Esther Rani U
சிறுகதை வரிசை எண்
# 278
சமம்
கௌரி ஓடிக் கொண்டிருந்தாள். தோல்வி வெற்றி எது நேரும் என்று அறியாத ஓட்டம். காதில் விட்டத்து மின்விசிறி சுழலும் சத்தம் முச்சிரைப்போடுக் கேட்டது.அவள் ஓடினாள்.ஒரு பிறவிக்கான மொத்த ஓட்டம்.துணைக்கு யாருமற்ற ஓட்டம்.ஆறுக்கு மூணுக் கட்டிலில் தன் 250 சதுர அடி உடலைக் கட்டி வைத்து இருந்தது போலிருந்தது.இழுத்தபடி ஓட முடியவில்லை.
கண் திறந்தாள். இரவா இல்லை விடிந்துவிட்டதா என்றுத் தெரியாதவளாய் கிடந்தாள். இந்த மாதத்தில் இது நான்காவது முறை. அலுவலகத்தில் இல்லை யாரையாவது பார்க்க சென்று காத்திருக்கும் நேரங்களில் நாற்காலியிலேயே தூங்கிப் போய் விடுவதும் இப்போது எல்லாம் அவளுக்கு வழக்கமாக இருக்கிறது. ரொம்ப டயர்டா இருக்கீங்களா சரியா தூங்குறது இல்லையா என்ற கேள்விக்கு எனக்கு வயசு ஆகுது இல்லையா என்று பதில் சொல்லி முடித்து விடுகிறாள். யாரிடமும் எதையும் நம்பி அவளால் சொல்லக்கூட முடியவில்லை. படுக்கை விரிப்பும் அவளின் இரவு உடையும் நனைந்திருந்தது. படுக்கையறையோடு இணைந்திருந்தக் குளியலறைக்கு சென்று தண்ணீரை முகத்தின் மேல் அறைந்து கொண்டாள்.
இதற்கு மேல் தூக்கம் வரப்போவதில்லை. மேலே மேலே வந்து விழப் போகிற எண்ணங்களை கட்டுப்படுத்துவதும் கொஞ்சம் கடினமான காரியம். கௌரியின் பாதை கரடு முரடானது சாதாரண கரடுமுரடு இல்லை கரணம் தப்பாவிட்டாலும் மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லும் கொடிய கரடு முரடு.
நனைந்திருந்த உடலைத் துண்டால் துடைத்துவிட்டு ஒரு புதிய இரவு உடையை அணிந்து கொண்டு ஜன்னலின் வழி வந்து பார்த்தாள். அந்த ஜன்னலின் வழியாக நின்று உலகைப் பார்ப்பது அவளுக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று. வேறு ஒரு உலகத்தில் தான் வசிப்பதாகவும் அங்கிருந்து இந்த உலகத்தையும், மனிதர்களையும் பார்ப்பதாகவும் பல நேரம் கற்பனை செய்து கொண்டிருக்கிறாள். வானத்திலிருந்து இடைவிடாமல் இறங்கிக் கொண்டிருக்கும் இருளை மரங்கள் தான் வாங்கி பூமிக்கு நிரப்புவதாய் நினைத்துக் கொண்டாள்.
பகல் நேரமாய் இருந்தால் அந்தக் குடியிருப்பு பகுதியின் சின்னத் தெருவில் கூட கார்களும் பைக்குகளும் சைக்கிள்களும் பாதசாரிகளும் செல்லும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இரவில் இருளின் சத்தத்தை அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். தனிமை நிறைந்த வாழ்வில் பயந்து போய் கனவினால் எழுந்து ஜன்னலின் வழியே பார்க்கும் பொழுது அவளின் மனதில் இருந்த அந்த கவிஞர் வெளியே வந்தாள். எப்போதும் அவள் பார்த்து ரசிக்கும் அந்த மஞ்சள் நிற கொன்றை பூ மரத்தை பார்த்தாள். மஞ்சள் நிற பூக்களின் மீது இரண்டு வயது குழந்தை கிரையான் பென்சிலால் கருப்புப் பூசி வைத்ததைப் போல இருந்தது.
