logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் லதா நாகராஜன்  ஒரு அறிமுகம்
*************************************************************
தேன்கனிக்கோட்டையின் தெகிட்டாத பைந்தமிழின் படைப்பாளி. லதா நாகராஜன் அவர்கள் இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப் பெறுவதில் மகிழ்ச்சிக் கொள்கிறோம்.

சிந்தனைகளைக் கொண்டு செதுக்கினால்தான் வார்த்தைகள் உயிர் பெறும். உயிரோட்டமுள்ள கவிதைகளை எழுதுவதில் படைப்பாளி லதா அவர்கள் ஒரு நுணுக்கமான சிற்பியென்றே சொல்லலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பிறந்த இவர் தனது பள்ளி படிப்புகளை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கழித்தவர். முதுகலை தமிழ் இலக்கியம், ஆசிரியர் பட்டயம் மற்றும் இளங்கலை கல்வியியல் முடித்த இவர் ஒரு நல்ல ஆசிரியையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகள் தன் தந்தைக்கு ஆற்றும் கடனாகவே எழுத்துலகில் அவரின் பெயரை தன் பெயருடன் இணைத்து லதா நாகராஜன் என்றப்பெயரில் தொடர்ந்து எழுதியும் வருகிறார்.

இதுவரை சுமார் 800 கவிதைகள் வரை எழுதியிருக்கும் இவரின் கவிதைகள் கடல்கடந்தும் பிரசுரம் கண்டிருக்கிறது. 2017ல் இவரது பறவைத்தச்சன் என்ற கவிதைத் தொகுப்பொன்றும் வெளிவந்துள்ளது.

கூடிய விரைவில் அடுத்த நூல் வெளியிடவும் படைப்புக்குழுமம் வாழ்த்துகிறது. மேலும் படைப்புக்குழுமத்தில் மாதாந்திர பரிசும், உயிர்த்திசை பரிசுப்போட்டி கவிதைத் தொடரில் சிறப்பு பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிச்சுடர் லதா நாகராஜன் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
**********************************************************************************************
இவரது கவிதைகள் பலத் தளங்களிலும் சென்று நடை போடுகிறது. இவருக்கு வார்த்தைகள் எளிதில் வந்து விழுந்துவிடுகின்றன. படிமங்களை அழகாக கையாளத் தெரிந்திருக்கிறார். இவருக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

நவீனத்தை கவிதைகளில் புகுத்தி தனக்கென ஒரு தனி பாணியை வைத்துக் கொண்டு எழுதும் பெண் எழுத்தாளர்களில் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளி இவர் என்பது நீங்கள் வாசிக்கும் இவரது படைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்வீர்கள்.

தான் சொல்லவரும் கருத்துகளை படிப்பவரின் மனதுக்குள் சென்று ஆழ பதிய வைக்கும் வித்தையை இவரது படைப்புகள் மூலம் படிக்க தருவது இவரது தனிச் சிறப்பு.

கட்டுப்பாட்டையிழந்த மௌனத்தைக் கவிஞர் தன் வார்த்தைக் கட்டுப்பாட்டால் மிளிரச்செய்யும் கவிதை :

தவத்தில்
ஈடுபட்டிருந்த
மௌனமொன்று
கஜூராஹோ
சிற்பத்தையொத்திருந்தது
அதன்மீது ஆயிரம்
வண்ணத்துப்பூச்சிகளாய்
வார்த்தைகள் ...
கலைக்கப் போராடியது
ஒருவார்த்தைக்கும்
மறுவார்த்தைக்குமிடையே
சிக்கித் திணறி அதன்
ரோமக்கால்களின்
வேர்களுக்கடியில்
ஒளிந்தும் சிலிர்த்தது
மௌனம் தன்னை
கட்டுப்படுத்திக்கொள்ள
விடப்படும் மூச்சின்
இடைவிடாத சப்தம் தன்
அந்தரங்கத்தினை
அந்த அரங்கம்
முழுக்க சொல்லிக்கொண்டிருந்தது
அதன் எதிரொலிப்பில்
தன் கட்டுப்பாட்டினை
வார்த்தைகளுக்குள் இழந்த
மௌனம் அதன்
மோகத்தில் மெல்ல
மூழ்கத்துவங்கியது...!.

