கீதா மதிவாணன்
சிறுகதை வரிசை எண்
# 279
கனகாம்பர வாசம்
நீலவேணி தோள் பை மாட்டியிருந்த வலது கையாலும் சாப்பாட்டுப் பையைப் பிடித்திருந்த இடது கையாலும் படிக்கட்டின் கம்பிகளைப் பிடித்து கனக்கும் வயிற்றுடன் மெதுவாக பஸ்ஸை விட்டு இறங்கினாள். சாப்பாட்டுப் பையைக் கையில் பிடித்தபடி இறங்கச் சற்று சிரமமாக இருந்தது. “தல போற காரியமா இருந்தாக்கூட பூக்கொல்லை ஸ்டாப்பில் எறங்கவே கூடாது” என்று கருணாவால் போடப்பட்டிருந்த தடையுத்தரவை மீறி, இன்று பூக்கொல்லை ஸ்டாப்பில் இறங்கியிருந்தாள்.
பூக்கொல்லையை ஒட்டிய மண் சாலையில் நீலவேணி நடக்க ஆரம்பித்தாள். பத்திருபது அடி எடுத்து வைப்பதற்குள்ளாகவே மூச்சு வாங்கியது. நெஞ்சை அடைப்பது போல் இருந்தது. இன்று காலையில் முதல் பீரியடில் இருந்தே நீலவேணிக்கு உடம்பு சரியாக இல்லை. குமட்டலாகவே இருந்தது. நாலாவது மாசத்துடன் வாந்தி நின்று போயிருந்தது. இப்போது மீண்டும் அந்த உணர்வு தலை தூக்கியதால் எரிச்சலாக இருந்தது. குமட்டும்போதெல்லாம் எக்கி எக்கி, அடிவயிற்றுச் சதையைப் பிடித்து இழுத்து வலித்தது. வயிறு நெஞ்சுக்கு ஏறி நிற்பது போல மூச்சுவிட சிரமமாக இருந்தது. இன்னும் இரண்டு மாதத்தில் பேறுகால விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு முன்பு முடிக்க வேண்டிய பாடங்களை முடித்து ஓரளவுக்காவது பிள்ளைகளைத் தேர்வுக்குத் தயார் செய்துவிட்டுப் போகவேண்டும் என்று நினைத்திருந்தாள். ஓரளவுக்கு மேல் அவளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அரை நாள் லீவு போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டாள். சாப்பிடவும் இல்லை. வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் படுத்தால் போதும் என்றிருந்தது.
நீலவேணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புக்கு ஆசிரியராய் இருக்கிறாள். அதே ஊரில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கருணா உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறான். தினமும் டூவீலரில் அவனோடுதான் வருவாள். மாலையில் பள்ளி விட்டதும் அவனே வந்து அழைத்துச் செல்வான். ஆனால் பாதி நாள் விளையாட்டுப் போட்டிகள் நிமித்தம் மாணவர்களை அழைத்துக்கொண்டு கருணா வெளியூர் சென்றுவிடுவான். நீலவேணி பஸ் பிடித்து வருவாள். இன்றும் கருணா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக மாணவர்களை அழைத்துக்கொண்டு வெளியூர் போயிருக்கிறான். வெற்றி தோல்வியைப் பொறுத்துதான் ஊர் திரும்பும் நாள் தெரியும். அவன் இருந்தாலாவது வந்து அழைத்துப் போவான். இப்போது இந்த உடம்புடன் பஸ் ஏறிப் போக வேண்டும். போதாக்குறைக்கு பஸ்ஸை விட்டு இறங்கி ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடக்கவேண்டும். நினைக்கும்போதே அயற்சியாக இருந்தது. எனவேதான் கருணாவின் எச்சரிக்கையையும் மீறி பூக்கொல்லையில் இறங்கிவிட்டாள்.
அசட்டுத் துணிச்சலில் இறங்கிவிட்டாளே தவிர தொடர்ந்து நடக்கத் தயக்கமாக இருந்தது. கருணா சொன்னது போல யாராவது ஏதாவது பிரச்சனை பண்ணினால்? உச்சிவெயில் கொளுத்தியது. ஊரே மதியத் தூகத்தில் ஆழ்ந்திருந்தது. தெருவில் ஈ காக்கையைக் காணோம். நீலவேணி வழியும் வியர்வையை முந்தானைத் தலைப்பால் துடைத்தபடி மெதுவாக நடந்தாள். இரண்டு பக்கத்திலும் இருந்த கனகாம்பரத் தோட்டத்திலிருந்து கனகாம்பர வாசம் காற்றில் மிதந்து வந்து அவளை நெகிழ்த்தியது.
