Padaippu-TV

   1    0


காஃபி வித் கவிதை...

காஃபியை போன்றே கவிதையும் சுவையானது...

 

அத்தியாயம் -8

 

நமது எட்டாவது நிகழ்ச்சியில் 

கவிஞர்.தேவதச்சன்

அவர்கள் எழுதிய "மர்மநபர்" என்ற நூலைப்பற்றி படைப்பாளி ஆண்டன் பெனியின் பார்வை.

நிகழ்ச்சி தொகுப்பாளர்: செந்தாரப்பட்டி செல்வகுமார்

ஒலிக்கலவை: ஜெயந்த்

நிகழ்ச்சி வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்

****************************

 

கோவில்பட்டியில் எனது வீட்டிலிருந்து புறப்பட்டு... செண்பகவல்லியம்மன் கோவில் முதலாவது படிக்கட்டில் இறங்கி தெற்கு பஜார் முனைக்கு வந்து 

வலது பக்கம் திரும்பி கொஞ்சம் நடந்தால் தேவதச்சன்...

 

இடது பக்கம் திரும்பி கொஞ்சம் நடந்தால் கோணங்கி…... 

 

தெற்கால நாலு எட்டுவச்சா கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் ஊர்

 

மேற்கால ரெண்டுநடையில பூமணியின் வீடு, 

 

அப்படியே கொஞ்ச நேரம் நின்னுக்கிட்டு இருந்தா… சோ.தர்மன், ச.தமிழ்ச்செல்வன், கெளரிஷங்கர், வித்யாஷங்கர், எம்.எஸ்.சண்முகம், அ.மாரீஸ், அப்பணசாமி, உதயசங்கர், நாறும்பூநாதன், முருகபூபதி_னு 

 

என் பால்ய காலங்களில் யாராவது ஒருத்தர் நிச்சயம் என்னை உரசிட்டுப் போவாங்க… 

 

கோவில்பட்டி என்பது கரிசல் மண்ணோடு இலக்கிய வாசனையும் கலந்தே வீசும் பூமி.

 

ஒரே தண்ணீரைக் குடித்து வளர்ந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி எழுத்தாளுமை…

 

அதிலும் தேவதச்சனின் மொழி உலகம் தனித்துவமானது… அது ‘அ’வில் தொடங்கி ‘ன’வில் முடிகிறதில்லை… 

 

உணர்வில் தொடங்கி ஆன்மாவில் முடிகிறது… அதன் படிமங்கள் உணர்வுகளோடு இரண்டறக்கலந்தவை…

 

அவரின் கவிதை உலகில் எல்லாமும் இருக்கும்… 

 

தேவதச்சனின் இந்தக் கவிதையையப் படித்துவிட்டு குருமலைக் காட்டில் ஆடுமேய்க்க ஆசைப்பட்டதுண்டு…

 

“காற்று ஒருபோதும் 

ஆடாத மரத்தை பார்த்ததில்லை 

காற்றில் 

அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள் 

காலில் காட்டை தூக்கிக் கொண்டு அலைகின்றன

வெட்டவெளியில் ஆட்டிடையன் ஒருவன் 

மேய்த்துக் கொண்டிருக்கிறான் 

தூரத்து மேகங்களை 

சாலை வாகனங்களை 

மற்றும் சில ஆடுகளை.”

***

 

அடையாளம் அறியாத காலத்தில் குழந்தைகளும்… பார்வை குறைந்த காலத்தில் வயதானவர்களும் 

எதையும் உற்றுப் பார்ப்பதைப் போலவே… தேவதச்சனின் கவிதைகளை உற்று உற்றுப் பார்க்கிறேன்…

 

கவிதைக்குள் விரியும் காட்சிப் பிம்பங்களில் மலைத்துப் போகிறது மனது… 

 

கவிதையை எங்கிருந்து தொடங்குகிறார்… எங்கு முடிக்கிறார் என்று தெரியவில்லை…

 

வானவில்லின் நிறத்தையும்… நீளத்தையும் எப்படி அளவீடு செய்வது? அப்படித்தான் இருக்கிறது…. எந்த அளவீட்டு முறைகளுக்குள்ளும் அடங்காது திமிரும் அவரது கவிதைகள்…

 

இன்னும் இன்னும் ஆழத்தில் நீருக்குள் இருக்கும் விண் பருந்தின் பிம்பம் தேவதச்சனின் கண்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது…

 

அவருக்கு மட்டுமே அதனைக் கவிதையாக்கத் தெரிந்திருக்கிறது.

 

அவர் விசித்திரமானவர்… அவரின் அழகியலும் விசித்திரமானது… இப்படி...

 

“குளத்துப் பாம்பினது 

ஆழத்தில் 

தாமரைகள் தலைகீழாய் முளைத்திருக்கின்றன.

