Padaippu-TV

   3    2


கட்டாரி கட்டாரி:

அழகான வாசிப்பு. ஆழமான கருத்தாக்கம். இசைக்கோர்ப்பு இனிமை. உச்சரிப்பில் மட்டும் சற்றுக் கவனம் செலுத்திக்கொண்டால் காஃபி இன்னும் ருசிக்கும் இக்கவிதையைப் போல போலவே

IbrahimShareef:

"மங்கையராய் பிறப்பதற்கே" "மா"தவம் செய்திட வேண்டும்!.... உலக மகளிர் தின "நல் வாழ்த்துகள்"

காஃபி வித் கவிதை...

காஃபியை போன்றே கவிதையும் சுவையானது...

(மகளிர்தின சிறப்பு நிகழ்வு)

 

அத்தியாயம் -4

 

நமது நான்காவது நிகழ்ச்சியில் கவிஞர் இளம்பிறை அவர்கள் எழுதிய "அவதூறுகளின் காலம்... " என்ற நூலைப்பற்றி படைப்பாளி ஆண்டன் பெனியின் பார்வை.

நிகழ்ச்சி தொகுப்பாளர்: செந்தாரப்பட்டி செல்வகுமார்

ஒலிக்கலவை: ஜெயந்த்

நிகழ்ச்சி வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்

 

@@@@@@@@@@@@@

 

“யானை வாங்க நேரமிருக்கு 

அங்குசம் வாங்க நேரம் இல்லை”

 

என்பதாகப் போய்க்கொண்டிருக்கும் உழைப்பின் பொழுதுகளில்…..”

 

இப்படித்தான் தன் வாழ்க்கையின் முன்னுரையினை எழுதி வைத்திருக்கிறார் கவிஞர்.இளம்பிறை. 

 

பெண்களின் துயரங்களை சக பெண்மணியாக எந்தவித சமரசமும் இன்றி காட்சிப் படுத்தியிருக்கிறார் என்பதால் மட்டுமே இவரைப் பெண்ணியக் கவிஞர் என்று தனிமைப்படுத்திவிட முடியாது.

 

அப்படியொரு அடையாளத்திலும் அவரைப் பார்க்கவேண்டியதில்லை.

 

பெண் என்பவள் ஒரு ஆணுக்கு 

தாய்… மனைவி... மகள்… 

 

இங்கே தாய் என்பவள் கடவுள்...

மகள் என்பவள் இன்னொரு தாய்….

 

இருவரும் ஆணின் குடும்பச் சமூக்கத்தில் ஒரு பாதுகாப்பான நிலையில் இருக்கும் நிலையில்…

 

மனைவி என்கிற பெண்மையின் துயரம் மட்டுமே இங்கு பேசும் பொருளாகியிருக்கிறது.

 

இன்னொரு வீட்டின் இளவரசி இங்கு மனைவி ஆகிறாள்… தாயாகி தன் பிள்ளைக்கு கடவுளாகவும் தெரிகிறாள்….

 

ஆனாலும் மீம்ஸ்களிலும்…. சிரிப்புத் துணுக்குகளிலும் மனைவிகளுக்குக் கிடைக்கிற வானளாவிய அதிகாரம் நிஜத்தில் கிடைக்கவில்லை என்பதை இளம்பிறையின் கவிதைகளில் உணரலாம்.  

 

“தெரு வெள்ளச் சுழல்களில் சிக்கி உள்ளிழுத்துச் செல்லப்படும் 

நீந்தப் பழகாத கன்றுக்குட்டியின் 

உயிர்ப்போராட்டத்துடன் 

விடியும் பொழுதுகள் 

 

அசதியுறும்போதெல்லாம் அவமதிக்கப்பட்ட பிரியங்களின் 

உறைந்த ரத்த கட்டிகள்மீது 

சற்றயர்ந்து கண் மூடிக் கொள்கின்றன ஞாபகங்கள்”

 

அவரைப்போலவே அவரது கவதைகளும் எளிமையானது. 

 

வாழ்வின் சகல துயரங்களையும் அது சார்ந்த மொழியிலேயே படைப்பாக்கிவிடுகிறார். இவரின் மொழி புதிது. 

 

தாய் மடியில் தலைபுதைத்துக் கிடக்கும் திருமணமான மகளின் விசும்பல் போன்றது அவரது மொழி. 

 

அம்மொழிபுரிய தாய்மை உணர்வு அவசியம். ஒவ்வொரு ஆணிடமும் தாய்மை இருக்கிறது. அவன் அதை ஔித்து வைத்துவிடுகிறான். 