நீலவேணியின் தங்கை சவிதாவுக்கும் நீலவேணிக்கும் கனகாம்பரத்தை முன்னிட்டு நிறைய வாக்குவாதம் நடக்கும். நீலவேணிக்கு கனகாம்பரம்தான் பிடித்தமான பூ. மற்றெல்லாப் பூக்களை விடவும் அதன் மேல் அப்படியொரு ஈர்ப்பு. வெளிர் ஆரஞ்சு, அடர் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள், டில்லி கனகாம்பரம் என்று கனகாம்பரத்தின் அத்தனை வகையையும் ஆராதிப்பாள். ‘தலையில எவ்வளவு வச்சிருந்தாலும் இருக்குறதே தெரியாது, கனக்கவும் கனக்காது, தலைவலி வராது. நாள் முழுக்க அப்பிடியே இருக்கும். வாடவே வாடாது. மனசுக்கு இதமா மெல்லிசான வாசம் வீசும்.’ என்றெல்லாம் சிலாகிப்பாள். அந்தக் கடைசி பாய்ண்ட்டை மட்டும் சவீதாவால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. நக்கலோடு ‘அதெல்லாம் ஒரு பூவாக்கா?” என்பாள். பூக்களிலேயே சாபத்துக்கு ஆளானது கனகாம்பரம்தான் என்பாள். துளியும் வாசமே இல்லாத அந்தப் பூ தன் நிறத்தாலும் வடிவத்தாலும்தான் எல்லாரையும் கட்டிப்போடுகிறது. அதற்குப் போய் வாசமிருக்கிறது என்கிறாயே என்று சிரிப்பாள். சவீதா என்ன சொன்னாலும் நீலவேணி தன் கருத்தில் பிடிவாதமாக இருப்பாள். கை நிறைய கனகாம்பரத்தைப் பறித்து வந்து தங்கையின் முகத்துக்கு அருகில் நீட்டி “நல்லா மோந்து பாரு. எப்படி வாசம் அடிக்குதுனு” என்பாள். “போடி லூஸு” என்றபடி சவீதா அவள் கையைத் தட்டிவிட்டுப் போவாள்.
திருமணம் ஆகி புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தபோது, இனி தன் வாழ்க்கை இந்த வீட்டில்தான் தொடரப்போகிறது என்ற எண்ணத்தைத் தவிர, நீலவேணிக்குப் பெரிதாக அந்த வீட்டின் மேல் எந்தப் பிடிப்பும் உண்டாகவில்லை. மறுநாள் காலையில் வாசல் பக்கம் வந்தவளின் கண்ணில் பட்ட கனகாம்பரச் செடிகளைப் பார்த்த கணமே அவள் பூரித்துப் போனாள். இது இனி என் வீடு என்ற சிறு பெருமிதம் கூட வந்துவிட்டது. பத்துப் பதினைந்து செடிகள்தான் என்றாலும் எக்கச்சக்கமானப் பூக்கள். இன்றைய நேற்றையப் பூக்கள் காம்பின் பிடியில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்க, முந்தாநாள் பூத்தவை காம்பின் பிடி நழுவும் தம் கடைசிக் கணங்களில் காற்றோடு உறவாடிக் கொண்டிருந்தன. அதற்கும் முந்தைய நாட்களில் மலர்ந்தவை பறிப்பாரற்று உதிர்ந்து அங்குமிங்கும் அலைந்து கால்களில் மிதிபட்டுக் கொண்டிருந்தன. இப்படி கேட்பாரற்றுக் கிடக்கும் கனகாம்பரப் பூக்களைப் பார்த்து நீலவேணி பெருமூச்சு விட்டாள். சட்டென்று முந்தானையை விரித்து பூவைப் பறித்து மடியில் கட்ட ஆரம்பித்துவிட்டாள். விடிந்தும் விடியாமல் புது மருமகளைக் காணோமே என்று தேடிக்கொண்டு வாசலுக்கு வந்த மாமியார் நீலவேணியைப் பார்த்து அசந்துபோய் மோவாயில் கை வைத்தாள்.
“ஏம்மா நீலா, ஒனக்கு பூவுன்னா அவ்வளவு இஸ்டமா?”
“கனகாம்பரம்னா உயிர் அத்தே.”
