Padaippu-TV

   2    3


RaguramanRagupathy:

வெளிச்சத்தின் வருகை அருமை

RaguramanRagupathy:

வெளிச்சத்தின் வருகை அருமை

JinnaAsmi:

அற்புதம்

காஃபி வித் கவிதை...

 

காஃபியை போன்றே கவிதையும் சுவையானது...

 

அத்தியாயம் -5

 

நமது ஐந்தாவது நிகழ்ச்சியில் 

இயக்குநர்/கவிஞர்.பிருந்தா சாரதி

அவர்கள் எழுதிய "இருளும் ஔியும் " என்ற நூலைப்பற்றி படைப்பாளி ஆண்டன் பெனியின் பார்வை.

நிகழ்ச்சி தொகுப்பாளர்: செந்தாரப்பட்டி செல்வகுமார்

ஒலிக்கலவை: ஜெயந்த்

நிகழ்ச்சி வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்

 

@@@@@@@@@@@@@

 

“நீ நிதானமா இல்ல… உன் கால் தரையில படல… முதல்ல நில்லு அப்புறமா வந்து சொல்லு” என்ற ஒற்றை வரியின் மூலம் என்னைக் கவர்ந்தவர் கவிஞர் பிருந்தாசாரதி.

 

இயக்குநர் லிங்குசாமியின் அறையில் குகனோடு சேர்த்து ஐவரானோம் என்பதுபோல் திருப்பதி பிரதர்ஸின் நான்காவது உடன்பிறப்பாகவே அன்று அவரைக் கண்டேன். 

 

ஒரு சூஃபி ஞானியைப்போல் தோற்றம்… நம்மை ஊடுறுவிச்செல்லும் பார்வை.

 

தன் எழுதுகோலுக்கும் சிந்திக்கப் பழகிக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

 

அக் கணத்தில் எங்கள் இருவருக்குமான இடைவெளியை நிரப்பியது அவரின் “மீன்கள் உறங்கும் குளம்” கவிதைப் புத்தகம்.

 

முதல்பார்வை காதல் அல்ல என்றாலும்… அந்த முதல்பார்வையே எனக்குள் காதலாகியிருந்தது. 

 

அதன்பிறகு அவரின் எழுத்துகளுக்கு மேசை விளக்கானேன். இந்த “இருளும் ஔியும்” கவிதை நூலில் அவர் சொன்னது போல்…

 

“என் முதல் வாசகி 

என் மேசை விளக்கு” 

 

என் காதலைச் சொல்லிவிட அவரின் கவிதைகளைத் இன்னமும் இன்னமும் துரத்திக்கொண்டேயிருக்கிறேன். 

 

அவரின் தொகுப்புகள் ஒவ்வொன்றிற்கும் முதல் வாசகன் நானாக...

****

 

கவிக்கோ அப்துல் ரகுமான், பிருந்தா சாரதி பற்றி இவ்வாறு சொல்கிறார் “நான் நடக்கும் பாதையிலேயே பிருந்தா சாரதி நடக்கத் தொடங்கி இருக்கிறார் ஒளியை அடைவார்” 

 

உண்மைதான். பிருந்தாசாரதியின் கவிதைகள் அந்த நேரத்திற்கானது அல்ல. அதன் வாசிப்பு அனுபவம் நம்மை வெகுதூரம் கூட்டிச்செல்லும்.

 

அவரின் அறையில் எப்போதும் ஒற்றைத் திரியின் வெளிச்சமே இருக்கும். அந்த அறைக்குள் பிருந்தாசாரதி என்னும் நிழலிருந்து இருமுக விளக்காக அவரின் கண்கள் சுடர்விட்டுக் கொண்டிருக்கும்

 

அவர் வெளிச்சமற்று இருக்கிறார் 

ஆனால் அவரின் கவிதைகளோ அவர்கண்களைப்போல் வெளியெங்கும் வெளிச்சம் பரப்பிக்கொண்டிருக்கின்றன.

 

கவிக்கோவின் வார்த்தைகளை ஆமோதிப்பதுபோல் இருக்கிறது பிருந்தாசாரதியின் இந்தக் கவிதையும்

 

“வெளிச்சம் போல் 

வேறு யார் விவரிக்க முடியும் 

விளக்கினை?

இருளைப் போல் 

யார் உணர முடியும் 

வெளிச்சத்தை?”

*****

 

இருளிலிருந்து தொடங்க வேண்டும்… இருளுக்குள் அடையவேண்டும்.

ஆனாலும் வெளிச்சத்திலேயே 

பயணப்படமுடியாது, இருளைக் கடந்தே வெளிச்சம். 

 

வெளிச்சம் தரும் நிழல்களினூடே 

இருள் நம்மைத் துரத்திக் கொண்டேயிருக்கும். 

வெளிச்சம் பற்றிய புரிதலைவிடவும், அவ் வெளிச்சம் இருளிலிருந்து வந்திருக்கிறது என்ற புரிதலைக்கொடுக்கிறது இந்த “இருளும் ஔியும்” புத்தகம்.

