logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் ராஜ் சௌந்தர்(றாம் சங்கரி)  ஒரு அறிமுகம்
*******************************************************************************
படைப்பு குழுமத்தால் இம்முறை கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி ராஜ் சவுந்தர்(றாம் சங்கரி) மதுரையில் பிறந்து வளர்ந்த இவரின் இயற்பெயர் ராஜ் சவுந்தர். இவர் றாம் சங்கரி என்ற பெயரிலும் ஷெள என்ற பெயரிலும் பலவகையான படைப்புகளை இந்த தமிழ்ச் சமூகத்துக்கு தந்து சிறப்பித்து உள்ளார் அது மட்டுமல்லாமல் சில இதழ்களில் கூட தொடர்ச்சியாக எழுதுகிறார்.

திரைத்துறையில் உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர், பாடலாசிரியர் என்று பல நிலைகளில் பணி புரிந்தாலும் அவரது கனவு இலட்சியம் சுய இயக்கத்தில் படம் எடுப்பதுதான்.. அதுவும் இப்போது நிறைவேறி அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் பல நிலைகளில் விருதும் வாங்கி இருக்கிறார்.

பின் நவினத்தில் கதைகள் எழுதுவதிலும் ராஜ் சவுந்தர் சிறந்து விளங்குகிறார். இந்த ஆண்டில் அவரது திரைப்படம் மட்டுமல்ல, அவரது கவிதை தொகுதியொன்றும், சிறுகதைகளின் தொகுப்பும் நூலாக வர இருக்கிறது என்பதும் கூடுதல் செய்தியாகும்.

கவிச்சுடர் ராஜ் சௌந்தர் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************************

புதுக்கவிதைகளின் அடுத்தக் கட்ட நகர்வே நவீனம் மற்றும் பின் நவீனம் என்ற வடிவங்களாகும். காலத்தின் நகர்விற்கு ஏற்ப கவிதைகளும், தங்களின் அமைப்பின் வடிவங்களை மாற்றி.. தங்களின் இடத்தை உறுதியாகத் தக்க வைத்துக் கொள்கிறது. நவீனம் படிமங்களின் வழியாகவும் உருவகங்களின் வழியாகவும் சில நேரங்களில் நேரடியாகவும் கூட பேசுகிறது. நவீனமும் பின் நவீனமும் எளிதில் புரிந்துவிடுவதில்லை என்பது மிகவும் சரியான குற்றச் சாட்டுதான்.. எளிதில் புரிந்துவிட்டால் அது கவிதையின் தன்மைவிட்டும் எளிதில் அகன்றுவிடும் என்பதுதான் கவிதைகளின் வழக்காகும்.

அரூப ஓவியங்களைப் போல்தான் இந்த நவீனக் கவிதைகளும் அமைந்துவிடுகிறது. காண்பவர்களின் பார்க்கும் தன்மைக் கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும் அரூப ஓவியங்கள்.. ஓவியனின் பார்வைக்கு ஒன்றாகவும் பார்ப்பவர்களின் பார்வைக்கு ஒன்றாகவும் மாறுபடும். இதே தன்மையை ஒத்ததுதான் நவீனக் கவிதைகளும்

எதையும் எழுதிவிட்டு இதுதான் நவீனம் என்று சொல்லிவிட்டு யாரும் நகரமுடியாது. அதற்கான பயிற்சியும் சிந்தனையும் வெவ்வேறானது. இப்போது, சிலர் அப்படித்தான் எழுதுகிறார்கள் என்பதற்காக நவீனத்தை ஒதுக்கிவிட்டுப் போவது புரியாமையையே காட்டும்.

இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருது பெறும் றாம்சங்கரி நவீன கவிதைகளை வடிவமைப்பதில் ஒரு சிற்பியாகவே செயல்படுகிறார். சமூகத்தின் பிரச்சனைகளை அவர் சொல்லுகின்றவிதம் அருமையாக இருக்கும்.

