logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ஈரோடு சர்மிளா

சிறுகதை வரிசை எண் # 281


சொன்னால் தான் என்னவாம் ஈரோடு சர்மிளா. தனத்திற்கு அன்று கல்லூரி செல்லவே பிடிக்கவில்லை. தனத்திற்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஒரு சேரப் பாடாய்ப்படுத்தியது. அவளுடைய அப்பாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் வேறு அன்று. எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து கொண்டது. உடலளவிலும் மனதளவிலும் சோர்ந்து போன தனம் அம்மாவை அழைத்தாள். அம்மா... இன்று மட்டும் நான் லீவு எடுத்துக்கட்டுமா? அதற்கு உடனே அவள் தாய் சாந்தி "வேண்டாம் நானும் வேலைக்குப் போய் விடுவேன், உன்னுடைய ஆத்தாவும் ஐயாவும் உன் அப்பாவின் நினைவு தினம் என்பதால் கோவிலுக்கு சென்று வர கிளம்பி கொண்டிருக்கிறார்கள். வீட்டில் உன் துணைக்கு யாரும் இல்லை. அதனால் நீ எப்படியாவது சமாளித்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்று விடு"என்று வேண்டிக் கேட்டுக்கொண்டாள். அம்மாவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தனம் கல்லூரிக்குக் கிளம்பிவிடுகிறாள். இலவசப் பேருந்து பிடித்து கல்லூரி செல்வது என்பது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை. பேருந்துக்குள் காற்று கூட நுழைய முடியாதபடி கூட்டம் நிரம்பி வழிந்தது. தனம் தள்ளு முள்ளுக்குள் எப்படியோ பேருந்துக்குள் ஏறி விடுகிறாள் . அப்பா இறந்த மனச்சுமையோடு உடல் சோர்வையும் தாங்கிக் கொண்டு கூட்ட நெரிசலில் தத்தளிக்கிறாள். கையில் உள்ள பையைக் கொடுக்க அவள் தோழி மானுஜாவைத் தேடுகிறாள். அப்போது "தனம் ... தனம்..." என்று ஒரு குரல் கேட்கிறது. தனத்தின் வகுப்பில் படிக்கும் ஆனந்தன் பையை அவளிடத்திலிருந்து வாங்கிக் கொள்கிறான். அப்பொழுது தனம் "அப்பாடா..." என பெருமூச்சு விட்டபடியே ஒரு சின்ன நிம்மதியை அடைகிறாள். அவளுக்கு அடிவயிரும் இடுப்பும் கர்ப்பப்பை வாயும் சொல்லவொனாத வலியைத் தந்தது. காசு இருந்தாலாவது கல்லூரிப் பேருந்தில் பயணிக்கலாம். எப்போதும் ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டு போய் வரலாம். இந்த மாதிரியான நாட்களிலாவது உட்கார இடம் கிடைத்தால் பரவாயில்லை. எப்போதுமே நின்று கொண்டு தான் பயணம் செய்ய வேண்டி இருக்கு. தன் வாழ்வில் இந்த நிலை எப்பொழுது தான் மாறுமோ. நன்றாக படித்து எங்கேனும் ஒரு நல்ல வேலைக்குச் சென்று விட வேண்டும் . அதற்குப் பிறகாவது நிம்மதியாய் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வழியாக கல்லூரி வந்து விடுகிறது. திபு திபுவென இரண்டு பேருந்தில் வரும் கூட்டம் ஒரே பேருந்தில் வந்து இறங்குகிறார்கள். "ஆனந்த் என்னுடைய பையை கொடு" என்று கேட்பவளிடம் "நானும் இறங்கத் தானே போகிறேன். நீ கீழே இறங்கு நான் கொண்டு வருகிறேன்" என்கிறான் ஆனந்த். கேலியும் கிண்டலுமாய் பல மாணவர்கள் பேசி சிரித்துக்கொண்டு இவர்களைக் கடந்து போகிறார்கள். மானுஜா அவசர அவசரமாகத் தனத்திடம் வந்து "எனக்குக் கொஞ்சம் ரெக்கார்டு எழுத வேண்டி இருக்கு . அதனால் நான் முன்னால் செல்கிறேன் நீ மெதுவாக வா" என்று