Padaippu-TV

   3    0


காஃபி வித் கவிதை...

காஃபியை போன்றே கவிதையும் சுவையானது...

 

அத்தியாயம் -12

 

நமது பனிரெண்டாவது நிகழ்ச்சியில் 

பாவலர்.அறிவுமதி எழுதிய நட்புக் காலம் என்ற நூலைப்பற்றி படைப்பாளி ஆண்டன் பெனியின் பார்வை.

நிகழ்ச்சி தொகுப்பாளர்: செந்தாரப்பட்டி செல்வகுமார்

ஒலிக்கலவை: ஜெயந்த்

நிகழ்ச்சி வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்

****************************

 

என் கனவுகளுக்கு அறிவுமதி என்றும் பெயர். ஏனெனில் நான் என் கனவுகளை அண்ணன் அறிவுமதியின் கண்களின் வழியே காண்கிறேன்.

 

எழுத்தறிவித்தவர்.  எழுதும் என் விரல்களை தன் கைகளுக்குள் பத்திரப்படுத்தி வைத்திருப்பவர்.

 

நடக்கும் பாதங்கள் என்னுடையவை… பாதைகள் அவருடையவை.

 

ஒவ்வொருமுறையும்… என் முட்டைகளை அடைகாத்து… குஞ்சு பொரித்து…. பறக்கும் வரை பக்கத்தில் இருப்பவர்…

 

நண்பனாக… அண்ணனாக… தந்தையாக… தாயாக… மகனாக… என்னாவாக வேண்டுமோ அப்படியே அவரை எடுத்துக் கொள்கிறேன்...

 

அவரின் நட்புக்காலம் கவிதைத் தொகுப்பு ஆண்/பெண் நண்பர்களுக்கான புனித நூல். 

 

ஆண்/பெண் நட்பின் கண்ணியம் காக்கிறது இந்நூல். 

 

இதுவரையிலுமே காட்சிப் பொருளாக இருந்த ஆண்/பெண் நட்பிற்கு சாட்சியமாக இருக்கிறது இத் தொகுப்பு.

 

எதிர்பாலின நட்பினை அடிவானத்தை மீறிய அழகு என்கிறார் அறிவுமதி.

 

அடிவானம் அப்படியென்ன அழகு என்ற ஒரு சிறு கேள்வி உங்கள்முன் நிழலாடுமெனில் எதிர்பாலனித்தோடு நீங்கள் காதலில் இருக்கலாம் நட்பில் இருக்கமுடியாது.

 

கவிதையைக் கேளுங்கள்...

 

அடிவானத்தை மீறிய 

உலகின் அழகு என்பது 

பயங்களற்ற 

இரண்டு மிகச்சிறிய 

இதயங்களின் 

நட்பில் இருக்கிறது

****

 

ஆண்/பெண் நட்பு இந்தச் சமூகத்திற்குச் சாத்தியமில்லை… அதுவொரு மாயை என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கையைத் தகர்க்கும் ஔிக்கீற்றே இந்த நட்புக் காலம் புத்தகம்.

 

ஆண்/பெண் உணர்வுத் தாக்கம் அல்லது உணர்வின் ஈர்ப்பானது... எப்போதுமே காதலாக/ காமமாக இருக்கவேண்டுமென்பதில்லை.

 

நட்பும் அதன் இன்னொரு பக்கமாக இருக்கிறது என்பதைச் சொல்கிறது நட்புக்காலம்.

 

எதிர்பாலினத்தின், காதல் சார்ந்த/ காமம் சார்ந்த ஈர்ப்பு ஏற்படும்போது… தூய மனம் நட்பைக் காக்கும்.

 

எனக்கு மட்டுமே 

என்று குவிகிற 

மையத்தையே 

காம்பாக்கிக் கொண்டு 

 

வெளி வாங்கிப் 

பூக்கிறது நட்பு 

 

…. அந்த நட்பின் பாரம் தாங்காத மனதுடையவர்கள் எதிர்பாலின நட்பிற்குத் தகுதியற்றவர்கள்…

 

மனது… உடல்… புத்தி… யாவும் ஓர்புள்ளியில் கலங்கமற்றுச் சேருமிடத்தில் எதிர்பாலினநட்பு இருக்கிறது… 

 

சிறு இறகு பட்டு… 

காய்ந்து உதிரும் சருகு பட்டு… 

வலிய எறியும் கல்பட்டுக் கலங்கும் நீரினையும்… 

 

நிதானத்திலிருக்கும் நட்பு ‘குட்டு வைத்துக் காப்பாற்றும்’ இப்படி….

