logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் குறிஞ்சி நாடன் ஒரு அறிமுகம்
********************************************************
படைப்பு குழுமத்தால் இம்முறை கவிச்சுடர் விருது பெறும் படைப்பாளி குறிஞ்சி நாடன் அவர்களின் இயற்பெயர் தியாகராஜன். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இந்த திருச்சிக் காரர் உதகையில் வளர்ந்தவர் . தற்போது பணி நிமித்தமாக அயல்நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இவர் ஜாதி மத இன பேதங்களை மறந்த வாழ்க்கை முறையை அமைத்து வாழ்ந்து வருபவர். பல கவியரங்குகளிலும் தனது கவித்திறனை காண்பித்துக் கொண்டிருக்கும் இவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினரும் கூட. இவரது பல கவிதைகள் பிரபல பத்திரிக்கைகள்/நாளிதழ்கள் மற்றும் பல்வேறு இலக்கியச் சிற்றிதழ்களிலும் வெளியாகியுள்ளன. வேலைப்பளு காரணமாக இலக்கிய எழுத்துக்களில் கொஞ்சம் ஓய்ந்திருந்த இவர் நமது படைப்புக் குழுமத்தால் ஈர்க்கப் பட்டு மீண்டும் எழுத்துலகுக்கு வந்து தனது படைப்புக்களால் படைப்பு வாசகர்களின் உள்ளங்களை கவர்ந்து கொண்டிருப்பவர்.

சமூக மிருகம் என்கிற மனித சமுகத்தை இவரது கவிக்கண்கள் பார்க்கும்வெவ்வேறு கோணங்களில் உதயமாகின்றன பல்வேறு கவிதைகள். அந்தப் படைப்புக்களில் ஒரு சிறப்பான படைப்பு :-

ஏ சமூக மிருகமே!
-----------------------

அவசரமாய் நீ
அபிநயம் புரிந்து
அகிலம் வென்றவன்
என்கின்றாய்.
தலைகணம்தான் உன்
முடி அதைச் சூடி
தரணி யாள்கிற
கோவென்றாய்.
நிதர்சன வெளியில்
எடுத்துப் போட்டால்
நெருப்பாய் சுடும் உன்
லாவணிகள்.
கரிசனம் ஏதும்
காட்டியதுண்டா
இயற்கையெலாம் உன்
காலணிகள்.

தங்க முட்டை
வாத்தைக் கொன்று
தரித்திரனாய் பசி
தீர்கின்றாய்.
அங்கம் முழுதும்
பங்கம் வந்தால்
ஆண்டவனை நீ
நோகின்றாய்.
காற்றுதான் உன்
உயிரின் ஊற்று
கசடாய் மாற்றி
இழுக்கின்றாய்.
தண்ணீர் இன்றி
தாகம் தீரேன்
வல்லமையை நான்
ஏற்கின்றேன்.

கூட்டுப் புழுவின்
குட்டி வீட்டை
கல்லறை யாக்கி
பட்டென்றாய்.
கூட்டை உடைத்து
உணவைத் திருடி
சுவைக்கும் மருந்து
தேன் என்றாய்.
மாட்டைக் கறந்து
கன்றை ஏய்த்து
புரதச் சத்து
பாலென்பாய்.
ஏட்டைப் புரட்டு
மரத்தின் பிணத்தில்
எழுதிய சரித்திரம்
நீ நண்பா.

நிலத்தைப் பிரித்து
வேலியமைத்து
எனது உனது
என்கின்றாய்.
குணத்தை நிறத்தை
இனத்தை மதத்தை
வகுத்துச் சிதறிப்
பிரிகின்றாய்.
எல்லைக் கோடு
தொல்லை அதைத்தான்
தேசப் பற்றாய்க்
கொள்கின்றாய்.
உன்னைப் போல்தான்
அவனும் மனிதன்
அவனை நீயேன்
கொல்கின்றாய்?