ஒரு தந்தை , போன்சாய் போன்ற வளர்ச்சிக் குன்றிய தன் மகளுக்கு ஒரு செவ்வாய் கிழமையில் ஒரு கோழியை பரிசளிக்கிறான்.. அந்தக் கோழி ஞாயிற்று கிழமையே உணவாக சமைக்கப் படுகிறது.... அதை ருசிக்கும் அவள் ஒவ்வொரு கிழமையையும் கடந்து அதை ருசிக்கிறாள்... பிராய்லர் கோழிகளின் இறைச்சி குணத்தால் அவள் வயசுக்கும் வந்துவிடுவதாக கவிதை முடிகிறது...

அதுதான் இந்தக் கவிதை :

போன்சாய் மரம் போலிருக்கும்
தன் சின்னஞ்சிறு மகளுக்கு
அவள் விரும்பி உண்ணும்
பிராய்லர் கோழியையே
உயிருடன் பரிசளித்தான்.
ஒரு செவ்வாய் கிழமையில்..

பார்த்ததும் பிடித்துப்போன
அதன் மார்பை தான்
ஞாயிற்றுக் கிழமைக் காலையில்
ருசித்துத் தின்றாள்.

புதன்கிழமையெங்கும்
கேவிக் கொண்டிருந்த
அதன் தொண்டைப் பகுதியை
ஞாயிறு மதியத்திலும்

வியாழக்கிழையை
மருண்டபடி உருட்டிக் கொண்டிருந்த
அதன் கண்களை
ஞாயிறு மாலையிலும்

வெள்ளிக்கிழமையோடு
கட்டிப்பட்டிருந்த அதன் கால்களை
ஞாயிறு இரவிலும் தின்று தீர்த்தவள்

சனிக்கிழமை முழுவதும்
வாஞ்சையோடு தடவிக் கொடுத்த
அதன் சிவந்தக் கொண்டைய
ஞாயிறு நள்ளிரவில் விழுங்க
அது தொண்டை, மார்பு
அடிவயிறு கடந்து
கால்கள் வழி
செங்கதிர்களாய்
திங்கட்கிழமை அதிகாலையில் வழிகிறது..

பெரிய பெரிய
ஈமூக் கோழி பற்றிய கனவிலிருந்து
விழிக்கா வீட்டின் கதவுகளைத் தட்டி
தன் மகள் பெரிய பெண்ணாகிவிட்டாளென
தகப்பன்காரன் கூறிச் செல்ல,
ஒவ்வொரு வீடும்
நாட்டுக்கோழி முட்டை பற்றி
பெருங்கனவில் மூடிக்கொள்கிறது..

கேரளாவில் உணவை திருடியதற்காக அடித்துக் கொல்லப் பட்ட ஒரு ஏழையின் வலியை, பசியின் கொடுமையை இந்தக் கவிதையில் பதிவு செய்கிறார்...

கடும்பசியில் தான்
தற்கொலை முடிவெடுத்திருந்தேன்.
பூச்சிமருந்து குடித்தா,
தூக்கில் தொங்கியா,
தண்டவாளத்தில் தலை வைத்துச் சாவதாவென
பெருங்குழப்பத்தில்
திளைத்துக் கொண்டிருந்த எனக்கு
உங்களிடமிருந்து
பசிக்குக் கொஞ்சம் சோறு
திருடித் தின்றாலே
ஆதியிலிருந்து
இம்மரணம் நிச்சயமானதாய் உள்ளது.
இப்பொழுதும் கூட
இதையே பரிசளிப்பீரென
மிகவும் நம்புகிறேன். எப்பொழுதுமே.

வாழ்விடத்தை இழந்த ஒரு பறவையின் வலியில் இந்தக் கவிதை நகர்கிறது... அவன் இறந்த பிறகும் சுழலும் கண்களை அதன் உடைந்த முட்டைகளோடு ஒப்பிடும் கவிஞனின் பார்வை வித்தியாசமானது....

எப்பொழுதும்,
அவனையே சுற்றி வரும் பறவையொன்று
தன் கூரிய அலகால்
அவன் கட்டைக்காலில் முத்தங்களிடும்.
அக்கட்டைக்கால் வடிக்கப்பட்ட
மரத்தில் தான்
பிறந்து வளர்ந்திருந்தது இப்பறவை.
எப்பொழுதும்
பறவையை விரட்டியவாறே இருந்தவன்
அமைதியாய் இறந்து கிடக்கிறான்.
எத்தடையுமன்றி
அவனது கட்டைக் காலினைக்
கொத்தியபடி உள்நுழையும் பறவை,
அவன் இதயத்தை அடைகையில்..
திடுக்கிட்டு இமைகள் திறந்து,
இறத்தவனின் கண்கள்
சுற்றிச் சுழல்கின்றன.
ஒருவேளை,
இவைகள் தான்
மரத்தை வெட்டுகையில்
உடைந்து சிதறிய
இப்பறவையின் முட்டைகளோ?

