logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

பிரபாகரன் சண்முகநாதன்

சிறுகதை வரிசை எண் # 282


அப்பா வீட்டில் இல்லை - பிரபாகரன் சண்முகநாதன் “இங்க யாரும் நிக்காதீங்க. ஏன்மா ஒரு தடவை சொன்னா புரியாதா. பெரிய டாக்டரு வர நேரமாச்சு. அங்கிட்டு போயி நில்லுங்க ம்மா. பேஷண்ட் கூட ஒரு ஆளு மட்டும் இருங்க. ஏன்பா உங்களுக்கு தனியா சொல்லனுமா” நீல சேலை அணிந்த மருத்துவமனை பணியாளர் ஒவ்வொரு படுக்கையாக சென்று இறுக்கமான முகத்தோடு அங்கிருப்பவர்களை அகலச் சொல்லி அறிவுறுத்திக் கொண்டேயிருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் அங்கிருந்து நகர்வதும் எதையோ மறந்தது போல மீண்டும் எடுக்க வருவதுமாக அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மத்தியில் வெளுத்த பச்சை சேலையும் அதற்கு பொருத்தமே இல்லாத சாந்து நிற ஜாக்கெட்டும் அணிந்தவாறு அம்மா வெளியே செல்வதை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. “அப்பாவைப் பார்த்துக்கப்பா” தூக்கமில்லாத முகத்தோடும் சீராக வாராத முடியோடும் ஒருநாளும் இப்படி பார்த்திடாத அம்மாவை இந்த மூன்று நாட்களாக இதே கோலத்தில் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். குளிர்பதன அறைக்கு வெளியே பார்ப்பதற்காகவென வட்ட இடைவெளி விட்டு மற்ற இடங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் கண்ணாடி கதவின் வழியே அம்மா ஒரு முறை பார்த்தாள். அதன் பிறகு அங்கிருந்தும் நகர்ந்து விட்டாள். வராண்டாவில் கட்டப்பையோடும் தட்டோடும் கழுவ வேண்டிய பாத்திரங்களோடும் நோயாளிக்கென பிரத்யேகமாக, இங்கு அனுமதிக்க வேண்டும் எனச் சொன்னவுடன் மருத்துவமனைக்கு எதிரே போயி வாங்கி வந்த வாளி, குளிப்பதற்கான கப், மட்டமான துண்டு, சாணித்தாள் நோட்டு, கட்டப்பை சகிதம் அமர்ந்திருப்பவர்கள் மத்தியில் தலையில் கையை வைத்துக் கொண்டு அவள் அமர்ந்திருப்பதை இப்போது வெளியே போனால் காண முடியும். கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்த டாக்டர் அக்கா ஒருவர் அப்பாவின் படுக்கைக்கு வந்தார். “அப்பா பேர் என்ன” எனக் கேட்டவர், என் பதிலுக்கு காத்திருக்காமல் தன் கையில் இருந்த பரீட்சை அட்டையில் எழுதத் தொடங்கினார். மிக மெல்லியதான தங்க சங்கிலி அந்த அக்கா கழுத்தில் இருந்தது. அவரது நிறத்திற்கும் தங்கத்துக்கும் அத்தனை பொருத்தம். அப்பாவுக்கு தங்கச்சி பருவமடைந்த போது ஒரேயொரு ஏக்கம் தான் இருந்தது. வயசுக்கு வந்த பிள்ளைக்கு போட ஒரு பொட்டு தங்கம் கூட இல்ல எனப் புலம்பி தள்ளினார் அந்த இரவில். வேகமாக ஓடிவந்த செவிலியர் “சாரி டாக்டர், நேரமாச்சு. காலையில் இந்தப் பிள்ளைகளைக் கிளப்பிவிட்டுட்டு இங்க வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது” அவரது கன்னத்தின் பக்கவாட்டில் திட்டு திட்டாக பவுடர் ஒட்டி இருந்தது. ஈரத்தோடு பவுடர் போட்டா இப்படி நடக்கும். பொட்டும் அவசர கதியில் வைத்தது போல தான் இருந்தது. அவசரமாக தான் கிளம்பி வந்திருப்பார். டாக்டர் அக்கா சிரித்து கொண்டே செவிலியர் சொல்கிற பிபி அளவுகளைக் குறித்துக் கொண்டிருந்தார். தங்கச்சி