பூக்கள் உறங்குகின்றன
காய்கள் கனிகள் கிளைகள் யாவும் உறங்குகின்றன
ஒற்றைக் காலில் நின்று
மரமும் உறங்குகிறது
நானும் இரவும் விழித்திருக்கிறோம்
தனிமையின் வெளியில்…
மரத்திற்கு எதிர்ப்புறம் கௌரி கண்களை நகர்த்தினாள். அங்கு ஒரு மாநகராட்சி குப்பைத்தொட்டி இருக்கும். மனிதர்கள் கொண்டு வந்து கொட்டும் குப்பைகளை பார்த்தபடியே பல நாள் அங்கு நின்று இருக்கிறாள். அவளை ஆச்சரியப்படுத்திய குப்பைகளில் ஒன்று சாமி படங்கள் தான். மனிதர்கள் தான் எத்தனைக் கேவலமானவர்கள் என்று கௌரி நினைக்கும் தருணங்களில் அதுவும் ஒன்று. ஆண்டாண்டு காலமாய் பூசிக்கப்பட்டு வேண்டுதல்களை எல்லாம் மௌனமாய் கேட்டு அந்த வீட்டின் சுக துக்கங்களை எல்லாம் பகிர்ந்து கொண்ட சாமி படங்களை திடீரென்று ஒரு நாள் இந்த மனிதர்கள் கைவிட்டு விடுகிறார்கள். சாமிக்கே இந்த நிலை என்றால் மனிதர்களை என்ன செய்வார்கள் என்று நினைத்து கௌரி சிரித்தாள். எந்த மதத்தின் சாமி படமாக இருந்தாலும் அங்க வந்து சேருவதை அவள் கவனித்திருக்கிறாள்.
குப்பைத்தொட்டியை பார்த்தபின் அவளது கண்கள் தானாகவே மற்றொரு விஷயத்தை தேடும். அது வேறு யாரும் அல்ல. பெயரற்று உறவற்று அங்கு வாழும் ஒரு மனிதன். பிச்சைக்காரன் என்றவரைச் சொல்ல முடியாது. யாரிடமும் அவர் கைநீட்டி காசும் சோறும் வாங்கி கௌரி இதுவரைப் பார்த்ததே இல்லை. அவரின் துணிகள் அழுக்காய் இருந்ததும் இல்லை. எங்கோ வேலை செய்துவிட்டு சாலையோரத்தில் வந்து குடித்தனம் நடத்துபவராகவும் அவர் இல்லை. மனநலம் சரியில்லாதவராகவும் அவளால் அவரை கண்டுகொள்ள முடியவில்லை. பல நேரங்களில் அவர் தனக்குத்தானே பேசிக் கொண்டிருப்பதையும், காற்றில் ஏதோ கைகளால் வரைந்து கொண்டிருப்பதையும் பார்த்த பிறகும் கூட முற்றிலும் மனநலம் குன்றியவராக அவளால் அவரை நினைக்கவே முடியவில்லை. அவர் யாருடனும் பேசி அவள் பார்த்ததில்லை. யாரும் அவருடன் பேசவில்லை, கௌரி உட்பட.
