logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

தீபாஸ்

சிறுகதை வரிசை எண் # 274


நிமிர்வு ********* மூத்தவள் திலோத்தமாக்கு கல்யாணமாகி நாலுவருஷம் ஆகப்போகுது இன்னும் குழந்தை பெத்துக்குறதை பத்தி யோசிச்ச மாதிரியே தெரியலை, திலோத்தமாவைவிட ரெண்டு வயசுக்கு இளையவள் நித்தியா, அவளுக்கு பிரசவமாகி ஆறு நாளாகிடுச்சு. நேத்தே குழந்தையையும் பெத்தவளையும் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தாச்சு. வீட்டோட புது வரவை பார்க்க வருறவங்க எல்லாம் மூத்தவளுக்கு இன்னும் குழந்தை இல்லையான்னு என்கிட்டத்தானே கேக்குறாங்க, இன்னைக்கு திலோ வருறா, வரட்டும் கையோட பிடிச்சு இழுத்துக் கொண்டு போய் டாக்டர்க்கிட்ட அவள் உண்டாக என்ன வழின்னு பார்க்கணும். எனத் தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டிருந்தார் விசாலி . அந்நேரம் குழந்தையின் சினுங்கள் கேட்டது. தாயின் கருவறைக்குள் வெதுவெதுப்பான அரவணைப்புடன் இருந்த அப்பச்சிளம் குழந்தை பூமிக்கு வந்து ஆறு நாட்களான நிலையிலும் சூழல் மாறுபாட்டின் ஒவ்வாமையிஇலும் உடலை முறுக்கி முறுக்கி சினுங்க ஆரம்பித்தது. அதன் கண்களுக்குத் தெரியும் பொருட்களின் அசைவினை ஸ்கெலடைஸ்கோப் உருவாக்கும் வண்ணங்களின் சேர்க்கையாக மட்டுமே உள்வாங்க அக்குழந்தையால் முடிந்தது. பிள்ளையின் முதல் புரிதல், தான் உணர்ந்த தாயின் சூடும் அவரின் தொடுகையும் மட்டுமே. அத்துடன் தாயின் மார்க்காம்பில் தனது வாய்ப்பதித்ததும் அன்னிச்சையாய் உதடு குவித்து தன் முதல் ஆகாரத்தை துய்க்கும்கலையில் தேர்ந்துவிடுகிறது குழந்தை. புதிதாக ஒன்றை கற்கும்போது மூலையில் டோபோமைன் என்னும் சுரபி சுரந்து அதற்கு ஆனந்தத்தை கொடுக்கிறது. புதியதை கற்றுக்கொண்டதற்கான பாராட்டை ஒரு திருப்தி உண்டாகிறது. மீண்டும் அச்செயலை கற்றுத்தேற ஊக்கத்தை அச்சுரப்பி உண்டாக்குகிறது. முதல் துய்தலில் உண்டான டோபோமேன் அதன் மீதான பற்றுதலை கொடுத்து தான் உயிர்வாழுதலுக்கான தகுதியை ஆசையை தூண்டுகிறது. அந்த குளிரூட்டப்பட்ட அறையின் கட்டிலில் மெத்தைமேல் பிரத்தியோகமாக குழந்தைகளுக்காக என்றே மென்பஞ்சில் செய்யப்பட்ட அக்குட்டி மெத்தையில் தூங்கி விழித்த இன்னும் பெயர் சூட்டப்படாத அப்பச்சிளம் குழந்தை. தனது நினைவடுக்கில் மேல் எழுந்த நிறைவாய் துய்த்த அமிர்தத்தின் சுவையை மறுபடி ஆட்கொள்ளநினைத்து தாயின் மார்த்தேடி வாய் திறந்தபடி அலைமோதியது. தேடியது கிடைக்காத ஆதங்கத்தில் அதனிடம் சினுங்கல்கள் வர ஆரம்பித்தது. தனது பேரனின் சினுங்களை கேட்ட விசாலி “ஏய் நித்தி பாரு புள்ள முழிச்சிட்டான், உட்கார்ந்து பசி அமர்த்து. அமத்தி மூனு மணி நேரத்துக்கும் மேல ஆகிருச்சு, பிள்ளைக்கு தொண்டை உணர்ந்து போயிருக்கும் உட்கார்ந்து பசி