ஸ்கூலுக்கு போயிருக்க மாட்டாள். அச்சோ… மூணு நாளாச்சு. ஸ்கூல்ல அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதது யாருக்கும் தெரியுமா இல்லையா என்பதும் தெரியல. திரும்பி போகும் போது அப்பாவைக் கூட்டிட்டு வான்னு மேக்ஸ் டீச்சர் சொல்லுவாரே. அப்பானால ஸ்கூலுக்கு வர முடியுமா. அப்பாவுக்கு தானே உடம்பு சரியில்லை. அப்புறம் அவர் எப்படி வர முடியும். அம்மாவைக் கூட்டிட்டு போகலாம். அம்மாவுக்கு ஆனால் பேசத் தெரியாது. பேசத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. மேத்ஸ் சாரே அவளுக்கும் சேர்த்து பேசிவிடுவார். என்னவொன்று ஏதாவது என்னைப் பற்றி சொன்னால் அழ ஆரம்பித்து விடுவாள். அழுவதைத் தவிர வேற எதையும் அவங்க அம்மா வீட்டில் சொல்லித் தரவில்லை என அப்பா அங்கலாய்த்துக் கொள்வார் சண்டைகளின் போது. “தம்பி என்ன படிக்கிற” டாக்டர் அக்கா என்னிடம் தான் கேட்டார். “அப்பாவைப் பொறுப்பா பார்த்துக்கிற போல. நல்ல பையன்” நான் அமைதியாக இருந்தேன். “கூட யார் வந்திருக்கா” “இந்தப் பையனோட அம்மா வெளியே இருக்காங்க டாக்டர்” “சரி. இப்ப கூப்பிட வேணாம். சார் வந்து பார்க்கும் போது கூப்பிடுங்க போதும்” டாக்டர் அக்கா சொன்னதற்கு செவிலியர் தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தார். மருத்துவனை அமைதியாக இருந்தது. எதிர் படுக்கையில் இருக்கிற அண்ணன் எப்போதாவது அமைதியைக் கலைக்கும் வகையில் இருமிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை இருமும் போதும் வெளியே வரும் எச்சிலை அளவு முகவையில் சேகரித்து கொண்டிருந்தார் அந்த அண்ணனின் மனைவி. சிகரெட் அதிகமாக அந்த அண்ணன் பிடிப்பாராம். அப்பாவைப் போல. அம்மாவும் அந்த அக்காவும் பேசிக் கொண்டிருந்த போது கேட்டது இதெல்லாம். அவருக்கு சிகரெட் பழக்கம் மட்டும் தான் இருந்தது. அப்பாவைப் போல மது அருந்தும் பழக்கம் இல்லை. அம்மா அதனை பற்றி சொல்லும் போது இன்னும் அழுதாள். அந்த அக்கா, அம்மாவைத் தேற்றுவதற்கு எதை சொன்னாலும் அம்மா கேட்க மாட்டாதவள் போல அழுது கொண்டே இருந்தாள். என் எதிர்பார்ப்பெல்லாம் இந்தச் சத்தம் கேட்டு அப்பா எழுந்து “அடச்சீ. நாயே அழாதே” எனச் சொல்வார் என்பது தான். அது நடக்கவில்லை. இங்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன் அப்பா அதிகாலை நாங்கள் எழுவதற்கு முன்பே வீட்டிற்கு வந்திருந்தார். செம்மண் நிலத்தில் சூரியன் வருவதற்கு முன்பே ஒளி வந்துவிடும். அதற்கு முன்பே வந்திருப்பார் என்றால் 5 மணி போலவே வந்திருக்க வேண்டும். பேருந்து மாறி மாறி வந்ததாகவும் மிக களைப்பாக இருப்பதாகவும் சொல்லி அம்மாவிடம் நீச்சத்தண்ணி கொண்டு வரச் சொன்னார். செம்பு நிறைய நீச்சத்தண்ணீ குடித்தவர் கால் அமுக்கி விடச் சொல்லி என்னிடம் கேட்டார். அப்பாவுக்கு எப்போதும் நான் தான் கால்கள் அழுத்தி விடுவேன். வழுவழுவென ஆனால் வழுக்கி விடாத பள்ளி கழிவறை திண்டு போல இருக்கும் அப்பாவின் கால்களில் ஏறி நின்று மிதிப்பது எனக்கு ஒரு விளையாட்டு போல. அப்பாவின் கால் மீது ஏறி நின்று கொண்டு எனக்கு தோன்றுகிற வாகில் நடந்து கொண்டிருப்பேன். முழங்காலில் மட்டும் மெதுவாக