ஆயிரம் கோடி
உயிர்களின் பூமி
அதிலே நீயும்
ஒரு விலங்கு.
அன்பு அறிவு
ஒழுக்க வாழ்வு
அனைத்திலும் உண்டு
அதை விரும்பு.
செத்தால் நீயும்
மண்ணாய்ப் போவாய்
உடலும் உடன்வர
மறுக்கிறது.
ஆறாம் அறிவை
ஆற்றில் கழுவு
அழுக்காய் கருப்பாய்
இருக்கிறது.


கடவுளின் பெயரால் இச்சமுதாயத்தில் நமக்குள் நாமே பிளவுபட்டுக்கிடக்கும் நிலையை நாம் கண்ணுற்று வருகிறோம். மானுடத்தின் மேன்மைக்காகவும் அமைதி நிறைந்த வாழ்வுக்காகவும் நமக்காக நாமே தோற்றுவித்த வழிமுறைகள்தாம் இந்த மதங்கள். காலத்தாலும் தூரத்தாலும் இம்மதங்களின் வழிபாட்டு முறைகளும் தேவ நாமங்களும் வேறுபட்டுப் போயிருந்தாலும் மனிதனை மென்மையாக வைக்கும் நோக்கத்துடன் மட்டுமே படைக்கப் பட்டவை. அப்படிப் பட்ட மதங்களின் பெயராலேயே இன்று மனிதனின் வாழ்க்கை அமைதியும் நன்மையையும் இழந்த ஒரு போராட்டக் காலமாகிவிட்ட நிலைமையும் காண்கிறோம். படைப்பாளி குறிஞ்சி நாடனின் கடவுளைப் பற்றிய ஒரு கவிதையைக் காணுங்கள் :-

நான்தான் கடவுள் என்று
முறைப்படி
அறிவிக்கவில்லை நான்.
நீங்களாகவே
கண்டுபிடிக்கட்டுமென்று
காத்திருந்தேன்.
நீங்களோ
வேறு எதையோ
கடவுளென்று கூத்தாடி
என்னைப் போட்டுடைத்தீர்கள்.
உங்களைச் சந்திக்காமலேயே செத்த
சாமானியனாகி விட்டேன் நான்!

பள்ளி செல்லும் பால்ய காலத்தில் மட்டுமே மனிதன் உண்மையில் வாழ்க்கையை வாழ்கிறான். அந்தக் களங்கமில்லா வயதில் பள்ளிசெல்லும் மகள் சின்றில்லாவின் வகுப்பறை என்கிற இந்த கவிதையை வாசிக்கும் எவருக்கும் மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்கிற வேட்கை ஏற்படும் என்பதில் ஐயமில்லை. வீட்டுப் பாடங்களும் தேர்வுகளும் இல்லாத ஒரு பள்ளிப் பருவம் :-

சின்றில்லாவின் வகுப்பறை
----------------------------------------------------

வீடு திரும்பியதும்
தன் வகுப்பறைக்குள் சென்று
கதவடைத்துக் கொள்கிறாள்
சின்றில்லா!

குட்டி உலகமொன்று
வெளிச்சத்தோடு விரிகிறது!

இல்லாத மூக்குக்கண்ணாடியை சரிசெய்தபடி
விதுலா மிஸ்ஸின் மிடுக்கோடு
பாடம் நடத்தத் தொடங்குகிறாள்!

வகுப்பில்
பூனைக்குட்டியும்
சில தேவதைகளும் படிக்கிறார்கள்!

சுற்றுச்சுவர் நான்கும்
சித்திர எழுத்துக்களால்
நிறைகின்றன!

பதில் சொல்லாத தேவதைக்கு
ஒரு பென்சிலை பரிசளித்து
இது அடுத்தமுறை
நீ சொல்லப்போகும்
சரியான பதிலுக்கு என்கிறாள்.

கணக்கு புரியாத
பூனைக்குட்டியை
செல்லமாய்த் தட்டி
நாளைக்கு
உங்க அம்மாவை கூட்டிவா என்கிறாள்.