கூறிவிட்டு வேக வேகமாகக் கல்லூரிக்குள் செல்கிறாள். பையை அவளிடத்தில் கொடுத்துக்கொண்டே "ஏன் இன்னைக்கு இவ்வளவு டயர்டா இருக்கே" எனக் கேட்கிறான் . "இல்ல ... ஒன்னும் இல்ல..." என்று சொல்லுகிற போது கண்கள் நனைகிறது. அவனுக்குத் தெரியாமல் கண்களைத் துடைக்க முயலும் போது பார்த்து விடுகிறான். சரி மறைப்பதில் எந்த பயனும் இல்லை என்று நினைத்துக் கொண்டு ஆனந்திடம் சொல்கிறாள். இன்று எனது தந்தையின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் என்கிறாள். "ஓ.... சாரி" என்கிறான். "அது மட்டுமல்ல கொஞ்சம் உடல் நிலையும் சரியில்லை" என்கிறாள். கல்லூரிக்குள் சென்று சேர்வதற்குள் பலமுறை வலியால் முகத்தைச் சுழித்தபடி உடன் செல்கிறாள். அவளைப் புரிந்து கொண்ட ஆனந்த்" ரொம்ப டயர்டா இருக்கே கேன்டீன் போய் டீயாவது குடித்துவிட்டுப் போகலாம் வா" என்று அழைத்துச் செல்கிறான். இரண்டு டீயை வாங்கி வருகிறான். டீ உள்ளே செல்லச் செல்லப் புதுத்தெம்பு பரவுவதை உணர்கிறாள். அந்தக் காலைப் பொழுது ஒரு டீயால் அழகானதை உணர்த்தனர் . தனத்திற்கு உடலும் மனதும் ஒருவாறு லேசானது. இருவரும் பேசிக்கொண்டே வகுப்பறைக்குப் போய்ச் சேர்ந்தனர். கால அட்டவணையைப் பார்த்த தனத்திற்குப் பகீர் என்று இருந்தது. முதல் வகுப்பே அறிவியல் வகுப்பு. இன்று என்ன அறிவுரை சொல்லப் போகிறாரோ என்று நினைத்தபடி தன் அப்பாவையும் அந்த நேரத்திலே நினைத்துக் கொள்கிறாள். அப்பா தவறிய பிறகு குடும்பம் படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல அம்மாவின் கடுமையான பனியன் கம்பெனி வேலையில் தான் குடும்பம் நடக்கிறது. நன்றாகப் படித்து பெரிய வேலைக்குப் போய் அம்மாவை நல்லா வச்சுக்கணும் என்று நினைத்துக் கொண்டாள். அப்போது வகுப்பிற்குள் ஆசிரியர் வருவதை சரியாகக் கவனிக்காத தனத்தை முறைத்துக் கொண்டே வகுப்பிற்குள் நுழைந்தார் பேராசிரியர். மரியாதை கொடுக்கத் தெரியாத தலைமுறை என்று ஆரம்பித்தார். அப்பொழுது பவானி, மதுமிதா, செந்தில் மூவரும் எதையோ பேச பேராசிரியருக்கு வந்தது பார் கோபம் அவ்வளவுதான் பேராசிரியர் பெரும் ஆத்திரத்தோடு திட்ட ஆரம்பித்து விட்டார் . திட்டினார் திட்டினார் ஒரு மணி நேர வகுப்பு முக்கால் மணி நேரம் திட்டியே தீர்த்துவிட்டார். அமர வைத்துத் திட்டி இருந்தால் கூடப் பரவாயில்லை. அத்தனை பேரையும் நிற்க வைத்துவிட்டார் . ஏற்கனவே மனதாலும் உடலாலும் சோர்ந்து போயிருந்த தனத்திற்கு மயக்கம் வருவது போல் இருந்தது. அன்று அவளுக்கு கூடுதலான உதிரப்போக்கு வேறு இருந்தது. நிற்பதற்கு தெம்பில்லாமல் பேரசிரியரிடம் கழிவறை செல்கிறேன் என்று சொல்லவும் முடியாமல் தவிக்கிறாள். எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேராசிரியரிடம் கழிவறை செல்ல வேண்டும் என்கிறாள். அப்போது திட்டு மேலும் அதிகமானது. "இங்க ஒருத்தி தொண்டை தண்ணி வத்த கத்திக்கொண்டு இருக்கேன் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாமல் கேட்கிறாயே யாருக்கெல்லாம் எங்கே போகனுமோ அங்கே போங்க" என்று எரிந்து விழுந்தார். கட்டி கட்டியாக உதிரம் வெளியே வரும் உணர்வு ஏற்பட்டதால் தனம் அவசர அவசரமாக கழிவறையை நோக்கி ஓடினாள். சென்றவளுக்கு அதிர்ச்சி. பஞ்சு நனைந்து , உள்ளாடை முழுவதும் நனைந்து கொஞ்சம் அவள் போட்டிருக்கும் உடையிலும் உதிரம் பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போகிறாள். நல்ல வேலை பையில் எப்போதும் ஒரு உள்ளாடை இருப்பதால் சிறு நிம்மதி அடைகிறாள் கழிவறை சென்ற தனத்தை வெகு நேரமாகியும் காணாததால் இவளுடைய தோழி மானுஜா தனா....