Padaippu-TV

   3    4


JinnaAsmi:

ஆத்ம கீதம் இசைப்பதைப் போல ஒரு உணர்வு...

IbrahimShareef:

நம் பங்களிப்பு ஏன் பகிர்வதாக இருக்கக்கூடாது . .

IbrahimShareef:

பரவசம் . . . அனைவரும் படைப்பின் முயற்சியை முடிந்தவரை பகிருங்கள் . . இதற்காக உழைத்த உள்ளங்களை உலகரியச் செய்வோம்

படைப்புகுழுமம்:

மிகவும் அருமை...கவிஞர் கல்யாண்ஜியின் கவிதைகளை கேட்பவர்கள் காதுகள் கொடுத்து வைத்தவை

காஃபி வித் கவிதை...

காஃபியை போன்றே கவிதையும் சுவையானது...

 

அத்தியாயம் 3 

 

நமது மூன்றாவது நிகழ்ச்சியில் கவிஞர் கல்யாண்ஜி அவர்கள் எழுதிய "பூனை எழுதிய அறை... " என்ற நூலைப்பற்றி படைப்பாளி ஆண்டன் பெனியின் பார்வை.

நிகழ்ச்சி தொகுப்பாளர்: செல்வகுமார்

ஒலிக்கலவை: ஜெயந்த்

நிகழ்ச்சி வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்

 

@@@@@@@@@@@@@

 

புதிதாக எழுத வருபவர்கள்.. வண்ணதாசன் எனும் கல்யாண்ஜியைப் படிக்க வேண்டும்.. என சுஜாதா சொல்லியிருந்ததை அறியும் முன்னமே 

 

புளியங்குடிக்குப் 

போகிற வழியில் 

பூத்திருக்கிறது நாகதாளி

 

என்ற கல்யாண்ஜியின் கவிதையை படித்துவிட்டு எங்கள் ஊர் புளியங்குளத்திலிருந்து புளியங்குடிக்கு… சங்கரன்கோவில் வழியாகப் போகும்போது நாகதாளி காணக்கிடைக்கவில்லை. 

அப்போதுதான் உரைத்தது… ஒருவேளை கடையநல்லூரிலிருந்து புளியங்குடிக்கு வாற வழியில நாகதாளி இருக்குமோன்னு? 

அதுக்குள் இருட்டியிருந்ததால் ஊர் திரும்ப வேண்டியதாகிவிட்டது. 

ஆனாலும் எனக்குள் வளரத் தொடங்கியிருந்த நாகதாளியை இன்னமும் அகற்ற முடியவில்லை. 

கல்யாண்ஜி தனது திராட்சைக் கவிதையில்…. சொத்தையான பழத்தினை அகற்ற முயன்ற கடைக்காரரை….’இருக்கட்டுமே’ என்று தடுத்ததைப்போல். நானும் சரி வளர்ந்துகொள்ளட்டுமே என்று நாகதாளியை விட்டுவிட்டேன். 

இப்போதும், திருநெல்வேலியிலிருந்து புறப்படும் பேருந்துகளின் பெயர்பலகைகள் அத்தனையும் கல்யாண்ஜியின் கவிதைகளில் இருக்கும்.

தச்சநல்லூர், சிந்துபூந்துறை, அம்பாசமுத்திரம், கடையநல்லூர், புளியங்குடி, சாலக்குடி, புனலூர்… 

ஒருமுறை கல்யாண்ஜியின் தச்சநல்லூர் பற்றிய இந்தக்கவிதையினைப் படித்துவிட்டு …

என் நண்பன் தச்சநல்லூர் கருணாகரனுடன்  போய் ஓடையில் நின்றபோது தண்ணீரும் இல்லை தாழம்பூவும் இல்லை. வண்ணதாசன் வந்தால்தான் வரும்போல…. 

அடுத்தமுறை தச்சநல்லூர் போகும்போது அவரைக் கூட்டிச் செல்ல வேண்டும்.