தலையில் தானே குட்டிக்கொண்டு
வாய்ப்பாட்டை
மனப்பாடம் செய்யும்
இன்னொரு தேவதையை அழைத்து
தனது இசைக்கேற்ப
ஏழாம் வாய்ப்பாட்டைப் பாடச்சொல்கிறாள்.
இசையாய் பரவுகிறது
ஏழாம் வாய்ப்பாடு!

சூரியமண்டலத்தை
மடியில் பரப்பி
ஆளுக்கு கொஞ்சம்
நட்சத்திரங்களை
அள்ளிக்கொள்ளச் சொல்கிறாள்.

பானிபட்டுப் போரில்
இரத்தவாடை வீசுமென்று
வெள்ளைப் புறாவோன்றின் கதையை சொல்லத் தொடங்குகிறாள்.

அழகான ஓவியத்திலிருந்து
வண்ணங்களை அள்ளி
தேவதைகளின் வெள்ளுடைகளில் பூசிவிட்டு
கன்னம் குழிவிழ சிரிக்கிறாள்!

வகுப்பு முடிவுக்கு வருகிறது.
தேர்வு அறிவிப்புக்கு
காதுதீட்டி காத்திருக்கிறார்கள்
தேவதைகள்.

இனி தேர்வுகளே கிடையாதென்று அறிவித்துவிட்டு
குதூகலதத்தை கண்களில் நிரப்பிக்கொண்டு
அறையைத் திறக்கிறாள்
என் சின்றில்லா.

எழுதப் படாத வீட்டுப்பாடங்களை
நான் எப்படி நினைவூட்டுவது?

இறைபக்தியும் வணிக நோக்கத்தை கவசமாக அணிந்து கொள்ளும் அவத்தைக் கண்ணுறும் கவிஞரின் ஒரு கவிதை :-
புதுப்பிப்பு.
------------

கரடு முரடான நிகழ்வுகளை
அலங்கோலமாய் வரைந்து
புரதானம் ஒரு கல்வெட்டைத் தந்தது
வாசிக்கத் தெரியாதவனிடம்.

சிதிலமடைதலின் உன்னதத்தைப்
பதைப்புடன் இழந்த புணரமைப்பில்
ஆதியின் மலர்கள்
பாடம் செய்யப்பட்டன.

ஆன்மாக்கள் சம்மணமிட்டிருந்த
சுண்ணாம்புக் கற்களில்
கான்கிரீட் ஏறுகிறது.

களவுபோயிருந்த கலசம்
தான் பொருந்தியிருந்த இடத்தை
நிரந்தரமாய் இழக்கிறது.

கிழக்கு பார்த்த
ஒரு தூண் சாய்க்கப்படும்போது
அது தாங்கியிருந்த
காலமும் சரிகிறது.

தலைமுறை மசக்கையில்
ஓய்வெடுத்தப் பொந்தினை
புறத்தே பட்சிகள் தேடுகின்றன.

மதில்பற்றி ஊடாடிய வேர்
சுடரில் பசைபோக்கி
சுள்ளியாகிறது.

தன் வீட்டை
யாரோ ஆக்கிரமித்துவிட்டதாய்
அழுதுகொண்டே
வெளியேறுகிறது இறை.

பிறகு

வரிசையில் நிற்கின்றன
அர்ச்சனைத் தட்டுகள்.
பிரமாண்டம் தொனிக்கிறது கோபுரம்,
ஒரு வணிக வளாகத்தைப்போல!


மனிதன் வாழ்வில் செய்வதனைத்தும் ஒரு தேடல்தான். முடிவற்ற அந்தத் தேடல் அவனது வாழ்வு முற்றுப் பெறுகையில் முற்றுப் பெறுமோ ? தோல்விகள் என்று வாழ்க்கையில் பெயரரிடப் படும் எல்லா செயல்களும் மானுட மனத்தின் தேடல்கள் என்கிறார் கவிஞர் ::-

சுழன்று கொண்டிருந்த தட்டிலிருந்து
வடித்துப் பருகிக்கொண்டிருந்தேன் இசையை.