 

இளம்பிறையின் கவிதைகள் பெண்களின் துயர்களை மட்டுமே சொல்பவை அல்ல. மாறாக ஆண்களுக்குள் இருக்கும் தாய்மை உணர்வை வெளிக்கொண்டுவர முயற்சிப்பவை.

 

ஆண்கள் இவரது படைப்புகளைப் பாடமாகப் படிக்க வேண்டியதில்லை., மாறாக வழித்துணையாக எடுத்துச் செல்லலாம். 

 

எனக்கு கவிஞர்.இளம்பிறையைத் தெரியும். என் மகளதிகாரம் நூல் வெளியீட்டு விழாவிற்கு அவரும் ஒரு சிறப்புப் பேச்சாளர். அவர் சொல்லி அவர் அரசுப் பள்ளியொன்றின் தலைமை ஆசிரியர் என்பதும்… சென்னை புறநகர் ஒன்றில் குடியிருந்து வருவதும். வேறெதுவும் அவரைப்பற்றித் தெரியாது. 

 

நானும் அவரிடம் கேட்கவில்லை…. கேட்க வேண்டும் என்றும் எனக்குத் தோன்றவில்லை.

 

இது ஒருவகையில் நன்மையாகவே அமைந்துவிட்டது. ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்வின் பக்கங்கள்…. சுக துக்கங்கள் அவர்களுக்கேயானது. அவர்களின் படைப்புகள் பொது வெளிக்கானது. 

 

ஆனால் வாசகப்பார்வை என்பது தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து சிலநேரங்களில் துவங்குவதே அபத்தம். 

 

கவிஞர். இளம்பிறை அனைத்துப் படைப்பாளிகளின் பிரதிநிதியாக இருந்து இந்தக் கவிதையினைத் தந்திருக்கிறார்

 

“ஏளன இளக்காரங்களிலிருந்து 

மீண்டெழுகிறேன் ஒரு பறவையாக 

 

என் மனம் தனி 

முகம் தனி 

குரல் தனி 

 

யார் மகன் 

யார் மனைவி 

எவரின் தாயென்ற 

சார்புக்குள் தள்ளும் 

கேள்வி ஆயுதங்களால் 

தொடர்ச்சியாக என்னால் 

கீறுபட்டுக் கொண்டிருக்க முடியாது”

*

 

ஒருநாள் என் ஆத்மார்த்த சென்னைத் தோழி லாவண்யாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது… சொன்னார்… 

 

“பெண் சுதந்திரமாக” நீங்கள் பார்பதெல்லாம்… மகள்களின் சுதந்திரத்தை மட்டுமே

 

மனைவி என்கிற பெண் இன்னமும் சுதந்திரத்திற்காகப் போராடிக்கொண்டிருக்கிறாள் 

 

மனைவிக்கு கணவன் பயப்படுவதெல்லாம்… தான் செய்த தவற்றை மனைவி மன்னிக்கும் வரை அல்லது தனது தவறுகளை கண்டும் காணாதது போல் இருக்கும் வரை…

 

நல்ல கணவனுக்கு இன்னமும் தன்னை ஒப்புக்கொடுக்கவே அல்லது அடிமையாகவே இருக்கவிரும்புகிறாள் மனைவி

 

ஆனால் ஆண்களுக்குக் 

காதலி என்பது உடனடித் தேவையாகவும்…

மனைவி என்பது இளைப்பாறுதல் தேவையாகவும் எண்ணத்துவங்கிய ஆண்களின் ஆதங்கமே… 

 

அவ்வாறான மனைவிக்கு எதிரான மீம்ஸ்களும்… சிரிப்புத் துணுக்குகளும்….

தோழி லாவண்யாவின் கருத்தும்…

இன்னமும் எனக்குள் உணர்வலைகளை வீசிக்கொண்டே இருக்கின்றன. 

 

பெண்களின் இயல்பு பற்றிய ஆண்களின் 

மதிப்பீடுகள் தங்கள் வக்கிரத்தின் வெளிப்பாடாகவே இருக்கின்றன.

 

பேசினால் ஒரு கருத்து...

பேசாமல் சென்றால் ஒரு கருத்து...

சிரித்துப் பேசினால் ஒரு கருத்து...

சிடுசிடுத்துப் பேசினால் ஒரு கருத்து...

 

அப்படியான கருத்துகள் யாவுமே, ஆண்களுக்குச் சாதகமான ஒரு முடிவை பெண்கள் எடுக்க வேண்டும் என்பதாக அமைந்துவிடுவதுதான் அதன் அவலம்.