இயக்குநர் கனவுகளோடு காலத்தையும் கடத்திவிட்டு வாழும் ஒரு சார்பு மனிதர்களின் வலியை அதன் வலியோடுவே வாழும் கவிஞனுக்குத்தான் புரியும்...அவரது வரிகள்..

இயக்குனர்,
ஃப்ரேமுகுள்ள வர்ற
அந்த நாய விரட்டுங்க ..
என்று மைக்கில் கத்தியதும்,
முதல் ஆளாய் ஓடிச் சென்று
நாயோடு மல்லுக்கு நிற்கும்
எழுபத்தி ரெண்டு வயதான
ஆறுமுகத்திடம் கேட்டால்;
தனக்கும் சினிமாவுக்குமான உறவு
ஐம்பது வருடங்களுக்கு மேலானது
என்பார்.
***

ஒரு விறகுவெட்டியின் வலியாக முடியும் இந்தக் கவிதை, அவன் மகளின் முதுகில் வரைந்த ஒரு செடியின் படிமத்தில் தொடங்குகிறது. படிமம் என்பது ஒரு காட்சி. அதில் இடம்பெறும் கூறுகளில் ஒன்று குறியீடு குறியீடாகும்போது, அக்காட்சிக்கு வேறு அர்த்தங்கள் தோன்றுகின்றன. அவ்வாறு படிமத்தை எப்படியெல்லாம் இக்கவிதையில் கையாண்டு இருக்கிறார் என்று பாருங்கள். மரங்களின் வலியை கோடாரியும் பின் நாளில் உணர்வதாக மறைமுக வசனம் நிறைத்த இந்தக் கவிதை மிகவும் சிறப்பானது...

விறகுவெட்டியின் மகளான அச்சிறுமி
தனது முதுகில்
விசித்திரமான சிறு செடியை
பச்சை குத்தியிருந்தாள்.
அதனை வளர்ப்பதற்காவே
தினமும் இருமுறை
குளிப்பதாகக் கூறுபவள்,
ஆடுமாடுகளுக்கு
தன் முதுகை காட்டியதேயில்லை.
முதுகில் இருந்தபடி
மூச்சிவிடும் அச்செடி
தமக்கு சுவையான
இரு கனிகளை தருமென
நம்பிக் கொண்டிருந்தவள்,
வானம் பொய்த்து
காணிகள் வறண்டு
நீரற்று போன நிலையில்
குளிப்பதை முற்றாய் நிறுத்தியிருந்தாள்.
பிறகு , அவளைப் போலவே
வாடத்துவங்கியது அச்செடியும்..
தாக மிகுதியில்
வறண்ட கிணற்றில் குதித்தவளை
பதினைந்து அடைமழை நாட்களில்
தொடர்ந்து பல இடங்களிலும்
தேடிக் கொண்டிருந்த விறகுவெட்டி,
அச்செடியை மட்டுமே கண்டுபிடித்தான்.
கிணற்றின் மேல்,
இருகனிகள் தொங்கும் மரமாய்..
அப்பொழுது அவன் கண்களுள்
முதல் முறையாய் பறந்த
செம்போத்துகள்,
மரத்தின் அடிவயிற்றில்
தன் மகளின்
முதல் குருதி வாசத்தோடு
கபில வண்ண மலர்களாய்
வழிந்த போது தான்
அவன் கோடாரி
அழுதது முதல்முறையாய்..

