கவிச்சுடர் வேதா நாயக் – ஒரு அறிமுகம் ******************************************************** படைப்பு எனும் இந்த முகநூல் குழுமம் தொடங்கிய நாட்களிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் தத்தம் பாணிகளில் எழுதி முத்திரை பதித்து வருவது கண்கூடு. அந்த வரிசையில் இந்த மாதம் கவிச்சுடர் பெறும்படைப்பாளி வேதா நாயக் அவர்களைப் பற்றியும் படைப்பு குழுமத்தை ஆதரித்து வரும் படைப்பாளிகளுக்கு அறிமுகம் செய்ய அவசியமில்லை என்றாலும் நாள்தோறும் இந்த குடும்பத்தில் இணைந்துவந்துகொண்டிருக்கின்ற புதிய படைப்பாளிகளின் கவனத்துக்காக ஒரு அறிமுகக்கட்டுரை அவசியமாகிறது. கவிஞர் வேதா நாயக் இயற் பெயர் வேத நாயகம், வேலூர் அருகே உள்ள போளூர் கிராமத்தில் பிறந்தவர். வயது 41, இந்திய அளவில் பிரசித்தி பெறவே தன் பெயரை நாயக் என மாற்றிக் கொண்டார். அந்த அளவு இந்திய மரபில் விருப்புடையவர். நாற்பது வயதுடைய இவரின் எழுத்து எண்பது வயதின் அனுபவம் நிறைந்து காணப்படுவது இவருடைய எழுத்துக்கு ஒரு சான்று. அவரது தங்கை மகள் பெயர் ஹேமா. தனது தங்கை மகள் மேல் மிக்க நேசங்கொண்டவர். ஆதலால் தனது கவிதைகளை ஹேமா என்ற பெயரிழும் எழுதி வருபவர். மேலுமிவர் மஹாபாரதத்தில் அர்ஜூனன், பீமன் ஆகியோரின் வாழ்க்கையை ஒற்றி சிறுகதைகள் எழுதி வருகிறார் மேலும் இவர் சமஸ்கிருத மொழி இலக்கியத்தில் ஈடுபாடுடையுவர். இவரது பெரும்பாலான படைப்புகளில் சமஸ்கிருத மொழி சொற்கள் வர இவையே காரணம். திருவண்ணாமலை இவரது விருப்பத் தளம். அது போல் மலை பிரதேசங்களை மிகவும் விரும்புவார். திரைத்துறையிலும் ஈடுபாடுடைய வேதா, தற்சமயம் சில இயக்குனர்களோடு அவர்களது கதைவிவாதங்களிலும் பங்கேற்கிறார். தற்சமயம் சில படங்களில் பாடல் எழுதவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கோட்பாடுகள் மீது ஈடுபாடு இல்லாதவர். பெரும்பாலும் உணர்வின் மொழியையே கவிதைகளில் புதைப்பவர். நீர் நிலைகள் குறித்த பெருங்கட்டுரைகளை தனது முகநூலில் எழுதியுள்ளார். குறைந்த ஊதியத்தில் பணியாற்றினாலும், தினசரி முப்பது ரூபாய் என்ற கணக்கில் புத்தகங்களுக்காக சேமித்து வைத்து சென்னை புத்தகக் கண் காட்சியில்வருடந்தோறும் நூல்கள் வாங்குவார். அந்த அளவு இலக்கியத்தின் மேல் அதீத ஈடுபாடுடையுவர். வேனிற் காலங்களை பெரும்பாலும் வெறுக்கும் வேதா, தன் கவிதைகளில் வேனிற் கால எரிச்சல் பற்றி பெரிதும் குறைபடுகிறார். எழுத்தாளர்கள் ஜெயமோகன், ஜி. குப்புசாமி ஆகியோர் மீது அதிகஈடுபாடுடையவர். ஜப்பானிய சிறார் இலக்கியங்களையும் , காமிக்ஸ் புத்தகங்களையும் குழந்தையை போல் இன்றும் ஈடுபாடோடு