அவ்வளவுதான். பறிப்பாரின்றி, பராமரிப்பின்றிக் கிடந்த கனகாம்பரச் செடிகளுக்கு அடித்தது யோகம். வேலி அடைக்கப்பட்டு, எரு வைக்கப்பட்டு, பாத்தி கட்டப்பட்டு, தவறாமல் தண்ணீர் ஊற்றப்பட்டு நித்தமும் ஒரு முழம் அளவுக்காவது பூ கட்டி, நீலவேணி சூட்டி மகிழ வழிசெய்யப்பட்டது.
நீலவேணிக்குத் தொண்டை வறண்டு கிடந்தது. தாகம் எடுத்தது. சாப்பாட்டுப் பையைத் திறந்து பார்த்தபோதுதான் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் சுத்தமாக இல்லை என்பது தெரிந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது பாட்டிலை நிரப்பி வந்திருக்கவேண்டும். அவசரத்தில் மறந்துவிட்டது. “சரி, பத்து நிமிஷம் தானே, பொடி நடையாய் நடந்து போய்விடலாம். வழியில் யாரையும் பார்க்கக் கூடாது, யார் கூப்பிட்டாலும் நிற்கக் கூடாது. கடவுளே, எந்தப் பிரச்சனையும் வராமல் நல்லபடியா வீட்டுக்குப் போயிடணும்”
மனம்தான் சொன்னதே ஒழிய கால்கள் ஒத்துழைக்கவில்லை. ‘கடவுளே, எப்படியாவது என்னை வீடு சேர்த்திடு.’
நீலவேணி பஸ்ஸில் போக நேரும் ஒவ்வொரு முறையும் கருணா சொல்லும் ஒரு விஷயம் அசரீரி போல காதில் ஒலித்தது. “நீலா, ஆனந்தா தியேட்டர்ல எறங்கு இல்லன்னா அரசமரத்தடிப் புள்ளையாருல எறங்கு. சீக்கிரமா வூட்டுக்குப் போயிடலாம்னு நெனச்சி பூக்கொல்லயில எறங்கிடாத. அப்பறம் தேவையில்லாத பிரச்சனை வந்துடும். புரியிதா?” கேட்கும்போதே பிரச்சனைக்குத் தயாராக இருப்பவனைப் போல குரலில் கடுமை தொணிக்கும்.
ஆரம்பத்தில் நீலவேணிக்கு எதுவும் புரியவில்லை. பூக்கொல்லை ஸ்டாப்பில் இறங்கினால் பத்தே பத்து நிமிட நடையில் வீட்டை அடைந்துவிடலாம். ஆனால் ஆனந்தா தியேட்டரிலோ, அரசமரத்தடிப் பிள்ளையாரிலோ இறங்கினால் வீடு போய்ச் சேர அரை மணி நேரமாவது நடக்க வேண்டியிருக்கும்.
“என்ன பிரச்சனை வரும்னு சொல்றீங்க?”
“இங்க பாரு, பூக்காரவங்க வீட்டுக்கும் நமக்கும் எங்க தாத்தா காலத்துலேர்ந்தே பேச்சு வார்த்தை கிடையாது. நாங்களும் அந்தப் பக்கம் தலை வச்சிப் படுக்கிறதில்ல. அவுங்களும் நம்மகிட்ட வச்சிக்கிறதில்ல. இப்போ நீ அந்தப் பக்கம் போறேன்னு வச்சிக்க, ஏதாவது நக்கல் நையாண்டி பண்ணுவாங்க. ரோஷம் கெட்டுப் போய் எதுக்கு எங்க தெருப்பக்கம் வரீங்கன்னு கேட்டா மூஞ்சிய எங்க கொண்டுபோய் வச்சிக்கிறது?”
“ஏங்க, உங்க தாத்தா காலத்துல தான பிரச்சனை? இப்ப என்ன? யாரு அப்படி கேக்கப் போறா? அது எல்லாரும் பொழங்குற பாதைதானே? அவங்களுக்கு மட்டும் சொந்தம் இல்லையே. நாம பாட்டுக்குப் போவப்போறோம் வரப்போறோம். அவங்க என்ன சொன்னா நமக்கு என்ன?”
“காலையிலேயே கேள்வி மேல கேள்வி கேட்டு கடுப்பேத்தாத நீலா, சொல்றதைக் கேளு. அதிகப் பிரசங்கித்தனமா நடந்துக்காத. ஆத்தாவுக்குத் தெரிஞ்சா, மனசு ஒடைஞ்சிபோயிடும். இத்தனை வருஷமா வைராக்கியமா இருந்துடுச்சி. இப்ப சாவப்போற காலத்துல எதுக்கு அதைக் கஷ்டப்படுத்தணும்?”