 

தச்சநல்லூர் ஓடையில்

தாழம்புதர் இருக்கிறதா இப்போது

கள்ளிக்காட்டு முந்திரித்தோப்புக்கு

அப்புறம்

கண்ணுக்குத் தெரியுமா

தேங்காய் உருளி ஆறு

 

தண்ணீர் இல்லாது போனதையும், ஓடைகள் காணாமல் போனதன் அவலத்தையும் அழகியலோடு சொல்லிவிடுகிறார். கல்யாண்ஜியின் கண்களுக்கும் மனதுக்கும் கிடைப்பது வேறு யாருக்கும் கிடைப்பதில்லையோ என்ற ஏக்கம் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. 

வாதாம் மரம் அவருக்காகவே காய்க்கிறது. அனில்கள் அவருக்காகவே வாழ்கின்றன. அந்தப்பக்கம் பறக்கும் பறவைகள் அவருக்காகவே ஒற்றை இறகினை உதிர்த்துவிட்டுப் போகின்றன. 

அந்த ஒவ்வொன்றிலும் கவிதை இருக்கிறது… அந்த ஒவ்வொரு கவிதையிலும் கல்யாண்ஜி இருக்கிறார்.

பூனை எழுதிய அறை கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதை

 

இத்தனை வருடங்களாக 

சுட்டு விரல் என்று நான் 

சொல்லிவந்ததை

துப்பாக்கி விரல் என்கிறது 

கண்சுருக்கிப் பார்க்கும் 

இந்த சாய்கழுத்துக் குழந்தை.

பயமாக இருக்கிறது எனக்கு

காலத்தின் விஸ்வரூபம் 

கண்டு.

 

தலைமுறை இடைவெளியை அதன் உணர்வுகளற்ற தன்மையை கல்யாண்ஜியால் மட்டுமே இப்படிச் சொல்லமுடியும். 

இந்தத் தலைமுறை வேகமாக இருக்கிறது, எதையும் மோசமாகச் சிந்திக்கிறது என்று பொத்தாம் பொதுவாக நம்மால் சொல்லிவிட முடியும். 

சுட்டுவிரலுக்கும் துப்பாக்கி விரலுக்கும் இடையேயுள்ள வன்மம், குரூரம், வேகம், அவசரம், ஆகியவையே… தலைமுறை இடைவெளி என்பதைச் சொல்ல கல்யாண்ஜியின் கண்கள் வேண்டும் அல்லது அவரது மனம் வேண்டும். 

அவருக்கு எக்ஸ்ரே கண்கள் வாய்த்திருக்கிறது, அந்தக் கண்களுக்கும் மனதுக்கும் ஒரு புரிதல் இருக்கிறது. அதனாலேயே எதையும் கவிதையாகப் பார்க்கமுடிகிறது

திருநெல்வேலிச் சீமையில் இருக்கும் உயர்திணை அக்றிணை யாவும் கல்யாண்ஜியின் கவிதைகளாகிவிட்டன. ராமனின் பாதம்பட்ட அகலிகை போல் அவரின் விரல்வழியாக கவிதையாகிவிட்டன. அவர் எழுதாத ஒன்றினை எழுதிவிட முடியுமா என்று தெரியவில்லை. 

ஒரு பறவையேனும் ஒற்றை இறகினை என்னிடம் கொடுத்துவிட்டுப் போகுமா என்றும் தெரியவில்லை. 

 

கல்யாண்ஜியின் வீட்டுக்குப் போக வேண்டும். அங்கே உள்ள நாட்காட்டியினைப் பார்க்க வேண்டும். புதன்கிழமை பூனைக்கானது என்றால்…..

திங்கள் முதல் ஞாயிறுவரையிலான  நாட்காட்டி யார் யாருக்காக விதிக்கப் பட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும்… கல்யாண்ஜியின் இந்தக் கவிதையைப் படித்ததிலிருந்து இப்படித்தான் தோன்றுகிறது.

