Padaippu-TV

   4    2


SureshBabu:

மீண்டும் கிராமத்திற்கேச் சென்று திரும்பிய உணர்வு..!!பழைய சோறுக்காய் எச்சில் ஊறுகிறது நா.!! படைப்பு குழுவினர்க்கு பாராட்டுகள்!!கவிஞர் அருண்பாரதி அவர்களின் உணர்வினை, அழகாய் நோக்கியிருக்கிறது ஆண்டன் பெனி அவர்களின் பார்வை.!!பழைய சோற்றை பாசத்துடன் பரிமாறியிருக்கிறது...நண்பர் செல்வகுமார் அவர்களின் குரல்.!!ஒலிக் கலவையில் தெம்மாங்கு பாடியிருக்கிறார் நண்பர் ஜெயந்த் !!வாழ்த்துகள் நண்பர் ஜின்னா அஸ்மி அவர்களுக்கு இப்பணியை சிறப்பாய் தொடர..!!

JinnaAsmi:

அற்புதம்...

காஃபி வித் கவிதை...
காஃபியை போன்றே கவிதையும் சுவையானது...
அத்தியாயம் 2
நமது இரண்டாவது நிகழ்ச்சியில் கவிஞர் பாடலாசிரியர் அருண்பாரதி அவர்கள் எழுதிய "புதிய பானையில் பழைய சோறு.. " என்ற நூலைப்பற்றி படைப்பாளி ஆண்டன் பெனியின் பார்வை.
நிகழ்ச்சி தொகுப்பாளர்: செல்வகுமார்
ஒலிக்கலவை: ஜெயந்த்
நிகழ்ச்சி வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்.

@@@@@ அருண் பாரதியின் இந்தக் கவிதைத்தொகுப்பு படிப்பவர்களை ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. நீங்கள் பிரதான சாலையிலிருந்து ஒரு கிராமத்திற்குள் நுழைவது போலிருக்கும். அப்படி வந்தீர்கள் என்றால், உங்களின் முதல் விரலினை என் ஒரு கையிலும்… கவிஞர் அருண்பாரதியின் புதிய பானையில் பழைய சோறு கவிதைத் தொகுப்பினை இன்னொரு கையிலும் தாங்கிக்கொள்வேன்.. ஒரு கிராமத்தின் நுழைவு வாயிலான புளிய மரத்திலிருந்து ஊர் எல்லையில் இருக்கிற கருப்பசாமி வரைக்கும்…. தன்னுடைய கவிதைகளிலும், நெஞ்சாங்கூட்டிலும் சுமந்து திரிகிற மனிதன் தான் அருண்பாரதி. அவன் வாயிலேருந்து வருகிற நாலு சொல்லுல மூனு சொல்லுல கிராமத்து மண்வாசனை இருக்கும், இன்றைய தேதிக்கு அவன் துணை இல்லாம எந்தக் கிராமத்துக்கும் நானும் போகமுடியாது. நீங்களும் போகமுடியாது. அவனின் கவிதைகளை வாசிக்கும் போதெல்லாம். என் ஊரின் மண்ணிலிருந்து மனிதர்கள் வரை அப்படியே பதிவாகியிருப்பதை உணர்வேன். புதிய பானையில் பழைய சோறு கவிதைத் தொகுப்பில் இல்லாத ஒரு வார்த்தை அந்தத் தெற்கத்தி மண்ணில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வார்த்தைகளையும் வாழ்க்கைகளையும் பதிவு செய்திருக்கும் தொகுப்பு அது. எங்க ஊர் வாசலிலும் பெரிய புளிய மரம் இருந்தது. பிஞ்சிப் புளியங்காய் அடிக்கும் சிறுவர்கள், விழும் புளியங்காயை சிலிர்ப்போடு திண்ணும் சிறுமிகள். புளியம்பூல இருந்து புளிபம் பழம் வரைக்கும் சிறுசுக அண்ணாந்தே கெடக்கும். ஆண்டாண்டுகாலமாக இந்தப் புளியமரத்தை மட்டும் ஏலத்திற்கு விடுவதில்லை. அப்ப இருந்த ஊர்த்தலைவரிடம் கேட்டபோது, சிறுசுகெ ஏறி வெளையாடவும், எறிஞ்சி வெளையாடவும் இதுவாவது இருக்கட்டுமேப்பான்னு சொல்லியிருக்காரு. அடுத்தடுத்து வந்தவங்களும் இத மாத்தல. இப்பவும் ஊர்மரம்னா அது இந்தப் புளிய மரம்தான். ஒத்த மரம்னாலும் அது நெழலுல ஊரே நிக்கலாம், அம்பூட்டுப் பெருசு. சின்னப் பிள்ளைங்க தூங்குற நேரம் போக மீதி நேரமெல்லாம் இங்கதான் இருப்பாங்க, விளையாடிக் களைச்சித் தூங்கிக் கெடக்கும் புள்ளைகளை… வேலைவிட்டு வந்த அம்மாக்கள் தூக்கிப் போற கதை நெதமும் நடக்கும். வெளையாட்டுன்னா அப்படியொரு வெளையாட்டு.. அந்த விளையாட்டை அருண்பாரதி தன் கவிதைகளில் ஒண்ணு விடாம சொல்லியிருக்கிறார் இப்படி….

