logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் ரா.ராஜசேகர்

அகத்தியன் கமண்டலத்திற்குள் காவிரியை அடக்கியது போல்தான் கவிதைகள் இருக்கவேண்டும். கமண்டலம் சிறியதென்றாலும் அதனுள்ளிருக்கும் அகண்டக்காவிரி ஆயிரம் கதைகளைத் தேக்கி வைத்திருக்கும். அப்படியொரு கவிதைதான் கவிஞர் ரா. ராஜசேகர் அவர்களின் இறகுதிர்தலின் பின்னும் என்ற கவிதை சிறக்கிறது...


மரக்கிளைகளில் 
ஊஞ்சலாடும் கூடொன்றில்
விடப்பட்டிருந்த இறகுகள் சில

பறவைகளின் வசித்தலை
சொல்லிக்கொண்டே இருந்தன
கோடிட்ட இடங்களை
நிரப்புதலைப்போல எப்போதும் 

கலவியின் போதுதிர்ந்ததா?
கவலையினாலுதிர்ந்ததா?
குளிரின் நடுக்கத்திலா?
கொடுவெயிலின் புழுக்கத்திலா?

இறகுதிர்தலின் பின்னும்
என்னென்னவோ... 

மே  மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப் பெறும் கவிஞர் ரா. ராஜசேகர் செந்தாரப்பட்டி சேலத்தை சேர்ந்தவர். படித்தது ஆங்கில இலக்கியம் என்றாலும் ஆர்வம் தமிழின்பால்தான். 

சென்னை மாலை முரசு இதழில் 2 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணி புரிந்தவர் திரைத்துறை ஆர்வத்தின் காரணமாக இயக்குனர் துறையில் தற்போது இயங்கி வருகிறார். 

 என்னம்மா கண்ணு, சார்லி சாப்ளின், திருமலை, சுள்ளான் மற்றும் ஆதி படங்களில் பணிபுரிந்துள்ளார். ஜிப்பா ஜிமிக்கி என்றத் திரைப்படம் கவிஞர் இயக்கியதுதான். அது மட்டுமில்லாமல் ட்ராஃபிக் ராமசமி படத்திற்கு வசனம் எழுதியுள்ள கவிஞர் தொடர்ந்து, சசிகுமார் நடிக்கும் ஒரு படத்திற்கும் மற்றும் விமல் நடிக்கும் ஒரு படத்திற்கும் வசனம் எழுதி முடித்திருக்கிறார்..

கல்லூரி காலத்தில் பிள்ளைக்கிறுக்கலாக 'சிம்மாசனப் பூக்கள்' என்னும் ஒரு கவிதை தொகுப்பை எழுதி, வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அணிந்துரையுடன் வெளியிட்டதாகவும் ஆனாலும் தன்னிடம் அதன் ஒரு படிக்கூட இல்லையென்றும் வருத்தபடுகிறார்...  

இனி கவிஞரின் சில கவிதைகளைக் காண்போம்:

தவறான மனிதர்களைக் காட்டு மிராண்டி என்றும் பழமையைப் பேசும் வாழ்க்கையை மீண்டும் கற்காலத்திற்குப் போகிறோம் என்று கிண்டலடிப்பதும் இப்போது சாஜமாகிவிட்டது. ஆனால் காட்டில் வாழ்ந்த ஆதி மனித வாழ்க்கை இப்போதுள்ள நாகரீக வாழ்க்கையைவிட அப்படி என்ன கேவலமாகிவிட்டது? கள்ளமில்லா நேயம் காட்டு மிராண்டிகளாகத் தெரிவது இன்றைய நாகரீகத்தின் அபத்தம் என்பதைத் தவிர வேறில்லை... ஆதிகாலத்திற்குள் நுழையும் கவிஞரோடு நாமும் நுழைவோம் வாருங்கள்...