எனது நாயும்
வாலில் அமர்ந்த ஈயைக் கவ்வ
வட்டமடித்துக் கொண்டிருந்தது.
இசையைப்பருகும் முகபாவனையொடு.

மின்வெட்டு
இசையின் குரலை
காற்றின் பிளவில் பதுக்க,
நாயைத்துரத்தி
இசையை மீட்கப்புறப்பட்டேன்.

இப்படித்தான்
அன்று
சுடரைத்தேடி
திரியைப் பிரிந்து சென்றேன் .
மௌன இருட்டில் திரும்பியபோது
திரியைத் திண்றுவிட்டிருந்தது விளக்கு.

ஒருமுறை
வானம் அறுந்து விழுந்த போதும்
உடைமாற்றிப்போன ஓடையில்
மேகம் கிடைக்குமென
தூண்டிலிட்டேன்.
வசமாய் மாட்டிக்கொண்டது எனது நிழல்.

இதையெல்லாம்
நீங்கள் தோல்வி என்கிறீர்கள்.
நான் தேடல் என்கிறேன் .

உடைதல் என்பது அழிவா இழப்பா மாற்றமா தோற்றமா ? இந்தப் பிரபஞ்சமும் பூமியும் எல்லாம் ஒரு உடைதலின் விளைவே. உடைதல் என்னும் ஒரு சொல்லுக்கு கவிஞர் சொல்லும் அழகான விளக்கம் பாரீர் ::-

உடைந்தால்
அழுது
உடையாதே.

உடைதல்
இழப்பல்ல
மாற்றம்.

நெபுலா உடைந்து
புவி வந்தது
பனிக்குடம் உடைந்து
நீ வந்தாய்.

எது உடைந்தாலும்
மனம் உடையாதே.
மனம் உடைந்தால்
நீ உடைவாய்.

உடைதல் இழப்பல்ல
மாற்றம்.
அதைக் காண
நீ உடையாதிருக்க வேண்டும்.

உடைந்த குடமொன்றில்
மண் நிரப்பி
செடி நட்டு
பூந்தொட்டி என்று
பெயர் சூட்டுகிறான் பார்
அந்த
நெட்டிக் கிழவன்.

சொர்க்கம் என்பது என்ன? மனிதன் தேடித்திரியும் சொர்க்கத்தை எங்கு காண முடியும் ? ஒரு கிராமத்து மொழி கொஞ்சும் இந்த அழகான கவிதையினை வாசித்துப் பார்த்துவிட்டு சொல்லுங்களேன்:-
ஓலக் குடில்
-----------------------

ஓலக்குடிலுக்குள்ளே ஒன்னுமே
-- இல்லையினு
சீலக்கருவாச்சி சொன்னதயா
--எண்ணிநின்னே?

காலையில உதிச்சதுமே கதிரரசங்
--கதவுதட்டி
மூல முடுக்கெல்லாம் பரவுறத பாக்கலியா?

ஊருக்கே பொதுவாக ஒத்தமழை
-- பெய்யயில
ஒனக்கும் எனக்கு மட்டும் உள்ளவந்து
-- பெய்யலையா?

மலையேறி வரச்சொல்லி மாநிலமே
-- காத்திருக்க
முழுநெலவு ஓடியாந்து கூரமேல நிக்கலியா!

சனமெல்லாம் மணலள்ளி மச்சிவூடு
--- கட்டுதுக
நதிவத்தி போச்சுதுன்னு அப்புறமா
--- கத்துதுக.
ஒத்தப் புடிகூட ஓடமண்ணு இங்கயில்ல
ஒனக்கும் எனக்குந்தான்டி பாவத்துல
-- பங்குயில்ல!

ஓலக் குடிசக்குள்ள ஒளிச்சுவைக்க
-- ஒன்னுமில்ல
ஒன்னையத் தவர இங்கக் களவாடத்
-- தங்கமில்ல!

