logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் தேன்மொழி தாஸ் ஒரு அறிமுகம்
********************************************************
படைப்பு குழுமத்தால் இம்முறை கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி தேன்மொழி தாஸ் அவர்களின்
இயற்பெயர் ரோஸ்லின் ஜெயசுதா. மேற்குத்தொடர்ச்சி மலையில் மணலார் என்ற தேயிலைத் தோட்டப் பிரதேசத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் சுப்பையா என்ற மரிய தாஸ்-லீலா மரியதாஸ் . இவர் செவிலியர் பட்டப்படிப்பு படித்து புகழ்பெற்ற அப்பலோ மருத்துவமனையில் 2001 வரை பணிபுரிந்தார் . இவர் கவிதை, கதை திரைக்கதை , உரையாடல் பாடல்கள் இயற்றுவது என பன்முகத் திறமைகொண்டவராக திகழ்கிறார். 2001 முதல் தான் கால்பதித்த இலக்கியம் மற்றும் திரை துறை மற்றும் தொலைகாட்சி ஊடகங்களிலும் அயராது செயலாற்றுகிறார்.

மிகவும் சிறிய வயதிலேயே கவிதைகளை இயற்றுவதில் திறமை கொண்ட இவர் பள்ளி காலங்களில் நாடகங்கள் எழுதி இயக்குவதிலும் நடிப்பதிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தார் . எண்ணற்ற கைவினை வேலைப்பாடுகள் மற்றும் ஒவியம் இவரது பொழுதுபோக்கு . பரதம் மற்றும் கர்நாடக சங்கீதமும் முறைப்படி கற்றுத் தேர்ந்தவர் . இசையில் பியானோ மற்றும் கிடார் கற்றுக் கொண்டதோடு மேலும் இசையில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார் . ஆயினும் கவிதை மட்டுமே அவரின் ஆன்மாவை மென்மேலும் அசைத்து வலுப்பெற்றது.

1996 முதல் கவிதைகள் அச்சில் சிறுபத்திரிக்கை வழியாக பிரசுரம் ஆகின . மிகுந்த கவனம் பெற்ற இவரது கவிதைகள் முல்லை மற்றும் குறிஞ்சி திணை சார்ந்த கவிதைகளாக கொண்டாடப்பட்டன.
2001ஆம் ஆண்டு இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘இசையில்லாத இலையில்லை’ வெளிவந்தது. அந்த நூல் தேவமகள் அறக்கட்டளை விருது, திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு மற்றும் சிற்பி இலக்கிய விருது ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றது.

பாரதிராஜாவின் ‘ஈரநிலம்’ படத்திற்கான தமிழ்நாடு அரசின் சிறந்த வசனத்திற்கான விருது 2003ல் இவருக்கு கிடைத்தது.இது இவரின் முதல் திரைப்படம்.இதன்மூலமாக தமிழ் திரைப்பட வரலாற்றில் உரையாடலுக்காக விருது பெற்ற முதல் பெண் என்ற அடையாளமும் இவரை வந்தடைந்தது.ஈரநிலம் படம் மூலமாக பாடலாசிரியராகவும் அறிமுகமானார். இதுவரை நாற்பதுக்கும் மேலான திரையிசைப் பாடல்கள் எழுதியுள்ளார்.

2003ஆம் ஆண்டு இவரது இரண்டாம் கவிதைத் தொகுப்பு ‘அநாதி காலம்’ வெளியானது. 2001ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் சிறுகதைகளும் எழுதியுள்ளார். 2007ல் இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘ஒளியறியா காட்டுக்குள்’ வெளியானது. மார்ச், 2016ல் இவரது நான்காவது கவிதைத் தொகுப்பாக ‘நிராசைகளின் ஆதித் தாய்’ வெளியிடப்பட்டது.
இதன் பின் களம் விருது மற்றும் நூலகச் சிற்பி எஸ்.ஆர்.ரெங்கநாதன் நினைவு விருதுகளை பெற்றார் . நூலகச் சிற்பி எஸ்.ஆர்.ரெங்கநாதன் நினைவு விருது என்பது படைப்பாளரின் அனைத்து புத்தகங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தும்நோக்கத்தில் தரப்படுவதாகும்
காயா இவரது ஐந்தாவது கவிதை தொகுப்பு. இத்தொகுப்பு 2017 ல் வெளியாகி பெரும் கவனத்தை ஏற்படுத்தியது