 

நீ வயசுக்கு வந்தபோது 

தடுமாறிய என் 

முதல் கூச்சத்திற்குக்

குட்டு வைத்து 

நம் நட்பைக் காப்பாற்றியவள் 

நீ

******

 

எதிர்பாலின நட்பு என்பது சூரிய உதயத்துக்கும்… சூரிய அஸ்தமனத்திற்கும் இடைப்பட்ட வெளிச்ச நேரங்களில் மட்டும் கொஞ்சமே கொஞ்சமாக இருக்கிறது.

 

இரவு என்பது எதிர்பாலின நட்பிற்கு முற்றிலும் தடைசெய்யப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது. 

 

அண்ணன் தங்கை நடந்து செல்லும் பாதையினைக்கூட…. முதலில் காதலால் நிரப்பி…  பின் சற்றே புத்தி தெளியும் படியாக நாம் வளர்க்கப்பட்டுள்ளோம்…

 

அவ்வாறு வளர்க்கப்பட்டவர்களையும்

நட்பின் புனிதம் கொண்டு வார்த்தெடுக்கிறது அண்ணன் அறிவுமதியின் கவிதைகள்  

 

எனினும் எதிர்பாலின நட்பானது இன்னும் குற்றவாளிக் கூண்டிலிருந்து இறங்கிவிடவில்லை…

 

அது தன்னை நிரூபிக்கத் தீயிலிறங்க முற்பட்டுத்… தீயிலேயே வாழும்படியாகிவிட்டது.

 

அண்ணன் அறிவுமதியின் இந்தக் கவிதை எழுப்பும் பேரலை இன்னும் அடங்கிவிடவில்லை…

 

சமூகக் கண்களின் குறைபாடுகளுக்குத் தொடர்ந்து வைத்தியம் பார்த்துக்கொண்டே இருக்கிறது அண்ணனின் கவிதைகள்…. இவ்வாறாக...

 

கடற்கரையின் 

முகம் தெரியாத இரவில் 

பேசிக் கொண்டிருந்த நம்மை 

நண்பர்களாகவே 

உணரும் பாக்கியம் 

எத்தனைக் கண்களுக்கு 

வாய்த்திருக்கும்.

******

 

துணிக்கடையில் புடவை எடுக்கும் மனநிலையிலேயே இருக்கிறோம் எதிர்பாலின நட்பில்…

 

தனக்காகக் குவிந்துகிடக்கும் துணியில் கவனம் செலுத்துவதைவிடவும்… அருகில் இருப்பவரின் தேர்விலேயே கவனம் செலுத்துவது போல்… 

 

தன் கனவன்/மனைவியிடம் சிறு அன்புக்கும் நேரமில்லை என்று சொல்லும் நாமே…  அவர்களின் எதிர்பாலின நட்பினைத் துரத்துவதிலேயே.. நம் வாழும் காலத்தினை முடித்துவிடுகிறோம்.

 

திருமணம் என்பது இருபாலின நட்பிற்கு சாவுமணி அடிப்பதாகவே இருக்கிறது.

 

ஆனாலும் தன் இரண்டுகைகளால் எதிர்பாலின நட்பினைத் தாங்கிப்படிக்கிறார் அண்னன்.

 

என் துணைவியும் 

உன் கணவரும் கேட்கும்படி 

நம் பழைய மடல்களையெல்லாம் 

படித்துப் பார்க்க 

ஒரு மழை 

தொடங்கும் 

நாள் வேண்டும்

 

என்கிற அறிவுமதியின் மழைத்தாகம் எனக்கும் இருக்கிறது. 

 

அந்த மழை தூரத்து மேகங்களுக்கானது

அது பூமி தொடும்போது மனது நிறையும்படியாக இருக்கும்.

 

எனினும் மழைக்கான எந்த அறிகுறியுமின்றி வானம் நிர்மூலமாக இருக்கிறது… நட்பினைப்போலவே.

***

 

அந்த நீண்ட பயணத்தில் 

என் தோளில் நீயும் 

உன் மடியில் நானும் 

மாறி மாறித் 

தூங்கிக் கொண்டு வந்தோம் 

தூங்கு என்று மனசு சொன்னதும் 

உடம்பும் தூங்கிவிடுகிற சுகம் நட்புக்குத்தானே 

வாய்த்திருக்கிறது

 

என்கிற நட்பின் ஆன்மாவைப்பற்றிச் சொல்லும் அறிவுமதியின் இந்தக் கவிதை எதிர்பாலின நட்பின் மொழியாகவே இருக்கிறது…

 

இந்த மொழியினை சிறுபிள்ளை போல் வாய்விட்டு வாசித்திருக்கிறேன்..