ஒனக்குன்னு சேத்துவைக்க ஒத்தணா
-- காசுயில்ல
உசுரகூட. எடுத்துக்க ஒசந்தது பாசம்புள்ளே!

நெத்திலி கொழம்போட நெல்லு சோறாக்கி
பச்சமுத்தம் தந்துகிட்டு பரிமாறி பசியாறி
வெத்தலையில் நீ செவந்து பக்கம்வந்து
-- நிக்கயிலே
ஓலக் குடுசதான் உண்மையில சொர்க்கம்
-- புள்ளே!

மானுடத்தை அறியாமை இருளில் இருந்து வெளிக் கொணர அவ்வப்போது இந்தப் பூவுலகின் வெவ்வேறு மூலைகளில் தோன்றி மறையும் ஞானிகளையும் தெய்வமாக்கி அவர்களின் போதனைகளை வெறும் எடுகளுக்குள் பதுக்கி வைத்து வேடிக்கை பார்க்கும் உலகமிது . கவிஞர் குறிஞ்சி நாடனின் மற்றுமொரு சாடல் கவிதை:-

புத்தனைத் தொலைத்த
போதி பற்றிய குறிப்புகள்.
-----------------------------

# உன்னை மனிதனாக்க நினைத்த.
புத்தனை
நீ கடவுளாக்கினாய்.
மனிதனாக்கும் சூட்சமம்
கல்லானது.

# புத்தன் மறைந்ததாய்ச் சொல்லாதே
நீ மறுத்த உலகத்தில்
இன்னும்
போதித்துக்
கொண்டுதானிருக்கிறான்.

# துறந்தா வாழ்ந்தான் புத்தன்
ஆசையை ஒழிக்கும்
பேராசை அவனுக்கு.

# உனக்கு மரம் யாவும் மரம்தான்
போதியென்றாலும்
சிலுவைகள் செய்து
புத்தனை அறைவாய்.

# அரசு துறந்தான்
ஆசை துறந்தான்
அவன் ஆடை துறந்ததுதான்
பிடித்தது உனக்கு.
நிர்வாணமாய் அலைகிறாய்.

# ஆசைப் படுபவனுக்கும்
ஏக்கப் படுபவனுக்கும்
வித்தியாசம் தெரியாததால்
வேறு வழியின்றி
கடவுளானான் புத்தன்.

# அறுக்கப்பட்ட போதிமரத்தின்
அடிக்கட்டையில் அமர்ந்து
மீண்டும்
சித்தார்த்தனாகிக்
கொண்டிருக்கிறான்
புத்தன்.

# ஒரு நாடு முழுவதும்
பௌத்தம்
இனவெறி போதித்தது.
புத்தன்
வெளியேறிவிட்டதை அறியாமல்
தினந்தோறும் மணியடிக்கிறான்
அந்த பிக்கு.

# அமைதி குறித்த
துள்ளிசையின் ஒரு துளி
அவனது மூடிய இமையில் விழுந்து
கன்னத்தில் வழிந்ததும்
தேனீர் கடையை நேக்கி
நடையைக் கட்டுகிறான்
புத்தன்.

படைப்புக் குழுமம் அறிவித்திருந்த &ldquoநதிக்கரை ஞாபகங்கள்&rdquo கவிதைப் போட்டியின் தலைப்பு முக நூல் கவிஞர்களின் எண்ண ஓட்டத்தின் வெவ்வேறு கோணங்களை படம் பிடித்து வாசகர் முன்னே வைக்க காரணமாக இருந்தது. கவிஞர் குறிஞ்சி நாடனின் &ldquoநதிக்கரை ஞாபகங்களை&rdquo கீழே பார்ப்போம் :-

நதிக்கரை ஞாபகங்கள்.
------------------------------------------

நதியும் நதிக்கரையும்
பால்யத்தின் ஞாபகத்தில்
உறைந்து கிடக்கும் தாகநாளில்
நதிகளற்ற தேசத்து யாத்ரீகன் கேட்கிறான்,
உன் நாகரீகத்தைச் செதுக்கிய நதிகள் எங்கே?