தேடி வாங்கி படிப்பவர். இலக்கிய நாட்டத்தோடு வரும் இளந் தலைமுறைக்கு,வேதா படிக்கக் கூறும் நூல்களில் காமிக்ஸ்கள் நிச்சயம் அடங்கும். சங்க தமிழ் இலக்கியங்களில் வேதா கொண்ட ஈடுபாட்டிற்கு வேதாவின் மிதியடி, பச்சை குத்துவது போன்ற கட்டுரைகளே பெரும் உதாரணங்கள். படைப்பில் இவர் இயற்றிய மற்ற கவிதைகளைப் பற்றி முதலில் பார்ப்போம். கவிச்சுடர் வேதா நாயக் கவிதையும் அவர் பார்வையும் : ------------------------------------------------------------------------ மென்மையின் சூட்டை குளிர்வித்தல் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நான்கைந்துகளை அடைக்கக் கொள்ளுமாறு சாணம் மெழுகிய உள்ளறை, எச்சத்தினை விளக்குமாற்றின் அடிக்கட்டையில் அழுத்தி எடுக்க முயன்றும் இன்னுங் கசப்பாய் அடியில் படிந்திருத்தலால் கிழிந்த புத்தகங்களின் கனத்த அட்டைப்பாவி நாளான செய்தித்தாள் மேற்பரத்தி, சுவாச இடையூறு ஏற்படா வண்ணம் வளி நுழைய சின்னஞ்சிறு இடைவெளி, மூடாப்புக்காய் இரும்புத் தகடு, அதன் மேல் சாற்ற கருங்கல் பலகை(தேடுவதொன்றும் அவ்வளவு எளிதல்ல) என முன் தயாரிப்புகளை தகர்த்தெறிகின்றன வயலில் நெற்கதிர்களை தின்று கொழுத்த வெள்ளெலிகள்; கரும்புத் தோட்டத்தில் நள்ளிரவில் அடிவயிற்றை கலக்கும் குரலில் ஊளையிடும் குள்ள நரிகள்; ஆங்காங்கே மேயும் பாம்புகளென இத்தனைத் தடைகளையும் தாண்டியான பின் பகல்களில் கோழியை மிதிக்கும் சேவல்களும் காபந்து பண்ணிக்கொள்கின்றன பரஸ்பரம்..., இருள்சாயத்துவங்கும் நேரத்திற்கு வெகு அருகே கூச்சலிடுவாள் அம்மா' வழக்கமா வெக்கற இடத்துல காணோம், போய் தேடுங்க'., சனியன் பிடிச்ச கோழி இட்டிருப்பதெல்லாம் கத்தாழை செடி அருகேயும், ஆள் நுழைய இயலா முள் நிரம்பிய புதராயும், நெடிது வளர்ந்த புற்றின் ஓரமாகவும் தான் என்பது எத்தனை அபஸ்வரமானது என முட்டையை உடைத்து ஒரே வாயில் விழுங்கி விட்டு தேகப்பயற்சி செய்பவனுக்கு தெரியவா போகிறது? ஒரு கவிதையின் வெற்றி என்பது சொல்லாடலின் சூட்சமத்தில் இருக்கிறது.அதை சரியாக பயன் படுத்தும் போது கவிதையின் வெற்றியை பார்க்க நேரிடலம்.சில கவிதைகளை கேள்வியில் முடிப்பது சிந்தனை தூண்டும் செயலாகும்.இன்னும் இந்த உலகத்திற்கு இரண்டு வகை யான மனிதர்கள் மட்டுமே தேவை. ஒன்றுகேள்வியை கேட்பவர்கள்.