துருவேறிய சாவியோடு செயலிழந்த மனிதனை இணைக்கும் இந்தக் கவிதை:

என் முன்னே
துருவேறிய சாவியொன்று கிடக்கிறது.
நிதம் காற்றின் கதவுகளைத் திறந்து
மழை, வெயிலின் வீட்டிற்கு
அழையா அதிதியாய்
சென்று வந்த களைப்பில்
பெரும் மௌனத்தை
தம் மீது துருவாய் ஏற்றி
உறங்கிக் கொண்டிருக்கிறது.
இச்சாவியால்
திறக்கப்படா பூட்டும்
பூட்டோடு ஒரு கதவும்
கதவோடு ஒரு வீடும்
வீட்டினுள் என் போல் எவரும் கூட
தம்மை விடுவிக்கும்படி
அலறிக் கொண்டிருக்கலாம்.
ஏதும் செய்ய இயலாதவனாய்
சாவியையே பார்த்தவாறிருக்கிறேன்
இதயம் படபடக்க
வெயில், மழையென
நாட்கள் பலவற்றால்
நானும் துருவேறியபடி.
இப்பொழுது,
என் பின்னிருந்து பார்க்கும் எவரேனும்
என்னைத் துருவேறிய சாவியென்றும்
என் இதயத்துடிப்பைக் கேட்டு
தான் அலறிக்கொண்டிருப்பதாகவும்
தம் கவிதையில்
எழுதிக் கொண்டிருக்கக் கூடும்
துருவேறி, இதயம் துடிதுடிக்க..

நாகரீகத்தின் பலனால் இயற்கையின் நன்மைகளை இழந்த கதையை இந்த வதந்தி கவிதை அழகாக சொல்கிறது வலிகளோடு...

சாம்பல் நிற புற்களை விழுங்கக் காத்திருக்கும்
வறள் புவிக்கு தீரா பெருந்தபனம்
பிணியிலடங்கா வானின் தேமல்கள்
வேண்டி ஏங்கும் கருந்திட்டு
மடிந்த மரங்களின் கடைசி மூச்சுக்காற்று
மறந்த பறவையின் சப்தங்களை
காதுக்குள் நுழையும் இறகு
கசடுகளாய் உமிழ்ந்தவாறிருக்கிறது
குளம் முழுக்க அருந்தி வளர்ந்த
பெருங்கட்டிடத்தின் நூற்றி எட்டாவது தளத்தில்
கழிவறையிலிருந்து சமையலறைக்கு பறக்கும்
காகிதம் பலவண்ணமாய்
பேசா வார்த்தைகளெல்லாம்
மாலையாய் உதிரும் மௌனத்தின் மரணம்
கூற மறந்தவொன்றின் நீட்சி
ஆந்தை பொம்மைக்கு இமை வடிப்பவன்
பகலில் கொல்லப்பட்டான்
என்பதிலிருக்கும் வதந்தி
பகலை கொலை செய்தான் என்பதில் இல்லை..

பட்டிணத்தாரின் ஒருமடமாது ஒருவனுமாகி என்றப் பாடலில் ஒருவன் குழந்தை பருவம் முதல் முதுமை வரைக்குமான நிலைகளை சொல்லியிருப்பார்... அது போன்ற பொருளாக்கம் உள்ள கவிதைதான் இந்தக் கவிதை. இதை றாம் சங்கரி சிறப்பாகவே வடித்திருப்பார். அதுவும் நவீனத்தில்...

1.
முதலில் இலேசாகவும் பின் வேகமாகவும்
அதிர்ந்து வீழ்ந்த மேவாய் முன்னம்பல்லொன்றை
கதிரவனின் கண்கள் நுழையா
தம் உள்ளங்கைக்குள் மறைத்துக் கொண்டவன்
சாணத்தினுள் திணித்து மண்ணிற்க்குள்
புதைக்க மணலை நனைத்துக் குளிர்ந்ததோர்
பெருமழை

2.
இயற்கை நித்தல் நீரூற்றி உணவளிக்க
அடர் செவ் வேர்களோடு
திடமாய் கிளை பரப்பி
நன்னிலத்தில் மழை பலவற்றோடும்
துளிர் விட்டது
முப்பத்தியிரண்டு சிறு வெண் கனிகளோடு
அரைவட்ட மரமொன்று

