Padaippu-TV

   5    1


SagaaSaleem:

சிறப்பு...

காஃபி வித் கவிதை...

காஃபியை போன்றே கவிதையும் சுவையானது...

 

அத்தியாயம் -9

 

நமது ஒன்பதாவது நிகழ்ச்சியில் 

கவிஞர்.ஸ்டாலின் சரவணன்

அவர்கள் எழுதிய "ரொட்டிகளை விளைவிப்பவன்" என்ற நூலைப்பற்றி படைப்பாளி ஆண்டன் பெனியின் பார்வை.

நிகழ்ச்சி தொகுப்பாளர்: செந்தாரப்பட்டி செல்வகுமார்

ஒலிக்கலவை: ஜெயந்த்

நிகழ்ச்சி வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்

****************************

 

“என்ன அவசரம் 

எறும்புகள் ஓடி விளையாடுவதை 

நிறுத்தட்டும் 

பிறகு என்னைப் புதைக்கலாம்”

 

என்று ஸ்டாலின் சரவணன் தன் இயல்பினைச் சொல்லும் கவிதையிலிருந்தே தொடங்குகிறேன்… அவரின் “ரொட்டிகளை விளைவிப்பவன்” கவிதை நூலைப் பற்றிய எனது பார்வையினை… 

 

ஒரு நேர்மையான படைப்பாளி தன் இயல்பினை மறைத்து வைப்பதில்லை… 

 

தன்னிலிருந்தே தொடங்குகிறான் தன் படைப்புகளையும்…

 

ஸடாலின் சரவணன் ஆரஞ்சு மணக்கும் பசியில் ஊதா நிறச் சட்டை போட்டிருந்தார்… ரொட்டிகளை விளைவிப்பவனில் சிவப்பு நிறச் சட்டை போட்டிருக்கிறார்…. என்பதைத் தவிர அவரின் இயல்புகளில் மாற்றம் ஏதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை…

 

ஒரு கவிஞன் தன்னைக் கடந்து செல்லும் அனைவரிடமும் ஒரேவிதமான தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது.

 

அவன் ஒருவனே… அவனை நாம் பருகிக் கொள்ளும் முறையாலும்… அணுகும் வழிமுறையாலும்... அவன் வெவ்வேறாகத் தெரிகிறான்…

 

தன் எழுத்துகளில்… அதே கோபம்…. அதே பரிதவிப்பு… அதே ஏக்கம்… இதிலும்,

 

எனினும் “ரொட்டிகளை விளைவிப்பவனில்" அவர் கையாண்டுள்ள மொழியியல் முற்றிலும் வேறு வகையானது…

 

அந்த மொழியழகு இப்படி இருக்கிறது…. 

 

“பலகாரத்தில் அங்கும் இங்கும் ஓடும் சிற்றெறும்பு 

உன் இருதயத்தில் என் காதல் 

அதன் பற்கள் மிக மிகச் சிறிது 

ஒரு நாள் உன்னை உண்டு முடித்து 

தன் சிறு கைகளை தட்டத்தான் போகிறது”

*****************

 

சமூகத்தின் பெருவெளியில் ஒரு மிடறுத் தண்ணீருக்காக ஏங்கித் தவிக்கும் மனிதர்கள் யாவரையும் காட்சிப் படுத்தியிருக்கிறார்…

 

அவரின் சிவப்பு நிற ஆடையிலிருந்து இரத்தம் கசிகிறது… அதனை யார் தொட்டாலும் , தொடுகிறவரின் இரத்தமாக மாறிவிடுகிறது...

 

எனினும்…கசியும் இரத்தத்தினை… வழக்கம் போல்.... வேடிக்கைப் பார்த்துவிட்டுக் கடந்துபோகக் கடமைப்பட்டிருக்கிறோம் நாம்….

 

சாலையில் அடிபட்டுக்கிடக்கும் கிடக்கும் ஒருவனுக்கு முதலுதவியை விடவும்… நீங்கள் தரும் ஒரு மிடறுத் தண்ணீர் உயிர் தரும் என்பதாக இருக்கிறது அவரது கவிதைகள்..

 

உங்களில் யாருக்கேணும் ஒரு மிடறுத் தண்ணீரைக்கூடத் தரும் எண்ணம்… இதுவரை இல்லையெனில் “ரொட்டிகளை விளைவிப்பவன்" படியுங்கள்… 

 

அக்குளுக்குள் தண்ணீர்க் குவளையை ஔித்துவைத்திருக்கும் யாவரையும் நிச்சயம் அசைத்துப் பார்க்கும் இந்தக் கவிதைத் தொகுப்பு

 

“நச்சுப் பாம்பை 

மார்பில் நெளிய வைத்து உயிர் துறந்த 

கிளியோபாத்ராவை வாசித்த இரவு 

கனவில் பட்டு பாவாடை அணிந்து 

பலூனை எத்தி விளையாடும் 

சிறுமியென வந்தாள் கிளியோபாத்ரா 

நெருங்கிப் பார்த்தபோது அவள் கருவிழியில் சமர்த்தாக நெளிந்து கொண்டிருந்தது குட்டி பாம்பு ஒன்று”

 

இதில் கிளியோபாத்ரா பெயரை நீக்கிவிட்டு எவர் பெயரையும் போடலாம் எனினும் …. நியாமாக இருப்பேன் எனில் என் பெயரையும் போட்டுக்கொள்வேன்...