 

இன்னொரு கவிதையில் இப்படிச் சொல்கிறார்...

 

நீ என்னிடம் 

பேசியதை விட 

எனக்காகப் பேசியதில்தான் 

உணர்ந்தேன் 

நமக்கான நட்பை என்று.

 

நட்பின் இயல்பு அப்படி… தனக்கென எதனையும் எதிர்பாராமல் கொடுத்துக் கொண்டே இருக்கும்… 

 

தோழி லாவண்யாவிடம் எதிர்பாலின நட்பின் தூயத்துவம் பற்றிக் கற்றறிந்த நாட்களில்… 

 

என்னை அந்த நட்புக்குள் விரல்பிடித்து அழைத்துச் சென்றது நட்புக்காலம்

 

அவள் நட்பினைத் திகட்டத் திகட்டத் தரும்போதெல்லாம் என்னைத் தோள் சாய்த்துக் கொண்டது நட்புக்காலம்

 

நீ நிரூபித்த 

பெண்மையிலிருந்து 

வாய்த்தது 

நான் மதிக்கும் ஆண்மை

 

என்ற உண்மையைப் புரியவைத்தது நட்புக்காலம்.

 

நட்பு எது காதல் எது என்ற மைய்ய மனநிலையைத் தெளிய வைத்ததும் இதுவே...

 

கல்லூரி விடுமுறையில் 

ஊருக்குப் போக 

மூவருமாய் புறப்பட்டோம் 

 

வழியிலேயே 

விடை பெற்றுக் 

கொண்டான் காதலன் 

வீடு வரை வந்து 

விடை பெற்றுக் கொண்டாய் 

நீ

 

என்ற கவிதை தான் நட்பின் ஆழத்திலிருக்கும் கலங்காத நீரினைப் பருக வைத்தது.

 

நேரம் ஆகிவிட்டது 

எழுந்து போங்கள் என்று 

சொல்கிற பூங்காக்கள் உள்ளவரை வாழ்க்கை அநாகரிகமானதுதான்

 

என்ற உண்மையினை எனக்கும்… இந்தச் சமூகத்திற்கும் சொல்லிக்கொடுத்ததும் அண்ணன் அறிவுமதியில் நட்புக்காலம் கவிதைகள் தான்.

****

 

இந்த ஒற்றைக் கவிதை போதும் நட்பின் இலக்கணம் சொல்ல. 

 

யாவற்றிலும் ஒத்த மனநிலையில் இருப்பவர்கள் மட்டுமே நட்பிலிருக்க முடியும் என்ற மாயபிம்பத்தை உடைத்தெறியும் கவிதை இது.

 

அந்த விளையாட்டுப் 

போட்டியைப் பார்க்க 

நாம் ஒன்றாகச் சென்றோம் 

ரசிக்கையில் இரண்டானோம் 

திரும்பினோம் 

மறுபடியும் 

ஒன்றாகவே

****

 

நான் பாடப்புத்தகத்தைவிடவும் அண்ணன் அறிவுமதியின் கவிதைப் புத்தகத்தை அதிகமாகப் படித்தவன்…

 

தன் கவிதைகளால் பொது நட்பினையும் எதிர்பாலின நட்பினையும் கொண்டாடியவர் அவர்.

 

அவரின் வாதமெல்லாம்… நட்பில் வரப்புகள் வேண்டாம் என்பதே….

 

பொது நட்பு… இருபாலின நட்பு… எதிர்பாலின நட்பு என்ற பாகுபாடில்லாமல் நட்பினைக் கொண்டாடச் சொல்கிறது அவரது கவிதைகள்….

 

தாய்ப்பாலுக்கான விதை 

காதலில் இருக்கிறது 

தாய்மைக்கான விதை 

நட்பில் இருக்கிறது

 

என்கிற அண்ணன் அறிவுமதியின் கவிதைகளோடு வாருங்கள் நட்பில் வாழ்வோம்.

 

….ஆண்டன் பெனி.

01.05.2019

நினைவும் நிகழ்வும்
பிப்ரவரி 2019
1k   9   2