மீண்டுமொரு கற்காலத்திற்கு...
-----------------------------------------------------

பழைய உலகிற்கு(ள்) பிரவேசம்
மீண்டுமொரு கற்காலத்திற்கு
நடந்தோ பறந்தோ ஊர்ந்தோ
பயணமுறையில் பாதகமின்றி
மூளைக்குள் ஏகும் பயணம்
முடிவிலிதான் எப்போதும்

வார்த்தைகள் முளைக்காத
ஒலியுகம்
மொழிக்கூச்சலற்ற சப்தலோகம்

வெயிலில் குளித்து
மழையால் துவட்டி
காற்றால் உலர்த்தி
காற்றையே உடுத்தி
ஆடைகள் தொலைந்த 
அழகிய நிர்வாணம்
காம அருவியில் குளித்தும்
கற்பழிப்பறுத்த கவின்மனம்

நிழல்வீடுகளில் தங்கி
நிஜமாய் தூங்கி
கனவுகளை மொழிபெயர்க்காமல்
கதவுகளற்ற மூளையில்
திசைகள் திறக்க
அறிவு தெரியாத - தெளியாத மாசற்றதொரு மனம்

பழங்கள் தின்று
கிழங்குகள் மென்று
விலங்குகள் உண்டு
உணவுக்கட்டுப்பாட்டுப்
போலிகளை உடைத்து(ம்)

நெருப்பைச் சீண்டி
நெருப்பைத் தீண்டி
நிஜத்தை தாண்டி

யாரையும் பெயர்சொல்லி அழைத்து
பேதம் பிரசவிக்காது
வேதம் சாதம் சமைக்காது
சாதிகள் வைத்து தைக்காது
சலனமற்ற சனம் சமைத்து

நிலங்களை ஆளாமல்
நினைவுகளில் வாழாமல்

நிர்வாணமாய் வாழ்ந்து
நிர்வாணம்போல வாழ்ந்து
திமிரும் திறமையும் தேக்காத
திடதேசமொன்று செய்ய

பழைய உலகிற்குள் பிரவேசம்
மீண்டுமொரு கற்காலத்திற்கு
நடந்தோ பறந்தோ ஊர்ந்தோ
பயணமுறையில் பாதகமின்றி
மூளைக்குள் ஏகும் பயணம்
முடிவிலிதான் எப்போதும்

----

உடையும் நீர்க்குமிழிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இசையை கேடும் கவிஞனின் மணம் இசையின் ஆலாபனை...

அடராழத் திரவத்தினுள்ளே
காற்றுக் குமிழ்கள் உடைவதில்
புதிது புதிதாய்
வெவ்வேறு இசையொலிகள்

மெல்லிய வயலின்
மயங்குகிறது திரவம்

வழியும் வீணை
நனைக்கிறது திரவம்

கசியும் புல்லாங்குழலில்
தலையாட்டுகிறது திரவம்

உதிரும் மகுடியில்
மயங்கிவழிகிறது திரவம்

அதிரும் பறையில்
எழுந்தாடுகிறது திரவம்

உடுக்கை,பம்பை,கொம்பு,
பியானோ,ட்ரம்பெட் என
இன்னும் இன்னும்
ஒவ்வோர் இசைக்கருவிக்கேற்ப
வெவ்வேறசைவில் திரவம்

எல்லாக் கருவிகளும்
ஒருசேர இசைக்கப்பட
அதிர்வதா?
அசைவதா?
வழிவதா?
எழுவதா?
மயங்குவதா?

உறைகிறது திரவம்
சந்தோசக் குழப்பத்தில்
பரம்பரைப் பழக்க மேலீட்டில்

-----

சுதந்திரமாகக் கால்கொண்டு நடந்த நதிகள் இப்போது காலுடைந்து ஆங்காங்கே முடங்கி கிடக்கின்றன... பாதைகளை மறிக்கும் தடைகளும் அதிகம்.. அந்த ஊடாக நுழையும் கயிறின் பெயரறியாக் கவிஞனின் புலம்பல்...