கௌரிக்கு தன்னைத்தான் விசாரித்துக் கொள்வதில் இருந்த பேரார்வம் அடுத்தவர்களின் வாழ்வில் மூக்கை நுழைப்பதில் எப்போதும் இருந்தது இல்லை. சிறுவயதிலிருந்தே சூழ்நிலையை முற்றும் கவனித்து அமர்ந்திருப்பது அவளுக்கு இயல்பான ஒன்றாக இருந்தது. அதனால் தான் அந்த தெருவோரக் குடித்தனக் காரனிடம் அவள் எப்போதும் பேச முயற்சித்ததில்லை. மழை வரும் இரவுகளில் அவர் அருகில் உள்ள பேருந்து நிழல்குடைக்குள் தன்னை நுழைத்துக் கொள்வார். மக்கள் குப்பைத் தொட்டியில் வீசி எறியும் பல பொருட்களில் அவர் தனக்குத் தேவையானதாகக் கருதும் பொருட்களை எடுத்து நடைபாதை ஓரத்தில் பொருட்காட்சி போல் அடுக்கி வைத்திருப்பதை கௌரி பார்த்து ரசிப்பது உண்டு. அதில் புறக்கணிக்கப்பட்ட சாமிகளின்படச் சட்டங்களும் உண்டு
கௌரியின் வேலை எழுதுவது. அவள் வாழும் இந்த உலகத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தாள். அவள் வாழும் இந்த உலகம் அவளுக்கு எதிராக எழுதிக் கொண்டிருந்தது. அதற்கு எதிராகவும் அவள் எழுத வேண்டியிருந்தது எழுதுவதற்காக அவள் வீட்டை விட்டு வெளியில் சென்றால் அன்று இரவு வீடு திரும்ப முடியுமா என்பது அவளின் கையில் இல்லை. அவளின் நாள் கடவுளின் கையில் இருந்தும் கூட வெகு தூரம் போயிருந்தது. எனவே அவள் வீடு திரும்பும் பொழுதெல்லாம் அந்த வீட்டின் ஒவ்வொரு இருப்பின் நொடியையும் ரசிப்பாள். அந்த வீட்டின் தனிமை அவள் மேல் ஊறுகாயின் உப்பைப் போல் படிந்திருப்பதாய் எண்ணி மகிழ்வாள்.தன் வீட்டிற்குள் யாரையும் தேவையின்றி அவள் அனுமதிப்பதில்லை. அந்த வீடு கௌரிக்காக கௌரியே அமைத்துக் கொண்ட ஒரு சின்னஞ்சிறு உலகமாக இருந்தது. அவள் எழுத்து உத்திரமடைந்த பின் அந்த எழுத்து பலரின் வாழ்க்கைக்கு உறுத்தலாய் மாறிப்போன பின் அவளின் அந்த வீட்டை அவள் இல்லாத போதும் வேவு பார்த்துக் கொண்டிருந்த பல கண்களை அவள் அறிந்தும் இருந்தாள். இருப்பினும் தனிமையும், அந்த வீடும் அவளுக்கு எப்போதும் இதமாக இருந்தது. அந்த தெருவோரக் குடித்தனக்காரரையும் அவள் தன்னை போலவே பாவித்தாள். அவர் அந்த சின்னஞ்சிறு சிறிய நடைபாதையை தன் வீடாய் தன் உலகமாய் பாவித்து வாழ்வதை அவள் ரசித்தாள். எனவேதான் அவருடைய வாழ்வியலை மாற்றுவதற்கு அவள் அஞ்சினாள். அவருக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அப்போது போய் நிற்போம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
கௌரி ஐம்பதைத் தொட்டு சில மாதங்கள் ஆகிறது. அவள் பேனா எழுதத் தொடங்கி ஒரு வெள்ளி விழாவையும் கொண்டாடி ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டது. அவள் அம்மா வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது கௌரியின் அப்பா பத்திரிகைகளுக்கு ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். அவள் அவரைத் தொல்லை பண்ணக் கூடாது என்று அவளுக்கும் பேனா பேப்பர் எழுதும் அட்டை என்று சகலமும் கொடுப்பார். கௌரி எதை எழுத வேண்டும் என்று அப்பாவிடம் கேட்கும் போதெல்லாம் தோட்டத்திற்கு போய் இன்று எது உன்னை பாதிக்கிறது எதைப் பற்றி எழுத வேண்டும் என்று உனக்கு உந்துதல் வருகிறதோ அதைப்பற்றி எழுது என்பார். எழுத்துகளும் சொற்களும் கோர்வையற்று தப்பும் தவறுமாக சில இடங்களில் படமாக தான் அவளுடைய எழுத்து ஆரம்பித்தது. இலைகளைத் தின்று கொண்டிருக்கும் ஒரு பச்சைப் புழுவை பார்த்துவிட்டு எழுதி இருந்தாள் எட்டு வயதில்
புழுவே பச்சைப்புழுவே
இலைகளைத் தின்னாதே
பாவம் தானே அம்மா செடி.