 ***
ஒரு சிற்பியின் வாழ்க்கை அவன் செதுக்கும் சிலைகளுக்குள் ரேகைகளாக ஓடுகின்றது என்பது புதிய கற்பனை. கவிஞர் இங்கு ஒரு சிற்பியாகவே மாறியுள்ளார். இதோ அந்தக் கவிதை :

சிற்பியின் உளியில்
பசியின் சப்தம் அவன்
உளிகளைத்தொட்டாலே
உலைக் கொதிக்கும்
செதுக்கும் மொழி
வறுமை பேசும்...
கண் இமைகளின்
சிறுமுடிகளில்
எழுதப்பட்டுள்ள துயரங்களை
சிலை படித்திருக்கும்
ஒருபாகம் சுகத்தையும்
மறுபாகம் சோகத்தையும்
உளிக்கப்பட்டிருக்கும் சிலையில்
உற்றுப் பார்த்தால்
உளியாளனின் ரேகையை
உள்வாங்கியிருக்கும்
சிற்பிக்கு அவன் சிலையே
சிம்மாசனம்...
உப்புக்காற்றும்
கடல் அலையும்
சிலையைச் சிதைக்கலாம்
அவன் சிந்தனையையல்ல...
பாறையில் குடைந்த
பல்லக்கையே பரிசொன்றாய்
சிலை சிற்பிக்கு அளிக்கும்...
சிலைக்கும் உளிக்கும்
நடுவில் தெறிக்கும்
அவன் கற்பனையின்
பொன் சிவப்புத் தீயை
உளிமொழிக்காதலென்று
சொல்லலாமா?!...

  ***

காதல் செய்வதற்கு வசியம் தேவையில்லையென்று சொல்லும் கவிஞர், அதற்கான வழியொன்றை பகரமாகச் சொல்லுகிறார் கவிஞர் :

மூன்றாம் பிறையில்
மேகலா லக்ன
பீடமமைத்து
ரதிமன்மத வசிய
சக்கரத்தில்
மந்திரம் சொல்லி
உடல் திரவம்
வழித்தெடுத்து
மதனகாமப்பூவின்
திரவத்தோடு
கலந்தளித்தெல்லாம்
யட்சிணியை
வசியம் செய்ய
வேண்டியதில்லை
தேனில் ஊறிய
சொல்லெடுத்து
மலைக்க மலைக்க
கவிபுனைந்து
திகட்ட ஊட்டும்
தருணத்தில்
அஞ்சனம்
வழிய வழிந்திடும்
கண்கள் உறக்கத்திலும்
வசப்படும்!!....

 ***
இந்தக் கவிதை ஒரு சிறப்பான கவிதையென்றே சொல்லலாம். பெண்களின் கூச்சமென்று ஒதுக்கியவற்றை ஆண்களின் பார்வைக்கு ஒதுக்குதல் கூடாது என்பதை மிகவும் சிறப்பாக சொல்லியுள்ளார் கவிஞர். இஃதொரு புரிதலின் ஒத்துழைப்பு என்பது மிகவும் சரியான வாதம் . இதோ அந்தக்கவிதை:

உதிரப்போக்கு

சிறுவயதில் அம்மாவிற்கு
உண்டான திடீர் கருச்சிதைவின் பொழுது
அப்பா கட்டிலுக்கடியில் வழிந்தோடிய
உதிரத்தை இருக்கைகளாலும்
அள்ளியெடுத்து வாளியில் சேகரித்து
அப்புறப்படுத்தி பின் தரையலம்பியதை
பார்த்தவள் நான்.

பின்னொரு நாளில்
யாருமற்ற நேரத்தில்
பிரசவ வலிகண்ட எனக்கு இளையவளை
உடன் பிறந்த தம்பி உதிரம் வழிய
இருக் கைகளிலும் அள்ளியெடுத்து
மருத்துவமனைக்குள் கொண்டு சென்று
ஆண் மகவென அறிவிக்கும் வரை
அருகே தனித்திருந்து காத்தான்

இன்று வரை மாதாந்திர நாட்களில்
மகனே எனக்கு நேப்கின்
வாங்கித் தருகிறான்

மறைத்துச் செல்ல இதுவென்ன
தவறுக்கு பிறந்த நோயா?