”ஒரு கொடம் தண்ணி ஊத்தி
ஒத்தப்பூ பூ பூத்தாச்சு
ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி
ரெண்டுபூ பூத்தாச்சு என்று
பூப்பறிக்கப் போனதும்
ஒரு ஊர்ல சங்க நரியும்
புங்க நரியும் இருந்துச்சாம்
அதுல புங்க நரி செத்துட்டா
என்ன இருக்கும்னு சங்க நெரிக்கப் போனதும்
கொல கொலையா முந்தரிக்கா
கொழஞ்சி போச்சி கத்திரிக்கான்னு
குதூகலமாகத் திரிஞ்சதும்”
இந்த இடம்தான். மனுசங்க மன போலவே மரமும் இருக்கும். பருவம் தப்பாம கொடுக்க வேண்டியதைக் கொடுக்கும். அம்மா மடிக்கு அப்புறம்… ஊரே ஒறங்குன இடம்னா… அப்பா தோளுக்கு அப்புறமா ஊரையே தாங்குன ஒன்னுனா அது எங்க ஊர்மரம்தான்.
கிராமத்தின் மண் அப்படி. கடவுளின் கைப்பிடி மண்ணிலிருந்து கசிந்த மண்ணால் உருவாகியிருக்க வேண்டும் ஒரு கிராமம். ஒரு பிடி மண்ணெடுத்து கையாலேயே சலிச்சி வாயில போட்டு நமட்டி நமட்டித் திங்கிறப்போ வருகிற ”என் மண்” என்கிற கர்வம் மனம் நிறைகிற ஒன்று. அதிலிருந்து வரும் நானொரு கிராமத்தான் என்கிற கர்வம் மிகவும் பெருமைக்குரியது. அந்த கர்வத்தால் மட்டுமே இன்னும் கிராமங்கள் உயிரோடிருக்கின்றன.
அம்மன் கோவில், ஊரணி , ஆலமரம், கத்தாழை, எல்லைக் காவல் கருப்பசாமி மட்டுமே ஒரு கிராமம் இல்லை. அவைகள் கிராமத்தின் முதுகெலும்புகள். கிராமங்களின் மண்ணானது மழையினை மறந்தபின் தன் புழுதிக்குள் ஆயிரமாயிரம் சிலாகிப்புகளையும், ஆச்சர்யங்களையும், சந்தோசங்களையும், துயரங்களையும் இன்னமும் தனக்குள் புதைந்து வைத்திருக்கிறது.
எந்த ஊருலேருந்து வாறீக என்று காட்வதற்குப் பதிலாக இன்னமும் ’நமக்கு எந்த மண்?’ என்ற வழக்கம் இருப்பதற்குக் காரணம் அது மண் சார்ந்த வாழ்க்கை என்பதால் மட்டுமே. நிலத்தை விற்பதாக யாரும் சொல்வதில்லை மாறாக ’இருக்கிற மண்ணையும் வித்துட்டா பொழப்புக்கு என்னய்யா பண்றது?’ என்ற கேள்வி இன்னமும் ஈசான மூலையில கேட்டுக்கிட்டே இருக்கு. ஊர் பெரியவரு பேச்சை ஊரே மதிக்கும். ஊர் பெரியவ்ரும் ஊரையே மதிப்பாரு. கிராங்கள்ல நல்லதுன்னு ஆயிரம் இருந்தாலும் கெட்டதுன்னு நாலே நாலுதான் இருக்கும். அந்த நாலு கெட்டதுக்கும் நாட்டாமை கையில தீர்ப்பு இருக்கும். ஊர்கட்டு மீறி வாழ்ப்பழகினதில்ல… ஊரவிட்டு ஒதுக்கி வச்சவனும் அப்படியே ஒதுங்கிப் போனதில்ல.
