logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ஞா.கலையரசி

சிறுகதை வரிசை எண் # 277


கடைசி நாள்! (சிறுகதை) “அப்பா! பணம் கட்ட நாளைக்குத் தான் கடைசி நாள். டீச்சர் கண்டிப்பாச் சொல்லிட்டாங்க. நாளைக்குப் பணம் எடுத்துட்டு வராதவங்க எல்லாருமே, கிளாஸுக்கு வெளியில தான் நிக்கணுமாம்; “பணம் கட்ட முடியாத நீங்கள்லாம், எதுக்கு இங்க வர்றீங்க? பேசாம அரசாங்க பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டியது தானே?” ன்னு, டீச்சர் என்னைப் பார்த்துக் கேட்டப்ப, சசி குரூப், பெஞ்சுக்குக் கீழே குனிஞ்சு நக்கலாச் சிரிச்சுது. எனக்கு எவ்ளோ அவமானமா இருந்துச்சி தெரியுமா? நாளைக்கு நிச்சயம் பணம் கொடுத்துடுவீங்கல்ல?” என்று அழாத குறையாகக் கேட்டாள், ஒன்பதாம் வகுப்பு மாணவி வளர்மதி. காக்கி உடையுடன் ஒரு பலகையில் அமர்ந்து, தேநீர் குடித்துக் கொண்டிருந்த பழனி, உடனே காற்சட்டையைத் தட்டிவிட்டு எழுந்தான். “ஏன்டி? காலையில போனவரு ஒரு வாய் டீ குடிக்க, இப்ப தான் வந்து ஒட்கார்ந்தாரு. அது ஒனக்குப் பொறுக்கிலியா? மத்தியானம் சாப்பிடக் கூட, ஒங்கப்பா வரலை. பள்ளிக்கூடத்துலேர்ந்து வந்ததும், வராததுமாப் பையைக் கூட கீழே வைக்காம, ஒன் பிலாக்கணத்தை ஆரம்பிச்சிட்டியா?” என்றாள் அலமேலு. “உங்களுக்கு என் கஷ்டம் புரிய மாட்டேங்குது; போன தடவை பணம் கட்டாம, நான் கிளாஸுக்கு வெளியில நின்னப்ப, ஏதோ தப்பு செஞ்சிட்டு நிக்கற மாதிரி, போறவங்க, வர்றவங்க எல்லாம், என்னைக் கேவலமா ஒரு பார்வை பார்த்துட்டுப் போனாங்க. அப்ப எனக்குத் தூக்குல தொங்கிடலாம்னு தோணுச்சி.” “அடி செருப்பால? என்ன வார்த்தை பேசுறா பாரு இவ? ஆயிரம் ஆயிரமாப் பணம் கட்டி, பணக்கார வீட்டுப் புள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடத்துல, என் புள்ளையையும் படிக்க வைப்பேன்னு, மாடா உழைச்சி, ஓடாத் தேயுறீயே. உனக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்” என்று பழனியைப் பார்த்துக் கத்தினாள் அலமேலு. “பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வைக்கச் சொல்லி, நான் கேட்டேனா? ஒங்க கிட்ட பணமே இல்லாம, எதுக்கு அங்க சேர்த்தீங்க? ஒவ்வொரு தடவையும், பணம் கட்டுற கடைசி ஆளு, நாந்தான். எல்லாரும் என்னைப் பார்த்து நக்கலாச் சிரிக்கிறப்ப, எனக்கு ரொம்ப அவமானமாயிருக்கு.” “சரிம்மா. கோவிச்சுக்காதே. இந்தத் தடவை உனக்கு ஃபீஸ் கட்டுறதுக்கு முன்கூட்டியே, அப்பா பணம் சேர்த்து வைச்சிருந்தேன். ஆனா திடீர்னு ஆட்டோ பழிவாங்கிடுச்சி. ரிப்பேர் செய்ய, அதிகச் செலவாயிடுச்சி. அடுத்த முறை முதல் ஆளா, நீ பணம் கட்டுற மாதிரி, நான் ஏற்பாடு பண்றேன். இதுக்குப் போயி ஒரு நிமிஷத்துல, என்ன வார்த்தை சொல்லிட்டேம்மா? இதைக் கேட்குறதுக்கா, அப்பா