இன்னொன்று கேள்விக்கான பதிலை தேடிகொண்டே இருப்பவர்கள் இப்படி கேள்விகளையும் கேள்விக்கான தேடல்களையும் கொண்டவர் தான் வேதா. ------------------------------------ வினோதரச மகரந்தத்துகள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ வீட்டிலிருந்து கொணர மறந்த இளைஞனொருவன் சட்டைக்காலரை கைக்குட்டையென பாவித்து அவசரமாய் வழியும் வியர்வையை அழிக்கிறான். குடை எடுத்துவர மறந்த எழுபது வயது மனைவியை தூஷித்தபடி அண்ணாந்தபடி பார்த்தவாறு இருக்க வைத்து கண்களில் சொட்டு மருந்தை விடுகிறான் ஒரு கிழவன். இலவச இணைப்பின் உபயத்தில் நீண்ட நேரமாய் கைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் மாணவியானவள் செவி, கன்னம் வழிஒழுகிய வியர்வையை கைபேசியின் திரை முழுக்க ஒட்டிக் கொண்டிருப்பதை கண்ணுற்று அசூயையாய் பிருஷ்டத்தில் தேய்த்து மீண்டும் உரையாடலை தொடர்கிறாள். வெள்ளரிப் பிஞ்சுகளை நெடுக்கக் கீறி உப்பு மிளகு தடவி விற்பவன் சட்டையின் ஐந்து பொத்தான்களை கழற்றி விட்டு ஐஸ்கிரீம் கடையிலிருந்து பனிக்கட்டிகளை வாங்கி சிறு துண்டில் முடிச்சிட்டு கன்னத்திலும், மார்பிலும் அறைந்து கொள்கிறான். குளிர் சாதனம் பொருத்தப்பட்ட காரின் உள்ளே பசி கிள்ளும் வயிற்றோடு பணக்காரத் தம்பதிகள் சாலையோர உணவக பசியாறலுக்காக கதவு திறக்கையில் அனற் காற்று முகத்தில் அறையப்பெற்று ஸ்தம்பித்து இரண்டு கணங்கள் தயங்கிப்பின் வெளிவருகிறார்கள். சிறு குழந்தை ஒன்றின் வியர்த்தலை சேலைத் தலைப்பில் அழுந்தத் துடைத்த பின் பாலியஸ்டரின் வெம்மையில் மேலும் வீறிட்டு அழுவதை தாளாமல் கண்கள் பனிக்க செய்வதறியாமல் திகைக்கிறாள் தாயொருவள். ஜன்னலோர இருக்கைக்கு தாவியேறி அமர்ந்த பின் வெயிலின் வெம்மையில் மூச்சுத்திணறி இத காற்றுக்கேங்கிய நிறைசூலிக்கென விட்டுக்கொடுக்கும் ஒரு தறுதலைக்காகவேனும் என்றோ ஒரு நாள் மழை பெய்யக் கூடும். கவிதையை படித்துக்கொண்டே இருக்கும் போது அதன் காட்சிகளை கண்முன்னே பார்க்குமாறு எழுதுவதென்பது மிகச்சிறந்த ஆளுமைதிறன். ஒரு பேச்சாளர் பேசும் போது எப்படி அவை முழுக்கஆளுமை செய்கிறாரோ அப்படியே தான் கவிஞர்களும் படிக்கும்போது கவிதையை நடந்துக்கொண்டிருக்கும் செயல் போல் உணர்த்தி விடும் திறமை மிக்கவராக இருக்க வேண்டும். அப்படியான திறன் கொண்டவர் தான் நம் வேதா. இவரின் தீரா காதல் மனிதர்களை விட அதிகமாய் புத்தகத்திடம்தான் செலவு செய்கிறார். ஒரு மீனும், ஒரு பறவையும் எப்போதும் தடயங்களை விட்டுச் செல்வதில்லை வேதாவின் பார்வைக்கோணேம் மிக அழகான ஆழமான படிமத்தை போர்த்திக் கொண்டிருக்கும்.