தனா... என்று அழைத்தபடி கழிவறைக்கு வருகிறாள். கழிவறைக்குள் இருந்த தனம் மானுஜாவிடம் நான் பீரியட்ஸ் உள்ளாடை எல்லாம் நனைந்து விட்டது . என் பையில் ஒரு காகிதத்தில் சுற்றி ஒரு பஞ்சும் ஒரு உள்ளாடையும் இருக்கு எடுத்துக்கிட்டு வந்து தரையா என்றாள் மெதுவாக. ஓ… அதுக்கு என்ன இரு இப்பவே போய் எடுத்துட்டு வந்துறேன் என்று கூறி விரைந்து சென்று எடுத்து வந்தாள் மானுஜா. தனத்திற்கு உள்ளாடை மட்டுமல்லாமல் சுடிதார் பேண்டிலும் கொஞ்சம் நனைந்து விட்டதால் ஒரே அருவருப்பாக உணர்கிறாள் . உடனே உடை முழுவதையும் மாற்றிவிட்டால் தேவலை என்று தோன்றுகிறது. ஆனால் இப்படியே வீட்டிற்குச் செல்ல முடியாது. என்ன செய்வது என்று யோசனையில் இருக்கும் போது வெளியே இருந்து மானுஜா ஏண்டி என்ன ஆச்சு உடையில் கரை பட்டு விட்டதா ? ஏதாவது சொன்னா தானே தெரியும் என்றாள். அதற்கு தனம் ஆமாம் என்றால் இரு இரு முகம் கழுவ நான் ஒரு குட்டி சோப்பு வைத்திருக்கிறேன் அதை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறாள். தனம் கழிவறைக்குள்ளேயே உடையில் பட்ட கரையை கழுவிக் கொள்கிறாள் . பிறகு இருவரும் வெயிலில் நடந்து அது கொஞ்சம் காய்வதற்காகக் காத்திருக்கிறார்கள். சுத்தம் செய்து உள்ளாடையை மாற்றிய பிறகு தான் தனம் கொஞ்சம் நிம்மதி அடைகிறாள். ஆனாலும் எத்தனை முறை கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவினாலும் ரத்த வாடை அடிப்பது போலவே உணர்கிறாள். எப்படியோ சமாளித்த தனம் மதிய உணவு இடைவேளையின் போது மானுஜாவிடம் எனக்கு ஏனோ இந்த முறை அதிகமாக உதிரப்போக்கு இருக்கு மாற்ற பஞ்சு வேண்டுமே என்ன செய்வது என்று கேட்கிறாள், பல பேரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. இவர்கள் ரகசியமாய் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை ஊகித்த ஆனந்த் இவர்களிடம் வந்து "என்ன ஆச்சு" என்று கேட்கிறான். அவனிடம் சொன்னால் கல்லூரிக்கு கொஞ்சம் தள்ளி இருக்கும் மருந்துக் கடைக்குச் சென்று வாங்கி வந்து விடுவான் . ஆனால் சொல்லணுமே யார் சொல்வது அப்படி சொன்னால் தான் என்னவாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ஆனந்தாகவே வந்து ஏன் ஏதாவது நான் உங்களுக்கு உதவ வேண்டுமா என்கிறான். தனம் மிகவும் கூச்சப்படுகிறாள் . மானுஜா சொல்ல வாய் எடுக்கும் போது வலுக்கட்டாயமாகத் தனம் தடுக்கிறாள். தனத்திடம் மானுஜா பிரண்ட்ஷிப்புக்குள் இதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை என்று சொல்கிறாள். அப்பொழுது சூழ்நிலையை உணர்ந்த ஆனந்த் ஏன் நான் ஏதாவது உதவி செய்யட்டுமா. மாத்திரை ஏதாவது வேண்டுமா இல்லை நாப்கின் வாங்கி வர வேண்டுமா என்று பட்டென்று உடைத்து விடுகிறான். மிகவும் சங்கடப்பட்ட தனத்தைப் பார்த்துக் கொண்டே மானுஜா ஆமாம் ஆனந்த் ஒரு பாக்கெட் வாங்கி வர முடியுமா என்கிறாள். இவ்வளவுதானா… இதைக் கேட்க இவ்வளவு தயக்கமா… எங்கள் வீட்டில் எங்கள் அம்மாவுக்கும் எங்க அக்காவுக்கும் சமயத்தில் நான்தான் வாங்கி வருவேன் . இதற்குப் போய்யா இவ்வளவு தயக்கம் என்று அக்கறையோடு பேசிய ஆனந்த் நண்பன் வண்டியை எடுத்துக்கொண்டு போய் உடனே வாங்கி வந்து கொடுக்கிறான். ரகசியத்தை போல் நினைத்தேன்.