மழை ஈரம் இல்லைனாலும் அந்த மண்ணில் மனித ஈரம் இருந்தது. அந்த மண் மனித வாழ்வின் சகலத்திற்குமானது. மழையற்றுப் போன நாட்களில் புழுதியாகப் போனது. அந்தப் புழுதியிலிருந்து மனித உறவுகளையும் அதன் மாண்புகளையும் தோண்டியெடுத்துத் தந்திருக்கிறார் கவிஞர்.அருண்பாரதி இவ்வாறு
“அடுப்பெரிக்க மண் அடுப்பு
ஓல வைக்க மண் செட்டி
மூடி வைக்க ஒலம்படி
சேத்து வைக்க உண்டியலு
குடிதண்ணிக்கு மண்குடம்
கழனித்தண்ணிக்கு ஊறல்பான
செத்தாலும் ஈமச்சடங்குக்குக் கலயம்
சாமி சோலியாகட்டும்
சாவு சோலியாகட்டும்
எங்களுக்கு எல்லாமே மண்ணுதாங்க”
இந்த மண் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தெல்லாம்… உழைக்கிறதையும், உக்காந்து சாப்பிடுறதையும்… களைச்ச நேரத்துல கதை சொல்லிக் கெடக்குறதையும்.. அசந்த நேரத்தில அடிச்சிப் போட்ட மாதிரி துங்குறதையும் தான்.
உக்காந்து சாப்பிடுறதுனா… உக்காந்தா எழுந்திருக்க முடியாத அளவுக்கு திண்றதுதான். இதுல ஆம்பள பொம்பளை வித்தியாசமெல்லாம் இல்லீங்க. திங்கிறதுன்னு முடிவு பண்ணிட்டா… திங்கிறதுக்கும் இருந்திட்டா… மனசு விட்டாலும், வாயும் விடாது கையும் விடாது. ஏன் இப்படின்னு கேட்டா. திங்கிறதுக்கு இல்லாத உசுரு வேற எதுக்குங்கிறேன் என்பதுதான் பதில் கேள்வியாக இருக்கும். உழைப்பிலேயும் ஆம்பளை பொம்பளை வித்தியாசம் ஏதுங்கிடையாது. இன்னும் சொல்லப்போனா காட்டு வேலையில ஆம்பளைய தாண்டுன பொம்பளைங்களும் உண்டு. இத நான் சொல்லல அருண்பாரதியே சொல்றார் இப்படி
கருதருப்பா களையெடுப்பா
சகதியில இறங்கி நாத்து நடுவா
சாணியெடுத்து வீடு மொழுகுவா
பண்ணருவா புடிச்சி புல்லறுப்பா
பதக்கு நெல்லுனாலும்
பத்தே நிமிஷத்துல கல்லெடுப்பா
கழுத்து குன்னாம கட்டுச் சுமப்பா
களத்துல கூட்டிப் பொடச்சி கொழிப்பா
நெரபிந்தாம பருத்தியெடுப்பா
குறையில்லாம குறுணிச் சோறு திம்பா
பிரியாணி வேண்டுமென்றால் அரை மணிநேரத்தில் செய்துவிடலாம் பழைய சோறு வேண்டுமென்றால் ஒரு நாள் காத்திருக்க வேண்டும் என்பது ஒரு சொல் வழக்கு. கிராமங்களின் வீட்டின் எண்ணிக்கைக்கு சமைப்பதில்லை. விருந்தினரை எதிர்நோக்கியும் சமைப்பதுண்டு.
நகரங்கள் போல்….. கூட ஆளக்கூட்டி வந்தா சொல்லிட்டு வரவேண்டுமென்பதில்லை. வயிறு நிறைய சோறு இல்லைனாலும், மனசும் ஒடம்பும் நிறைய நீச்சத்தண்ணி இருக்கும்.
`கொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா குடும்மா...’ என்பார்கள். நீச்சத்தண்ணி என்றால், `பழைய சோற்றுத் தண்ணீர்’ இத `நீராகாரம்’ னு சொல்லலாம். முந்தின நாள் நீர் ஊற்றி வைத்த பழைய சாதத்திற்கு மறு நாள் காலையில் நீ, நான் என்று போட்டி நடக்கும். அதிலும் உறவுகளெல்லாம் சுத்தி இருக்க, அமா கையால, பழையசாதத்தை நீர் போகப் பிழிஞ்சி, தொட்டுக்க நெத்திலிக் கருவாட்ட வதக்கி, கையில் உருண்டைகளாகத் தர அதற்குச் சண்டையே வரும், பழையது என்ற முகச்சுழிப்பு இருக்காது. வந்தவங்களும் மனசு நெரஞ்சிருச்சிம்மான்னு சொல்லிட்டுப் போவாங்க. ஆனா ராத்திரி நெலாச் சோறு எங்களுக்கு மட்டும் தான். திண்ணையில அம்மா எங்கள ஒக்காரவச்சி குடுப்பாங்க, அரை வயிறு நெரஞ்சதுமே அப்பா மடியில சாஞ்சிருவோம், படுத்துக்கிட்டுத் திண்ணா வயிறு நெறையாதுன்னு திட்டிக்கிட்டே, வயிற நெறச்சி விடுவாங்க அம்மா.
இதை அருண்பாரதியின் வரிகளில் சொல்வதென்றால்…
“அம்மா ஆக்கிமுடிஞ்சதும்
பச்சநெல் கஞ்சியோடும்
கருவாட்டுச் சாத்தோடும்
நெலா வெளிச்சத்துல நடக்கும்
கூட்டாஞ்சோறு
கொஞ்ச நேரத்துலலேயே
வாசல்ல சாக்க விரிச்சு
அம்மா மடியில தம்பியும்
அப்பா நெஞ்சுல நானும்
படுத்துக்குவோம்
அம்மா கத சொன்னாத்தா
தூங்குவோம்”
கிராமத்துல குழந்தைங்க மரத்தடியில வெளையாடுறது ஒரு அழகுனா, இன்னொரு அழகு எங்க ஊரு மனுசங்களின் பாட்டுதான். வயல்வேலைக்குப் போறவங்க பாடுற அழகே தனி அழகுதான். அறுவடைக்கு மட்டுமில்ல…. அப்பன் ஆத்தா காட்டுவேலைக்குப் போன இடத்துல பாடுற பாட்டக் கேக்கிறதுக்கும்… அத்தனை பறவைகளும் வரும். காட்டுவழியே போறவங்களுக்கு ஒரு பாட்டு காதுலேருந்து மறைஞ்சிருச்சின்னா மறு பாட்டு காதுக்கு வந்திரும். அப்படி காடு முழுக்கப் பாட்டுதான். மழைத் தண்ணியில விதை முளைச்சதா இல்ல பாட்டுச் சத்தத்துல விதை முளைச்சதான்னு சந்தேகம் வரும். காட்டுக்கு மட்டுமில்ல கருமாதிக்கும் பாட்டுதான். சந்தோசம் துக்கம் சகலத்தையும் பாட்டாலயே நகர்த்திடுவாங்க. அருண்பாரதி சொன்னதுபோல்… ’மொளப்பாரிப் பாட்டு ஒப்பாரிப் பாட்டு
தாலாட்டுப் பாட்டு தாய்மாமன் பாட்டு
இப்படிப் பாட்டுல பல உண்டு