கருணா ஆத்தா செல்லம். ஆத்தாவுக்கு ஒன்று என்றால் துடித்துவிடுவான். ஆத்தாவுக்கு வயது எண்பதுக்கு மேல் இருக்கும். கொஞ்சம் கூன் விழுந்தது போல நடந்தாலும் நடையில் வேகம் இருந்தது. ஆத்தா விசுக் விசுக்கென்று வீட்டுக்கும் கொல்லைக்கும் தோட்டத்துக்கும் தொழுவத்துக்கும் நடந்தபடியே இருக்கும். காலையில் விறகடுப்பு பத்த வைத்து எல்லாரும் குளிப்பதற்கு வெந்நீர் போடுவதும், தோட்டத்திலிருந்து அன்றாட சமையலுக்கு காய்கறி பறித்துவருவதும், கீரை ஆய்ந்து கொடுப்பதும் ஆத்தாவுடைய வேலை. இப்போது நீலவேணிக்காக கனகாம்பரம் பறித்துக் கட்டித் தருவதும் ஆத்தாவின் வேலைகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஆத்தா பூக்கட்டும் அழகே அழகுதான். கனகாம்பரத்தை அழகாக நெருக்கமாக பந்துபோல கட்டி பேத்தியின் தலையில் நான்கைந்து ஹேர்பின் போட்டு கீழே விழுந்துவிடாமல் கவனமாக வைத்துவிடும். அதனாலேயே நீலவேணிக்கு ஆத்தாவை மிகவும் பிடித்துவிட்டது. ஆத்தாவுக்கு மனசு ஒடைஞ்சிபோயிடும் என்று சொன்னபிறகும் எப்படி அதை மீறுவது?
ஒரு நாள் மாமியாரிடம் பேச்சுவாக்கில் கேட்டாள், “ஏன் அத்தே, நமக்கும் அந்தப் பூக்கொல்லைக்காரவுங்களுக்கும் என்ன பிரச்சினை?”
அத்தை சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மாமியார் பக்கத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ரகசியம் போலச் சொன்னாள்.
“எல்லாம் அங்காளி பங்காளி சண்டைதான், தண்ணியைத் தெளிச்சா அணைஞ்சு போற சுள்ளி நெருப்புக்கு தேவையில்லாம ரெண்டு பக்கமும் இன்னமும் எண்ணெய வார்த்துட்டு இருக்குதுங்க.”
“எதுனால சண்டை?”
“என்னத்த சொல்ல? கருணாவோட அப்பாவுக்கு, அதான் உங்க மாமனாருக்குப் பேசி வச்சிருந்த பொண்ணை பூக்கொல்லக்காரருக்குக் கட்டி வச்சிடுச்சாம் அவங்க அம்மா. அதுல ஏகப்பட்ட பஞ்சாயத்தாயி அடிதடி போலிஸ் கேஸ்னு போயிடுச்சாம். செத்தாலும் வாழ்ந்தாலும் பேச்சில்லனு ஆகிப்போச்சாம். அதுல இருந்து எப்பவும் ஒருத்தருக்கொருத்தர் முறைச்சிகிட்டே திரியுதுங்க தற்செயலா அந்தக் குடும்பத்தப் பத்தி ஏதாவது பேச்சு வந்துட்டா போதும், நம்ம வீட்டு ஆத்தா சாமியாட ஆரம்பிச்சிடும். பூக்கொல்லக்காரரோட பொண்டாட்டிய எப்பவாவது கடை கண்ணியில பார்ப்பேன். அதுவும் சிரிக்கும். நானும் சிரிப்பேன். ஆனா அம்மாக்கெழவி ம்ஹூம்.. நேருக்கு நேர் பாத்தா கூட சடக்குனு மூஞ்சியத் திருப்பிட்டுப் போவும். இத்தன வருஷம் ஆயிடுச்சி. ஒங்க மாமாவும் போய் சேர்ந்துட்டாரு. ஆனா ரெண்டு குடும்பத்துக் கெழவிங்களும் இன்னமும் பழைய பகையை மனசுல வச்சிகிட்டு அட்டகாசம் பண்ணுதுங்க.”
“அத்தே, பூக்கொல்லக்காரரோட பொண்டாட்டி எப்படி? உங்கள விட ரொம்ப அழகியோ?” நீலவேணி கண்ணைச் சிமிட்டிக் கேட்டாள்.