இப்போதெல்லாம் கயிறொன்று தெரிகிறது
கண்ணுக்குப் புலப்படாமல்

கரைகளறுக்கும் காட்டாறைக்கூட
கரைதாண்டவிடாமல் கைகட்ட வைக்கிறது
கட்டிப்போடாமல் 

ஊடறுத்து உயரும்
உட்கழிவுகளையெல்லாம்
உள்நுழைவாயிலேயே போடுகிறது
உடைத்து உருத்தெரியாமல்

இக்கயிறொன்றின் பெயர் தேடித்தேடித் தோல்விதான்

இருந்தும்
என் நதியின் எல்லா நீரும்
முகம் காட்டும் கண்ணாடி
அசுத்தப்படுத்தாதீர்கள் எச்சரிக்கை இல்லாமலே
புரிகிறது எல்லோருக்கும் 

-------
சொற்களின் கூட்டத்தில் தொலையாதவன் கவிஞனாகவே இருக்கமுடியாது... சில சொற்கள் மழைப்பூக்களாய் விழுந்து சிலிர்க்கும் சில சொற்கள் வெயிலின் கீற்றாய் தகிக்கும்...மொழி வெளியில் காதலைத் தேடுகிறவன்... சொற்கூட்டங்களில் புதைவது அதிசயமில்லை...

சிறுமழைத் தூறலின் பொடிநடையாய்
பெருமழைத் தூறலின்
பேச்சரட்டையாய்
உன் மொழியாடலின் மடியில்
சிறுமழலையாகும் சொற்கூட்டம்

சில சொற்களின் கைகளில்
மழைப்பூக்கள்

சில சொற்களின் முகங்களில்
வெயிலொளிக் கீற்றுகள்

சில சொற்களின் வெளியில்
புதிதாய் பல வான்வெளிகள்

அன்பில் நனைந்த சொற்களில்
ஈரம் சொட்டினாலும் நடுக்கமில்லை

சினமூறிய சொற்களில்கூட
வெப்பம் துடைத்த குளிர்மூட்டம்

முரண்களின் பேரழகான 
உன் மொழியாடல் கடன்பெற
என்ன செய்ய வேண்டுமுனக்கு?

உன் முகவரித் தேடுகிறேன்
மொழிவெளியில்

மூளைக் கர்ப்பத்துடன் 
உனையேப் பிரசவித்துவிட 
எத்தனிக்கிறேன்
எதுவும் இயலாதெனில்

----------

மணற் துகளொன்றை கையிலெடுத்து விழித்திரைமுன் வைத்து விரிவாகப் பார்க்கிறான். என்ன அதிசயம்! அதற்குள்ளும் துளைகள் பல்கியிருக்கின்றன... அதற்குள் ஊடுருவுகிறான் கவிஞன்... ஒருத்துளையில் மலையொன்றும் ஒருத்துளையில் கடலொன்றும் இருக்கிறது... மற்றுமொரு துளையில் பூமியே கைகால் நீட்டி அமர்ந்திருக்கிறது...காற்றின் துண்டொன்று ஒடு துளையிலும் மழைத்துளிகளின் கலைடாஸ்கோப் சித்திரங்கள் வேறொருத் துளையிலும்...அதில் கவிஞனின் மகளும் விலையாடுகிறாள் இந்தக் கவிதையின் வழியாக....

மணற்பரப்பில் 
ஒரு மனப்பரிசோதனை

துகள்மணலொன்றைத்
தூக்கிப் பிடித்தேன்
விழித்திரை முன்

துகள்மணலின் துளைகள் பெரிது பெரிதாக

ஒரு துளையில்
மலையொன்று ஓய்வெடுத்தது

மறுதுளையில்
பாதிக் கடலொன்று
பாதித் துயிலில்

இன்னொரு துளையில்
பூமி கைகால் நீட்டி
ஆர்ப்பாட்டமாக அமர்ந்த நிலையில்

வேறொரு துளையில்
காற்றின் துண்டொன்று
கழைக்கூத்தாட்டக் கயிறில்

கண்ணினின்று 
மில்லிமீட்டர் தொலைவுக்கு
நகர்த்திய துகள்மணலில்

மழைத்துளிகளின்
கலைடாஸ்கோப் விளையாட்டு

ஒவ்வொரு துகள்துளையாக
உருட்ட உருட்ட
என் மகள் வந்து சிரித்தாள்
ஒரு துளையில்

மணற்துகளது
மலைப் பெருந்துகளானது
கைவிரலிடுக்கிலேயே

மகளிடம் சொன்னேன் :

ஒவ்வொரு மணற்துகள் துளையிலும் 
சென்றமர்ந்து சிரி
மணற்துகள்களெல்லாம்
மலைகளாகி மகிழட்டுமென
-----
சுருக்கங்களை நீவிட்டு நெகிழும் மனதில் எத்தனை ஆர்பாட்டங்கள்....