2006இல் இருந்து 2011 வரை கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘தெக்கத்திப் பொண்ணு’ என்ற நெடுந்தொடருக்கு உரையாடல் எழுதினார். விஜய் தொலைக்காட்சியில் வெளியான ‘கனா காணும் காலங்கள்’ ‘காதலிக்க நேரமில்லை’ என்ற நெடுந்தொடருக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். கி.ராஜநாரயணன் எழுதி சுகாசினி மணி ரத்னம் இயக்கிய ‘காய்ச்ச மரம்’ குறும்படத்தில் உதவி இயக்குநரகாவும், உரையாடல் ஆசிரியராகவும் பணியாற்றினார்.மேலும் தொடர்து திரைப்பட துறையில் பாடல்கள் மற்றும் திரைக்கதை இயற்றுவதோடு இணை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

ஆறாம் தொகுப்பு விரைவில் இவ்வாண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கவிச்சுடர் தேன்மொழி தாஸ் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
**********************************************************************************************
இயற்கையை அதன் போக்கில் கண்டு இரசித்துவிட்டு கடந்து போகாமல், அதனுள் நுழைந்து பல கேள்விகளை முன் வைக்கிறார். வாழ்க்கையின் சோகங்களுக்குள் அடிக்கடி நுழைந்து அதனுள்ளும் முடங்கிப் போகிறார். இந்த பண்பே, அவர் பின் நாட்களில் ஒரு மிகச் சிறந்த கவிதைக்காரியாக விளங்கவும், தனிமையை நேசிக்கவும் அவருக்கு கற்று கொடுத்திருக்கிறது எனலாம்.

அவரது கவிதைகளின் படிமங்கள் மற்றும் குறியீடுகளின் அடர்த்தியே அவரை தனித்துவமாக இந்த இலக்கிய உலகில் தரம்பிரித்து காட்டுகிறது. இக்கால நவீனத்துவ கவிதைகளில் இம்மாதிரியான படிமம், குறியீடுகள் மற்றும் தொன்மங்களை வைத்து எழுதும் ஒருசிலரில் முதன்மையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.

இப்போதும்கூட, அவரிடம் யார் கேட்டாலும் தானொரு பாடலாசிரியர் என்பதைவிட கவிதை எழுதுவதைத்தான் தவமாகக் கருதுவதாக சொல்கிறார். அழகான வடிவங்களில் இவரது கவிதைகளின் வார்த்தைகள் மிளிர்கின்றன. சிலரிடமிருந்து, இவரது கவிதைகள் புரிவதில்லை என்ற புகார்களும் வருவதுண்டு . உண்மையில் இவரது கவிதைகள் படித்தவுடன் புரிந்து கொள்ளும் தன்மையில் இருப்பதில்லையென்றாலும் இரண்டு மூன்று தடவை படித்த பிறகு அதன் நுட்பத்தில் சொக்கிப் போவார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இவரது கவிதைகளின் நடை யாரையும் பின் தொடர்ந்து செல்வதில்லை என்பதும், இவருக்கு மட்டுமே உரித்தான ஞான பயிற்சியாகும். இவரது கவிதைகளில், சிலவற்றை நாம் வாசிக்கும் போது, சங்கக்காலத்திற்குள் நம்மை அறியாமலயே, நாம் சென்றுவிடுவது நிச்சயம். இவரது சில கவிதைகள் சூபித்துவ கவிதைகளையும், ரூமியையும் நினைவு கூறச் செய்யும். இயற்கையை நேசிக்கும் ஆர்வலர் என்பதால் காடும் காடு சார்ந்த இடங்களின் அமைப்பும், தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் பற்றியெல்லாம் கூட இவரது கவிதைகளின் படிமங்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளமுடிகிறது.

இவர் கவிதைகளுக்கு செல்வதற்கு முன்பு படிமம் மற்றும் குறியீடுகளை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

படிமமும் குறியீடும்
****************************

சொல்வளமும் கற்பனைத் திறனும் இலக்கிய உருவாக்கத்தில் புதிய அலகுகளை அளிக்கின் றன. படைப்புகளில் அழகூட்டுவதற்காகப் படைப்பாளர்களின் கற்பனையில் உதிக்கும் இலக்கியக் கருவிகளில் (உத்திகளில்) குறியீடு குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.

குறியீடு என்பது ‘சின்னம்’, ‘அடையாளம்’ என்று பொருள்படும். படிமம் என்பது வார்ப்பு, பிரதிமை, உருவத் தோற்றம் என்று பொருள்படும். இரண்டிற்கும் உள்ள தொடர்பு இவ்வர்த்தங்களால் தெளிவாகிறது. படிமம் என்பது ஒரு பரந்த காட்சியமைப்பு. அதில் இடம்பெறும் விலங்குகள், மனிதர்கள், மரங்கள் செடிகொடிகள் போன்ற எந்தக் கூறும் குறியீட்டுப் பொருள் பெறமுடியும். படிமம் என்பது ஒரு காட்சி. அதில் இடம்பெறும் கூறுகளில் ஒன்று குறியீடு குறியீடாகும்போது, அக்காட்சிக்கு வேறு அர்த்தங்கள் தோன்றுகின்றன.