அழுத்த வேண்டும். வலது காலில் ஒரு காலும் இடது காலில் ஒரு காலுமாக முன்னோக்கி இரண்டு முறை பின்னோக்கி இரண்டு முறை. அதன் பிறகு பெருக்கல் குறி போல வலது காலில் ஒரு கால் முன்னே இருக்க இடது காலில் என்னுடைய மற்றொரு கால் பின்னே இருக்கும். இப்படி அழுத்தி கொண்டே இருக்க “அப்பா இப்போ வலி போயிருச்சா” என நான் கேட்டால் எனக்கு கால் வலி வந்திடுச்சுன்னு அர்த்தம். அப்புறம் என்னுடைய தங்கச்சி கொஞ்ச நேரம் ஏறி குதிப்பா. விளையாடுவாள். “தம்பி நீ அமுத்துனா தான் கால் வலி குறைஞ்ச மாறி இருக்கு. இறங்கு பாப்பா. அண்ணன் அமுக்கட்டும்” இன்னும் ஒரு பத்து நிமிஷம் நடப்பேன். ஓடுவேன். தாவுவேன். வலி குறையுமா, தெரியவில்லை. அப்பா தூங்கியிருப்பார். ஆனால் அன்றைக்கு அப்பா தூங்கவில்லை. டாக்டர் அக்காக்களும் அண்ணன்களும் ஒன்றாக ஓரிடத்தில் குழுமி அங்கிருந்து ஒவ்வொரு படுக்கையாக குழுவாக நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் மட்டும் அங்கு மையமாக நிற்பதும் பேசுவதும் கேட்பதும் சொல்வதுமாக நகர்ந்து கொண்டிருந்தார். அவர் தான் பெரிய மருத்துவராக இருக்க வேண்டும். அப்பாவின் படுக்கைக்கு வந்த போது பெரிய டாக்டர் அப்பாவைச் சோதிப்பதும் டாக்டர் அக்காவிடம் ஆங்கிலத்தில் கேட்பதுமாக இருந்தார். டாக்டர் அக்கா செவிலியருக்கு அறிவுறுத்த அம்மா உள்ளே அழைத்து வரப்பட்டார். “உங்க புருஷனமா இது” அம்மா தலையசைத்தார். “இப்படி முத்துற அளவுக்கா விடுறது. பிள்ளைங்க எல்லா இருக்குதுங்கள. பார்க்க வேண்டாமா.” அம்மா அழ ஆயத்தமானாள். “சொந்தகாரங்க இருந்தா சொல்லிடுங்க. கிரிட்டிக்கல் ஸ்டேஜ். வீட்டுக்கு கூட்டிட்டு போறதுனாலும் டிஸ்ஜார்ஜ் சம்மரியில கையெழுத்து போட்டு தரேன். இனி ஒன்னும் செய்ய முடியாது” அவர் உதட்டை பிதுக்கியதும் அம்மா, “கொல்லங்குடி காளியாத்தா உனக்கு இரக்கம் இல்லையாடி” என வெடித்து அழுததும் அடுத்தடுத்து நிகழ்ந்தது. அன்று பிற்பகல் கண்ணை இறுக்க மூடி மூன்று நாட்களாக தூங்கி கொண்டிருந்த அப்பாவின் வாயில் நுரை வர ஆரம்பித்தது. இரண்டு முறை அம்மா தன் சேலை தலைப்பால் துடைத்து விட்டார். அதற்கடுத்த தடவைகள் நிற்காமல் வழிந்து கொண்டியிருந்தது எச்சில் மட்டுமல்ல ரத்தமும் தான் என்பது துண்டு நனைய நனைய சிவப்பு நிறமாக மாறிக் கொண்டிருந்ததில் தெரிந்தது. வேகமாக போயி அந்த டாக்டர் அக்காவை கூட்டி வந்தேன். அவர் பார்த்து விட்டு சென்று இன்னும் இரண்டு டாக்டர் அண்ணன்களையும் செவிலியரையும் கூட்டி வந்தார். என்னையும் அம்மாவையும் தள்ளி நிற்க வைத்தனர். உருளும் சக்கரங்களில் பச்சை திரை கட்டப்பட்ட கம்பங்களை நகர்த்தி வந்து அப்பாவின் படுக்கையை மூன்று பக்கத்திலும் சுற்றி மறைத்தனர். பெரிய டாக்டர் கொஞ்ச நேரத்தில் வந்தார். அப்பா மூன்று நாட்களாக எதுவும் பேசவில்லை. சாப்பிடவில்லை. அம்மாவை கூப்பிடவில்லை. என்னையோ தங்கச்சியையோ தேடக் கூட இல்லை. மாமா வந்திருந்தார். அப்பா போனை என்னிடமிருந்து வாங்கி அதிலிருந்து ஒவ்வொரு எண்ணாக அழைத்து கொண்டிருந்தார். அப்பாவுக்கும் மாமாவுக்கும் ஆகாது. அப்பாவுக்கு அவருடைய போனை மாமா எடுத்தது தெரிந்தால் அவ்வளவு