அமர்த்து‘ என்று அதட்டல் போட்டார். “போங்கம்மா எனக்கு படுத்துக் கொடுக்கத்தான் வசதியா இருக்கு, உடம்பெல்லாம் வலிக்குது, நைட்டெல்லாம் நானு படுத்துத்தான் பீட் பண்ணினேன், நீங்க சொல்றது போல மூக்குல பால் ஏறலை” எனச் சொல்லிக்கொண்டே திரும்பி படுத்து தனது குழந்தைக்கு மீண்டும் பசியமர்த்த முனைந்தாள் நித்தியா. அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடித்ததும் திலோவாத்தான் இருக்கும் என்று நினைத்தபடி போய் கதவை திறந்தார். நினைத்தது போலவே திலோத்தமாவும் மருமகன் விக்ரமும் கையில் தங்கை நித்தியாவுக்கு பிறந்திருக்கும் மகனுக்கு அன்பின் பரிசாக கொடுக்க வாங்கிவந்த பரிசுகள் அடங்கிய ‘ஜஸ்ட்பார்ன் பேபி அங்காடியின் பிக்ஷாப்பர்’ பைகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். “திலோ வந்துட்டயா வா...வா...!” என்று கூறியவர், “வாங்க... வாங்க தம்பி” என்று மருமகனை வரவேற்று உள்ளே அவர்கள் வர ஒதுங்கி நின்றார் விசாலி. அந்த திரீ பி ஹைச் வீட்டினுள் தரைதளத்தில் இருந்த படுக்கை அறையை சுட்டி “கீழே எங்க ரூம்ல தான் நித்தியும் பிள்ளையும் இருக்காங்க, மாப்பிள்ளையை கூட்டிட்டு போய் பாரு, நல்ல வெயிலில் வந்திருக்கீங்க உங்களுக்கு ஜில்லுன்னு குடிக்க எடுத்துட்டு வாரேன்” என்று அடுப்படிக்குள் சென்றவர் மனதினுள் ‘இப்போதானே வந்திருக்காள், மாப்பிள்ளை கூட இல்லாத நேரம் பார்த்து பேசணும்’ என்று நினைத்துக்கொண்டார் ஏற்கனவே பாதாம் பால் ரெடி செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததை அவர்களுக்கு ஊற்றி எடுத்துக்கொண்டிருக்கும் போது இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஸ்டெல்லாவும் ஆல்பர்ட்டும் குழந்தையை பார்க்க வீட்டிற்கு வந்தார்கள். எனவே அவர்களுக்கும் சேர்ந்து குளிர்பானத்தை கண்ணாடி டம்ளரில் இட்டுநிரப்பி தட்டில் அடுக்கி எடுத்துக்கொண்டு வந்தார். அந்த அறைக்குள் நுழையும் போதே, பேபி பவுடர் மணமும் மற்றும் விசாலியின் மாமியார் கிழவியின் ஆலோசனையில் போட்டு விட்ட சாம்பிராணி வாடையும், பிள்ளையின் கையில் கட்டி விட்டிருந்த பேர்சொல்லாது மூலிகை வாடையுடன், சற்று முன்பு பிள்ளை பெற்றவளுக்கு செய்துகொடுத்த நாட்டுகோழி சூப் வாடை எல்லாம் சேர்ந்து, முட்டு வீட்டு குழந்தைகள் இருக்கும் இடத்தில் வரும் மணம் அவர் மூக்கில் ஏறியது. முன் காலத்திலேயே அதற்கு “பாபா வாசம்” என்று அந்த விசாலி பெயர் சூட்டியிருந்தார், ஆம், விசாலிக்கு கல்யாணம் முடிந்ததுக்கு பிந்தைய காலம் வேறுஉலகம், முன்காலம் வேறுஉலகமென இருவேறு உலகில் வாழ்வதாக எண்ணம். ஒரே பிறவியில் இருவேறு வாழ்கையில் அனுபவம் பெறுபவர்கள் இந்திய பெண்கள். முந்தைய உலகில் விசாலி அவரின் அக்காக்களுக்கு குழந்தைகள் பிறந்த