திருக்குறளும் பொருட்குறளும்
நூல் பெயர் : திருக்குறளும் பொருட்குறளும் (குறள் வெண்பா)
நூல் வகைமை : குறள் வெண்பா
ஆசிரியர்: :க.சங்கரபாண்டியன்
முதற் பதிப்பு : மே, 2025
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு படைப்பு பதிப்பகம்
விலை: : 400
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோன்றியதாகக் கூறப்படும் திருக்குறள் நூலானது உலகப் புகழ்பெற்ற தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு உத்தரவேதம், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தெய்வநூல், முப்பால், தமிழ்மறை, ஈரடிநூல், வான்மறை, உலகப்பொதுமறை என்று பல சிறப்புப் பெயர்கள் உள்ளன. திருக்குறளானது வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை நூலாகவும் இருக்கிறது. திருக்குறள் சங்க இலக்கிய வரலாற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கின்றது. 1812-ஆம் ஆண்டு திருக்குறள் நூலானது முதல் முதலாக அச்சிடப்பட்டது.
அதன் பிறகு இதன் அருமை பெருமை காரணமாக உலகறிய வைக்க ஆங்கிலத்தில் 1840-ஆண்டு அச்சிடப்பட்டது. 1730ஆம் ஆண்டு ஐரோப்பிய மக்களுக்கு கவிஞர் வீரமாமுனிவர் லத்தின் மொழியில் திருக்குறளை அறிமுகப்படுத்தினார். ஆங்கிலத்தில் முதன்முதலாக திருக்குறளின் கருத்துகளை அறிமுகப்படுத்தியவர் கிண்டர்ஷிலே. அறத்துப்பால் இன்பத்துப்பால் பொருட்பால் ஆகிய முப்பாலும் சேர்த்து மொத்தம் 133 அதிகாரங்களும், 1330 குறள்களும் உள்ளன. திருக்குறளை திருவள்ளுவர் 14000 சொற்களில் பாடியுள்ளார். திருக்குறள் நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் குறள் வெண்பா எனும் வெண்பா வகையைச் சேர்ந்தது. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆன முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். இதுவரை திருக்குறள் நூலை மொத்தமாக 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இப்படிபட்ட சிறப்பு வாய்ந்த இந்நூலுக்கு விளக்கவுரை பலரும் எழுதி இருக்கின்றனர் இருப்பினும் விளக்கவுரையும் குறள் வெண்பா வடிவிலேயே எழுதி உருவாக்கி இருப்பதே ‘திருக்குறளும் பொருட்குறளும்’ எனும் இந்நூல்.