சங்க இலக்கியத்தில் பயின்று வரும் அணிகளும், படிமங்களும் மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. ஒரு காட்சியை விளக்க இன்னொன்றினைக் கையாளும்போது குறியீடு உருவாகிறது. தொல்காப்பியத்தில் கூறப்படும் பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்ற நான்கும் குறிப்பாகப் பொருளுணர்த்தும் இயல்புடையவை.

சங்க இலக்கியக் காலம் குறியீட்டுக் காலமாக அமைகிறது. இயற்கைப் பொருட்களை, அகப்பொருள் நுட்பங்களை உணர்த்த, குறியீடுகள் பயின்று வருகின்றன. சமயம் தொடர்பான தொன்மக் குறியீடுகள் பக்தி இயக்கக் காலத்தில் இடம் பெற்றன. சித்தர்கள், குறியீடுகளைப் பொதுமைப் படுத்தினர். குறியீடுகளை அடிப்படை யாகக் கொண்டு பிற்காலக் கவிஞர்களும் தமது கவிதைகளை அமைத்துள்ளனர்.

குறியீடும் படிமமும் சங்க இலக்கியத்திலேயே மிகுதியாகக் காணப்படுகின்றன. சங்க காலச் சமூகம், அது உருவாக்கியுள்ள பொருளின் வரையறை போன்றவை தொடர்பான இன்றைய ஆய்வுகள், சங்ககாலம் பொற்காலம் என்னும் கருத்தினை மறுக்கத் தொடங்கியிருக்கும் நிலையிலும், மொழிநடை, கற்பனை, அணிநயம், செறிவு ஆகியவை நிறைந்த சங்க இலக்கி யத்தின் கவித்துவச் சிறப்பு பற்றிய ஐயத்தினை எங்கும் எழுப்ப இயலவில்லை. இத்தகைய மேம்பாடு நிறைந்த சங்க இலக்கியத் தில் நாம் காணும் உள்ளுறை இறைச்சி என்னும் குறிப்புப் பொருள்கள் அடங்கிய இலக்கியக்கூறுகள், குறியீடு, படிமம் போன்றவற்றின் சிறப்பை உணர்த்துபவையாக உள்ளன.

ஒன்றைச் சொல்லி வேறொன்றை உணர்த்துவது குறியீடு. அது உள்ளுறையாக, நூற்றுக் கணக்கில் சங்கப் பாக்களில் காணப்படுகிறது.

நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் யாணர் ஊரன் (ஐங்.)

என்ற பாட்டில் “பூத்திருக்கும் காஞ்சி மரங்கள் குலப் பெண் களையும் புலால் நாறும் மீன்கள் பரத்தையரையும்” குறிப்பதாகக் குறியீடு அமைகிறது. இதுபோல் செடி கொடி மரம் பறவை விலங்கு இவற்றின் செயல்பாடுகள் வழியே மக்களின் வாழ்வைக் குறியீடுகளால் விளக்கும் இலக்கிய உத்திகளைச் சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.

சங்க இலக்கியத்தின் குலமரபுச் செய்திகளும், நிலவழிப் பிரிவுகளான முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை ஆகியவையும் குறியீடுகளே ஆகும்.
படிமம் விரிவான காட்சியைத் தோற்றுவிக்கும் தன்மையுடையது. சங்க இலக்கியத்தில் வேங்கைப் பூக்களின் மலர்ச்சி, யானை, புலி இவற்றின் பகை, பொய்கூறும் தலைவன் நாட்டின் அருவி என்ற பல்வேறு படிமங்களின் வழியே தலைவன் தலைவி காதல் வாழ்வு விளக்கப்படுகிறது.

கானமுயலெய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது. (குறள்.772)

கானமுயலெய்த அம்பு, யானை எய்து பிழைத்த வேல் இரண்டுமே இங்கு குறியீடுகள்.

பிறிதுமொழிதல் அணி அமைந்த குறட்பாக்களில் உருவகங்கள், குறியீடுகள் சிறப்புற அமைகின்றன என்று பொதுவாகச் சொல்ல இயலும்.

சங்ககாலத்திலும், சித்தர் காலத்திலும், இலக்கிய உத்தியாகப் பயன்பட்ட குறியீடு மீண்டும் புதுக்கவிதைக் காலத்தில் இலக்கிய உத்தியாகப் பயன்படுகிறது என்றும், வெறும் இலக்கிய உத்தியாக மட்டுமல்லாமல், அது புதுக்கவிதையின் சிறப்புப் பண்பாகவே மாறிவிட்டது என்றும் கவிஞர் அப்துல் ரகுமான் கூறியுள்ளார்.