வேதா நல்ல கவிஞன்,தேர்ந்த வாசிப்பு மிக்கவர் என்பதைவிட அவர் நல்ல புகைப்பட ரசனையாளர் கூட இவர்கவிதையில் பதியப்படும் படங்கள் வித்தியாசம் கொண்டவை எனப்பதைவிட பிரம்மாண்டம் நிறைந்தவை. கவிதைகளைவிட புகைப்படத்திற்கான தேடல் நேரம் அதிகம் என்பதை பார்க்கும் போதே அனுமானித்துக் கொள்ளலாம். "சட்டகத்தின் இருப்பிடமும் குழைந்த சோற்றுப் பருக்கையும்"என்ற கவியதையின் மூலம் நமக்கு சொல்லித்தருகிறார்... "சில ஓவியங்கள் உங்களது பார்வைக்குப் பட்டு விழிகளைத் துளைத்து பின் மண்டை வழியே வெளியேறி விடத்தான் துடிக்கிறது" என்று தொடங்கும் இக்கவிதையில் உலக கவிஞர்களின் உயர்ந்த பார்வையின் வரிசைக்கு நம்மை அழைத்து போகிறார்... இவரின் சில உலகத்தரம் வாய்ந்த ஆளுமை நிறைந்த கவிதைகளை உங்களுக்காக மீண்டும் சமர்ப்பிக்கிறோம்... ஒரு நத்தையை, ஆமையைப் போல் உள்ளுக்கிழுத்தலில் கழுத்தோரங்களிலும், கைகளிலும் சிராய்ப்பு ஏற்படுகிறது.., ஒரு பூனையை, புலியைப் போல் பதுங்குகையில் பிருஷ்டம் முட்களால் குத்தப்படுகிறது.., அரிமா போல் கர்ச்சிக்க முனைகையில் சிசு தேம்புவது போல் குரலெழும்புகிறது.., ஒரு வரையாடு உச்சியை அடைய தம் கால்களை எவ்வாறு லாவகத்துடன் பயன்படுத்துகிறதோ அதே போல் நகலெடுத்தலில் சில சிக்கல்கள் இருப்பதால் அசலின் மூலமாய் எல்லாம் இழப்பதென்றாலும் ஏற்பே. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தீர்க்கவியலா நோயின் ஒற்றைக் குரைப்பொலி கைகளை இறுகப்பற்றி மெலிதாய் நீவி ஒன்றுமில்லை பயப்படும்படி எனவும்., கண்கள் மூடி பிதற்றும் வார்த்தைகளை அருகமர்ந்து அணைப்பதே போலச் செய்து உம் ' காரத்தை அதிகப்படியாய் செவிகளில் படும்படி ஒலிக்க செய வேண்டும்., வேண்டுமெனில் ஆடைகளைத் தளர்த்தி வியர்வை துளிர்க்கும் இடங்களை குறிவைத்து பனை மட்டை விசிறியால் ஆசுவாசப்படுத்தலாம்... கண்டிப்பாக மின் விசிறி பயன்படுத்துதல் தவிர்க்கப்படுகிறது.., உங்களது அன்புக்குகந்தவர் எனில் சில நிமிடங்கள் அணைத்தபடி உடன் படுத்திருப்பது சாலச் சிறந்தது... விடுபட்டு எழுந்து 'உனது நோய்மை என்னையும் கபளீகரம் செய்து விட்டது பார்' என நம்மை தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொள்ளச் செய்யலாம்.., படுக்கையிலிருந்து எழ முயற்சித்து தளர்ந்து கீழே விழ நேர்ந்தால் கரம் நீட்டி உறுதியான விரலில் ஏதோ ஒன்றை நீட்டி பிடித்தெழும்ப வைத்து காதோரம் ' உனது வெளிறிய உதடையும்; நடுங்கும் கால்களையும் , பஞ்சடைத்த செவிகளையும், குழைந்த நீர் சேர்ந்த விழிகளையும் நான் முன்பு பெற்றிருந்தேன், இப்போது கனவு போல் எனக்கு தெரிவது போல் நீயும் விரைவில் தெளிவாய்' என்று தெளிவாய் சொல்லி விடலாம்.., மருந்தெனக் கொள்வது மனம் எனும் நாணல் சூறைக்கு வளைந்து தருதலாம். -------------------------- இசைக்கும் எனக்கும் யாதொரு இணைப்புமில்லை... பிணக்குமில்லை. கேட்பதை உள்வாங்க நேரமுமில்லை... போர் நிகழ்கிறது, காற்றின் ஈரப்பதம் கூட