர்பூசணிய முதல் விற்கப் போறார் வெள்ளச்சாமி. ஒரு கிலோ பத்து ரூபாய்னு சிலேட்ல எழுதி ஓரமா தொங்கவிட்டுட்டு உட்கார்ந்திருக்கார் உட்கார்ந்திருக்கார் மூனு மணி வரைக்கும். பத்து ரூபாய் சாதாரணமா நாம செலவு செய்ற காசுதான். வாங்கி சாப்பிடவில்லையென்றாலும் சாலையில் திரிகிற குரங்குகளுக்கு கூட கொடுக்கலாம் ஆனாலும் பலர் வண்டியை கடந்துப் போகிறார்கள் வருகிறார்கள் வாங்கவில்லை கொண்டுவந்ததில் கொஞ்சமாய் மிச்சப்பட்டுப்போச்சி தர்பூசணி. கொய்யாக்காய் கிலோ முப்பது ரூபாய்.. ஒரு இருபத்து ஐந்து வயதிருக்கும் ஒரு பெண் வந்து விலை கேட்கிறாள். கேட்டு விட்டு கொய்யாக்காயை பிடித்துப் பிடித்துப் பார்க்கிறாள். இதென்ன வறட்டு காயா இருக்குனு அளந்து வச்சிருந்த எல்லாத்தையும் பிரித்து கொய்யாக்காயை மாற்றி மாற்றிப் பார்த்துப் பார்த்து எடுத்தப்பிறகு முப்பது ரூபாயை வெள்ளச்சாமி கையில் தந்துவிட்டுப் போகிறாள். காசை கையில வாங்கிட்டு வலியோடு சிரிக்கிறார் வெள்ளச்சாமி. ஏசி அறைகளில் காய்கறிகளின் எடையை மட்டும் தான் பார்க்கிறார்கள் ஆனால் வீதியில் நின்று விற்கிற விவசாயிகளிடம் தான் தரம்பார்க்கிறார்கள் தகுதி பார்க்கிறார்கள். விவசாயிகள் சிந்தும் வியர்வையின் வேதனைகளை இவர்கள் வாசிக்க விரும்புவதில்லை. அருகில் இருப்பவர்களே விவசாயிகளை சல்லடைப் போட்டுச் சலித்துப் பார்க்கும்போது எங்கோ இருந்துகொண்டு அறிக்கையைப் பார்த்து முடிவுசெய்யும் அரசாங்கம் விவசாயிகளின் கழுத்தை நெறிப்பதில் பெரிய மாற்றம் என்ன இருக்கிறதென்று..✍️ #இயற்கையின் ரசிகை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.