தான் பிரச்சனை ஆகப் போகிறது என நினைத்து கொண்டேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்பாவின் படுக்கையைச் சுற்றிய பச்சை திரையில் இருந்து ஒவ்வொருவராக வெளியே வந்தனர். இறுதியில் திரை முற்றிலுமாக விலக்கப்பட்டது. இப்போதும் அப்பா தூங்கிக் கொண்டு தான் இருந்தார். ஆனால் வயிறு மட்டும் சலனமின்றி இருந்தது. நான்கு பக்கம் கால் ஊன்றி அப்பாவை நடுவில் அமர வைத்து ஒவ்வொருவராக நீர் ஊற்றுவதும் சீயக்காய் கரைத்த பாத்திரத்தில் இருந்து தொட்டு வைப்பதுமாக வரிசையாக வந்திருந்த எல்லோரின் முறையும் முடிந்த பிறகு அப்பாவிற்கு புது வேட்டி உடுத்திவிடப்பட்டது. கால்கள், முகமெல்லாம் கிழித்த வேட்டி துண்டுகளால் கட்டப்பட்டு அப்பாவைத் தூக்கி செல்ல ஆயத்தமாயினர். கண்மாய்க்கு பின்புறமிருக்கும் சுடுகாட்டிற்கான வழி நாங்கள் சென்ற பாதை. அந்தப் பக்கம் போகக் கூடாது என அம்மா முன்பெல்லாம் சொல்லியிருக்கிறாள். இப்போது அமைதியாக இருந்தாள். அப்பாவை இங்கேயே எல்லோரும் விட்டுவிட்டு சென்றுவிடுவார்களா. ஒருவேளை எல்லோரும் போன பிறகு அப்பா எழுந்து வந்தால் என்ன செய்வது. இன்னும் கொஞ்சம் நேரம் இவர்கள் பொறுமையாக இருந்தால் அப்பா எழுந்துவிடுவார். தூங்கும் போது சத்தம் சின்னதாக கேட்டாலே அப்பாவுக்கு சரியான கோபம் வரும். இத்தனை சத்தம் கேட்டும் அப்பாவுக்கு கோபம் வரவில்லை. இவர்கள் எல்லாம் சொல்வது போல அப்பா எழுந்திருக்கவே போவதில்லையா. கொஞ்சம் அதிகமாக குடித்திருப்பார். தெளிந்ததும் அப்பா எழுந்துவிடுவார். மாமா நீயும் தானே அப்பா உடன் சேர்ந்து குடிப்ப. உனக்கு தெரியாதா. அவர் எழுந்துடுவார். வாங்க எல்லோரும் திரும்பி போவோம். யாருக்கும் நான் பேசுவது கேட்டதாகத் தெரியவில்லை. அப்பாவிற்கு தீ வைத்தோம். கைகள் நடுங்க மாமா என் கையைப் பிடித்தவாறே மேலே தீ வைக்கத் செய்தார். அப்பாவுக்கு தீ சுடாதா. திரும்பி பார்க்காமல் வா என என் தலையை தன் இடுப்போடு அணைத்தவாறே மாமா அங்கிருந்து அழைத்துச் சென்றார். திரும்பி பார்த்தால் என்ன நடக்கும் எனக் கேட்டதற்கு அப்பா கூடவே வந்துவிடுவாரு என மாமா பதில் சொன்னார். என்னைத் திரும்பி பார்க்க விடுங்க என கத்தணும் போல இருந்தது. மாமா முகத்தை அழுத்திய தனது கையைத் தளர்த்தவே இல்லை. நீர்மாலை எடுக்க போன பெண்கள் எல்லோரும் திரும்ப வந்த பிறகு யாரும் சொல்லி கொள்ளாமலே அங்கிருந்து சென்றனர். அப்பாவுக்கு கடன் நிறைய இருந்தது. ஒவ்வொரு முறையும் கடன் கொடுத்த வட்டிக்கடை மாமா வரும் போதெல்லாம் “அப்பா வீட்டில் இல்லை” என அம்மா சொல்லச் சொல்லுவாள். அந்த மாமா, “உங்க அப்பன குதிருக்குள்ள ஒளிச்சு வச்சுருக்காளா உங்க ஆத்தா” எனக் கேட்டு விட்டுட்டு செல்வார். அந்த மாமா தான் அப்பா தீ மூட்டப்படுவதைப் பார்க்கக் கூட நில்லாமல் அவசரமாக இன்னொரு வீட்டில் அதே பதிலை வாங்க கிளம்பி சென்று விட்டார். அவர் மீண்டும் வந்தால் “உண்மையாலுமே அப்பா வீட்டில் இல்லை” எனச் சொல்ல வேண்டும். அதன் பிறகு வீட்டில் நாங்கள் மட்டுமே இருந்தோம். நான், அம்மா, பாப்பா. அப்புறம் வீடும் அங்கு தான் இருந்தது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.