**************************************

 

எதிரெதிர் கண்ணாடிக்குள் விரியும் பிம்பங்களாக இருக்கிறது ஸ்டாலின் சரவணனின் கவிதைகள்… ஒன்றினுள் ஒன்றாக…. மற்றுமொன்றாக…. அதுவொரு முடிவிலி…

 

கவிதைத் தோட்டத்தின் வரப்புகளிலிலும் நிறையக் கவிதை செய்திருக்கிறார்…. புத்தகத்தின் அட்டையிலிருந்தே தொடங்குகிறது கவிதைகள்…

 

அதிலும் சிறுகுறிப்பு வரைதல் தனித்துவமானது… 

 

ஒரு கவிஞன் மொழிக்கும் அதன் வளமைக்கும் புதிய பாதைகளை ஏற்படுத்தித் தரவேண்டும். 

 

ஸ்டாலின் சரவணனின் சிறுகுறிப்பு வரைதல் அவ்வகையான முயற்சியே…

 

அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

 

நீண்ட தொட்டில் ஆட்டலுக்குப்பின்…. குழந்தை உறங்கியிருக்கும் என்ற நம்பிக்கையில் எட்டிப்பார்க்கும் போது கிடைக்கும் குழந்தையின் அன்றலர்ந்த மலர்ப் புன்னகை…. உங்களுக்கு கோபம் தரும் எனில் இத் தொகுப்பிலிருக்கும் சிறுகுறிப்பு வரைதல் உங்களுக்குப் புரியாது…

 

சக மனிதர்கள் மீது கரிசனம் மிக்கது அவரது கவிதைகள்… 

 

ஒரு தொழுநோயாளியை விரட்டிவிடலாம்… அவரின் மீதமர்ந்த வண்ணத்துப் பூச்சியினை நம்மால் அடையாளம் கொள்ளவும் முடியாது… விரட்டிவிடவும் முடியாது…

 

ஆனாலும் தூய அன்பிருந்தால் 

தொழுநோயாளின் சீழும் பூவிலிருக்கும் தேனும் ஒன்றுதான் என்கிற இக்கவிதையை படித்தபின்னர் ஒரு சாமன்ய மனிதனை கண்டு விலகிச் செல்லமுடியவில்லை…

 

அப்படியும் விலகிச்சென்றால் உங்களின் விரல்களைப் பாருங்கள்… அதுவொரு தொழுநோய்க்கான அச்சாரமாக இருக்கலாம்…

 

அந்தக் கவிதையை என் விரல்களுக்குள் கோர்த்துக்கொள்கிறேன்…. நீங்களும் வாங்களேன்...

 

“தோட்டத்தின் நடுவில் 

அழுகிய பூவென அமர்ந்திருக்கும் 

தொழுநோயாளி தலைசுற்றும் வண்டுகளில் ஒன்று தான் 

இப்போது நீங்கள் கைகளில் வைத்திருக்கும் பூவிலும் அமர்ந்திருக்கிறது 

பதற்றப்படாதீர்கள் 

தூய அன்புக்கு சீழும் தேனும் வேறுவேறல்ல”

 

****

 

தாழ்வாரம் இலக்கிய தளத்தின் நிழலில்தான் எனக்குக் காணக்கிடைத்தார் ஸ்டாலின் சரவணன்…

 

அதுவொரு விவாதம்… எனது தீக்குச்சியினை அங்கு உரசிப்பார்த்தேன்… அந்தத் தீயினை அவர் தன் முதல்விரலில் விளக்கென ஏந்திக்கொண்டு அந்த அறையினையே வெளிச்சக் காடாக்கினார்…. புலியூரார் தன் மனதினை எடுத்து மீசையில் வைத்திருந்ததை.. அந்த வெளிச்சத்தில்தான் கண்டேன்..

 

பாரதிமோகன் குருவிகளுக்கு இரைத்து வைத்திருந்த தானியங்களும் அந்த வெளிச்சத்தில்தான் எனக்குத் தெரிந்தது..

 

கு.இலக்கியன் மயில்களுக்குப் போர்த்திய போர்வைகளும் அந்த வெளிச்சமே எனக்குக் காட்டியது ...

 

தீ…. எப்போதும் எரிக்கும் என்றிருந்தவனை 

தீ வெளிச்சம் தரும் என்று உணரவைத்தவர் அவர்...

 

நானொரு நாற்காலிக்காரன் என்றாலும் நாற்காலியில் அமரும் எளிய முறை அறியாதிருந்தேன்...