கௌரி புழுக்கள் பற்றியும் செடிகள் பற்றியும் எழுதுவதோடு நிறுத்தி இருக்கலாம், மற்ற எல்லாரையும் போல. ஆனால் போராளிகளின் பேனாக்கள் அத்தோடு நின்று விடுவதில்லையே. உள்ளூர் அரசியல்வாதிகளின் ஊழல் தொடங்கி தெருமுனையில் குடிநீர் வராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பது வரை ஆராய்ந்து எழுத ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் அவளுக்கு ஆதரவு கொடுத்த பத்திரிகைகளுக்கும் மிரட்டல் வர ஆரம்பித்தவுடன் கௌரியின் கட்டுரைகளை பிரசுரிக்க மறுத்தார்கள்.
அப்போதுதான் கௌரியின் அப்பா உதவிக்கு வந்தார். கௌரிக்கு அப்பொழுது கிட்டத்தட்ட 20 வயது. இவ்வளவு சின்ன வயதில் நீ தீவிரமாக எழுதத் தான் வேண்டுமா ஏன் மற்ற பெண்களைப் போல திருமணம் செய்து கொண்டு நம்மிடம் இருக்கும் வசதியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டுப் போய் விடக்கூடாது.
நான் மற்றவர்கள் போல வாழ விரும்பவில்லை அப்பா. நான் நானாக வாழ விரும்புகிறேன் என் மனம் எனக்கு என்ன சொல்லுகிறதோ என் உணர்வுகள் எதைத் தவறு என்று தட்டிக் கேட்க சொல்கிறதோ அதை எழுதுவதில் தான் நான் நிம்மதி அடைகிறேன். என்னால் மற்றவர்களைப் போல கண்டும் காணாமல் போய்விட முடியவில்லை.
அப்படியானால் நீ கல்யாணமேப் பண்ணிக்க போறதில்லையா
கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன் எப்போ எனக்கு லவ் ஃபீலிங் வருதோ அப்ப.அது கல்யாணத்துல தான் முடியும்னு இருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்.
அப்போ ஒரு அப்பாவா உனக்கு கல்யாணம் பண்ணற கடமை எனக்கு இல்ல அப்படின்னு நினைக்கிறாயா?
ஒரு அப்பாவுக்கு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி தரதுதான் பெரிய கடமை இல்லை அவளுடைய கனவு கூட நிறைவேற்றி வைக்கலாம்
கௌரி நீ மத்த குழந்தைகள் மாதிரி இல்லன்னு எனக்கு சின்ன வயசுலயே தெரியும் உன்கிட்ட என்ன வேணும்ணு கேக்குறதுக்கு நான் எப்பவுமே பயப்பட்டுருக்கேன். இன்னைக்கும் அதே பயத்தோட தான் கேட்கணும்னு நினைக்கிறேன் உன்னோட கனவா என்னோட கடமையா நான் உனக்கு என்ன செய்யணும்
அப்பா நான் ஒரு சின்ன பத்திரிக்கை நடத்தணும் அதுக்கு காசு வேணும்.