 

புதன்கிழமையைப்

பூனைகள் கொண்டாடுகின்றன.

அவற்றின் நாட்காட்டியில்

அச்சடிக்கப் பட்டிருக்கிறது

மீன் கிழமை என.

 

பூனைக்கு நாட்காட்டி செய்துகொடுத்தவரைப் பார்க்க வேண்டும். நாட்காட்டியில் பறவைக்கு ஒரு நாள் இருக்கும், அனிலுக்கு ஒரு நாள் இருக்கும், வேயிலுக்கு ஒரு நாள் இருக்கும்

இருப்பினும், நாட்காட்டியின் ஒரு புதன்கிழமையில் என் பெயரினையும் ஓரமாக எழுதிக்கொள்ள வேண்டும் அந்த விறால் மீன்களுக்காக…. பூனைக்கு அருகில் உட்கார்ந்துகொள்ள வேண்டும்.. 

விறால் மீனைத் தின்னதும் அவரது வாதாம் மரத்து நிழலில் அனில் ஓடியாட இடம்விட்டு, மரத்திலிருந்து உதிரும் சருகு என்மீதே விழும்படி படுத்துறங்க வேண்டும். 

 

ஆறு மணிக்கு மேல் தூக்கம் கலைந்து ரயிலடி வந்தால் அரை மணிநேரத்துக்கு ஒரு ரயில் நெல்லை சந்திப்புக்கு வரும். மூன்றாவது மின் வண்டியில் ஒரு பெட்டியில் என் யமுனாவை நிரப்பிக் கொள்ள வேண்டும். அந்த மூன்றாவது ரயில் வண்டியிலிருந்து என் யமுனா இறங்கி வரும் போது எனக்கும் கல்யாண்ஜியின் இந்தக் கவிதை போல் தோன்றுகிறதா என்று பார்க்க வேண்டும்.

 

இந்த மூன்றாவது மின் ரயிலில் நீ

கையசைத்துக் கொண்டு இறங்குகிறாய்.

இதற்கு முந்திய, அதற்கும் முந்திய

இரண்டு ரயில்களில் இருந்து

இறங்கிவருவது போன்ற

என்னுடைய காத்திருப்பின் சித்த்திரங்களில்

இதை விட அழகாக இருந்தாய் நீ

 

உணர்வுகளை அதன் இயல்புகளோடு உணர்ந்தவரால் மட்டுமே இப்படி எழுத முடியும். ரயிலும் கவிதை இருக்கிறது, ரயில் வண்டியிலும் கவிதை இருக்கிறது, ரயில் நிலையத்திலும் கவிதை இருக்கிறது அவருக்கு.

 நெல்லை சந்திப்பில் இனி என் யமுனாவுக்காக காத்திருப்பேன். அவள் எந்த வண்டியில் வந்தாலும், வரும் ஒவ்வொரு ரயில் வண்டியிலும் அவள் வருவதாகவே என்னாலும் உணரமுடியும் என்றே நினைக்கிறேன். 

 

கவிதை என்பது வெறும் கற்பனை இல்லை அது உணர்வுகளின் அழகியல் வெளிப்பாடு என்பதை அவரது கவிதைகளைப் படித்த பின்னரே அறிந்துகொள்ள முடிந்தது. கவிதையின் வடிவம் எதுவாயினும் அது விட்டுச் செல்லும் அதிர்வுகளே முக்கயமானது. அப்படித்தான் இந்தக் கவிதையும்….

 

நீண்ட காலமாக ஆசை

இரண்டு கைகளிலும் தர்பூசணிக் கீற்று

ஏந்திக் கடிக்கிற

ஒரு பதின்வயதுக் கருப்புப் பெண்ணை

வரைந்துவிட.

 

அதற்குள்

அந்தப் பதின்வயதுப் பெண்ணை

ஒருமுறை பார்த்துவிட வேண்டும்.