“ஏன் கேக்குறே?”
“இல்ல... அவங்களை முன்னிட்டுதானே ரெண்டு குடும்பத்துக்கும் பிரச்சனை ஆரம்பிச்சிது. அதான் கேட்டேன்.”
“அழகெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல நீலா. குடும்ப கௌரவம் போயிடுச்சாம். அதுங்களை எல்லாம் இனிமே திருத்தமுடியாது. சரி, அடுத்த தலைமுறையாவது சேர்ந்து ஒத்துமையா இருக்கும்னு பார்த்தா... இந்த கருணாவும் ஆத்தாவுக்கு ஜால்ரா போட்டுட்டு இருக்கான்.”
பிள்ளை உண்டாகிற வரை நீலவேணிக்கு நடை ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. வயிற்றில் பாரம் கூடக் கூட நடப்பது சிரமமாக இருந்தது. அதுவும் நாளெல்லாம் வகுப்பில் நின்றுகொண்டே பாடம் எடுத்துவிட்டு, எப்படா வீட்டுக்கு வந்து அக்கடான்னு உட்காரலாம் என்று நினைக்கும்போது கையில் ஒரு பையும் தோளில் ஒரு பையுமாக புடவை கசகசக்க, தொடையெல்லாம் வேர்வை நசநசக்க தேவையில்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டு வரவேண்டியிருக்கிறதே என்று ஆத்திரம் ஆத்திரமாக வரும்.
நீலவேணிக்கு இது ஏழாம் மாசம். இந்த மாசத்திலேயே ஒரு நல்ல நாள் பார்த்து வளைகாப்பு போட்டு அழைத்துச் செல்ல அம்மா உத்தேசித்திருந்தாள். பிள்ளைகளுக்கு தேர்வு காலம் நெருங்குவதால் ஒன்பதாம் மாதம் போட்டுக் கொள்ளலாம் என்று நீலவேணி கறாராகச் சொல்லிவிட்டாள். நீலவேணியின் கோரிக்கை புகுந்த வீட்டாரால் உடனடியாக ஏற்கப்பட்டுவிட்டது. அம்மாதான் கொஞ்சம் பிணங்கினாள்.
நீலவேணிக்கு எங்கேயாவது மரத்தடியில் கொஞ்ச நேரம் உட்காரலாமா என்று இருந்தது. காய்ந்து போன தொண்டைக்கு கொஞ்சமே கொஞ்சம் தண்ணீர் விட்டால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் இந்த அத்துவானக் காட்டில் தண்ணீருக்கு எங்கே போவது? பூக்கார வீட்டைத் தவிர அங்கு வேறு வீடுகளே இல்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நெடுக பூக்கொல்லைதான் இருந்தது. பூக்கொல்லை முடிந்த பிறகுதான் ஊர் ஆரம்பிக்கும். அங்கே போனால் யார் வீட்டிலாவது தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம். அதுவரை தாங்குமா? பேசாமல் மான ரோஷம் பார்க்காமல் இவங்க வீட்டிலேயே கேட்டு வாங்கிக் குடிச்சிடலாமா? இன்னார் வீட்டு மருமகள்னு சொல்லாமல்? சொல்லாவிட்டாலும் எப்படி தெரியாமல் போகும்? ஒரே ஊரில் இருக்கிறாள், அதுவும் டீச்சராக வேலை பார்க்கிறாள். எப்படி தெரியாமல் இருக்கும்?
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்.. உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்.
பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்குச் சொல்லித் தந்ததெல்லாம் நினைவுக்கு வந்து படுத்தின. குழந்தைகளுக்கு முன்மாதிரியாய் இருக்கவேண்டிய ஆசிரியரே அதை மீறலாமா?
ஔவை அதை மட்டுமா பாடினாள்? பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்று பாடியவளும் அவள்தானே? தாகத்துக்கும் அது பொருந்துமே.
கோந்து போட்டது போல மேலன்னத்தோடு ஒட்டிக் கிடக்கும் நாக்கை ஈரப்படுத்த, வியர்வையில் ஊறி கரிப்பும் எரிச்சலுமாய்த் தகிக்கும் உதடுகளைக் குளிர்விக்க, சொக்கும் கண்களின் சோர்வு நீக்க...