எருமைவெளியனார் மகன் கடலனார் எழுதிய பாட்டில் படிமமும் காணக்கிடக்கிறது.

ஈருயிர்ப் பிணவின் வயவுபசி களைஇய
இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை
நாம நல்லரா கதிர்பட உமிழ்ந்த
மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும் (அகம்.373: 12-15)

இப்பகுதியில் புலியின் அன்பு வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. தனது பெண்புலியின் பசியைக் களைவதற்காக யானையைக் கொன்று வந்த ஆண்புலி, அதனைப் பாம்பு உமிழ்ந்த மணியின் வெளிச்சத்தில் இழுத்துச் செல்கிறது.

தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான். அவன் சென்ற வழியின் கொடுமையை நினைத்தும், அவன் திரும்பி வந்து தன்னை மணமுடிக்காத நிலை குறித்தும் தலைவி வருந்துகிறாள். அவள் தனது தோழிக்குக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

இப்பாட்டின் இரு படிமக் காட்சிகளும் ஒன்றிற்கொன்று முர ணானவை. முதல் காட்சியில் தனது பசியைத் தீர்த்துக் கொள் வதற்காக மின்னி இடிக்கும் வானத்தையும் பொருட்படுத்தாமல் புற்றுக்குள் கைவிட்டு ஈயற் சோற்றை உண்ண விரும்பும் கரடியின் சித்திரத்தைக் காண்கிறோம். அதற்கு எதிரான இன்னொரு காட்சியில் தனது மனைவியாகிய புலியின் துயர் தீர்க்கச் சிறுவெளிச்சத்திலும் தான் கொன்ற யானையை இழுத்துச் செல்லும் ஆண் புலியின் செயலைக் காண்கிறோம்.

இங்கு தலைவி அமைக்க விரும்பும் இல்லறக்காட்சியின் குறியீடாக இரண்டாவது செயற் படிமம் இடம்பெறுகிறது. எப்படி அந்த ஆண்புலி தனது பெண்புலிக்காக யானையைக் கொன்று நள்ளிரவிலும் இழுத்துவர முற்படுகிறதோ அப்படித் தனக்காகத் தன் கணவன் வாழும் இல்லற வாழ்வைத் தலைவி நாடுகிறாள் என்பது குறியீட்டுச் செய்தியாக அமைகிறது.

ஆனால் முதற்காட்சியோ தனது இன்பத்தை மட்டுமே கருதித் தன் பசியைத் தீர்த்துக்கொள்ள முனையும் கரடியைக் காட்டுகிறது. அவ்வாறே தலைவனும் இப்போது செயற்படுவதாகத் தலைவி நினைக்கிறாள். அதனால் அவள் வருந்துகிறாள். ஆனால் எவர் மீதும் தவறில்லை என்றும் தோழியிடம் துன்பத்தோடு உரைக் கிறாள். ஆகவே இப்பாடலில் படிமங்கள் குறியீடுகளாகச் செயற் பட்டு இப்போது காணும் வாழ்க்கை நிலைக்கும் தான் கற்பனை செய்துள்ள வாழ்க்கை நிலைக்குமான முரணை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றன என்பதைக் காணமுடிகிறது.

இங்கு குறியீடாக அமைபவை இரு படிமக் காட்சிகள். படிமத்திற்கும் குறியீட்டுக்கும் உள்ள தொடர்பினை இப்பாடல் நன்கு விளக்குவதாக அமைந்துள்ள்து.
முதற் படிமக் காட்சியில் கரடி தலைவனைக் குறிக்கிறது என்றும், அது புற்றாஞ் சோற்றை உண்பது தலைவியின் நலனைத் துய்ப்பது என்றும் கொள்ள இயலும்.

இரண்டாவது காட்சியிலும் ஆண் புலி தலைவனைக் குறிக்கிறது, பெண் புலி தலைவியைக் குறிக்கிறது. ஆனால் இக்காட்சி இல்லற அன்பு வாழ்க்கையை உணர்த்துவதாக உள்ளது.

படிமங்கள் பல, குறியீடுகளாக ஆக்கம் பெறும் தன்மையுடையவை. ஆனால் குறியீடுகள் அனைத்தும் படிமங்கள் ஆகமாட்டா என்பதை மட்டும் நினைவில் வைக்க வேண்டும்.