காலத்தில் குழந்தையின் உடல் வாடையோடு அந்த அறையில் கமழும் பிள்ளை மருந்து வாசத்தையையும் சேர்ந்து ”பாபா வாடை”என்று பெயர் சூட்டி அந்த வாடையை ரசிக்கும் தன்மை கொண்டவராக இருந்தார். தனது மகளுக்கே மகள் பிறந்தாலும் அந்த பாப்பா வாடை அவருக்கு முன்பு போலவே இப்பொழுதும் ஒரு பரசவத்தை கொடுத்தது . ஆனால் அதை அனுபவிக்க முடியாதபடி வந்திருந்த ஸ்டெல்லா “திலோத்தமா, உன் தங்கச்சியே மகன் பெத்துக்கிட்டாள், நீ ஏன் இன்னும் பெத்துக்காம இருக்க? அதுஅது அந்தந்த காலத்தில நடக்கணும்” என்றவள் அங்கு அமர்ந்திருந்த விசாலியின் மாமியாரிடம் “பெரியம்மா, உங்களுக்குத் தெரியாததா, இருந்தாலும் இந்த காலத்து பிள்ளைங்க வேலைன்னு ஓடுறதில் கவனமா இருக்காங்க, ஓடி ஆடி சம்பாதிச்சு என்ன பிரயோஜனம்? வாழ்கையில் பிள்ளை இருந்தாத்தானே ஒரு பிடிப்பு வரும். இப்போ குழந்தை உண்டாகுறதுல நிறைய பிரச்சனை வருதாம் ஒன்னு ரெண்டு பேருக்குத்தான் நித்தியா போல கல்யாணம் ஆனதும் பிள்ளை தங்குதாம். மேலத்தெருவில இருக்கிற சித்திரா டாக்டர்ட்ட திலோவையும் அவள் மாப்பிள்ளையையும் கூட்டிட்டுப் போய் என்ன ஏதுன்னு பாருங்க. அந்த ஹாஸ்பிட்டலில் குழந்தை இல்லாம வருறவங்களுக்கு நல்ல டிரீட்மென்டு கொடுத்து நிறைய பேர் குழந்தை உண்டாகி இருக்காங்க” என்றார். அந்த ஸ்டெல்லா என்பவள் திலோவிடம் குழந்தை இல்லை என்ற பேச்சை ஆரம்பித்ததுமே அங்கு உட்கார்ந்திருந்த விக்ரம் அந்த இடத்தை விட்டு எழுந்து தனது மனைவி திலோவிடம் மட்டும் ஒரு தலை அசைவை கொடுத்து வெளியே சென்று விட்டார். விக்ரமுக்கும் குளிர்பானம் எடுத்து வந்திருந்த விசாலி, அதை குடிக்காமல் அங்கு எழுந்த பேச்சின் சாராம்சம் பிடிக்காமல் வெளியேறும் மருமகனை தடுத்து நிறுத்தவில்லை. அவரை சங்கடத்தில் மாட்டிவிட வேண்டாம் என்று நினைத்து தடுக்காமல் இருந்துவிட்டார். மேலும் ஸ்டெல்லாவின் பேச்சை மாற்றும் பொருட்டு “இந்தாங்க ஸ்டெல்லா வெயிலுக்கு இதமா ஜில்லுன்னு பாதாம்பால் கொண்டு வந்திருக்கேன் இதை குடிங்க, ஆமா உங்க மருமகளுக்கும் மகனுக்கும் பெரிய பிரச்சனையாமே ரெண்டுபேரும் டைவர்ஸுக்கு அப்ளை பண்ணியதா கேள்விப்பட்டேன்” என்று அவரின் வீட்டு பிரச்னையை முன்னெடுத்துப் பேசி அவரின் வாயைக் கிளறி தனது வீட்டு பிள்ளைகளின் பேச்சை பேச விடாமல் வாயடைக்க வைத்தார். “உங்களுக்கு என்ன விசாலி, ரெண்டும் பொம்பளை பிள்ளைகளா பெத்து வச்சிருக்கீங்க, இந்த காலத்தில் ஆம்பளை பிள்ளைங்களை பெத்தவங்க நிலைதான் ரொம்ப மோசமா இருக்கு, புருஷனை இந்த காலத்துப் பிள்ளைங்க ஆட்டிப் படைக்கிறாங்க, பூம் பூம் மாடு மாறி அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டணும்னு நினைக்கிறாங்க, வேலைக்கு போயி சம்பாதிக்கிற என் மகனுக்கு ஒழுங்கா சமைச்சுக்கூட போடமாட்றாள். பின்ன எதுக்கு