கௌரியின் “உண்மையின் குரல்” பத்திரிக்கை அப்பாவின் காசில் இருந்து இப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் இரண்டு ஆண்டுகள் பத்திரிகை அப்படி ஓட்டம் இல்லை. உள்ளூர் பள்ளிவாசலில் நடந்த ஒரு கலவரத்தை ஆராய்ந்து கௌரி எழுதிய போது அந்த பத்திரிக்கை உள்ளூரில் அறியப்பட்டது. கௌரியின் அலுவலகத்தில் நான்கு ஜன்னல்கள் இரண்டு நாற்காலிகள் ஒரு ஒரு கழிவறை உடைக்கப்பட்டன கூடவே அலுவலக உதவியாளர் ரமணாவின் இடது கபாலம் திறக்கப்பட்டது.
கொத்தடிமைகளாய் வேலை செய்து கொண்டிருந்த பழங்குடியினரின் துயர நிலையை தகுந்த ஆதாரங்களோடு அவள் வெளிப்படுத்திய போது அந்த மாநிலத்தில் தீப்பற்றிக் கொண்டது. வேறு வழியே இல்லாமல் மாநில அரசு தலையிட்டு அவர்களை விடுவிக்க வேண்டி இருந்தது.ஏனென்றால் கொத்தடிமைகளாக்கப்பட்டோரின் எஜமானர் ஆளுங்கட்சியின் பினாமி. எஜமானரின் எஜமானர்கள் சபித்துக் கொண்டே விடுவித்தார்கள்.எஜமானர் சகல சௌபாக்கியங்களுடன் சிறையில் கொஞ்ச நாட்கள் இருந்தார். மக்கள் மறந்தவுடன் வெளியே வந்து விட்டார்.
விடுதலை செய்யப் பட்டப் பழங்குடியினர் கௌரியை சூழ்ந்து கொண்டு இனிமேல் எது எங்கள் பூமி என்றழுத போது அவளும் சேர்ந்து அழுதாள்.அந்த புகைப்படம் தொலைக்காட்சிகளால் வைரல் ஆக்கப் பட்டது.
அதன் பிறகே அவளையும் அவள் பத்திரிகையும் நாடு முழுவதும் உற்று நோக்கியது. தர்காவிற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து முஸ்லிம்களை மட்டும் உள்ளே வைத்து எரித்த போது உலகம் நம்மைப் பார்த்து காரித் துப்பியது. இரண்டு வாரங்கள் அந்த செய்தியை தான் காபிக்கும் சரக்குக்கும் தொட்டுக் கொண்டார்கள். பிறகு உலகம் மறந்து போனது.இறந்தவர்களை இழந்தவர்களை உதைத்து மறக்கச் சொன்னார்கள்.
கௌரியால் மறக்க முடியாமல் போனது. வழக்கம் போல வேலையை ஆரம்பித்தாள். பதினொரு மாதங்கள் வீடு திரும்ப முடியவில்லை. கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை சரணடையச் சொல்லி பெருந்தலைகள் தப்பித்திருந்தனர்.என்ன நடந்தது என்பதை மக்களிடம் இருந்து அறிந்து கொள்ளவே இம்முறை அத்தனைக் கஷ்டமாயிருந்தது.
கடைசியாக தான் மாலினி கிடைத்தாள்.நெற்றி நிறைய குங்குமத்தோடு அதே பேருந்தில் பயணித்ததால் இறக்கி விடப்பட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடச் சொல்லப் பட்டவள். முழு இரவும் வேலை செய்த அலுப்பால் ரொம்ப தூரம் ஓட முடியாமல் புளிய மரத்தின் பின்னால் நின்று எல்லாவற்றையும் பார்த்தவள்்
அவளின் சாட்சியத்தை வீடியோவாக கௌரி பதிவு செய்து விட்டு கடைசியாகக் கேட்டாள்.
நீ இதைப் பத்தி யார்கிட்டயும் சொல்லலியா.
சொல்லல.