ஓடி, ஓடி இப்பிடிக் கஷ்டப்படுறேன்?” “இவக்கிட்ட போயி, என்ன கெஞ்சிக் கூத்தாடிக்கிட்டு? நமக்காக அப்பா அம்மா, இவ்ளோ கஷ்டப்படுறாங்களேன்னு, கொஞ்சங்கூட நினைச்சிப் பார்க்காத நன்றி கெட்ட நாய் இவ!” “இந்தா! நிறுத்து! புள்ளையை நாய், கீய்னு திட்டிக்கிட்டு!” என்று மனைவியை அதட்டியவன், “நாளைக் காலையில பள்ளிக்கூடம் போறப்ப, ஒன் கையில அந்தப் பணம் இருக்கும்; சந்தோஷம் தானே?” என்று மகளைப் பார்த்துக் கேட்டான் பழனி. “தேங்க்ஸ்பா” என்று முகமலர்ச்சியுடன் சொல்லிவிட்டு, அம்மாவுக்கு வாயைக் கோணிப் பழிப்புக் காட்டிவிட்டு, உள்ளே சென்றாள் வளர்மதி. “இதுக்குத் தான், அப்பவே நான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். அந்தப் பள்ளிக்கூடம் வேணாம்; நமக்குச் சரிப்பட்டு வராதுன்னு. அப்பனும் மவளுமாச் சேர்ந்துக்கிட்டு, என்னைக் கிண்டல் பண்ணினீங்க. ஒவ்வொரு முறையும் பணம் கட்டறதுக்குள்ள, நாக்கு தள்ளுது. நம்ம தெரு புள்ளைங்க எல்லாம், அரசாங்க பள்ளிக்கூடத்துல தான் படிக்குதுங்க. நல்லாச் சொல்லிக் கொடுக்கிறாங்களாம். பணம் நெறையாக் கட்டிப் படிச்சாத்தான், ஒங்க ரெண்டு பேருக்கும் மதிப்பு. இலவசமாக் கிடைச்சுதுன்னா மட்டம்.” “சும்மா தொணதொணக்காம, வாயைப் பொத்திக்கிட்டு இருக்குறியா? நமக்குன்னு இருக்குறது, கறிவேப்பிலைக் கொழுந்தாட்டம், ஒரே கொழந்தை. காசுபணம் செலவானாலும், அதை நல்ல பள்ளிக்கூடத்துல படிக்க வைச்சி ஒரு வேலைக்கு அனுப்பிட்டா, நம்ம கவலையெல்லாம் தீர்ந்துடும்.” “எனக்கு மட்டும் இவளை நல்லாப் படிக்க வைக்கணும்னு, ஆசையில்லியா? நான் சொல்றதைக் கொஞ்சம் யோசிச்சிப் பாரு. நாள் பூரா ஆட்டோ ஓட்டிக் கிடைக்கிற பணம் பூராத்தையும், இவ பள்ளிக்கூடத்துக்கே கொட்டி அழணுமா? எதிர்பாராத செலவுக்குன்னு, கொஞ்சமாவது சேமிக்க வேணாமா? ஒவ்வொரு ‘டேர்ம் பீஸ்’ கட்டறப்பவும், இதே பாடு தான். கடைசி நாளு, அந்தப் பணத்தைப் புரட்டறதுக்குள்ள ஒன்பாடு, என்பாடுன்னு ஆயிடுது. ‘டேர்ம் பீஸ்’ மட்டும் இல்லாம, அப்பப்ப, “அதுக்குப் பணம் வாங்கிட்டு வா, இதுக்குப் பணம் வாங்கிட்டு வா”ன்னு, அவங்க பண்ற லொள்ளு தாங்க முடியல. காசுபணம் எக்கச்சக்கமாச் சேர்த்து வைச்சிக்கிட்டு, என்ன பண்றதுன்னு தெரியாதவங்களுக்குத் தான், அந்தப் பள்ளிக்கூடம் லாயக்கு. நான் சொல்றதைக் கேளு. இந்த வருஷத்தோட முடிச்சிட்டு, டிசி வாங்கிட்டு, அரசாங்க பள்ளிக்கூடத்துல சேர்த்துடுவோம். அப்புறம் இந்த மாதிரி, லோல் படத் தேவையில்லை.” “அதானே பார்த்தேன். எப்படா சான்ஸ் கிடைக்கும்னு பார்த்து, ஒன் அரசாங்க பள்ளிக்கூடப் புராணத்தை ஆரம்பிச்சிட்டியா?” பழனி கேட்டான். “நம்ம நல்லதுக்குத் தான் சொல்றேன்; கேட்டாக் கேளு. கேக்காட்டிப் போ. நான் பணச்செலவுக்காக மட்டும் சொல்லலை; இவளோட