 

ஸ்டாலின் சரவணனின் இந்த சிறுகுறிப்பினை வாசித்தபின்…. நாற்காலியில் உட்காரும் போதெல்லாம் ஒரு எச்சரிக்கை வருகிறது…

 

என் நாற்காலியானது சிலரின் மூச்சுக்காற்றில் அசைவதையும் உணர்கிறேன்…

 

ஆமாம் ….. இப்படி எழுதினால்…. வாசிக்கும் போது எச்சரிக்கை உணர்வு வராமல் போகுமா என்ன?

 

“நாற்காலியில் அமர்ந்தாலும் 

குத்துக்காலிட்டு அமர்கிறேன் 

கால்களை வெகு தொலைவில் 

விட்டுவிட பயமாய் இருக்கிறது”

**********

 

படிமங்களில் ஸ்டாலின் சரவணனின் உத்தி தனித்துவமானது…

 

எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று சரியானதாக இருக்கவேண்டுமென்பதில்லை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறன்றன “ரொட்டிகளை விளைவிப்பவன்” தொகுப்பில் உள்ள கவிதைகள்...

 

உதாரணமாக இந்தக் கவிதை…

 

“அகன்ற வானம் 

அதில் நிலா நட்சத்திரம் எல்லாம் 

இதற்கு எதிராகக் கொடி பிடித்து இருக்கிறேன் 

அது இன்னும் மஞ்சள் நிறத்தில் 

படபடத்துக் கொண்டுதான் இருக்கிறது 

அதில் அமர்ந்து ஒரு கவிதை எழுதுகிறேன் 

எடிசனுக்கு நன்றி என்று 

போடணுமா சார்?”

 

எடிசனுக்கு நன்றி போடணுமா…? என்பது நீங்கள் சரியென்பதால் அதை அப்படியே ஏற்கவேண்டுமென்பதில்லை என்பதையும் தாண்டி “எடிசனுக்கு நன்றி என்று போடணுமா…… சார்?” என்பதில் இருக்கிறது அவரின் எதிர்த்தொணி...

****

 

அவர் தனது கவிதைகளில் பயன்படுத்துகின்ற வார்த்தைப் பிரயோகம் அலாதியானது….

 

சில கவிதைகளில் அந்த ஒற்றை வார்த்தையேகூட மொத்தக் கவிதையினையும் தாங்கிக் கொள்கிறது

 

கவிதையைவிட்டு வெளிவந்த பின்னும்… சட்டையைப் பிடித்துக்கொண்டு பின் தொடர்கிறது…

 

இந்தக் கவிதையில் கூட…

பொருள்தேடப் பிரிந்த தலைவனால் தனிமையில் இருக்கும் தலைவி “வெப்பம் சமைத்திருக்கிறாள்” என்ற வார்த்தையைச் சொல்கிறார்… “அது சுருட்டி வீசினால்” என்கிறார்.. 

 

ஒரு கவிதைக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள்… நான் முன்னமே சொன்னது போல் “எதிரெதிர் கண்ணாடிக்குள் விரியும் பிம்பங்களாக இருக்கிறது” ஸ்டாலின் சரவணனின் கவிதைகள்… 

 

இப்படி…

 

“பொருள்வயிற் பிரிந்திருக்கும் தலைவன் பொருட்டு 

வெப்பம் சமைத்திருக்கிறாள் தலைவி 

அது சுருட்டி வீசினால் 

சிறு நகரமொன்று பற்றிக் கொள்ளும் 

அளவில் போதுமானது”

**********

 

என் கவிதைகளுக்கு இன்னமும் நான் பேசக் கற்றுக்கொடுக்கவில்லை…

 

வைரமுத்துவும் அறிவுமதியும் பழநிபாரதியும் தாம் எழுதிய கவிதைகளை தங்களின் வாயால் பேசவைத்துவிடுகிறார் என்றுணர்ந்திருந்த நிலையில்…

 

ஸ்டாலின் சரவணனின் கவிதைக்குரல் அழகானது… பிறந்த குழந்தைபோல் அவரது குரலுக்குள் சுருண்டு தவழ்கிறது அவரின் கவிதைகள்...

 

“பிழையும் திருத்தமும் சந்தித்த 

புள்ளிகளில் இருந்து கிடைக்கும் வழிதனில் 

நீயும் நானும் ஒரு நடை போய் வரலாம்” என்கிறார் ஒரு கவிதையில்...

 

எனக்கும் ஆசையாக இருக்கிறது உன்னுடன் நடை போக….

 

உன் கவிதைகள் அத்தனையும் படித்த பின்னும்… இன்னும் கொஞ்சம் பிழையாகவே நிற்கிறேன் சரவணா… என்னையும் ஒரு நடை அழைத்துப் போவாயா?

 

…ஆண்டன் பெனி.

நினைவும் நிகழ்வும்
பிப்ரவரி 2019
1k   9   2