வற்றி தன்நிலை இழக்கிறது... நின்ற இடத்திலேயே தலையுடன் காதையும் ஆட்டியபடி உடல் நடுங்க நின்றிருக்கும் வயோதிக நாய் என்னென்ன நினைத்துக் கொண்டிருக்குமோ அறியேன்... மனக்கண்ணில் ரொட்டிகளும், என்புத் துண்டுகளாக மிதக்கும் காட்சி வரும் வரை அவ்விடத்தை விட்டு நகராமல் இருக்கும் என்பது நிச்சயமாகையில் அந்நாயும் நானும் சந்திக்கும் புள்ளியிலிருந்து விலகி, எனைப் பரவசப்படுத்தும் இசைக் கோர்வை ஒன்றுக்காக ஏங்கி நின்ற இடத்திலிருந்து விலகாமல் காத்திருக்கும் பொருளீட்டும் பெயரற்ற அறிவிலிக்கு என்ன பெயர்? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஆதுர மொழிகள் தூவிப் பொழிந்து சிறிது, சிறிதாக உறைந்த நிலையை உருக்கலாமென எண்ணம் ஏற்றி வெவ்வேறு இடங்களுக்கு, வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு எனது மனநிலைகளில் கைப்பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு அலைந்தேன்... உணவகங்கள், நடைபாதைகள், திரையரங்கம், பேருந்து நிறுத்தங்கள், கடலோரங்கள், ஆறுகள் என... ஏதோ ஓர் அற்பக் காரணத்தை முன்னிறுத்தி அதற்கு பின்பு உறுமும் புலியாய் பதுங்கிக் கிடந்து முகம் தூக்கி வைத்திருப்பவளை சமாதானங் கொள்ள எந்த ஆயுதமும் சரியாய் செயற்படவில்லை... கொஞ்சங் கொஞ்சமாய்ச் சூடேறி சோற்றுலையின் கொதிநிலைக்கு ஒவ்வொரு நாளாய் மெருகேறும் தங்கமாய் ஆகிறாள்... கை நிறைய கூழாங்கற்கள் நிரப்பி சறுக்கு மரத்தின் மேல் முனையில் கடினப்பட்டு மேலேறி உருட்டி விட்டபின் கடகடத்து வழுக்கி இன்னும் மூளியாகும் அவசரத்தோடு தரை மேல் சிதறும் ஒலியால் குலைந்த அவளை ஆற்றுப்படுத்திப் புன்னகைக்க செய்தது குழந்தைகள் விளையாடும் பூங்கா ஒன்றில்தான் என்பதை நினைவு கூர்கிறேன். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இப்படி பல்லாயிரக்கணக்கான நவீன கவிதைகளை எழுதி இந்த காலத்தில் இவருக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு நவீன இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு உலகத்தரம் வாய்ந்த எழுத்தாளர் இவர் என்பது இவரின் எழுத்துக்களே சொல்லும்... இந்த இரசனையான எழுத்துக்களின் முன் பிரம்மித்து நிற்கும் படைப்புக் குழுமம் கவிச்சுடர் வேதா நாயக் அவர்களை வாழ்த்தி வருங்கால இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்று அவரது எழுத்துக்கள் உலகெங்கும் பவனி வரவும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகிறது !! வாழ்த்துக்கள் கவிச்சுடர் வேதா நாயக் வளர்வோம் வளர்ப்போம், படைப்பு குழுமம்.
Showing 781 - 800 of 806 ( for page 40 )