கருதறுத்தாலோ களையெடித்தாலோ
கலப்ப பிடிச்சாலோ காவக் காத்தாலோ
புள்ள பொறந்தாலோ எழவு வுழுந்தாலோ
கட்டக்குரலோ கணீர்க்குரலோ
எல்லாத்துக்கும் பாடுவாக கிராமத்துல
ஒரு வேலையும் நடக்காது பாட்டில்லாம’

வேலைவிட்டு வநது ராத்திரி தூங்கப் போறவரைக்குமான சாயங்காலத்தில் ஒரு கிராமம் இன்னும் அழகானது. ஊரணித் தண்ணியில மரத்துமேல ஏறி விழுறதும். ஊர் ஆலமரத்தடியில ஒக்காந்து இருட்டினாலும் விடாம….. சாப்பிட்டுத் தூங்குற வரைக்கும் பெரியவங்ககிட்ட கதை கேட்கிறதும்…. கதை முடிஞ்சதும் கள்ளன் போலீஸ் விளையாடுறதுமாக… ஊரே நெறைஞ்சிருக்கும். விளையாட்டுல அடிபட்டாலும், வேறதுல நோவுன்னாலும் ஆஸ்பத்திரிக்கி யாரு போனா? எல்லாதுக்கும் கைவைத்தியம் தான். பேறுகாலமே வீட்டுலதான்னு இருக்கும் போது வேறெதுக்கும் ஆஸ்பத்திரி போவாங்களா என்ன? தடுமம்னா வேது பிடிக்கிறதுல இருந்து காலு ஒடிஞ்சா கட்டுப் போடுற வரைக்கும் எல்லாமே கை வைத்தியம் தான். அருண்பாரதி அத்தனை வைத்தியக் குறிப்புகளையும் ஒன்னுவிடாம, இந்தப்புதிய தலைமுறைக்கு இப்படியாகக் கடத்தியிருக்கிறார். ”காய்ச்சலுனு வந்துட்டா
நெத்திப்பத்து போடுவா
தீராத தலவலியா
நொச்சி எல ஆவி பிடிக்க வப்பா
கண்ணுல குச்சியிடிச்சா
காழி நகத்துல இரத்தமெடுத்து
ரெண்டு சொட்டு விடுவா
கண்ணுல தூசிவிழுந்தா
தாய்ப்பால் விட்டுத் தொடச்செடுப்பா
கொழந்தைக்குக் கொடல் விழுந்தா
சாம்பல் தடவி கொடல் தட்டுவா…”
ஆனால் இன்று மருத்துவத்திற்காவே உழைக்க வேண்டியிருக்கிறது. உழைப்பின் பெரும் பகுதியை மருந்தும் மாத்திரையும் தின்றுவிட… எஞ்சியதில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். காலில் காயம் பட்டதும் துத்தி இலை பறித்து எச்சில் தொட்டு வைத்த… ரெண்டு நாளில் காயம் ஆறியதுண்டு. காலில் கண்ணாடிச்சில் குத்திவிட வெள்ளெருக்கு பால் விட்ட மூணாவது நாள்…. ஒரு பொட்டு கண்ணாடித்தூள் இல்லாம, அடிச்சிக்கிட்டு வெளியே வெந்த அனுபவம் இன்னும் மனதில் இருக்கிறது. அந்த மருத்துவக் குறிப்புகள் பயனற்றுப் போய்… மருத்துவப் பாட்டிகளின் கண்களுக்குள் ஒரு கனவாகவே இன்றும் ஒடிக்கொண்டிருக்கிறது இப்போதும் ஊர்தண்ணிக் கிணறு இருக்கிறது… ஊரணி இருக்கிறது… மரம் இருக்கிறது… கதை சொல்லும் தாத்தாக்கள் இருக்கிறார்கள்… நிலா இருக்கிறது. காட்டில் வேலையும் இருக்கிறது. கிராமம் தான் இல்லை. நகரமயமாதல் அதன் ஆணி வேரினை அசைக்கத் தொடங்கிவிட்டதால்…... எல்லாம் இயந்திரமயமான பின்… ஊரணியில் தண்ணி இல்லை, கிணற்றுத் தண்ணீர் கருப்பாகிவிட்டது… தாத்தாக்கள் வெயிலையும் நிழலையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவும் அம்மாவும் வார வேலைக்கும் மாத வேலைக்கும் போய்விட்டார்கள். ஊர் மரத்தில் ரெண்டு நல்ல பாம்பு வாழத் தொடங்கிவிட்டது. பெரு நகரத்தின் நடுவில் இருக்கும் ஒரு அடுக்குமாடிக் கட்டடத்திற்கும் கிரீன் வில்லேஜ் குடியிருப்பு என்று பெயரையும் எடுத்து வந்தாகிவிட்டது. இனியும் கிராமத்தின் அடையாளமாக என்ன இருக்கிறது என்றால்…. நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் என்றாவது ஒருநாள் விடுமுறைக்காகவாவது கிராமத்திற்கு வருவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் கிராமங்களும்…. அதன் நினைவில் இருக்கும் அருண்பாரதியின் கவிதைகளும். அதைப் படித்துக்கொண்டிருக்கும் நானும்.
#படைப்புகாஃபிவித்_கவிதை

நினைவும் நிகழ்வும்
பிப்ரவரி 2019
1k   9   2