 

அப்புறம் விதைகள் பிதுங்கும்

தர்பூசணிக் கீற்றின் சிவந்த ருசியையும்.

 

உண்மையின் தைலம் இன்றி எப்படி

ஒவ்வொன்றாக நிறங்களைக் கலப்பது?

 

யாரோ ஒருவரின் உணர்வினைக் கவர்ந்து நிறைவான கவிதை எதையும் எழுதிவிட முடியாது. அவரது கமலா ஆரஞ்சுக் கவிதையில் கல்யாண்ஜி சொன்னது போல் அவரவர் உரித்த சூரியன் வாசம் அவரவர் பெருவிரலில் அடிக்கும் நம்புங்கள். 

இப்போதும் கமலா ஆரஞ்சு உரிக்கும் போது என் பெரு விரலில் சூரிய வாசம் அடிக்கிறது. இது எனக்கான வாசம். இது கல்யாண்ஜிக்கு கவிதை தந்தது போல் எனக்கும் கவிதை தருமா என்று தெரியவில்லை. 

தந்தாலும் அது கவிதையாக இருக்குமா என்று தரியவில்லை. எனினும் கல்யாண்ஜியே சொன்னது போல் அவரவர் உரித்த சூரியன் வாசம் அவரவர் பெருவிரலில்…  இப்போது அவரின் கமலா ஆரஞ்சுக் கவிதையைக் கேளுங்கள்…

 

நன்றாகத் தெரிகிறது 

அது கமலாரஞ்சுத் தோல்தான்.

நகக் கண்களால் உரித்து

சுளையெடுத்தபோது

அது கேசரி நிறப் பூவாக

மலர்ந்துவிட்டது போலும்

ஆரஞ்சுப் பழத்தை விட

ஆரஞ்சுத்தோல் அழகு என்று சொல்வது

சூரியனைவிட 

வெயில் அழகு எனச்

சொல்வதைப் போலவே.

அவரவர் உரித்த சூரியன் வாசம்

அவரவர் பெருவிரலில் அடிக்கும் 

நம்புங்கள்.

 

நீங்களும், நானும் பேருந்தில் பயணப்பட்டிருக்கிறோம். பணம் பொருள் பறிகொடுத்திருப்போம் அல்லது பறிகொடுத்தவர்களைப் பார்த்திருப்போம். 

பணம்பொருள் பறித்தவனை மறுபடியும் பார்க்க நேர்ந்தால் நம்மால் இப்படி அவன் உணர்வுகளை மொழிபெயர்க்க முடியுமா என்று தெரியவில்லை. 

கவிதை எழுத மொழி வேண்டியதில்லை, இலக்கணம் வேண்டியதில்லை. உணர்வதும்…. சக உணர்வுகளை மதிப்பதும் தெரிந்தால் போதும்…. என்று நினைக்க வைத்த கவிதை இது. 

 

’இதை எடுங்கள் நன்றாக இருக்கும்’ 

மாதுளம் பழங்களை தேர்ந்தெடுக்க 

உதவியவர் கையில் கொய்யாப் பழங்கள்,

குடை பிடித்தபடி ஒரு சிறுமியும் அருகில்.

 

பேருந்து நெரிசலில் சங்கிலி திருடி 

பிடிபட்டவர் இவர் என ஞாபகம் வந்தது.

 

என் கையிலிருந்து உருண்ட பழத்தை 

எடுத்து கொடுத்துச் சிரித்த மகளை 

தட்டிக் கொடுத்தது அவரது இடக்கை.

 

அக் கணம் ஒன்று போதும் 

அவர் கொய்யாப்பழம் வாங்குகிறவர் 

நான் மாதுளை வாங்குகிறவன் 

அவ்வளவுதான் என 

முற்றிலும் உணர.

 

 

இது போலவே அருணாசலம் வாத்தியார் கவிதையும். கவிதையின் மயக்கம் தெளியவும் நாளானது. 