முதலில் நான் கூவத்தைக் காட்டியிருக்கக் கூடாது
நதியின் தொழுநோய் இதுவென்று
மூக்கைப் பிடித்தபடி ஒரு கோக் அடித்தான்.
நீ குடித்ததுதான் தாமிரபரணி நதியென்றேன்!

மணல் வண்டிக்கடியில் கண்ணீரைப்போல் வடிந்த
பாலாற்றைப் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
கரையைத்தோண்டிக் கதறக்கதற புதைத்தோமே
அந்தப் பெண்ணையாற்றின் சமாதியைக் கண்டான்!

காவிரி கைதான இட.த்தைப் பார்த்து
நதி கன்னடம் பேசியதா என்றான்!
வைகைக் கரையில் கிடந்த
கேரளத்து வதந்திகளைக் காறித்துப்பிவிட்டு
நதிகளின் புத்திரர்கள் எங்கே எனத்தேட...
மூட்டைத்தூக்கும் நெட்டிக்கிழவனை காட்டினேன்!

சட்டென மகாநதிகள் தூரமா என்றான்.
அஞ்சலகம் அழைத்துச்சென்று
கங்கையை வாங்கி கையில் திணித்தேன்.

குறிப்பேட்டை எடுத்துக் குறித்தான்
மகாநதிகள்தான் இந்த நாட்டை ஆளுகின்றன!?

குறிஞ்சி நாடனின் கவித் திறனுக்கு எடுத்துக் காட்டாக இனியும் பல் கவிதைகளை சொல்லிக் கொண்டே போகலாம். கட்டுரை மிக நீண்டு விடும் என்கிற காரணத்தால் குறிஞ்சி நாடனின் மேலும் சில கவிதைகளையும் சில வரிகளையும் குறிப்பிடாமல் விட முடியவில்லை. படைப்புக் குழுமத்தின் அனைத்து படைப்பாளிகளின் சிந்தைக்காக கீழே கொடுக்கிறோம் -
மனிதர்களாய் இருந்தோம் .
கடல்
நனைத்து நனைத்து
மீனவர்களாக்கிவிட்டது!
காத்திருக்க வைத்து
கரை எங்கள் பெண்களை
மீன்காரிகளாக்கிவிட்டது.
எங்கள் குழந்தைகளை
அகதிகளாக்கியதுதான்
யாரென்று தெரியவில்லை!
************************************************

புழுதியில் குளித்த பூவைப்போல
நெகிழிக் குப்பை சேகரிக்கும் சிறுமி,
எதையும் தரமுடியாது வெட்கித் தலைகுனியும் எனக்கு
கோணிப்பை நிரம்ப பரிதவிப்பைத் தந்துவிட்டு
வியர்த்த கைகளில்
எதிர்காலத்தை
இழுத்துச் செல்கிறாள்.
*********************************************************

அரபு நாடுகளின் பாலை வனங்களை தங்களது வேர்வையை உதிரமாக்கி உழைப்பால் சோலைவனங்களாக்கிக் கொண்டிருக்கும் இந்தியக் குடிமக்கள் காணும் உண்மையான சோலை வனம் எங்குள்ளது ?
பாலைவனச்சோலை.
------------------------
ஐநூறடி உயரத்தில்
ஊசலாடும் சாரத்தில் வௌலாலைப்போல் தொங்கிக்கொண்டிருக்கிறான்
இராமநாதபுரத்து சண்டியன்.

தண்டச்சோறு பட்டம் வழங்கி கால்கட்டுபோட்டால்
அடங்குவானென்று
அசலூரில் இவனை
துபாய் மாப்பிள்ளையாக்கியிருந்தார் அப்பா!