‌ ஆனந்த் இப்படி பட்டென்று பேசி அதை ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டானே. பெரிதாய் ரகசியமாய் யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்துக் ஒரு விசயத்தை இவ்வளவு லாவகமாய் கையாண்டு விட்டானே. அந்த நிமிடம் அவளின் மனது பறவையின் இறகைப் போல் மெல்லியதாய் இருந்தது. அன்று மாலை வீடு திரும்புகையில் தனம்,மானுஜா,ஆனந்த் மூவரும் எதையெதையோ பேசிச் சிரித்தபடி பேருந்துக்காகக் காத்திருந்தனர் . அப்போது கட்டட வேலைக்குச் சென்று வந்த ஒரு அக்காவின் பின்புறமெல்லாம் கரையாகியிருந்தது. அதை மறைக்கவோ மூடவோ முயலாமல் வேக வேகமாக வீடு திரும்பும் அவசரத்தில் இருந்தாள் அந்த அக்கா . தனம் அவளையும் அறியாமல் அனிச்சையாக ஓடிச்சென்று அவளிடம் உங்கள் பின்புறம் என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே "அதுவா இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் சோத்துக்கு என்ன செய்வது. அது அவ்வளவு பெரிய விஷயமும் இல்லை. அது என்ன ஊர் உலகத்துல இல்லாம எனக்கு மட்டுமா இந்த கஷ்டம்" என்று பேசியபடி வீடு செல்ல வேகம் எடுத்தால் அந்த பாமரச்சி. அப்பொழுது தனத்திற்கு ஏனோ சுருக்கென்று இருந்தது. படிப்பறிவே இல்லாத அந்த அக்காவிற்கு இருக்கும் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் கூட எனக்கில்லையே என்று மனதிற்குள் ஆதங்கப்படுகிறாள். வாழ்வின் யதார்த்தத்தை உணர்ந்துள்ள அந்த அக்கா எங்கே! படித்த நான் எங்கே ! சகஜமாய் பேசும் ஆனந்த் எங்கே! நாம் ஏன் இதை இப்படி மறைக்க முயல வேண்டும். சிறுநீர் கழிப்பதைப் போல மற்ற உடல் உபாதைகளைக் கழிப்பதைப் போலத் தானே இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வெளியில் சொல்ல ஏன் நாம் தயங்க வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கி இருக்கும்போது பஸ்ஸின் ஹாரன் சத்தம் அவள் சிந்தனையைக் கலைத்து அவர்களைத் தூக்கிச்செல்ல முற்பட்டது. தனம் அந்த நேரம் புது உற்சாகத்தோடு எதையோ கடந்து விட்டதாக உணர்ந்து புதுப்பொலிவுடன் பேருந்தின் படிக்கட்டுகளில் ஏறினாள். இக்கதை எனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் வேறு எந்த இதழிலும் மின்னிதழிலும் வெளிவரவில்லை என்றும் இது பிற மொழிபெயர்ப்போ அல்லது கதைத் தழுவலோ இல்லை என்றும் தங்களின் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறேன் என்றும் உறுதி அளிக்கிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள ஈரோடு சர்மிளா முகவரி முனைவர் மு.சர்மிளா தேவி, 367, பாரதி இல்லம், விஜயமங்கலம், ஈரோடு - 63 8056 அ.பே.எண் : 9894410105

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.