தோல் சுருங்கிய மனதில்
நீந்தும் நினைவுகள்
சுருக்கங்களை உதைத்தபடி
கூக்குரலெழுப்பும் குதூகலத்தில்

வளர்சிதை மாற்றத்தில்
சுருங்கிய தோலுரித்து
புதுத்தோல் வளர்க்கும் நாழிகைகளில் மனசு

சுருக்கங்கள் நீக்கும் சலவைக்காரர்கள்
புதையுண்டும் மறந்தும் மறைந்தும்
உள் அடியாழத்தில்

சுருக்கமற்றத் தக்கைக் குடுவைகள்
மிதவைக் கூட்டமாய்
ஊர்ந்தும் யோசித்தும் மேலெழுந்தும்
காற்றுக்குமிழ்கள் தேக்கியபடி

தக்கைக்கும் தண்ணீருக்கும்
ஒரே நேரத்தில் சுருக்கங்கள்
ஏதோ ஒரு மீனின் சொடுக்கலில்

சுருக்கங்களும் எப்போதும்
சூழல் கைதிகளே
-------

கதவுகளுக்கும் வெவ்வேறு முகங்கள் இருப்பதாக உணரும் கவிஞன் அதனிடமே பேச்சு வார்த்தை நிகழ்த்துகிறான்.. நீ மரமாய் போனதால் இந்த நிலையென்று அதுவும் புலம்புகிறது...

இந்தக் கதவிற்குத்தான்
எத்தனை முகம்

குடிசையில் குனிந்து பார்க்கும்
அரண்மனையில் 
பிரும்மாண்டம் பேசும்
கடைகளில் வர்த்தகம் செய்யும்
இரவில் காமம் கசியவிடும்
பகலில் ஒளியுடன் பேச்சுவார்த்தை
சாத்தலுக்கேற்ப சத்தம் மாற்றும்
வாய்ப்பமைகையில் திறக்கும்
வாய்ப்பு வழுக்குகையில் அடைக்கும்

எப்படி இப்படி?
கதவிடம் கேட்டால்...

மரத்தைப் பேச வைக்கும்
உன் மனமே காரணம் மனிதா
மற்றபடி
நானெப்போதும் மரமே
மனமும் குணமும் மாற்றுவதில்லை
உன்னைப் போல

மரக்கதவையே நோக்குகையில்

மனதிற்குள்
மரத்தாலாகாத கதவொன்று
திறந்து மூடி திமிர் காட்டியது
------

கவிஞரின் மேலும் சில கவிதைகள்....

திமில்மொழியின் மழைத்துளிகள்
----------------------------------------------------------

வெயில்மழையின் வேகப்பொழிதலில்
பிரவாகமெடுத்தோடும் பெருவெள்ளம்
என்வீட்டின் நடுவறையில் 

உன் குரலில் நனைந்ததாகவே
நிஜமழையின் நீர்த்துளிகளெல்லாம்
ஈரமொழியில் 
என் பெயர் சொல்லியபடியே

வெப்பக்குதிரைகளின் மீதான சவாரி
என் பயணம் எப்போதும்
பாலைநிலக் குரலோசையில்
பனிமுட்டைகள் சேமிக்கிறாய் 
என் குதிரைகளின் குளம்படிகளில்

நெல்லிக்கனி தந்த கிறுக்கன்பு
கிழவிக்கும் ராஜாவுக்குமிடையே
உனக்குமெனக்குமானதைப் போல

