Jeyakanthi Mahadevan
சிறுகதை வரிசை எண்
# 276
ஜான்சி ராணி
வாசு - மீனாட்சி தம்பத்தியருக்கு நான்கு பெண்கள் இரண்டு பையன்கள் என மொத்தம் ஆறு பிள்ளைகள். அதிகப்படியான நில புலன்களோடு வியாபாரமும் செய்து வந்தார் வாசு. மொத்தத்தில் அவர்கள் குடும்பம் ஓர் உயர்மட்ட குரூப்பை சேர்ந்த தாயிருந்தது. முதல் மூன்று பெண்களின் திருமணத்தை தடபுடலாய் நடத்தி முடித்தார். நான்காவது மகள் ஜான்சி ராணிக்கு வரன் பார்க்கையில்தான் அதிக சிரமத்திற்கு உள்ளானார்.
ஜான்சிராணி.... பெயருக்கு எற்றார்போல் தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவள். புத்திசாலி. சிவந்த நிறம், அழகிய முகம், நீண்ட கருங்கூந்தல். வீட்டு நிர்வாகத்தில் பொறுப்பும் வேலையில் சுறுசுறுப்பும் கொண்டவள். இத்தனையும் அருளிய ஆண்டவன் ஏனோ அவளுக்கு கேட்கும் திறனையும் பேச்சையும் கொடுக்க மறந்து விட்டான். ஆம்.. அவள் ஒரு மாற்றுதிறனாளி. மற்றவர்களை மாற்றும் திறனாளி கூட, என்பது பின்னால் புரியும். சைகை, உதட்டசைவு மேலும் தொண்டையில் எழும் லேசான குரல் இவற்றின் மூலம் மற்றவர்களுடன் அவள் சிரித்துப் பேசி விஷயங்களைப் பரிமாறிக்கொள்ளும் அழகே அலாதி.
இவளின் குறை தெரிந்தும் தெரியாமலும் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் ஒரே மாதிரி கூறிச் செல்லும் பதில், "பிறகு சொல்லி அனுப்புறோம்", "பிடிக்கல" என்பது போன்றவைதான். நகை, சீரவரிசை என அவர்கள் கேட்பதை எல்லாம் தர தயாராயிருந்தும், முடிவு நிராகரிப்பாகவே இருந்தது. வெறுத்துப்போன தந்தை வேறு
வழியை யோசிக்கலானார்.
சில தினங்களில், தன் சொந்த ஊரிலேயே வேலை வெட்டியின்றி சும்மா சுற்றிக்கொண்டிருந்த உறவுக்காரப் பையன் கணேசுவைக் கூப்பிட்டனுப்பினார். அவன் வந்ததும், " இத பார் கணேசு, உனக்கு தனியா ஒரு மளிகைக்கடை வைத்துத் தருகிறேன். உங்க வீட்ல கேக்குற சீர் செனத்தியெல்லாம் செய்றேன். நீ என் மகள் ஜான்சியை கட்டிக்கோ. சிறு வயதில் அவளோடு ஒன்றாய் பழகினவன்தானே... என்ன சம்மதம்தானே" என்றார். இதனை சற்றும் எதிர்பாராத கணேசு, "சரிங்க மாமா" ன்னு சொல்லி தலையை ஆட்டிவிட்டு வீட்டுக்கு சென்றான். பெற்றோரிடம் நடந்ததை கூறினான்.
அவங்களுக்கெல்லாம் ஏக குஷி "இவனுக்கும் ஒரு வழி பிறந்திருச்சே" ன்னு. மேற்கொண்டு பேசுவதற்கு வாசு வீட்டுக்கு செல்ல தயாராயினர்.
அதைப் பார்த்த கணேசு, "போமா,
அந்த ஊமைச்சியைக் கட்டிக்கிட்டு காலமெல்லாம் கஷ்டப்பட என்னால முடியாது. நீங்க எங்கயும் போக வேண்டாம்"
னுட்டான். அவனின் இந்த முடிவு அரசல் புரசலா வாசுவின் காதுக்கும் எட்டியது. பின் அவர்கள் வீட்டில் ஓர் இருக்கமான சூழலே நிலவியது.
ஒருவரோடொருவர் பேசுவது கூட இல்லாமல் போனது.
இவ்வாறே இரண்டு மூன்று தினங்கள் கழிந்தன. நான்காம் நாள் காலை கணேசு அவன் அம்மாவிடம், "அம்மா, வாசு மாமா வீட்டுக்குப்போய் கல்யாணம் பேசலாம். கிளம்புங்க" என்றான்.
அவன் மனமாற்றத்துக்கு காரணம் புரியாத பெற்றோர், 'என்னவா இருந்தா நமக்கென்ன. இந்த அளவுக்கு சம்மதிக்கிறானே" ன்னு நினைத்துக்கொண்டு, பூ,
பழத்தட்டுக்களோடு புறப்பட்டனர்.