மத்தியான வெயிலின் தித்திப்பு. 

படிக்கட்டில் ஓரிரு அரசு இலைகள். 

இன்னும் ஆழத்தில் சாவகாசமாய் 

ஒரு விண் பருந்து”

***

 

நாம் யாவரும் காலத்தை உண்டு கொண்டிருக்கிறோம்… 

 

அவசரமாக... மிக அவசரமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்… எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் தெரியவில்லை..

 

உண்ண வேண்டியதை விட்டுவிட்டு காலத்தையும் நேரத்தையும் உண்டுகொண்டிருக்கிறோம்…

 

தேவதச்சனின் முப்பரிமாணக் கவிதைகளின் “வாங்கி விண்டு உண்டேன் இன்றை” என்பது பழத்திற்கானது மட்டுமல்ல…. 

 

அன்பை... பிரியத்தை... தோழமையை... ஏன் இவ்வாழ்வையே…. அப்படித்தான் உண்கிறோம்…

 

இவ் வாழ்வு ஒரு பழத்தை திண்பதைக்கூட பழம் திண்பதாக உணரவிடுவதில்லை…

 

இன்றைய நாளைத் திண்ண அவசரப்படுத்துகிறது…

 

மரணத்திற்கு சற்றுமுன் வாழத்தொடங்கும் வாழ்க்கையே நமக்கு வாய்த்திருக்கிறது…

 

இங்கு பழம் விண்டு உண்பது தேவதச்சனாக இருக்கலாம்… ஆனால் நாம் உண்டதை… உண்பதை…. உண்ணப்போவதன் அவலத்தை நினைவு படுத்திவிடுகிறது...

 

கவிதை இப்படி இருக்கிறது….

 

“பழத்தை சாப்பிட்டு விடு 

நாளைக்கென்றால் அழுகி விடும் 

என்றாள் அம்மா 

வாங்கி விண்டு 

உண்டேன் 

இன்றை.”

***

 

கடவுள் தூணிலும் இருப்பார்… துரும்பிலும் இருப்பார்… என்பது எப்படியென்று எனக்குத் தெரியாது…

 

தேவதச்சனின் “மர்மநபர்” கவிதைத் தொகுப்பினைப் படித்த பின்னர்… அந்த வார்த்தைகளைக் கவிதைளுக்குச் சொன்னதாக இருக்கும் என்றே நம்புகிறேன்…

 

கவிதைக்காரனுக்கு மது சில நேரங்களில் நெருங்கிய சொந்தம்...சில நேரங்களில் தூரத்துச் சொந்தம்… 

 

கவிதைக்காரனுக்கு... மதுபாட்டில்கள் கவிதை தந்த நன்றிக்கு…. அதன் அழகியலை யாரும் கவிதையாக்க முயன்றதாகத் தெரியவில்லை…

 

நம் பிரதிநிதியாக மதுப் பாட்டில்களின் அழகியலை இப்படி கவிதையாக்கியுள்ளார்….

 

நான் மதுப் பாட்டில்களிடம் தேவதச்சனின் இந்தக் கவிதையினைச் சொல்கிறேன்…

அவைகள் தன்னில் நிரப்பியிருந்த மதுவினைக் குடித்து... போதையில் தள்ளாடத் தொடங்கின…

 

கவிதையைக் கேளுங்கள்...

 

“உயர 

உயர 

உயரமான 

மதுபாட்டில்கள் நடுவே 

ஒரு சின்ன பாட்டில் 

காலம் தொடாத 

காட்டு யானைகள் நடுவே 

ஓடி விளையாடும் 

குட்டி யானை.”

***

 

தேவதச்சனின் என்கிற மிகப் பிரமாண்டமான மரம் பற்றிய எனது புரிதல் முழுமையானதா என்று தெரியவில்லை... 

 

அந்த மரத்தின் வேர்கள் பூமியில் ஆழத்துளைத்து போயிருக்கும்…

 

மரத்தின் சிறுபகுதி நிழலை சுவாசிப்பவன்… மரத்தின் முழு பிரமாண்டத்தையும் உள்ளது உள்ளபடி உணர்ந்துவிட முடியாது…

 

மரத்தின் நிழலில் நிற்கும் போது விழும் இலையினை தட்டிவிட்டுக் கடந்து போகிற என்னிடம்…

 

இக்கவிதையின் உயிரினைக் கையில் கொடுக்கும் போது… 

 

ஒரு குழந்தை தன் தகப்பனை மடியில் அமரவைத்துக் கொஞ்ச முற்படுவதுபோலத்தான் இருக்கிறது…

 

இந்தக்கவிதை என் மடியில் கொள்ளாது எனினும்…. என் மடியில் வைத்துக் கொஞ்சவே ஆசைப்படுகிறேன்…

 

முடிந்தால் நீங்களும் கொஞ்சிப்பாருங்களேன்…. தேவதச்சனின் இக் கவிதையை...