யோவ்….. கல்யாண்ஜி எப்படிய்யா எழுதுற…. இப்படியேல்லாம். என்று கத்தவைத்த கவிதை இது.  அருணாசலம் வாத்தியாருக்கு இதைப் படிக்கக் கொடுத்துவைக்கவில்லையே என்ற ஏக்கமும் எனக்குள் வந்தது. உங்களுக்கும் வரலாம்… கேளுங்கள்…..

 

அவர் வேலை பார்த்த 

பள்ளிக்கூடம் வழியாகத்தான் 

அருணாசலம் வாத்தியாரைத்

தூக்கிக் கொண்டு போனார்கள்.

காரை பெயர்ந்த 

கரும்பலகைக்கு உள்ளிருந்து 

எட்டி பார்த்தன

அகர முதல எழுத்தெல்லாம்.

 

நான் கல்யாண்ஜியை ஒருநாள் சந்திப்பேன்.  உங்களின் தாமிரபரணித் தண்ணீரை சீவலப்பேரியில் வழிமறித்து கோவிப்பட்டி வரை குழாயில் கொண்டுவந்து குடித்ததைச் சொல்வேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்த வெருவரிசை தாமிரபரணி பாலம் வரை நீண்டிருந்த போது படித்துறையில் அரை நாள் உட்கார்ந்திருந்ததைச் சொல்வேன்.

 

அவரின் புத்தகத்தில் அவரின் நினைவெழுத்தைப் பெறும் போது மறக்காமல் மூடியோடு பேனாவைக் கொடுப்பேன் இல்லையென்றால் இப்படி என்னிடமும் வருத்தப்படுவார்.

 

முக்கால் வாசிப் பேர் 

ஞாபகமாக

மூடி கழற்றிய 

பேனாவைக் கொடுத்துதான் 

கையெழுத்துக் கேட்கிறார்கள் 

கவிதைப் புத்தகத்தில். 

இதற்குக் கூட நம்பாது போன 

இவர்களை நம்பியே 

இத்தனை வரிகளும்

 

எங்களை நம்பி எழுதுங்கள் என்று நான் எதுவும் சொல்ல மாட்டேன். அந்த பேனா மூடியிடம் அவருக்குத்தான் பேசிக்கொள்ளத் தெரியுமே.

 

சி.கல்யாணசுந்தரம் என்கிற வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி என்கிற நவீனத் தமிழ்க் கவிதையினை நினைப்பதற்குக்கூட…

 ஒருமுறையேனும் தாமிரபரணித் தண்ணீரைக் குடித்திருக்க வேண்டும் அல்லது அதன் படித்துறையில் ஒரு நாள்முழுக்க அமர்ந்திருக்க வேண்டும். 

கவிதை இலக்கிய உலகின் அத்தனை பெரிய கூட்டத்தின் நடுவிலும் இரண்டு பேரை இன்னமும் என்னால் அடையாளம் காணமுடிகிறது

 ஒருவர் கல்யாண்ஜியின் கவிதைகளிலிருந்து கவிதை எழுதக் கற்றுக்கொண்டவர்

இன்னொருவர் கல்யாண்ஜியின் கவிதைகளை தனது பெயரிலும் எழுதிக்கொண்டிருப்பவர்

கவிஞர் இசை தன்னுடைய கட்டுரை ஒன்றில் தன்னையே இப்படிக் கேட்டுக்கொள்கிறார். ”எத்தனை ஏணி வச்சா நீ கல்யாண்ஜீ ஆவ?” 

அப்படியே நீங்களும் நானும் கேட்டுக்கொண்டிருக்கிறோம் யாருக்கும் தெரியாமல்… ஆனாலும் அது நம் மனதுக்குக் கேட்டுவிடுகிறது.

நினைவும் நிகழ்வும்
பிப்ரவரி 2019
1k   9   2