ஏன் சொல்லல. வீட்டில அக்கம்பக்கத்துல வேலை செய்ற இடத்துல
வீட்ல யாருமில்லை நான் ஒண்டிதான்.வேலே செய்ற இடத்துல இதெல்லாம் யாரு கேப்பா
அக்கம் பக்கத்தில
யாரும் கேக்க மாட்டாங்க.
ஏன்
நான்தா தொழில் பண்றேனே. யாரு ஏன் குரலக் கேப்பா.
மாலினி சிரித்தாள்.கௌரியால் சிரிக்க முடியவில்லை.
இதனால உன் உயிருக்கே பிரச்சினையாகும் பரவால்லையா
தேவடியா உயிரு தானே யாரு அழப் போறா. வுடுங்க பாத்துக்கலாம்
நா திரும்பிப் பாக்கவேக் கூடாதுன்னு தா ஓடினேன். அவங்க கத்தினாங்க பாருங்க மொதமொத தொழிலுக்கு வந்தப்ப என் தோலு இஞ்ச்இஞ்ச்சா கதறி அழும் கரகரன்னு தோல உரிச்சுடலானு தோணும் அவனுங்க அவங்க கத்தறதை பாத்துட்டு அப்படியே நின்னாங்க துளி பயமில்ல நெஞ்சுல ஈரமில்ல அன்னிக்கே நானும் போயிருப்பன் தானே நாளைக்குப் போகப் போறன் அவ்வளவு தா
கௌரி அவளை நண்பரின் வீட்டில் பத்திரப் படுத்தினாள்.இன்று மதியம் வீடு திரும்பினாள்.ஆவணங்களைத் தொகுத்து அறிக்கையாக்கி மனித உரிமை அமைப்பிற்கும் இன்னபிற போராட்ட அமைப்புகளுக்கும் மெயில் அனுப்பி முடித்தாள்.இரவு இரண்டு மணி. ஒரு தாளை எடுத்து பத்திரிகைக்கு ஆசிரியர் உரை எழுத ஆரம்பித்தாள். உடம்பும், மனதும் படுக்கைக்கு நெட்டித் தள்ளியது. படுத்தவள் கனவில் ஓடத் தொடங்கினாள்.
இன்று அந்த தெருவோர மனிதனை அவள் தன் கண்களால் துழாவிக் கொண்டிருந்த போது கதவு தட்டுப் பட்டது.இரவு 3 மணி. யாரென்று கேட்டுக் கொண்டே கதவை மெலிதாக திறந்தாள்.கதவு ஓங்கி உதைக்கப் பட்டது. கௌரி நான்கடி தள்ளிப் போய் விழுந்தாள். துப்பாக்கியுடன் புகுந்த மூன்று பேர்களில் ஒருவன் கத்தினான்
தலையில சுடுங்கடா
அவ மூளை சிதறி சாகணும் இவ சாவைப் பாத்து ஒருத்தனும் எழுதக் கூடாது
துப்பாக்கிகள் மூளையை சிதைத்தன.ஆவணங்களை அள்ளிக் கொண்டனர். அவள் கடைசியாய் எழுத ஆரம்பித்தத் தாளை ஒருவன் கையில் எடுத்து
ஜி இது வேணுமா
ச்சீ தூக்கிப் போடு
கௌரி கடைசியாய் எழுத்தால் கேட்டிருந்தார் “ இங்கு நாம் எல்லோரும் சமமா?”
விடிந்து விட்டது. ஒரு கிராமத்துப் பள்ளியில் ஆசிரியர் மாணவர்களைப் பிரித்து உட்கார வைத்துக் கொண்டிருந்தார்.
காலனி பசங்க அங்க தனியா உக்காருங்க.
ஒரு மாணவன் எழுந்தான், கேட்டான்.
“ சார் இங்க எல்லாரும் சமம் இல்லையா?”
- எஸ்தர் ராணி
இது என் சொந்தப் படைப்பென்றும் எங்கும் பதிவிடவில்லை என்றும் உறுதி அளிக்கிறேன்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்