மேற்கண்ட விளக்கத்திலிருந்து இப்போது கவிச்சுடர் தேன்மொழி தாஸ் அவர்களின் கவிதைகளை கொஞ்சம் பார்ப்போம். அதில் அவர் எவ்வாறெல்லாம் படிமங்களையும் குறியீடுகளையும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

இப்போது கவிச்சுடர் தேன்மொழி தாஸ் அவர்களின் படைப்புகளை அலசலாம்:
***********************************************************************************************************

எனது அணைப்பின் கதகதப்பை
நிலவினாலும் தரவியலாது என
உணரும் நாளில் நீ
வானத்தை
நம் காதல் கடிதமென மடிப்பாய்...

- காதலன், தன் காதலியின் பிரிவை உணரும் தருணம் எப்படி பட்டதாக இருக்கும் என்பதை இந்த வரிகள் மூலமாக அழகாக சொல்லிவிடுகிறார்.

கனவுகளின் நீட்சியாகவே இவரது கவிதைகள் விரிவதை நாம் காணமுடிகிறது. இவரது நிராசைகளின் ஆதித்தாய் மிகவும் பலரால் பேசப்பட்ட கவிதை தொகுப்பாகும். தனது கவிதைகளின் கதாபாத்திரங்களான சூசன்,ஜெசி, சூனு இவர்கள் மூலமாக கவிதைகளின் வழியே தான் சொல்லவந்ததை சொல்வது, இவருக்கு மிகவும் சுலபமாக இருக்கிறது.

தர்கம் செய்யும் கவிதைகளை இவரிடம் காணமுடிந்தாலும், துயரங்களை பேசும் கவிதைகளைத்தான் பெரும்பாலும் பார்க்க முடிகிறது.

வீட்டு கதவை தட்டிய விரல்கள்
என் இளமையோடு உதிர்ந்து விட்டன
வெகுதூரம் வந்து விட்டேன்
அறிவு தெளிவு நிதானம்
மிக நீண்டதொரு மௌனம்
எல்லாவற்றையும் ஒரு மரத்தனடியில்
இறந்த என் நாய்குட்டியைப் போல் புதைக்கிறேன்
இப்போது உங்களுக்கு புரியக்கூடும்
என் மனது தவிர மற்றவை மரித்துப் போனது...

- தன் நாய்குட்டி இறந்த சோகத்தை, அதை புதைத்த இடத்திலேயே உதிர்ந்துபோன இளமையோடு எல்லாவற்றையும் புதைத்துவிட்டு, வெற்று மனதோடு வாழும் ஓர் உயிராக, தன் ஆற்றாமையை இந்த கவிதையில் கொட்டுகிறார்.

பிரார்த்தனைகளுக்காக தேவாலயங்களில் ஏற்றப்படும் மெழுகு வர்த்திகளின் வெளிச்சம், நம் கவிஞரின் பார்வையில் வித்தியாசமாக தெரிகிறது.. ஒரு சூபிக் கவிஞரின் பார்வையோடு, அவை நம்மிடம் செய்தியை பகிர்கின்றது

மெழுகுவர்த்தியிலிருந்து ஒளியினைவிட
குரல்களே அதிகம் கேட்கின்றன...

- பிரார்த்தனை மெழுகுவர்த்திகள் ஒளியை மட்டுமா நமக்கு தருகிறது? என்ற கேள்வியை நாசுக்காக வைக்கிறார்.

கவிஞரின் சங்கீதம் 151 என்ற கவிதையின் சில வரிகள் இப்படிப்பட்ட அசத்தல்களை கொண்டதாகவே இருக்கின்றன

நாம் எப்போதோ இறந்து விட்டோம்
இங்கிருப்பது குரல்கள் தான் என்று நம்புங்கள்
ஆதலால்
வார்த்தைகளில் வார்த்தைகளுக்காக வாழுங்கள்
நமது மூதாதையர்களும் நம்முள்ளே
சொற்களின் உடல்களால் உறைந்திருக்கிறார்கள்

பூக்கள் தனது வாசனையை தண்டுகளில்
நிலைநிறுத்துவதில்லை
தனக்குள்ளேயே அதனை தவிக்கவிடும்
அகம் தவிப்புடையது
அவையாவும் வீரியமிக்க கருவாகும்

நித்தியத்தின் ஒரு தும்பு நம் தொப்புள் கொடி
மறுமுனையை கண்டறிபவன் யார்

- வரிகளின் கூர்மை கவிதைகளை அழகு செய்து விடுகிறது. வர்ணிப்புகள் மட்டுமே கவிதையாகுமா என்றால் நிச்சயம் கிடையாது.. ஒரு கவிதை தான் சொல்லவந்ததை தைரியமாக சொல்லவேண்டும்.