பால்வேறுபாடறுத்தோடுகிறது
திமில்மொழி மழைத்துளிகள்
திமிர்க்கூச்சலிட்டபடியே

-----------

சாலையின் உரையாடல்
----------------------

ரயிலின் கூவலில்
குயிலின் குரல்
குயிலின் கூவலில்
ரயில்நீள் சத்தம்

எது எதனிடத்தில்
மாறினாலும்
நீ நீயாகவே
நான் நானாகவே

தூரங்களில் தொடர்ந்திணையும் தார்ச்சாலையின்
இருபுள்ளிகள் எப்போது
சந்தித்திருக்கின்றன?
நேருக்கு நேர்
இணைப்பது மட்டுமே
எவரெவரின் பயணத்தையோ

உன் புள்ளியில் நீயும்
என் புள்ளியில் நானும்
அடர் ஸ்திரம் பேசியபடி நிற்க
நம் நேரிய பயணப்புள்ளிகளில்
நிறைய குரல்கள்
இடம் மாறியும் மாறாமலும்


------------

நிலைப்படி மீதான...
------------------------------------

வாசற்கால் மீதும் 
நிலைப்படி மீதும்
நிற்பதே இல்லை நீள்காதல்

வருவதும் போவதும்
மனிதர்கள் மட்டுமே
இதன் வழியே

மனங்கள் மட்டும்
சிலவேளைகளில் வெளியே
செருப்புகளுடன் 
சிலவேளைகளில் உள்ளே
விருந்துணவுடன்

வைத்துக்கொள்வதே இல்லை
வாசற்காலும் நிலைப்படியும்
எதையும் எப்போதும் மனதில்

எதையும் ஏற்றிக்கொள்ளாததே
எப்போதும் 
நிலைத்து நிற்கக் காரணம்

என் மனக்குரல் கேட்டு
நிலைமாறாதப் பார்வை
இரண்டிடமிருந்தும்

-------------

வெயில்தேசத்தான்
----------------------------------

அக்னி நட்சத்திரக் கூடுடையும்
ஒருமழைப் பொழிதலில்

குடையெறிந்து நனைந்து நடுசாலையில் படுத்து

நடுவிழியில் 
மழைப்பெரும்துளி வாங்கிய சுகஎரிச்சலில்

கட்டைவிரலில் இருந்து உச்சந்தலை வரை
விரவிப் பரவும் மழைவேகத்தில்

பொருளற்ற அடர்மொழியில்
தொடர் கூச்சலிட வேண்டும்
மழையின் காதுக்குள் மட்டும்

இப்படி ஒரு வரம் வாய்க்குமெனக்கு

அன்றுனக்குத் தெரியும் 
நான் யாரென்று

அதுவரை வெயில்தேசத்தானென்றே
என் விலாசமிருந்துவிட்டுப் போகட்டும்

பெருங்கூச்சல் பெருவெளி
-----------------------------------------------

வெப்பக் கதகதப்பை வீசியெறிகிறாய்
ஈரச் சாரல் துளிகள்
ஊர்ந்தோடும் மனவெளியில்
உன் லார்வா சிரிப்பின் சிறகசைப்பில்

மேகப்பொதிக் கூட்டங்கள்
சட்டைப் பைகளில்
பெருமழைப் பெய்வித்தபடி
மிதக்க விடுகிறாய்ப் பெருவிரலசைப்பில்

பேராழிகளின் ஊர்வலம்
உன் பாதப் பதிவுகளில்
ஆனந்தக்கூச்சல் அலைகளுடன்
தரையின் அந்தரங்கம் நனைந்தசைய

இசைப்பேரதிர்வப் பாடல்களின் ஓசை
இண்டு இடுக்குகள் நிறைத்து
மொழிகளின் ஊமைப்பெருவெளியிலும்

உன் ரத்தம் சிலிர்த்துறுதியானது
நீ கோலோச்சிக் கொடியசைக்கும்
இனம் காத்து நிற்றலில்தான்

பாறைப் பெருநாடுகளையும்
பிளந்தெறிகிறது உன் பெருங்குரல்
இதுவே எம் வம்சமென்ற அறிவிப்பில்

இருள்கிழிசல்களை
ஒளிக்கத்திகள்
கிழித்து நிர்மூலமாக்கும்
நிலம் பிரகாசிக்கும்
நிஜ சூரியன் நிலத்தில் முளைக்கும்
நீளும் கிழக்கும் வானும்