 

இருளும் ஔியும் ஓர் உளவியல் தத்துவம் … வாழ்வியல் முறையும் கூட. 

ஆம்… பிருந்தா சாரதியின் கவிதைகள் உளவியலும் தத்துவவியலும் இணைந்த கலவை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழப்பழகியவர்களுக்கே இது சாத்தியம். 

 

பதிப்புரையில் ஜின்னா அஸ்மி சொன்னதுபோல் “இந்நூலில் உள்ள பல கவிதைகள் அழகியல், வாழ்வியல் இவற்றைத் தாண்டி சூஃபியிஸத்தையும் கஸலையும் ஒத்து இருப்பது சிறப்புக்குரியது”.

 

இருள் ஔி இரண்டுமே தவிர்க்க முடியாதது. அதனால்தான் “இருள் என்பது குறைந்த ஔி” என்கிறான் பாரதி 

 

தன்னை வலிய இருளுக்குள்ளும் வெளிச்சத்துக்குள்ளும் திணித்துக் கொண்டு... 

அதன் சுபாவங்களை அதன் இயல்புமாறாமல் காட்சிப்படுத்தியுள்ளார். 

 

தன் மனநிலையை தன் உள்ளங்கைக்குள் இறுக்கி வைத்து தேவைப்படும் போது மட்டும் அதனை பார்வையின் எல்லைக்குள் பட்டாம்பூச்சியாகப் பறக்கவிடுபவர்களுக்கே இவ்வாறான படைப்புகள் சாத்தியப்படுகிறது.

 

ஒரு காட்டுத் தீயினை பெருவெளியின் விளக்காகவும்…

விளக்கினை உள்வெளியின் காட்டுத் தீயாகவும் எப்படி அவரலால்  உணரமுடிந்தது என்ற பெருவியப்பில்தான் இந்தக் கவிதையினைக் குறிப்பிடுகிறேன்

கேளுங்கள்….

 

“காட்டுத்தீயை 

வீட்டு விளக்காய் 

கட்டுப்படுத்திக் கொடுத்தவர் எவரோ அவரே விஞ்ஞானி 

அவரைப் போற்றுகிறேன்”

*****

 

நடைவண்டி, ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம், எண்ணும் எழுத்தும், மீன்கள் உறங்கும் குளம் என அவரின் ஆதியும் அந்தமும் ஞானத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. அதனாலேயே பிருந்தா சாரதியை கவிக்கோ அப்துல் ரஹ்மானின் வாரிசு எனக் கொண்டாடலாம். 

 

இந்த வாழ்க்கையானது இடறல்களின் போது அதனைப் புறந்தள்ளிவிட்டு ஓடுகிறவனையே கொண்டாடுகிறது.

 

பிருந்தா சாரதியின் கவிதைகளும் வாழ்வின் இடறல்களைப் புறந்தள்ளிவிட்டு எழுந்து ஓடி இலக்கை அடைய பேருதவியாக இருக்கும் 

 

வாழ்க்கையை முழுமையாகப் புரிந்தவர் எவருமில்லை என்றாலும் நம்மைவிடச் சற்றுக் கூடுதலாகப் புரிந்தவர் பிருந்தாசாரதி. 

 

அதனாலேயே வாழ்க்கையின் தத்துவங்கள் பற்றி எழுத அவருக்குக் கைகூடியிருக்கிறது

 

வாழ்க்கை பற்றி ஓஷோ இப்படி சொல்கிறார்...

 

“வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல... அர்த்தமற்றதும் அல்ல வாழ்க்கை ஒரு வாய்ப்பு தான் ஒரு வாசல் தான் …”

 

அந்த வாழ்ககையின் வாய்ப்பினை எளிதாகப் புரிந்துகொள்ளும்படிச் செய்கின்றன பிருந்தாவின் கவிதைகள்.

 

அவரால் மட்டுமே மரணத்தின் நுழைவுவாயிலில் நின்று இப்படி எழுதமுடிகிறது...

 

“இறந்தவரின் 

கடைசிப் பார்வை 

இருளா ஒளியா?”

***

 

 

தூசிநிரம்பிய பலகையினை துடைத்துவிட்டு அமர்ந்த பின்னும்.. எழுந்திருக்கும் போது பின்புறத்தை தூசி தட்டிவிடும் மனநிலைதான் 

இருளோடு நமக்கு…

 

எவ்வளவு வெளிச்சமிட்டாலும் இருளை விலக்கிவிடமுடியாது.

எவ்வளவு இருளானாலும் வெளிச்சம் ஊடுறுவிவிடும்.

 

இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் அல்லது தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தைத் தருவதே இந்த நூலின் வெற்றி.

 

அதனால்தான் எத்தனை வெளிச்சம் இருந்தாலும்… இருள்வந்தாலும் அதனைத் தாங்கும் வல்லமை வேண்டும் எனச் சொல்கிறது பிருந்தாசாரதியின் இந்தக் கவிதை.