இவரது அழகான கவிதைகளில் ஒன்று அகநீர்வாழ் பறவை தனிமை மனதுடன் வாழும் ஒருவரையே அகநீர்வாழ் பறவை என்று சொல்கிறார். இந்த கவிதையில் விடாமல் பெய்யும் மழையை ஊன்றி பெய்வதாக சொல்கிறார். அழுத்தமாக பெய்யும் மழை, பூமிக்கு ஆதாரமான மழை இப்படியெல்லாம் விளங்கவைக்கிறது அந்த வார்த்தை, மழையின் காரணமாக பெருக்கெடுத்தோடும் மழை வெள்ளத்தை தனக்கே உரித்தான பாணியில் கார்காலத்தின் உரிமை இடித்துக் கொண்டு ஓடுகிறது என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துகிறார். எவ்வளவு நுட்பான சொல் !
இந்த கவிதையை உள்ளார்ந்து படித்தால் மழை ,இரவு என்பன எல்லாமே படிமங்களாக மாறி மனதோடு தனியாக வாழ்பவனை பற்றியும் சொல்லும். இதுதான் அந்த கவிதை :

மழை ஊன்றிப் பெய்துகொண்டிருக்கிறது
கருங்காணப் பயறுகளாய் பெயர்ந்து
இன்றேனும் உதிர்ந்து விடாதா இரவு
கார்காலத்தின் உரிமை இடித்துக் கொண்டு ஓடுகிறது
எதனைக் கற்பிக்க இந்நேரம் சாமக்கோடாங்கி அலைகிறான்
கருத்தாளி அவன் காலடி கரும்பொன்
நினைவு சிதறுமிடமெல்லாம் பேசும் தவளைகள்
கலகிகள்
ஒரு மாத்திரை அளவு
எதையோ திரும்பத் திரும்ப உச்சரிக்கிறது மனம்
எல்லையின்மையில் ஒரு பொட்டு வைக்கிறேன்
அழுந்துதல் எத்தகைய இன்னிசை
உலர்ந்த பூ சாம்பலாய்ப் புரள்கிறது
கிச்சிலி வாசனை சாளரத்தை தட்டுகிறது
அது எனக்கு தேனீர் தர விரும்புகிறது
மேலிமையில் திரளும் ஒளித் தண்ணீர்
அகநீர்வாழ் பறவை

காணும் காட்சிகளில் பரவசம் காண்பவனே கவிஞனாகிறான். நிலவு, நட்சத்திரம், கடல் இப்படியே கவிஞர்களிடம் சிக்கிக் கொண்ட இரசனைகளின் இடையே இவர் செடிகளில், நீர் நிலைகளில் காணப்படும் மேன்டிஸ் என்கிற ஒருவகை குச்சிபூச்சியின் அழகில் சொக்கி போகிறார். அது தன் கால்களை அடிக்கடி உயர்த்தி அசைப்பதும், தலையை திருப்புவதும் ஒரு நடனமாகவே அவருக்கு தெரிகிறது. இதனை தனது மேன்டிஸ் நடனம் என்ற கவிதையில்

மேன்டிஸ் பூச்சிகளின் நடனம் காண்கையில்
எல்லா உயிர்களின் விரல்களிலும்
இசையின் மனதே நிறைந்திருக்கின்றன
என்று உணர்கிறேன்
இச்சிறு உயிர்கள் புணரும் உடல்மொழியில்
பல எழுத்துருக்கள் வெளியில் மிதப்பதையும் விழித்தாளில் குறித்து கொள்கிறேன்... என்று குறிப்பிடுகிறார்.

- காதலனின் நினைவை தக்க வைத்துக்கொள்ள காதலி ஏற்படுத்திக் கொள்ளும் முன்னெடுப்புகளை அழகாக சொல்லும் பல நாள் முத்தங்கள் என்ற கவிதை நம்மை சங்க காலத்திற்கே அழைத்து சென்றுவிடுகிறது..

இதுதான் அந்த கவிதை:

மடியில் மணிமான் கதிராய் படுத்துக்கொள்
வெள்ளைப்போள வாசனைக் கைகளை உன் மார்போடு சேர்த்துக்கொள்
சொல்மாலைகள் களைவோம்
பத்ராட்ச மரப்பூக்களாய் நமது முத்தங்கள் பூக்கட்டும்
காற்றின் உப்பை கனியச் செய்து தருவேன்
மகாமாயம் தேசத்தில் உலவிச் செல்வதை நீயறிவாய்
பூக்குஞ்சுகள் நமது தலையணை அடியில்
புலம்புகின்றன
விபரீத காலங்களை நான் விரும்பவில்லை
ஆயினும் அணைத்துக்கொள்
காட்டு முந்திரிக்கொடிகளாய் படர்ந்துவிடுகிறேன்
மார்க்குழி மத்தியில் உனது உதடுகளை
சொல்லோடு பதியமிடு
வாஞ்சை உறிஞ்சிக்கொள்ளும்
அகத்தின் ஊற்றில் ஆலங்கட்டிகளாய் உனது வார்த்தைகள் பயணிக்கும் பாதையில்
ஒரு சமக்குறி இடு சிற்றோடையாகட்டும்
கண்ணாடிச் சதை மனம்
இன்று அதை வீட்டு முற்றத்தில் குமரிச்செடியின் அகத்தில் வைத்தேன்
நீ விலகியிருக்கும் காலங்களில் இப்படித்தான் பொழுதுகளை மறைக்கிறேன்
சீந்தில் கொடியின் சிவப்புக் கனிக்கொத்தில்
பலநாள் முத்தங்கள் உதிர்ந்தன
சுபலாலிகள் மாராப்பில் மயங்கின
நீடுவாழ்தல் என்பது காத்திருப்பு
மடியில் மணிமான் கதிராய் படுத்துக்கொள்