மறைத்து மறைத்தே வலி
உணர்த்தத் தவறினோம்
புரிந்துகொள்ள இடமிருந்தும்
புரியவைக்க மறுத்தோம்

தலைவலியைச் சொல்ல
தவிர்ப்பும் தவிப்பும் கொள்வதில்லை

தனி வலியைச் சொல்ல
தடுப்பெதற்கு ?

பொதுவெளியில் இதைப்பேசி
புரிதலை ஏற்படுத்தாதது
யார் குற்றம்

பயணத்தின் பொழுதும்
இருக்கை பார்க்கும் பதட்டம் தவிப்போம்

இது இயல்பு
இது இயற்கை
இதுவே ஆரோக்கியம்

இதற்கெதற்கு அச்சமும் நாணமும்

ஆண் அறிவான் அவஸ்தையை
வலி நிவாரணி அவன் வார்த்தைகள் என

சொல்லுங்கள் தொடக்கமும் முடிவும்
சொல்லாத வலி அறியப்படாது ...

புரிதலான பாதையில் முள்ளில்லை.

   ***

அன்றாடம் நிகழும் வாழ்வியலோட்டங்களை கிரிக்கெட் விளையாட்டுடன் இணைப்படுத்தி காலையில் மட்டையாளனாகவும் , பிறகு பந்தாளானாகவும் மாறி விளையாடும் விளையாட்டை அழகாகப் பதிவு செய்கிறார் கவிஞர்

ஏனோ? வீசப்படும்
பந்திற்காகக் காத்திருக்கும்
மட்டையின் கைகளாகிறது
இந்த அதிகாலை...
புலர்வின் இறுதி நிமிடங்கள்
பந்தின் கையாகி
தன் முந்தைய கணங்களில்
தன்னைத் தேய்த்து
புதிய வேகம் கொள்ள
முயன்று கொண்டிருக்கிறது
போதும் போதும் என
விரல்நுனியால் நினைவைத் தட்டி
அருகாமைக்கு அழைப்பு விடுத்தபடி
முந்தைய கணம் விடுத்து
நிகழ் கணத்தினைச் சேரும்
அதிகாலை- எண் ஆறைத்தொட்டபடி
அந்தரத்தில் பறக்கவிடுகிறது
இரவின் கடைசி நொடிகளை

    ***

துளிர்த்த இலையின் பசிய மென்மையென
தழைகிற இதயம் தேன்நிரம்பிய
பூவாகித் தள்ளாடுகிறது - என்ற வரிகளில் மோனத்தின் உச்சத்தை தொடும் கவிஞர், நேசத்தின் பிணைப்பை வார்த்தைகளில் ஊசலாட்டும் அழகுதான் இந்தக் கவிதை - தலைப்பே அசத்துகிறது - மூச்சுவேர் நிறம் பௌர்ணமி

மூச்சுவேர் நிறம் பௌர்ணமி

ஒரு ஜென்மத்தின்
காட்டினை மூடிக்கொள்ளும்
பெருஞ்சிறகென சொற்கள்

ஊடே பயணத்தில்
பாதையில் புறக்கண்களும்
தன் பாதியில் அகக்கண்ணும்

நிறைந்த பௌர்ணமியாய்
நிறம் கொள்ளும்
உயிரணையும் மூச்சுவேர்

எழுதப்படாமலே
புரட்டப்பட்ட பக்கங்களின்
வெற்றுநாளையும் நிரப்புகிறது
வந்துவிழும் வாக்கியங்கள்

சமரசம் கொள்ளமுடியாமல்
மறுதலித்த மனதின்
மறுபக்கம் நிரப்பட்டது

துளிர்த்த இலையின் பசிய மென்மையென
தழைகிற இதயம் தேன்நிரம்பிய
பூவாகித் தள்ளாடுகிறது

போதுமெனும் சொல்லை
கண்கள் பிரசவிக்க விழைகிறது
ஆயினும் உதடுகளின்
வேண்டாம் எனும் கட்டளைக்கு
கீழ்ப்படிந்து இமைவேலிப் போடுகிறதே...

------------
படைப்பாளி லதா நாகராஜன் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

தங்கேஸ்வரன்


0   1372   0  
July 2019

மஹா பர்வீன்


0   397   0  
May 2023

முஜாமலா


0   256   0  
March 2024