 

இவற்றையெல்லாம் எதிர்கொண்டே பெண்கள் இச் சமூகப்பெருவெளியில் வாழவேண்டியிருக்கிறது.

 

அதிலும் பணிக்குச் சென்று திரும்பும் பெண்களின் நிலை வேறுமாதிரி கொடுமையானது. 

 

கவிஞர்.இளம்பிறை வெளியே சென்று வீட்டுக்குத் திரும்பும் ஒருநாளின் வாழ்க்கை பற்றி இப்படி எழுதியிருக்கிறார். 

 

இது ஒருநாள் வாழ்க்கையல்ல… ஒவ்வொரு நாள் வாழ்க்கையும்….

 

கவிதையைக் கேளுங்கள்...

 

“காற்றில் நெளிந்து 

கலக்கும் கரும்புகையாக 

வேஷம் கலைக்கும் மனிதர்களின் மெல்லிய நினைவுத் திரைச்சீலைகள் மனதிலாடிக் கொண்டிருக்கின்றன 

 

பச்சை விறகுகளை 

கழுத்து நடுங்க 

கட்டிச் சுமந்த வயிற்றுப் பிள்ளைக்காரி 

வீடு வந்து சேர்ந்தது போல் 

பதட்டமற்ற இந்நிலைக்கு 

வந்து சேர்வதற்குள் 

நீங்கள் 

உருவாக்கிப் பேசிக்கொண்டிருந்த எத்தனையோ என் கதைகளை கடக்கும்படியாயிற்று நான்

**

 

தினசரி துயரத்தின் உச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களுக்காக இளம்பிறை எழுதிய ஒரு கவிதையைப் படித்தவுடன் கண்கலங்கிவிட்டது. 

 

இதில் இளம்பிறை துயரம் எதனையும் நேரிடையாகச் சொல்லவில்லை. 

இறந்துவிட்ட பறவையோடு…. தனக்கான விபத்தை ஒப்பிடும் சகோதரிகளுக்குப் பதில் சொல்வதாக அமைந்த இந்தக் கவிதை கண்ணீருக்கானது.

 

இளம்பிறை கண்ணீர் ஊற்றி எழுதுவதில்லை. ஆனால் வாசிப்பவர்கள் தங்கள் கண்ணீரால் அவரின் எழுத்துகளை நனைத்துவிடுவதுண்டு. 

 

அழவேண்டிய நேரங்களில் அழுதுவிடுவது மனதுக்கும் நல்லது கண்களுக்கும் நல்லது… ஆகவே கவிதையைக் கேளுங்கள்….

 

“உறங்கிக் கொண்டிருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் சகோதரிகள் 

 

கோலமிட சென்றபோது 

இறக்கை உடைந்த பறவையொன்று வாசலில் இறந்து கிடந்ததாகவும் 

அதன் பிறகு 

நான் விபத்தில் அடிபட்ட 

செய்தி வந்ததாகவும் கூறினாள் தங்கை 

 

அந்தப் பறவை 

எனக்கு பதிலாக 

உயிர் விட்டிருப்பதாகவும் 

ஆயுள் எனக்கு கெட்டியென்றும் தழுதழுத்த குரலில் சொல்கிறார் அக்கா 

 

சகோதரிகளே வெளியெங்கும் பறந்து 

விரும்பிய இறை எடுத்து 

அலகுகளில் குச்சி சுமந்து 

ஆசை கூட்டில் 

காற்றோடு கண்ணயர்ந்து 

செங்கதிரில் குளித்து 

சிறகசைத்து வாழ்ந்திருந்த 

ஒரு பறவையை காட்டிலும் 

பெரிதாக என்ன வாழ்ந்து விடப் போகிறேன் நான் 

 

எனக்குப் பதிலாக 

பறந்து கொண்டு இருந்திருக்கலாம் 

அந்த பறவையே”

 

 

இளம்பிறையின் இந்த “அவதூறுகளின் காலம்” கவிதைத் தொகுப்பினை வாசித்துக் கொண்டிருந்த போது…

 

ஒரே ஒரு கவிதையில் எனக்குள்ளும் அச்ச உணர்வு ஏற்பட்டது உண்மை.

 

பெண்களின்  விடுதலை என்பது கானலை நம்பி வீணடிக்கப்படும் விதைகளாகும் போது நிச்சயமாக நசுக்கப்படத்தான் வேண்டும் உங்களின்…..

 

என்று சொல்லிவிட்டு நிறுத்திவிடுகிறார். 

 

விரல்களில் தீப்பந்தம் கொழுத்தி எழுதியிருக்க வேண்டும் இந்தக் கவிதையை… 

 

கவிதை இவ்வளவுதான்.. அதன் விஸ்வரூபம் பெரிது… கேளுங்கள்...