- தேனை சுவைத்தவர்கள் அதன் ருசியை மட்டுமே சிந்தித்திருப்பார்கள்...அதனை எடுக்க மலைவாசிகள் எவ்வாறெல்லாம் உழைக்கிறார்கள் என்பதை பற்றி தெளிவாக சொல்லும் ஒரு கவிதை இதுவாக மட்டுமே இருக்க முடியும்.. இவரும் மலைவாழ் மகள் என்பதால் இவருக்கு இது சாத்தியமாகிப் போனதோ என்று வியக்கத் தோன்றுகிறது...

நீங்களும் இரசியுங்கள்;

தேன் வேட்டை

சருகுகளின் சந்நிதியில்
இலையுதிர் காலத்து அதிகாலை உதிரும்
மனதின் வெடிப்புகளுக்கு
சந்துபூசுதல் எனும் ஆராதனை
தாயின் மடியில் நிறைவேறும்
உலகநடை என்பது மலைஊற்றில் முதல் பாதம்
ஒத்தயடிப்பாதையில் பொன்வண்டின் மூக்கு மனிதனின் பாதத்தை நுகர்ந்து ஆலோசிக்கும்
மேலும் அது பாடிச்செல்லும்
மனிதனின் கண்கள் பாயும் தட்டு
பார்வை தான் பூஞ்சிறகு என்று
தனிமையின் கீர்த்தனம் வெளியெங்கும் நிறைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன்
கண்ணிதழ் கருணை கொண்டது
குளிர்ந்த சொற்களை கேளையாடுகள் மலைவெளியெங்கும் மேய்ந்திருக்கும்
நாங்கள் தேனெடுக்கச் செல்வோம்
இலைக்கறி உண்டு
சந்தனச் சாரலில் அந்நாளைக் குளிக்கச் செய்து
அம்பும் கைவில்லும்
கோடரியும் கவ்வாத்துக் கத்தியும்
தோளில் அடைசுமக்கப் பையும்
உடலெங்கும் கொச்சைக் கயறுகளையும் சுற்றி
நாங்கள் தேனெடுக்கச் செல்வோம்
காட்டுப்பூனைகளை விரட்டி விளையாடி அதன் பேதைகுணம் வாங்கி
மலைவேம்பு பூக்களைத் தலைப்பாகையில் கட்டி
நிலவேம்பு வேர்களை வாயுக்குள் சவைத்தபடி கூட்டுக்காரர்களை வம்பிழுத்து மலையேறி
நாங்கள் தேனெடுக்கச் செல்வோம்
தேனடை தொங்கும் மரத்தடியில்
சருகுகள் குவித்து தீ மூட்டி
அதன் மேல் கூட்டுக்காரர்கள் பச்சைக் கசப்பந்தளைகளால் புகைமூட்ட
தேனடையில் தலைவேட்டை காரன் அம்பெய்வான்
புகைச்சட்டியை இடுப்பில் கட்டி அவன் மரமேற
நாங்கள் வேட்டைக்குப் பாடும் பாடல்
தா.....யே
தா.....யே
தா.....யே
என்றத் தூரக் குரலாகும்
பலநாகம் ஒருசேரச் சீறும் விதமாய்
தேனீக்களின் தவம் கலையும்
மரக்கட்டைகளில் ஈத்தல் குச்சிகளால் இசையெடுக்க
மலைகள் உள்வாங்கி தனது ஈரக்குலையிலிருந்து எதிரொலிக்கும்
தாய்
எனும் சொல் புகையினுள் உருவமாகும்
அந்நேரம்
உயிரின் பற்றுக் கம்பிகள் சுருளும்
தா.....யே தா.....யே தா.....யே என்றபடி
மூங்கில் முனகும் தக் தக் தக்கெனும் ஓசையோடு
தேனடை அறுக்க வேட்டையின் வெற்றியில்
உயிரின் பற்றுக் கம்பிகள் நீளும்
ஈக்கள் கலையக் கலய காடு அசையும்
ஆயினும்
புகையினூடே
நாங்கள் பாடிக் கொள்வோம்