3.
உணவுத் தொழிற்சாலை பெருங்குழாய் கக்கிய
புகை தின்று உடைந்திட்ட முகிழ்
வடித்த குருதியோடு புணர்ந்த காணி
தெளித்தச் சேற்றினால்
மஞ்சற் பூத்த வெண் கனிகளின் மேல்
இரசாயன பூச்சிக்கொல்லிகளை நற்மணத்தோடு
தேய்த்தெடுத்தும் புகுந்திட்ட வண்டுகள்
பெருங்கடைப் பற்களிரண்டை
மிகு வலியினோடு அதிர்வுற வீழ்த்தியது
துற்நாற்ற நெடி விரவ

4.
கனிகள் யாவும் அடற் மஞ்சளாய்
செம்மையாய், கருநிறம் பூசி
ஒவ்வொன்றாய் உதிர
கடைசிக் கனியும் சிறு சலனமுமன்றி
அவன் முதற் பல் புதைந்த
அதே இளங் காணியின்
கிழடுற்ற மேற்தோலின் பெரும் பிளவினுள்
புகுந்தது கதிரவன் களவு போக
வீட்டுக் கதவுகள், சாளரங்களை அஞ்சி அடைத்து
மக்கள் கூறுமோர் அதே கிரகண நாளில்

5.
மூக்குக் கண்ணாடியை துடைத்து அணிந்தும்
வானை நோக்கிய அவன் பார்வையில்
நீங்கா பழுப்பு நிறம் மட்டுமே எஞ்சி வழிய
துளி மழையாவது கண்ணிற்க்குள்
கண்ணீராய் நுழையுமெனக் காத்திருந்தவன்
ஊன்று கோலொடு நீந்தியபடி
கடந்திட்ட நாற்பது ஆண்டுகளுக்கு பயணிக்க
வேண்டித் தோற்கிறான் நினைவலைகளிடத்தே..

கீழே உள்ள கவிதை இருக்கு படைப்பில் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரத்தை கொடுத்தது. இக்கவிதையை எழுதிய விதம் இதுவரை உலகம் முழுக்க திருநங்கை பற்றி எழுதி இருக்கும் கவிதைகளில் முதன்மையானதொரு இடத்தில் இது எப்போதும் இருக்கும் வண்ணம் வலிமையானது. காரணம் அவர்களின் ஆணிவேரை தொட்டு வலியை வலிமையாக மாற்றி இருப்பார்.

கவிதா என்ற பெயரை
தம் பத்தாம் வகுப்பு
கணக்கு நோட்டின் பின்புறம்
எழுதி வைத்திருந்ததால் தான்
கணக்கு வாத்தியாரிடம் பிடிபட்டு
அடிவாங்கினான், கதிரவன்.
அன்று முதல்
கவிதா என்ற பெண்ணை
கதிரவன் காதலிப்பதாகவே
எங்கள்
அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
முழுவதிலும் பேசிக்கொண்டனர்.
பிறகு, வீட்டுச் சுவரில் எழுதி வைத்து
வீட்டிலும் மாட்டிக்கொண்டவன்
மரம், செடியென பார்க்கும் யாதிலும்
கவிதாவின் பெயரையே
கிறுக்கிக் கொண்டிருந்தான்.
கதிரவனை அழைத்து
கவிதா பற்றி விசாரித்தால்,
அச்சம் மிகுந்த
தம் கண்களை மருண்டவாறு உருட்டி
எதுவும் கூறாமலேயே
அமைதியாய் ஓடிவிடுவான்.
நாங்களும் கவிதா பற்றி
தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்
அவனிடம் தொடர்ந்து விசாரிக்க,
அவனும் தொடர்ந்து ஓடியவாறிருந்தான்.
இப்படியாக அவன்
ஊரை விட்டே ஓடிய ஒருநாளில்
யாரென்றே தெரியாத கவிதாவோடு தான்
கதிரவன் ஓடியிருக்கக்கூடுமென
ஊரே நம்பியது.
பல இடங்களில் தேடியும்
கிடைக்காத கதிரவன்
பல வருடங்களுக்குப் பின்
ஊருக்குத் திரும்பியிருந்தான், கவிதாவாக.
இப்பொழுது அந்த கண்கள்
சிறு மிரட்சியும், பயமுமன்றி
சிரித்துக் கொண்டிருந்தது
பேருண்மையின் ஒளி வீசிட.
-----

படைப்பாளி ராஜ் சௌந்தர் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.