கூடப் படிக்கிறவங்க எல்லாம், பணக்காரப் புள்ளைங்க. அவளுங்க கூடப் படிக்கிறதால, இவளுக்குத் தாழ்வு மனப்பான்மை ரொம்ப அதிகமாயிடுச்சி. காசு பணத்தோட அருமை, சுத்தமாத் தெரியலை. நல்ல நாளு, பண்டிகை நாளுல அவளுங்க மாதிரி, தானும் டிரஸ் பண்ணிக்கனும்னு ஆசைப்படறா; அடம் புடிக்கிறா; தீபாவளிக்குத் துணி வாங்கக் கடைக்கு அழைச்சிட்டுப் போனா, இவ கேட்கிற ‘டிரஸ்’ ஒன்னொன்னும், இரண்டாயிரத்துக்கு மேல இருக்கு. புள்ளைங்களுக்கு நம்ம குடும்பத்து நிதி நிலைமையைச் சொல்லி வளர்க்கறது, ரொம்ப முக்கியம். இவ வளர்ற விதத்தைப் பார்த்தா, எனக்குப் பயமாயிருக்கு; ஒன்னு வேணும்னு கேட்டா, ஒடனே வாங்கித் தரணுங்கிறா; கேட்டு ஒன்னு கிடைக்கலேன்னா, அந்த ஏமாற்றத்தை, இவளால தாங்க முடியலை; வரவரப் பிடிவாதமும் அதிகமாகிக்கிட்டே போவுது. இது எங்க போயி முடியப் போவுதோ தெரியலை.” என்றாள் அலமேலு. “தேவையில்லாம எதையாவது மனசுல போட்டுக் குழப்பிக்காதே. வளர வளர, எல்லாம் தானாச் சரியாயிடும். இந்தச் சின்ன வயசுல, நல்லா ‘டிரஸ்’ பண்ணிக்கணும்னு, ஆசைப்படுறதுல என்ன தப்பு? எனக்கு ஒடம்புல தெம்பு இருக்கிறவரைக்கும், எப்படியாவது கஷ்டப்பட்டு, எம் பொண்ணை அந்தப் பள்ளிக்கூடத்துல படிக்க வைக்கிறேன். முடியலேன்னா, நீ சொல்ற மாதிரி, பள்ளிக்கூடத்தை மாத்திடுவோம்.” “ஒன்னோட முடியாது. கஷ்டப்பட்டு உழைக்கிற காசு எல்லாத்தையும், அந்தப் பள்ளிக்கூடத்துக்கே கொட்டியழு. போன ஜென்மத்துல, அந்தப் பள்ளிக்கூடத்துக்கு, ரொம்ப கடன்பட்டிருக்கே போலருக்கு.” “சரி நேரமாவுது. கெளம்பறேன். ராத்திரி வரமாட்டேன். பத்திரமா இருந்துக்கோங்க.” “அச்சச்சோ! ராத்திரி பூரா ஓட்டப் போறியா?” “ஆமாம். வேற வழியில்ல.” “ஏன்யா இப்பிடி ஒடம்பைக் கெடுத்துக்கறே? ஒங்கிட்ட இல்லேன்னா, உன் நண்பர்கள் கிட்ட கைமாத்தாக் கேட்டுப் பாரேன்; பணம் வந்தவுடனே கொடுத்திடலாம்.” “அதை நான் பார்த்துக்கிறேன். புள்ளையை ஒன்னும் திட்டாதே; ராத்திரி நேரத்துல ஓட்டினா, கொஞ்சம் அதிகமாக் கேட்கலாம்; வாரேன்;” என்று சொல்லிவிட்டு, அவசரமாக வெளியே சென்றான் பழனி. இரவு பனிரெண்டு மணி வரை, தொடர்ச்சியாகப் பழனிக்குச் சவாரி கிடைத்தது. ‘இன்னும் ஆயிரம் ரூபாய் மட்டுமே பாக்கி! விடிவதற்குள் அதுவும் கிடைத்துவிடும்’ என்று மகிழ்ச்சியடைந்தான். ஆனால் பனிரெண்டு மணிக்குப் பிறகு, விடியற்காலை நான்கு மணி வரை, அவனுக்கு ஒரு சவாரியும் கிடைக்கவில்லை. தெருவே காலியாகக் கிடந்தது. அவன் கடன் கேட்ட நண்பர்கள் அனைவரும், இல்லையென்று கைவிரித்து விட்டார்கள். நேரமாக ஆக, அவனுக்குப் பதற்றம் அதிகரித்தது. ஊரும், உலகமும் தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, அவன் மட்டும் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டு, நடுத்தெருவில் தன் விதியை