காடே எல்லாவற்றிற்கும் நீதான் குளிகை

- இவரது இரசனைகள் மிகவும் வித்தியாசமானது என்பதற்கு தட்டானின் இரண்டு கண்கள் என்ற கவிதை மிகப்பெரிய சான்றாகும். பளபளக்கும் தட்டானின் கண்களை மட்டுமே படிம மூலமாக வைத்துக் கொண்டு அவர் காணும் காட்சிகள் பரவசமானது...

தட்டானின் கண்கள்

இரண்டு கடல்
இரண்டு பிரபஞ்சம்
இரண்டு பித்தப்பை

கண்ணாடி ஸ்தனங்கள்
பார்வை கொண்ட கூழாங்கற்கள்
அலையும் ஓவிய ஞானங்கள்

உதிராக் கண்ணீர்
உருளும் ஸ்படிகம்
நீர்நிலைகளின் காம ஒளிகள்

ஞானம் பெருவதற்கு முன்னிருந்த
புத்தனின் ஆன்மா
கிறிஸ்து பிறப்பதற்கு முன்னிருந்த
தீர்கதரிசிகளின் கனவுகள்
சுத்த சுதந்திரத்தின் மூல மந்திரங்கள்

யாத்ரீகனின் பின் மூளை
ஒளியின் ஜல்லடை
இசையின் இயங்கு தளம்

தவித்துப் பறக்கும் நாளமில்லாச் சுரப்பிகள்
தாவரங்களின் நிலாக்கள்
தட்டாம் பூச்சியின் கண்கள்

தனிமையும் மௌனமும் கூட அவர் கவிதைகளில் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது... அதுவே அவருக்கு நேசமாகவும் சில நேரங்களில் மாறிப்போகிறது.அவரது குரல் என்ற இந்த கவிதை மிகவும் நுட்பமானதும் கூட...

குரல்

தனித்திருக்கும் பொழுதுகளில்
என் குரல்
சுவாச அறையைத் தட்டுகிறது

அது
என் காதுகளில் நடக்கையில்
பெயரிடப்படாத உலகமொன்றின்
அந்தி கருகுகிறது

என்னைத் தீட்டிக் குழப்பி
அழவும் ஆறுதலாகவும்
பிரியமாகவும் பேரொலிக்கிறது

அதன் கேள்விகளுக்கு
அனேகமாய்ப் பதலளிக்க முடியாமல்தான்
அவதியுறுகிறேன்

என்னைவிட
என் ஆழ்குரலுக்கு
கவிதை நன்குத் தெரிந்திருக்கிறது

விரல்களற்ற வலியைச் சொல்லி என் விரல்களை எழுதக்கேட்கிறது

என் காதுகளைவிட நாசியைவிட
ஓசைகளை வாசனைகளைத்
துளிகளாய் அள்ளி
துளைச் செவியின் பரணில்
தேக்கி வைத்திருக்கிறது

எனை இருண்டதொரு
தாழ்வாரத்திற்கு அழைத்துப்போய்
பேசிப் பேசி முடிச்சவழிப்பதுபோல்
சிக்கலிட்டு வைக்கிறது

அங்கே நான் கவனிக்காத எதையோ
பதுக்கி வைத்திருப்பதாய்ச் சொல்கிறது

இதோ இப்போது கூட
இங்கேயே வரிகளை விட்டு விட்டு
வரும்படி கூப்பிடுகிறது

 - ஒளியறியாக் காட்டுக்குள்

காதலன் சென்ற வழித்தடத்தில் நின்று கொண்டு அவனது காதலி இவ்வாறும் சிந்திக்க முடியும் என்பதே இந்தக் கவிதை

இந்நேரம் நீ
உன் வீட்டை அடைந்திருப்பாய்
நீ விட்டுச்சென்ற இடத்திலிருந்து
நமக்கான வீட்டின் வரைபடமொன்றை
வரைந்து கொண்டிருக்கிறேன்
நான்

கவிதைகளில் இன்னமும் புதுபுது முயற்சிகளில் இறங்கி பயணிக்கவும் தொடங்கியுள்ளார். இவரது இந்த கவிதைப் பயணம் மேலும் தொடரவும்.. சிறப்பான படைப்புகளை தொடர்ந்து தமிழுக்கு அளிக்கவும் படைப்பு குழுமம் அவரை மனதார வாழ்த்துகிறது.

படைப்பாளி தேன்மொழி தாஸ் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.