 

 

“எவ்வளவோ தூரம் 

கடந்த பின்னரும் 

நிற்கும் தூரத்திலிருந்து 

வெகுதூரமாகிக் கொண்டிருக்கும் 

எம் விடுதலை என்பது 

கானலை நம்பி 

வீணடிக்கப்படும் 

விதைகளாகும் போது 

நிச்சயமாக 

நசுக்கப்படத்தான் வேண்டும் 

உங்களின்…..”

 

*

 

பெண்ணியம் என்பது சுதந்திரத்திற்கான அறைகூவல் அல்ல. சக உயிரினை மதிக்கக்கோரும் ஒரு எச்சரிக்கையே…. எனச் சொல்கின்றன அவரது கவிதைகள் இருக்கின்றன

 

தான் பிணமாக எரிந்தாலும் எரிந்தாலும் கருகினாலும் ஏழுலகம் கேட்க பாடுவேன் அன்பின் வசந்த கானத்தை புரிதலற்ற நிராகரிப்பை பிணத்தை போல் எரிந்தபடி

என்று தனது கவிதையில் சொல்லுகிற போது… 

 

பெண்களுக்கு எதிரினா அத்தனை வன்மங்களையும் எரித்துச் சாம்பலாக்கும் வல்லமை கொண்டதாக மாறிவிடுகிறது அவரது கவிதைகள்…

 

அந்தக் கவிதையைத் தொடங்கும் போதே.. மாயைகளிலிருந்து என்றே இப்படித் தொடங்குகிறார்...

 

“மாயைகளிலிருந்து 

புகைந்து கொண்டிருக்கிறது 

நம்பகமற்ற மனநிலை 

கலைத்துப்போடும் நம்பிக்கைகள் 

 

காற்றைக் குடித்துப்

பளபளக்கும் கங்குகள் 

எப்போது வேண்டுமானாலும் 

எரியத் தொடங்கலாம் 

 

எரிந்தாலும் கருகினாலும் 

ஏழுலகம் கேட்க பாடுவேன் 

அன்பின் வசந்த கானத்தை

புரிதலற்ற நிராகரிப்பை 

பிணத்தை போல் எரிந்தபடி

**

 

பெண்களின் பாதங்களை பார்வையாலும்… வக்கிரத்தாலும் இடறச் செய்யும் 

எதுவொன்றையும் எதிர்த்துத் துணிச்சலுடன் எழுந்திருக்க முயலும் பெண்களை நீங்களும் நானும் அச்சத்துடனும் ஆச்சர்யத்துடனும் பார்க்கும் போதெல்லாம் இளம்பிறையின் இந்தக்கவிதை உங்களின் நினைவில் வருவதைத் தவிர்கமுடியாது.

 

உங்களின் அச்சத்தை உணர்ந்தபோதும் அவரின் கவிதைகள் உங்களை எதிர்தாக்குதல் செய்ய முயலவில்லை 

 

மாறாக… கோரிக்கை ஒன்றையே வைக்கிறது இப்படி...

 

“என் ஒரு கரத்தை 

இன்னொரு கரத்தால் 

பற்றிக் கொண்டு எழுந்து நிற்பது உங்களை சபிக்கவோ...

முந்திச்செல்லவோ... என்ற 

அச்சம் பதற்றம் அறவே தவிர்ப்பீர்

வாழ்வதற்காக மட்டுமே”

 

பெண் என்கிற வார்த்தையே ஏளனத்திற்கும்… இளக்காரத்திற்குமானது என்றும்…

 

பெண் என்கிற படைப்பே ஆணின் வக்கிரத்திற்கான உணவுச் சங்கிலி என்றும்.. சொல்லிவிட்டு...

 

காலையில்…. ஒரு தேநீர் கோப்பைக்குள்ளும் 

 

மாலையில்…. ஒரு மதுக்கோப்பைக்குள்ளும் 

 

ஒரு ஆணால் எளிதாக ஔிந்துகொள்ள முடிகிறது…

 

ஆனால்…. அலுவலக வேலை… வீடுவேலை… குழந்தை வளர்ப்பு… எனப் பெண்களின் அத்தனை அங்கலாய்ப்புகளிலும் 

 

வெறும் பார்வையாளனாகவும்…

பகடிசெய்பவனாகவும்... இருக்கும் உங்களின் பாவக் கணக்குகளை இளம்பிறையின் கவிதைகள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

 

#காஃபிவித்கவிதை

நினைவும் நிகழ்வும்
பிப்ரவரி 2019
1k   9   2