நொந்து கொண்டு அமர்ந்திருந்தான். ‘இன்னும் மூன்று மணி நேரத்துக்குள், எப்படி ஆயிரம் ரூபாயைப் புரட்டுவது? அலமேலுவின் பவுன் தோட்டையும், மூக்குத்தியையும், ஏற்கெனவே ஒரு சேட்டிடம், அடமானம் வைத்தாயிற்று; வீட்டில் இப்போது ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லை. பள்ளியில் போய்ப் “பணம் கட்ட இன்னும் ஒரு நாள் அவகாசம் தாருங்கள்” எனக் கேட்டால், கொடுப்பார்கள். ஆனால் மகள் பெரிய ரோஷக்காரியாயிற்றே! அவமானம் தாங்காமல், அவள் ஏதும் பண்ணிக் கொண்டுவிட்டால்?’ என்றெல்லாம் யோசித்துக் கலங்கினான். மகள் சொன்ன அந்த வார்த்தை, நெஞ்சில் ஒரு முள்ளாக உறுத்திக் கொண்டிருந்தது. அவன் யோசனையுடன் அமர்ந்திருந்த போது, தூரத்தில் ஒருவர் நடந்து வருவது, தெருவிளக்கில் மங்கலாகத் தெரிந்தது. அருகில் வந்தவர் பழனியிடம், “ஆட்டோ வருமா?” என்றார். “ம். எங்க போகணும்?” “நான் கார் டிரைவர். கார் டயர் பஞ்சர் ஆயி, தெரு முனையில நிக்குது. என் கார்ல வந்த அம்மாவுக்கு, நெஞ்சு வலி. அவங்களை அவசரமா ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போகணும்; நான் டயரை மாத்திட்டு வர நேரமாவும்; அதனால நீங்க முன்னாடி, அவங்களை அழைச்சிட்டுப் போகணும்” என்றார். பழனி அவரை ஏற்றிக்கொண்டு ஆட்டோவைத் திருப்பி, அந்தத் தெரு முனைக்குக் காருக்கருகில் கொண்டு போய் நிறுத்தினான். காரிலிருந்து இறங்கிய பெரியவர், பழனியிடம் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையின் பெயரைச் சொன்னார். அந்த மருத்துவமனை கொஞ்ச தூரத்தில் இருந்தது. அடுத்த நிமிடம் காரிலிருந்து அந்த அம்மாவை இறக்கி, ஆட்டோவில் படுக்க வைத்தனர். பெரியவர் தம் மடியில் அவர் தலையை வைத்து அமர்ந்து கொண்டு, “கொஞ்சம் சீக்கிரம் போப்பா” என்றார், பதற்றத்துடன். இருவரையும் ஏற்றிக்கொண்டு, ஆட்டோ வேகமெடுத்துப் பறந்தது. போக்குவரத்து நெரிசல் இல்லாததால், அடுத்த அரைமணி நேரத்தில், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கருகில் கொண்டு போய் நிறுத்தினான் பழனி. ஆட்டோவிலிருந்து அந்தம்மாவைத் தூக்கி, ஸ்டெச்சரில் படுக்க வைக்கவும், பெரியவரின் பைகளைத் தூக்கவும், பழனி உதவினான். பெரியவர் கவுண்டரில் போய்ப் பணம் கட்டவும், மருந்து மாத்திரை வாங்கவும், அங்குமிங்கும் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார். அவருக்கிருந்த பதற்றத்தில், ஆட்டோவுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்பதையே, அவர் சுத்தமாக மறந்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவரிடம் போய், எப்படிப் பணம் கேட்பது என்று பழனிக்குத் தயக்கமாக இருந்தது. ‘அவராகக் கொடுக்கட்டும்’ என்று காத்திருந்தான். அடிக்கடி