மருமகள்னு அவள் இருக்கணும்?” என்றார். திலோத்தமாவுக்கு அவரின் பேச்சு எரிச்சலை கொடுத்ததால் “ஆண்ட்டி உங்க மகன் ரத்தினத்தோட வொய்ப் சென்ரல் கவர்மென்ட் போஸ்ட்ல இருக்கிறதா கேள்விப் பட்டேனே, அப்போ ரத்தினம் மட்டும்தான் வேலைக்கு போறாரா? உங்க மருமகள் வீட்டில சும்மா தான் இருக்காங்களா?” என்று கேட்டாள். பொதுவாக திலோ யாருடைய விஷயத்திலும் தலையிடமாட்டாள் ஆனால் வந்ததும் குழந்தை பெத்துக்காம இருந்ததுக்காக தன்னை கேள்வி கேட்டு வீட்டில் உள்ளவங்களை சங்கடப்படுத்தியதுக்கு பதிலுக்கு பதில் வச்சு செய்யணும் என்றே அக்கேள்வியை கேட்டாள். “வேலைக்கு அவள் போறதாலத்தான் இம்புட்டு திமிர், அதுதான் என் மகன் வேலைக்கும் போகவேணாம் ஒழுங்கா சமைச்சுப் போட முடியலைனா பேசாம வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டில இருன்னு சொல்லிட்டான், அவன் சொல்றதுலேயும் ஒரு நியாயம் இருக்குதுல்ல, அவனுக்கு சமைச்சுப் போட்டு கவனிச்சுக்கத்தானே கல்யாணமே பண்ணி வச்சேன்” என்றார். “என்ன ஸ்டெல்லா இப்படி சொல்லிட்டீங்க, இந்த காலத்தில் சென்ரல் கவர்மென்டில் வேலை கிடைக்கிறது எம்புட்டு பெரிய விஷயம் கஷ்டப்பட்டு படிச்சு எக்ஸாம் எழுதி கிடைச்ச வேலையை இப்படி பொசுக்குன்னு விடச்சொன்னா பிரச்சனை வரத்தானே செய்யும்” என்ற விசாலியிடம் “விசாலிக்கா, காலையில் நாலு, அஞ்சு மணிக்கு எழுத்து சமையலை முடிச்சிட்டு ஆபீசுக்கு கிளம்பிப் போகணும், நானும் டீச்சரா போன வருஷம் வரை வேலை பார்த்தவள் தானே, ஆனா என் புள்ள புருஷனுக்கு ஆக்கிப் போட்டுட்டுத்தானே வேலைக்கு போனேன்” என்றதும் திலோத்தமா “ஆண்ட்டி, நீங்க ரத்தினத்துக்கு கல்யாணம் முடிக்க முன்னாடி ஃப்ங்ஷன்ல நாம மீட் பண்றப்போ வீட்டுலேயும் ஸ்கூல்லேயும் வேலை செய்றதை சொல்லி எத்தனைவாட்டி பொலம்பி இருக்கீங்க, அப்படி இருக்கும் போது நீங்களே அந்த பொண்ணு வேலை செய்யலைன்னு குறை சொன்னா எப்படி?, ஏன் அவங்க சமையல் பண்ணாட்டி வீட்டில எல்லோரும் பட்டினியாவா இருந்துடுறீங்க? “ என்றாள். “இதென்ன திலோ இப்படி சொல்லிட்ட? அவள் பிரட்டோஸ்ட்டும், கான்பிலக்சும் காலையில சாப்பாடா சாப்பிடச்சொல்றாள், மதியம் பொரியல் காய்னு இல்லாம வெரைட்டி ரைஸ்ன்னு என்னத்தையாவது ஒன்னு சமைச்சுப் போடுறா, வேற சமைக்கச் சொன்னா நானும் உங்களை போல வேலைக்கு கிளம்பணும், வெரைட்டியா வேணும்னா என் கூட அடுப்படியில் ஹெல்புக்கு வாங்க இல்லைன்னா ஸ்விக்கில உங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் போட்டு சாப்பிடுங்கன்னு என் மகன்கிட்ட தெனாவெட்டா பேசுறா, நல்ல குடும்பத்துப் பெண்ணு பேசுற பேச்சா இது?” என்றார். அவர் அவ்வாறு பேச ஆரம்பித்ததும் தன மகள் டென்ஷனாகி மேலும் அவரை வார்த்தையில் வதைக்க ஆயத்தமானதை கண்ட விசாலி, “திலோ நீ கொஞ்சம் சும்மாயிரு” என்று அடக்கப் பார்த்தார். “எதுக்குமா என் வாயை அடைக்கிறீங்க? இவங்க மகனை செல்லமா வீட்டுவேலை செய்யவிடாம படிப்பு வேலைன்னு குறிக்கோளோடு வளர்த்தது போலத்தானே அந்தப் பொண்ணு வீட்டிலயும் வளர்த்திருப்பாங்க. டைவர்ஸ்ன்னு பேசி பூச்சாண்டி காட்டி அந்த பொண்ணை இவங்க இஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்க நினைக்கிறாங்க. முன்னாடி வடிவேலு சொன்னது போல எவ்வளவு அடிச்சாலும் இவள்கள் தாங்குவாங்கன்னு சொல்லி பொண்ணுங்களை வீட்டு ஆம்பளைங்க, மாமியார், பிள்ளைங்கன்னு கும்மிக்கிட்டு இருந்தாங்க. இப்போ பொண்ணுங்க ரொம்ப விவரம் ஆகிக்கிட்டு இருக்காங்க. என்னையும் உன்னைப்போல சக மனுஷியா புரிஞ்சு நடத்தி வச்சு வாழுறதா இருந்தா இருப்பேன், இந்த கல்லானாலும் கணவன்ற டயலாக்கு எல்லாம் என்கிட்ட எதிர்பார்க்காதன்னு உதரிட்டு போயிடுவாங்க. இப்படி தெளிவா பொண்ணுங்க அவங்க வாழ்கையை அவங்களே முடிவு செய்ய ஆரம்பிச்சதை உங்களை போல இத்தனைநாளா அடங்கி இருந்தவங்களாலேயும் ஆம்பளைன்ற திமிர் இருக்கிறவங்களாலேயும் தாங்கிக்க முடியலை. தூக்கி போட்டு மிதிக்க முதுகை காட்டலைன்னு கதறி கலாச்சாரம் அது இதுன்னுட்டு கரிச்சுக்கொட்டிட்டு இருந்தா உங்க மகன் கடைசி வரை தனி மனுஷனா நிக்க வேண்டியதுதான் ஆண்ட்டி” என்றாள். “விசாலிக்கா, திலோத்தமா இப்படி வாய் பேசிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் அவளும் வாழ்கையை இழந்துட்டு உங்க வீட்டில வந்து நிக்கப் போறாள், பொம்பளைன்னா ஒரு அடக்க ஒடுக்கம் இருக்கணும்னு அவளுக்கு கொஞ்சம் எடுத்துச்சொல்லுங்க” என்றார். “ஆண்ட்டி நானும் டைவர்ஸாகி அம்மா வீட்டுக்கு புருஷன் கூட வாழாம ஒன்டியா வந்துநின்னு கஷ்டப்படுத்தப் போறேன்னு அவங்களை பயம்காட்டுறீங்களா? தாங்காட், நீங்க நினைக்கிறது ஒருகாலமும் நடக்காது, ஏன்னா என் விக்ரம் அவரை போல என்னையும் சக மனுஷியா பார்த்து கவனிச்சுகிறார். நீங்க வந்ததும் என்கிட்ட நானு பிள்ளை பெத்துக்காம இருக்கிறதை கேள்வி கேட்டீங்கல்ல அதுக்கான பதிலையும், இப்போ சொல்றேன். நானும் அவரும் எங்க கேரியரை ஓரளவு ஸ்டேபிள் பண்ணியதுக்கு பிறகு குழந்தை பெத்துக்கிடணும்னு முடிவு பண்ணிட்டோம். அதுக்கு முன்னாடி நாங்க குழந்தை பெத்தா அம்மா, பாட்டி, விக்ரமோட அம்மான்னு எல்லோரும் எங்களுக்கு ஹெல்ப்புக்கு வருவாங்க ஆனா குழந்தையை முழுக்க நாங்க கவனிச்சு வளர்க்க முடியாம அவங்க யாராவது ஒருத்தர் துணையில் தான் நாங்க வளர்க்க முடியும். இப்போவரை என் அம்மாவும், விக்ரமோட அம்மாவும் பிள்ளைங்க எங்களுக்காகவே வாழ்ந்துட்டாங்க, இனிமேலாவது அவங்க அவங்க லைபை அவங்களுக்காக வாழணும். அதுமட்டுமில்ல எங்க பிள்ளையை நானும் விக்ரமும் முழுக்க முழுக்க கூட இருந்து வளர்க்க தோதாக