வேர்களின் உரைவீச்சில்
கிளைகளும் இலைகளும்
அடரமைதியில் உறையும்

புயலின் மவுனத்தில்
காற்றும் கதறும்

பொறுமையின் புதிர்சிரிப்பில்
அவசரம் விடைபெறும்

இயங்குதலின் அச்சில்
எல்லாம் இங்கே எளிதாகும்

இயல்பு திரியா இயல்பு
எங்கும் விரவிக் கோலோச்சியபடியே

--------

ஆட்டின் கூக்குரலிசை
---------------------

தேடுகிறேன் 
வாய்ப்பமையும் நிமிடங்களெல்லாம்
உறவுக் கூட்டங்களில்

செவிப்பறைவரை அடரமைதியில்
எங்கேனும் உன் குரல் கேட்டிராதாவென

தரையெங்கும் 
கைகள் குவித்து விரித்து அள்ள
ஏதுவாகிறேன்
புதிதாக சிந்தவிருக்கும் நிழல்திரவக்கூட்டத்தையும்
உன் குளிர்ச்சியுணர

புழுக்கை இறுத்தலில்கூட
நேர்த்தியமைப்பாய் நீ
என் செல்ல ஆட்டுக்குட்டியே

ஒரேஒருமுறையேனும்
கூக்குரல் இசையேன் எனக்காக
உனை உண்டவர்களின்
ரத்தநாளங்களில் ஓடிக்கொண்டேனும்

அப்படியே வழிந்தோடிவிடாதே
அகதிகளின் ரத்தக்கண்ணீர்போல
தொண்டைக்குழிக்குள்ளேயே

--------------


குடுவை மனதில்
பிப்பெட் 
பியூரெட் உபகரணங்களின்
கரைசல்கள் துளித்துளியாய்ச் சொட்ட
பால்ய பதின்மப் பருவங்கள்
மிதந்துச் சிரித்தன 
சிறுசிறு குமிழ்களாய்
யதார்த்த நெருப்புச் சூட்டில்
எல்லாம் கரைந்து கரைந்து
கொதித்துக் கொதித்துக்
குமிழ்க் கொப்பளிப்பில்
நிறம் மாறிய கரைசலில்
நிறையவே தொலைந்திருந்தன
நேற்றுடன்


-----------------

வெயிலின் விருந்தோம்பல்
-----------------------------------------------

நாள்கள் சிலவாகவே
மூளைக்கூறுகளின் முழுவெளியெங்கும்
வெயில்பொழிதல் ஒளிப்பெருமின்னலுடன்

கடக்கும் பாதைகளெங்கும்
தூவிக்கிடக்கின்றன
வெயில்பூக்கள்
பேய்மண வீச்சுடன்

ஏரி குளங்களெங்கும்
நிரம்பித் ததும்பி வழிகிறது
வெயில்திரவம்

நிழலொதுக்கும் மரங்களினடியிலும்
வெயில்கூடாரம்

ஒதுங்கி ஒடுங்கி நடுங்கி
பதுங்கினால்
வீடெங்கும் வெயில்காடு

ஆழம்துழாவி அடைந்தபோது
விருந்தோம்பியது
வண்ணதாசனின் வெயிலாபிமானம் 

-----------------
மூளைமிருகம்
மொழிப்பந்தை 
உருட்டி உருட்டி விளையாடி
கனவுநூற்பாலையில்
கால்பந்தாடுகிறது

மனமைதானத்தில்
எழுத்தாலை எழுப்பி
உற்பத்திக்கும் 
உணர்வுத் தயாரிப்பில்
விவசாயக்காடுகளும்கூட

முரண்திறன் முகத்தில்
நிஜம் நிழலின் பிதுக்கம்

கண்ணாடி உலகில்
உடையாமல் கல்லெறிதல்
பெரும் வித்தையே

---------------

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

கலிபூ


0   400   0  
May 2023

ரத்னா


0   541   0  
October 2022

பஹ்ரியா பாயிஸ்


0   255   0  
December 2023