அவர் கண்ணில் போய்ப் படுகிற மாதிரி நின்றான். ஆனால் அவர் கண்டுகொள்கிற மாதிரி, தெரியவில்லை. காலை ஆறு மணியாகிவிட்டது. மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்கத் துவங்கியிருந்தது. பள்ளிக்கூடப் பேருந்து வருவதற்குள், வீட்டுக்குப் போய் மகளிடம் பணம் கொடுத்தாக வேண்டும். இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்ற கட்டத்தில், அவரிடம் கேட்டு விடுவது என்ற முடிவோடு பழனி, அவர் முன் போய் தயங்கி நின்றான். அப்போது அவர் பதற்றம் குறைந்து காணப்பட்டார். “வாப்பா! உனக்குக் கோடி புண்ணியம்! அம்மா ஆபத்து கட்டத்தைத் தாண்டிட்டாங்களாம். கொஞ்ச நேரம் தாமதமா வந்திருந்தாக் கூட, பிழைக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்னு, இப்ப தான் டாக்டர் சொன்னாரு. ரொம்ப நன்றிப்பா” என்றார், இரு கைகளையும் குவித்து. “ரொம்ப மகிழ்ச்சி ஐயா. அப்ப நான் கெளம்புறேங்க” என்றவன், ‘சாமி! அவருக்கு எப்படியாவது ஞாபகப்படுத்து’ என்று குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு, அவர் முகத்தையே பார்த்தான். நல்லவேளையாக, அவருக்கு ஞாபகம் வந்துவிட்டது. “சாரிப்பா. எனக்கிருந்த பதற்றத்துல, உனக்குப் பணம் கொடுக்கணுங்கிறதைச் சுத்தமா மறந்துட்டேன். இந்தா!” என்று தம் சட்டைப்பையில் கையை விட்டு, இரண்டாயிரம் ரூபாய் தாளை எடுத்து நீட்டினார். “ஐயா! ரெண்டாயிரம் ரூபாய்க்கு, எங்கிட்ட சில்லறை இல்லீங்க.” “நீ பாக்கி எதுவும் தர வேணாம்; தக்க சமயத்துல நீ செஞ்ச உதவிக்கு, இது ரொம்ப குறைவு. இந்தா வைச்சுக்கோ” என்று சொல்லி, அவன் சட்டைப் பையில் செருகினார். மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, வெளியில் வந்து ஆட்டோவை எடுத்த போது, காலை ஆறரை மணியாகியிருந்தது. அரை மணிநேரத்திற்குள் வீட்டுக்குப் போகவேண்டும் என்று வேகமாக ஆட்டோவை ஓட்டினான் பழனி. பணத்தைக் கொண்டுபோய்க் கொடுக்கும் போது, மகளின் முகத்தில் அரும்பப் போகும் புன்னகையைக் கற்பனை செய்து மகிழ்ந்தான். இரவு முழுதும் சாப்பிடாமல் கண் விழித்ததில், தலை பயங்கரமாக வலித்தது. இடையில் நிறுத்தி, ஒரு தேநீர் குடிக்கலாம் என நினைத்தான். ஆனால் தேநீர்க் கடைகளில் கூட்டம் அதிகமாகயிருந்தது. கடைகளில் தலைப்புச் செய்திகள் போட்டுப் பத்திரிக்கைகளைப் படிக்கத் தூண்டும் துண்டு பேப்பர்களைத் தொங்க விட்டிருந்தார்கள். அவசரத்தில் அவன் வாசித்த தலைப்புகளில், ‘பள்ளி மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை” என்ற செய்தி, கண்ணில் பட்டு, அவனை நிலைகுலையச் செய்தது. பத்திரிக்கையை வாங்கி, அந்தச் செய்தியைப் படிக்க, அவன் மனதில் துணிவில்லை. ஆட்டோவை ஓட்ட முடியாமல், அவன் கைகள் நடுங்கின. இதயம் துடிக்கும் வேகத்தில் வெளியே வந்து விழுந்துவிடுமோ என்று தோன்றியது. நெஞ்சில் ஒரு கையை வைத்து, அழுத்திப் பிடித்துக் கொண்டான். ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு, அவசரமாக அலமேலுவுக்கு அலைபேசியில் போன் செய்தான். ‘ஸ்விட்ச் ஆப்’ என்று பதில் வந்தது. அவனுக்குப் பதற்றம் இன்னும் அதிகமானது. ஆட்டோவை மீண்டும் வேகமாக ஓட்டினான். ஆட்டோ சீறிக் கொண்டு, பாய்ந்தோடியது. வழியில் இரண்டு முறை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மேல், மோதப் பார்த்தான். மயிரிழையில் தப்பிய அவர்கள், ஏகவசனத்தில் திட்டிய வசவுகளைக் காதில் வாங்காமல் தொடர்ந்து ஓட்டினான். ‘நான் கிளம்பிய பிறகு, மகளை அலமேலு திட்டியிருப்பாளோ? அதனால் கோபப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பாளோ? கடவுளே! இது அவளாயிருக்கக் கூடாது! அலமேலு சொல்வது போல், அவளுக்குப் பிடிவாதம் இப்போது அதிகமாகிவிட்டது. தான் தற்கொலை செய்யப் போவதைத் தான், ஒரு வேளை நேற்றுக் குறிப்பால் உணர்த்தினாளோ? ஐயோ! அவள் போய்விட்டால், நான் என்ன செய்வேன்? என் உலகமே அவள் தானே?” என்றெல்லாம் நினைத்து, மனதுக்குள் அழுது தீர்த்தான். வீட்டுக்கருகில் வந்து ஆட்டோவை நிறுத்தும்வரை, அவன் உயிர் அவனிடத்தில் இல்லை. நல்லவேளையாக வீட்டுக்கு முன்னே கூட்டம் எதுவும் இல்லாதிருந்ததில், கொஞ்சம் நிம்மதி. ‘ஏதாவது நடந்திருந்தால் அலமேலு தனக்குச் சேதி சொல்லியிருப்பாள்; அக்கம் பக்கத்தாரும், ஃபோன் செய்து சொல்லியிருப்பார்கள்! எங்கோ நடந்த ஒரு செய்தியைப் படித்துவிட்டுத் தேவையில்லாமல் பயந்து நடுங்கியிருக்கிறேன்; சரியான அசடு நான்!’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு, கதவைத் தட்டினான். வளர்மதி வந்து கதவைத் திறந்தாள். “அப்பா!” என்று கத்தியபடி, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். பேயறைந்த மாதிரியிருந்த அவன் முகத்தைப் பார்த்து, அலமேலு பயந்து விட்டாள். “என்னாச்சு?” “ஒன்னுமில்ல; தூங்காம ஓட்டுனதுல, கண்ணு சிவந்திருக்கு” என்று மழுப்பினான். “அப்பா! இனிமே நீங்க பணம் கட்ட வேணாம். இது தான் நீங்க எனக்குக் கட்டப் போற கடைசி ஃபீஸ்” என்றாள் வளர்மதி. அவன் திடுக்கிட்டுக் “கடைசி ஃபீஸா?” என்றான். “ஆமாம்பா. இனிமே நான் அரசாங்க பள்ளிக்கூடத்துல தான், படிக்கப் போறேன். நீங்க ராத்திரி பூரா எனக்காகக் கண்முழிச்சி ஆட்டோ ஓட்டுனதை நினைச்சி, எனக்குத் தூக்கமே வரலை. கவலைப்படாதீங்க; எங்க படிச்சாலும், நான் கடுமையா உழைச்சி நல்லாப் படிப்பேன்; அப்துல்கலாம் தாத்தா எந்தத் தனியார் பள்ளிக்கூடத்துல படிச்சி, ஜனாதிபதி ஆனாரு?” என்று சொன்ன மகளை, வாஞ்சையுடன் அணைத்து, நெற்றியில் முத்தமிட்டான் பழனி..

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.