 

“காற்றில் வாழ்வை போல் 

வினோத நடனங்கள் புரியும் 

இலைகளைப் பார்த்திருக்கிறேன் 

ஒவ்வொரு முறையும் 

இலையை படிக்கும்போது 

நடனம் மட்டும் எங்கோ 

ஒளிந்து கொள்கிறது.”

***

 

கவிதைகள் இன்னும் எழுதி முடிக்கப்படவில்லை… கருத்து வடிவிலோ… மொழி வடிவிலோ… சிந்தனை வடிவிலோ… எழுதப்பட வேண்டிய கவிதைகள் இன்னும் இருக்கின்றன…. என்பதை எனக்கு உணர்த்தியது தேவதச்சன் கவிதைகள்…

 

தேவதச்சனின் போர்க்களம் முற்றிலும் மாறுபட்டது…. வேறு யாருமற்ற போர்க்களத்தில்…. அங்கே அவரை எதிர்த்து அவரே போர்புரிந்து கொண்டிருக்கிறார்…

 

ஏனெனில் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கை அப்படி…. அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட போர் அப்படி…

 

போர்க்களத்தில் தனக்குத்தானே செய்துகொண்ட சமூகம் சார்ந்த கவிதாஉபதேசங்களே கவிதையாகியுள்ளன…

 

துணி துவைக்கும் போது காதில் விழுகின்ற குருவின் மூன்று காலங்களுக்கான ஓசையினைச் சொல்லும் கவிதை மொழி அவருக்கேயானது….

 

“அடுத்த துணி எடுத்தேன் 

காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்” என்று முடிக்கிற கவிதையில்….

 

படித்துமுடித்ததும் குருவியைப் போல் நான் காணாமல் போனாலும்… எனது மனதுக்குள் கவிதையின் நிசப்தமானது சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறது...

 

இதுதான் அந்தக் கவிதை… அதன் சத்தமும்…. நிசப்தமும்…. வெகு காலத்திற்கு நம்மோடு பயணப்படலாம்...

 

“துணி துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம் 

தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன் 

காதில் விழுந்தது குருவிகள் போய்விட்ட நிசப்தம் 

அடுத்த துணி எடுத்தேன் 

காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்”

***

 

என் கவிதை உலகம் குழந்தைகளால் ஆனது… என் மகளதிகாரம் நூலினை வெளியிடுவதற்கு முன் தேவதச்சனின் இந்தக் கவிதையினைப் படித்திருந்தால்…

 

அதன் வெளியீட்டினை இன்னும் சற்று தாமதப்படுத்தியிருப்பேன்…

 

அவற்றை மறுபரிசீலனைக்கு உட்படுத்தியிருப்பேன்...

 

எத்தனை கவிதை என்பதில் அல்ல… எழுதியதில் எப்படி என்பதில்தான் ஒரு கவிஞன் அடையாளப் படுகிறான்…

 

குழந்தைகளை, அரவணைக்கவும்… தேற்றவும்… கொஞ்சவும் யாவருக்கும் பொதுவான ஒரு கவிதையை எழுதிவிட வேண்டும் என்று நினைத்ததுண்டு….

 

ஆனால் தேவதச்சனின் இந்தக் கவிதையைப் படித்த பின்னர்… இது போதும் இதைவிடவும் என் மொழியில்… என் கருத்தில்… என் சிந்தனையில் பெரிதாக என்ன எழுதிவிடப் போகிறேன் என்ற மலைப்பு தோன்றிவிட்டது…

 

“இன்னும் 

தாதி கழுவாத 

இப்போதுதான் பிறந்த குழந்தையின் 

பழைய சட்டை என்று எதுவும் இல்லை 

பழைய வீடு என்றும் எதுவும் இல்லை 

மெல்லத் திறக்கும் கண்களால் 

எந்த உலகை புதுசாக வந்தாய் 

செல்லக்குட்டி 

அதை எப்படி ஆக்குகிறாய் 

என் தங்கக்குட்டி”

 

தேவதச்சன் என் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தவர்… ஆனால் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் வைத்திருந்தது என் தவறு என்றே தோன்றுகிறது… 

 

அதே நிலம்… அதே தண்ணீர்… என்னையும் அவரையும் இணைத்திருக்கிறது என்றாலும்…

 

ஒரு குழந்தையாக அந்த பிரம்மாண்ட தேவதச்சனை என் மடியில் இருத்திக் கொள்ள வேண்டும்… கொஞ்ச வேண்டும்… அவரின் கவிதை மொழியினை கிள்ளி எடுத்துக் கொள்ள வேண்டும்...

 

...ஆண்டன் பெனி

நினைவும் நிகழ்வும்
பிப்ரவரி 2019
1k   9   2