வாசு குடும்பத்தினருக்கு அவர்களை திடீரென வெற்றிலை பாக்குத் தட்டோடு பார்த்தது அதிர்ச்சி கலந்த ஆனந்தத்தைத் தந்தது. அவர்களை வரவேற்று, பேசவேண்டியதைப் பேசி முடித்து, கல்யாண ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தனர் இரு வீட்டாரும். மாப்பிளை வீட்டார் எதுவும் கேட்காமலே, வாசு, தான் முன்பு கூறிய அனைத்தையும் திருப்தியா செய்து கொடுத்தார்.
ஒரு சுபயோக சுப தினத்தில் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
மீனாட்சியின் தாயும் தன் பேத்திக்கு, தான் குடியிருக்கும் பெரிய வீட்டின் ஒரு பகுதியை, அவள் வாரிசுகளின் சம்மதத்தோடு, தானமாக வழங்கி, அங்கேயே குடியமர்த்தவும் செய்தாள். இல்லறம் நல்லறமாக சென்று கொண்டிருந்தது. கணேசும் வீடு, கடை, குடும்பம் என பொறுப்பான குடும்பஸ்தன் ஆனான்.
நான்கு ஆண்டுகள் நகர்ந்தன.
முத்துப்போல் இரண்டு ஆண் குழந்தைகள் குறை ஏதுமின்றிப்
பிறந்து வளர்ந்து வந்தனர்.
அப்போது கணேசுவின் நெருங்கிய நண்பன் கதிர், நீண்ட நாட்களுக்குப் பின் அவனை சந்திக்க வந்தான். இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தனர். ஜான்சி அவர்கள் இருவருக்கும் இன்முகத்துடன் காபி கலந்து கொண்டுவந்து தந்தாள். அவள் சென்றவுடன் கதிர் கணேசுவிடம் கேட்டான், "ரொம்ப நாளா உன்கிட்ட கேட்கணும்னு நெனச்சேன். முதலில் ஜான்சியை வேண்டாம்னு சொன்ன நீ, பின் எப்படி சம்மதிச்சே?"
சிறிது மௌனம் காத்த கணேசு, பிறகு நண்பனிடம் கூறலானான்... "அந்த மூன்றாம் நாள் இரவு நடந்ததை எவரிடமும் கூற மாட்டேன்னு ஜான்சிக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்... ஆனாலும் பரவாயில்ல... நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டனவே. இனி என்ன" என்ற பீடிகையோடு தொடர்ந்தான்: "அன்று இரவு ஒன்பது மணியளவில் சாப்பிட்டு விட்டு முற்றத்தில் கயிற்றுக் கட்டிலில் படுத்தவாறு பாட்டுக்
கேட்டுக்கொண்டிருந்தேன். திடீர்னு பாட்டு நின்றது. திரும்பிப்பார்த்தா ஜான்சி ஆவேசமா நின்னுக்கிட்டிருந்தா.
ஷாக்காகி எழுந்து நின்றேன். அப்ப அவ என்ன கையை இருகப்
பற்றி இழுத்துக்கொண்டு ஊர்க் கோவிலின் பின்புறம் சென்றாள்.
அங்கிருந்த ஒரு கிணற்றின் அருகில் போய் நின்றுகொண்டு என்னிடம் சைகையில், 'நீ என்னை கட்டிக்கலேன்னா இந்தக் கிணற்றில் குதித்து செத்துடுவேன். நாளைக்கு நீயும் உன் குடும்பத்தாரும்தான் நாலு பேருக்கு பதில் சொல்லவேண்டி வரும்' என்றாள். பயந்து போன நான் உடனே அவள் விருப்பத்துக்கு சம்மதித்தேன்.
அப்பத்தான் அங்கு நடந்ததை எவரிடமும் கூறக் கூடாதென
சத்தியம் வாங்கிக்கொண்டாள்.
பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததுதானே!" மீண்டும் தொடர்ந்து, "நான் மட்டும் அவள மிஸ் பண்ணியிருந்தேன்னா எனக்கு இத்தனை அருமையான மனைவி மக்கள் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை"ன்னு நா தழு தழுக்க கூறி முடித்தான். நிறைவான மனதுடன் விடை பெற்றான் கதிர்.
வீட்டினுள் குழந்தைகள் ஜான்சியிடம் அவள் பாஷையில்
ஆனந்தமா பேசி சிரித்துக் கொண்டிருந்ததை கண்டான் கணேசு. அவன் கண்களில் இரு சொட்டுக் கண்ணீர் கசிந்தது.
***********
From
ஜெயகாந்தி மகாதேவன்
3/139, கிருஷ்ணா நகர் மெயின் ரோடு, பாலவாக்கம், சென்னை -
600041.
அலைபேசி : 9884573833.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்