ஒரு சொம்பு தண்ணீர். வேண்டாம் வேண்டாம். ஒரே ஒரு டம்ளர் போதும். கொடுப்பார்களா? பகைவீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்தது தெரிந்தால் கருணா என்ன சொல்வான்? ஏன் அந்த வீட்டுப் பக்கம் போனே என்று திட்ட மாட்டானா? எங்களை அவமானப்படுத்துறதுக்காகவே அந்த ஸ்டாப்புல எறங்குனியான்னு ஆவேசப்பட மாட்டானா? ஆத்தா என்ன சொல்லும்? அதிர்ச்சியில உயிரை விட்டுட்டா? ஐயோ அந்தப் பாவத்துக்கு நான் ஆளாயிடக் கூடாதே..
நீலவேணி என்னென்னவோ யோசித்தபடி நடந்தாள். சோதனை போல சரியாக பூக்கார வீட்டு வாசலின் முன்பு தலை கிறுகிறுவெனச் சுற்றி மெல்லச் சரிந்தாள்.
“ஆத்தாடீ... யாரோ புள்ளதாச்சி... மயக்கம் போட்டு வுழுந்திடுச்சி பாரு”
வீட்டுக்குள்ளிருந்து யாரோ பதறியபடி ஓடிவந்தார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்து, குடிக்கக் கொடுத்து தூக்கி வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்து விசிறினார்கள். மோர் கொடுத்தார்கள். கொஞ்சம் ஆசுவாசமானதும் பூக்காரர் கேட்டார், “ஏம்மா, நீ கருணா பொண்டாட்டிதான? பக்கத்தூர்ல டீச்சரா வேலை பார்க்குறியே, நீதான அது?”
“ம்” தலையைக் குனிந்தபடி சொன்னவள் மெல்ல எழ முயன்றாள்.
“வீட்டுக்குப் போயிடுவியாம்மா?” அவர் கேட்டார்.
“இன்னும் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வெயில் தணிஞ்சி போயேம்மா” அவர் மனைவி சொன்னாள்.
“இல்ல... இப்ப சரியாயிடுச்சி. நான் கெளம்புறேன்.”
பூக்கார ஆத்தா பேரனைப் பார்த்துச் சொன்னது, “பரமு, இந்தப் புள்ளைய வண்டியில கொண்டுபோய் வீட்டுல பத்திரமா எறக்கி வுட்டுட்டு வா”
“இல்ல... வேணாம்”
“ஏம்மா, ஒங்க ஆத்தா ஏதாவது சொல்லும்னு பயப்படுறியா? அதெல்லாம் ஒன்னும் சொல்லாது. ஆத்திர அவசரத்துக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசை பண்ணலன்னா அப்புறம் என்னா மனுஷ ஜென்மம்?” பூக்கார ஆத்தா கேட்டதும் நீலவேணியின் வயிற்றுச் சிசு உள்ளே துள்ளியது.
நீலவேணி மறுக்க மறுக்க பரமுவின் டூவீலரில் ஏற்றப்பட்டாள். “பரமு ஒன் கொழுந்தன்தான். வெக்கப்படாம உக்காரு. கெட்டியமா பிடிச்சிக்கோ.” ஆத்தா சொன்னது.
நீலவேணி வீட்டு வாசலில் பரமுவின் வண்டியில் போய் இறங்கியபோது யார் கண்ணில் படக்கூடாது என்று நினைத்தாளோ அவர் கண்ணில்தான் பட்டாள். ஆத்தாதான் முதல் ஆளாய் அவளைப் பார்த்தது.
நீலவேணி தயங்கித் தயங்கி நடந்ததைச் சொன்னாள். அத்தை ஓடிவந்து நீலவேணியிடம் எங்காவது அடிபட்டிருக்கிறதா என்று விசாரித்தாள்.
ஆத்தா கண்கள் கலங்கியிருந்தது. தழுதழுத்தக் குரலில், “ஏய்யா வாசல்லயே நிக்கிற. உள்ள வா. நீயும் எனக்குப் பேரன்தான்” என்றது.
“என் பேத்திய அப்படியே அம்போனு தெருவுல விடாம இருந்தீங்களே, சாமி” கையெடுத்துக் கும்பிட்டது.
“அதெப்படி ஆத்தா விடுவோம்?” பரமு கேட்டான்.
“அதானே? அதெப்படி விட முடியும்? ஆத்திர அவசரத்துக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசை பண்ணலன்னா அப்புறம் என்னா மனுஷ ஜென்மம்?” ஆத்தா கணீரென்று சொன்னதைக் கேட்டு நீலவேணியின் வயிற்றுச் சிசு மறுபடியும் துள்ளியது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்