திருச்சி ஏஜெண்டுக்கு
அம்மாவின் தாலிசரடையும்
புதுப்பொண்ணின் ஆரத்தையும் விற்று
அறுபதாயிரம் அழுதுவிட்டு
இதோ
ஐநூறடி உயரத்தில்
ஊசலாடும் சாரத்தில்
வௌலாலைப்போல....

தமிழரசி உண்டாகியிருக்காடா!
வந்த மூன்றுமாதத்தில் இனிப்பு அனுப்பினாள் அம்மா!

அலைபேசியில்
தினமும் அழும் தமிழரசியை கொஞ்சிக்கொஞ்சி தூங்கவைத்துவிட்டு
இவன் அழத்தொடங்குவான்!

இது பேறுகாலம்
அதனால்தான்
கீழே
கப்பூஸ் பொட்டலத்திற்கு அடியில் வைத்த அலைபேசிக்கு பெரம்பலூர் சண்டியனின் காதுகளைக் காவல் வைத்திருந்தான்.

அரேபியப் பகல் அனலாய் எரிக்க
முரட்டுச் சீருடைக்கு வெளியே
அவனது தாய்ப்பால்
உருகி வழிந்துகொண்டிருந்தது.

தலைக்குமேல் தாழ்வாய் பறக்கும்
விமானத்தின் பேரிரைச்சல்
புதிதாய் வரும்
துபாய் மாப்பிள்ளைகளின் கதறலைப்போல் கேட்டது அவனுக்கு.

பெரம்பலூர் சகா
கீழிருந்து கத்தினான்.
பொட்ட புள்ளே பொறந்திருக்காம் மாப்ளேய்.....

வைகை ஈரமாயிருந்த காலத்தின் கீழைக்காற்று
காதுக்குள் புகுந்து
சில்லிட வைத்தாற்போல்
குளிர்ந்தான்.

வெள்ளிக்கிழமை அறையில் வாங்கிவைத்த கிலுகிலுப்பையை
இங்கிருந்தே எடுத்து
இராமநாதபுரத்தில் ஆட்டினான்!.

தோளைத் தட்டிவிட்டுக்கொண்டு
எம்பி
சூரியனைத் தொட்டு
மத்தாப்பாய் பொறிபறக்க
இணைத்து பற்றவைத்தான்
இரும்புச்சட்டங்களை.

அன்று மாலை
அவன்
அனுப்பிய முத்தங்கள்
அலைபேசி கோபுரத்தில் மோதி
உதிர்ந்து
பூக்களாய் பூத்தன.

அதைத்தான்
பாலைவனச்சோலை
என்று
எல்லோரும் அழைக்கிறார்கள்!

எவ்வளவோ படைப்புகளை நம் குழுமத்தில் பதிந்திருந்தாலும் அதையெல்லாம் இங்கே எடுத்து சொல்ல இயலாத காரணத்தாலும் சில வரிகளை மட்டும் துளிகளாக தருகிறோம்.

//
தேசத்தின் வயல்வெளிகளெங்கும்
நீ
விளைவிக்கத் தவறிய பயிர்களையெல்லாம்
தழுவித் தழுவி
அழுகிறது உன் ஆவி!
//

//
விட்டுக்கொடுப்பது
உரிமையுடன் தட்டிப்பறிப்பது!
விலங்குதான் இது
நீ இழுத்தால் உடைந்துவிடும்
ஆனால்
இங்கு
விலங்குடைதல் சாபம்!
//

//
எத்தனை அலங்காரம்
எத்தனை அகங்காரம்
விட்டிலைவிட
கொஞ்சநாள்
அதிகமாய் வாழ்பவனுக்கு!
//

//
அவள்
சுருட்டி வைத்திருந்த இருட்டு
சுட்டுவிரலாய் என்னை நோக்கி நீண்டது
//

//
நம் கனவு
அருகில்தான் உலவிக்கொண்டிருக்க வேண்டும்.
பூக்களை விலக்கிக்கொண்டு,
மகள் வாசம் வீசுகிறது பார்!
//

படைப்பாளி குறிஞ்சி நாடன் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.