 

வெளியே 

எத்தனை விளக்குகள் இருந்தாலும் உன்னை பிரகாசம் ஆக்குவது 

உனக்குள் எரியும் சுடர் தான் 

****

 

ஒரு கவிதைத் தொகுப்பில் கொஞ்சம் கவிதைகளும் 

 

கொஞ்சம் கவிதை போல் கவிதைகளும் 

 

கொஞ்சம் கவிதை போல் ஆக முயற்சிக்கும் வார்த்தைகளும் அமைந்துவிடுகிற இச்சூழலில் 

 

பிருந்தா சாரதி தனது கவிதைத் தொகுப்பு முழுவதிலும் கவிதைகளே இருக்கும்படி செய்திருக்கிறார்.

 

அவரின் எண்ணும் எழுத்தும் கவிதைத் தொகுப்பில் இருந்த எண்களின் படிமங்கள் இன்னும் எனதெங்கும் படிந்திருக்கின்றன.

 

வெளிச்சத்தைக் 

குடித்து உமிழும் கண்ணாடி 

என்ன செய்கிறது 

இருளை 

 

….எனக் கேட்கும் பிருந்தாவின் இக் கவிதைக்கு என்ன பதிலினைச் சொல்லிவிடமுடியும்.

 

இது தத்துவத்தின் உச்சமாகவேபடுகிறது 

எனக்கு. இப்படியும் யோசிக்க முடியுமா? அந்தவொரு மனநிலைக்கு எப்படிப் பழக்கவேண்டும் என்னை என்றே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

***

 

அணிந்துரையில் ஜின்னா மேலும் சொன்னது போல் மொழியின் அடிப்படை இருவித இயங்குதளங்களைப் பிரதானப்படுத்துகிறது. 

 

ஒன்று ஒலித்தளம் 

மற்றொன்று உணர்தளம். 

 

ஒலித் தளத்திலிருந்து இசையின் துவக்கமும் 

உணர்த்தளத்திலிருந்து படைப்பிலக்கிய உருவாக்கமும் நிகழ்கிறது 

 

பிருந்தாசாரதி உணர்தளத்திலிருந்தே முழுவதுமாக இயங்குகிறார்.

 

அதனால்தான் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த முடிச்சையும் ஒருவரிக்குள் அவரால் இப்படிச் சொல்லிவிடமுடிகிறது

 

“ஆதியில் 

இருள் இருந்தது 

அதற்குள் எல்லாம் இருந்தது “

***

 

அவரின் வாழ்வில் பார்வையானது மிகவும் விசாலமானது. பார்க்கும் அனைத்திலும் வாழ்வின் இரண்டு பக்கங்களையும் அவரால் எளிதில் பார்த்துவிடமுடிகிறது.

 

ஒரு பியானோ இசைக்கருவியில் கூட

இருளையும் ஔியையும் கண்டுவிடுகிற சிந்தனைத்தெளிவு அவருக்கேயானது..

 

பியானோவை இப்படிப் பார்க்கிறார்…

இனி நாம் பியோனோவை எப்போது பார்க்க நேர்ந்தாலும் பிருந்தாசாரதியின் கண்களாலேயே பார்க்கமுடியும்… இப்படியாக...

 

பியானோவின் 

கருப்பு வெள்ளை கட்டைகள் 

இரவும் பகலும்

****

 

“நான் யார்” என்ற கேள்வியும் அதுதொடர்பான புரிதலும் யாவருக்கும் பொதுவானது…

 

மரணத்திற்கு முன்பாக அதுபற்றிய புரிதலின் சிறுதுளியேனும் கிடைத்துவிட்டால்… இவ்வாழ்க்கை பேறுபெற்றதே.

 

நான் விளக்காக இருந்திருக்கிறேனா? ஆம் என்றால் என்னால் ஔி தரமுடிந்ததா? அந்த ஔி யாருக்கேனும் பாதையை அடையாளம் காட்டியிருக்கிறதா? அந்தப்பாதையில் எத்தனைபேர் நடந்துசெல்ல உதவியிருக்கிறேன்? இப்படி தொடர் கேள்விகள் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

 

கேள்விகள் நீண்டுகொண்டே போகின்றன. 

 

நம் கேள்விகள் அத்தனைக்கும் எளிதான ஒரு பதிலினைத் தந்துவிடுகிறார் பிருந்தா சாரதி ஒரேயொரு கவிதையின் மூலமாக.

 

“நீ விளக்கென்றால் 

இன்னொரு விளக்கை 

ஏற்றி வை”

****

 

அவரின் இந்தக் கவிதைத் தொகுப்பைப் பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமென்றே ஆசைப்படுகிறேன் ஆனால்

எப்படி முயன்றாலும் என்னால் முடியவில்லை....

 

மிர்தாதின் புத்தகத்தில் மிக்கேல் நைமி சொன்னது போல்...

 

எந்த வாளாலும் 

காயப் படுத்த முடியாத 

காற்றைப்போல திகழுங்கள் 

 

...என்றே சொல்லுகிறது பிருந்தா சாரதியின் இருளும் ஔியும் கவிதைத் தொகுப்பு.

 

#காஃபி_வித்_கவிதை

நினைவும் நிகழ்வும்
பிப்ரவரி 2019
1k   9   2