கொஞ்சம் கெரியரில் மாறி மாறி பிரேக் எடுத்துக்கிற சூழலுக்கு வந்த பிறகுதான் குழந்தை பெத்துகணும்னு முடிவு எடுத்துருக்கோம். அடுத்த வருஷம் அதுக்கான சாத்தியம் எங்களுக்கு இருக்கு. இதை எல்லாம் உங்களுக்கு விளக்கிக்கிட்டு இருக்கணும்ற அவசியம் எனக்கு இல்லை, இருந்தாலும் நீங்க நான் டைவர்ஸ் பண்ணிட்டு வாழாம இருந்துருவேன்னு சொன்னீங்க, அதுக்குத்தான் நாங்க எப்படி புரிதலோடு வாழுறோம்னு சொல்ல வேண்டியதாகிடுச்சு” என்றாள். “திலோத்தமா, என்னதான் இருந்தாலும் புருஷனுக்கு ரெண்டுநாள் வேண்டியதை செய்யாம, ஒழுங்கா கேக்குறதை சமைச்சுக்கொடுக்காம இருந்தா உன் மாமியாரும் புருஷனும் உன்னை வச்சு வாழாம தொறந்தி விடத்தான் போறாங்க” என்றார். “இருங்க உங்களுக்கு நடந்த ஒரு விஷயத்தை சொல்றேன். பஞ்சாப் ஹரியானால ஒரு கேஸ் நடந்தது, பஞ்சாப் மக்களப் பத்தி கேள்விப் பட்டிருப்பீங்களே ராணுவத்துக்கு ஒரு மகன் விவசாயத்துக்கு ஒரு மகன் அப்படின்னு வாழுறவங்க பஞ்சாபிக்காரங்க. அமர்சிஸ்சிங்னு ஒரு மிலிட்ரிமேன். அவன் வருஷத்து ஒரு தடவையோ ரெண்டு தடவையோ தான் லீவுக்கு வீட்டுக்கு வருவார். வருறவர் ரொம்ப சந்தோஷமா சொந்த பந்தங்களோட தடா புடல்லா விருந்து எல்லா நாளும் வீட்டில பொண்டாட்டி சமைச்சுப் போட்டு சாப்பிட்டு லைப்பை என்ஜாய் பண்ணனும்னு நினைப்பார். ஒவ்வொரு தடவையும் லீவுக்கு வீட்டுக்கு வரும் தன்னோட கணவர் இப்படி கூட்டத்துக்கே சமைச்சுப்போட வச்சு எந்நேரமும் சமையல் அறையிலேயே, பாதி நாளுக்கு மேல தன்னை வேலை செய்ய வைக்கிறதில் அவரோட மனைவிக்கு பிடித்தம் இல்லாமையும் கோபமும் இருந்தது. இருந்தாலும் அமர்சிஸ்சிங் மனைவிக்கு பிடிக்காத வேலையை செய்ய கட்டாயப்படுத்தி நண்பர்களை விருந்துக்கு அழைத்து வந்து மனைவியை ஆக்கிப்போடச் சொல்றதை நிறுத்தலை. அதனால வந்தவங்க முன்னாடி என்னால இப்படி ஆக்கிக்கொட்ட முடியாதுன்னு அவரோட வொய்ப் சொல்லிட்டாங்க. புருஷன் பொண்டாட்டிக்கு இடையில் சமைக்காததை காரணம் வச்சு பெருசா சண்டை வந்துருச்சு. அமர்சிஸ்சிங் தன் வொய்பை அடிக்க போக கோபத்தில் புருஷனை பதிலுக்கு அந்த பொண்ணும் செருப்பவச்சு அடிச்சிருச்சு. அவமானப்பட்ட அமர்சிஸ்சிங் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போயிட்டார். அதுக்கு கோர்ட் என்ன பதில் சொல்லிச்சு தெரியுமா? சாப்பாடு ஆக்கலைன்னு சொல்லி எல்லாம் விவாகரத்து வாங்க முடியாது. அந்த பொண்ணு உங்களோடு சரி சமமா வாழ்கையை பகிர்ந்து வாழத்தான் வந்துருக்காங்க. சமைக்க முடியாதுன்னு அவங்க சொன்னா உங்களுக்குத் தேவையானதை நீங்களே சமைச்சுக்கிடலாம் அல்லது கடையில் வாங்கி சாபிட்டலாம். இதுகெல்லாம் விவாகாரத்து கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க தெரியுமா! அதுக்கு பிறகு அந்த அமர்சிஸ்சிங் சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் திரும்பவும் சமையல் செய்து கொடுக்கலை பிரன்ஸ் மத்தியில அவமானப்படுத்திட்டாள் செருப்ப வச்ச அடிச்சிட்டாள்னு சொல்லி டைவர்ஸ் கேட்டிருக்கார். ஆனால் அங்கேயும் இதெல்லா ஓர் காரணம்னு டைவர்ஸ் கொடுக்க முடியாது. ரெண்டு வருசமா நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கீங்க அதுக்காக வேணா டைவர்ஸ் தருகிறோம். நீண்டகாலம் புருஷன் பொண்டாட்டியா வாழாமல் பிரிஞ்சு இருந்திருக்கீங்க. ரெண்டுபேரும் பழையபடி சேர்ந்து வாழ முயலாமல் இருந்திருக்கீங்க அந்த காரணத்துக்காக மட்டுமே விவாகாரத்து வழங்குறோம்னு சொல்லி விவாகரத்து கொடுத்திருக்காங்க. இதுக்குப்பிறகும் புருஷனுக்கு ஆக்கிப் போடலை, அவனுக்கு டிரஸ் அயர்ன் பண்ணி வைக்கலை, வீட்டை சுத்தம் பண்ணலைன்னு அவள் மட்டுமே இந்த வேலையை செய்ய பிறந்தவள்னு சொல்றது நல்லா இல்லை. ஒருத்தரோட வாதத்துக்கு மருந்து உண்டு நான் மாறவே மாட்டேன் ஆம்பளை அப்படித்தான் இருப்பேன்னு பிடிவாதம் பண்ணிட்டு வீட்டில இருக்கிற பொண்டாட்டிக்கிட்ட உங்க மகன் எகனைக்கு மொகனையா பேசிக்கிட்டு விரக்தியிலேயே வாழ்ந்து வாழ்க்கையை முடிக்கிக்கிறதை லச்சியமா இருந்தா ஒன்னும் பண்ண முடியாது. வாழ்த்துக்கள் “ என்று கோபமாக பேசி முடித்தாள். அவள் பேசியதை கேட்ட ஸ்டெல்லா புருவச் சுழிப்புடன் தன் கணவருடன் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார். விசாலியோ தனது மனதினுள் மூத்தவள் திலோவிடம் எப்படியும் இந்த தடவை பேசி சண்டை போட்டாவது டாக்டரிடம் அழைத்துப் போய் ஏன் இன்னும் குழந்தை தங்கலைன்னு டெஸ்ட் பார்த்து அதற்கான மருத்துவம் பார்த்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்திருந்ததை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்தார். தன் மூத்த மகள் மிகவும் மாடர்னாக லைப் ஸ்டைலை கொண்டு போகிறே’னு குழந்தை பெற்றுக்கொள்ள முன்வராமல் இருக்கிறாளோ என்ற கவலைப்பட்டது வீண் எனப் புரிந்தது, என் வளர்ப்பு சோடை போகவில்லை என்ற ஆசுவாசம் உண்டானது. இருந்தாலும். “திலோ, இதென்ன இப்படி ஸ்டெலாக்கிட்ட பேசிட்ட, உன்னைய வாயாடின்னு எல்லார்கிட்டயும் சொல்லி வைக்கப்போறாள். கொஞ்சம் அடக்கி வாசி” என்றார். “அம்மா பேச வேண்டிய இடத்தில் பேசணும் நிமிர்ந்து நிக்க வேண்டிய இடத்தில் நிமிர்ந்து நிக்கணும். அதுதான் அழகு” என்றாள் திலோத்தமா. “அக்கா, அம்மா கிடக்குறாங்க நீ இப்படியே இருக்கா, என் பிள்ளையையும் உன்னைய போல போல்டா வளர்க்கணும்” என்றாள் நித்தியா. “வாலுக ரெண்டும் ஒன்னு கூடிருச்சு, இனி நான் பேச முடியுமா?” என்று விசாலி சொல்ல, அங்கு நிறைவான சிரிப்பு அலைகள் எழுந்தது. ---முற்றும்---

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.