Padaippu-TV

   7    2


am mubarakbarak:

arumai...

am mubarakbarak:

arumai...

காஃபி வித் கவிதை...

காஃபியை போன்றே கவிதையும் சுவையானது...

 

அத்தியாயம் -10

 

நமது பத்தாவது நிகழ்ச்சியில் 

கவிஞர்.ஜின்னா அஸ்மி எழுதிய "கடவுள் மறந்த கடவுச்சொல்" என்ற நூலைப்பற்றி படைப்பாளி ஆண்டன் பெனியின் பார்வை.

நிகழ்ச்சி தொகுப்பாளர்: செந்தாரப்பட்டி செல்வகுமார்

ஒலிக்கலவை: ஜெயந்த்

நிகழ்ச்சி வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்

****************************

 

அல்லாமா இக்பால் இறைவனிடம் இப்படி பேசுகிறான் 

 

“நான் உன்னைத் தேடிக் கொண்டே இருப்பேனாக… நீ எனக்கு கிடைக்காமலே இருப்பாயாக”

 

எனக்குக் காதலும் அப்படியே… நான் காதலைத் தேடிக்கொண்டே இருந்தேன்… அது எனக்கு கிடைக்காமலே இருந்தது… 

 

கிடைக்காத காதலானது... நிறையத் தேட வைத்தது…. நிறைய நினைக்க வைத்தது. 

 

அதனாலேயே காதலின் அனைத்து ஊற்றுகளும் என்னை நோக்கிப் பாய்ந்தன. 

 

காதல் என் தாகம் தீர்க்கவில்லை. எனினும் அதன் சாரலில் இன்னும் நனைந்து கொண்டே இருக்கிறேன்.

 

சாரலில் மட்டுமே நனைந்து கொண்டிருந்த என்னை… காதலின் பெருமழையில் நனைத்திருக்கிறது… ஜின்னா அஸ்மியின் “கடவுள் மறந்த கடவுச்சொல்” கஸல் கவிதைத் தொகுப்பு.

 

கடவுளுடன் பேசுதல் அல்லது காதலியுடன் பேசுதல் என்பதே “கஸல்” எனச் சொன்னாலும்.. கவிதையுடன் பேசுதலே ஜின்னாவுக்கு கஸல் என்றாகிவிட்டது… 

 

கவிக்கோ… ஈரோடு தமிழன்பன் வரிசையில் இக்காலக்கட்டத்தில் கஸல் என்னும் மாடவிளக்கை தூக்கித்திரியும் ஒரே இளைஞன் ஜின்னா.

 

காதலின் நெருங்கிய நிறம் கஸல். 

 

காதலுக்கான வண்ணத்தினை... கஸல்கள் மூலம் கவிதையில் சேர்க்கிறார் கவிஞர்.

 

கஸலை உச்சரிக்கும் போதெல்லாம் ஜின்னாவின் உதடுகளும் காதலின் சுவை அறிகின்றன.

 

19வது வயதில் ஜின்னா எழுதி… கவிக்கோவின் கவனம் ஈர்த்த கஸல் ஒன்றிலிருந்து தொடங்குவோம் நம் பயணத்தினை….

 

“நான் வேதமும் ஓதவில்லை சாத்தானையும் அழைக்கவில்லை அதற்குப் பதில் காதலிக்கிறேன்” 

**********

 

காதலிப்பதைவிடவும்… காதலை நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். 

 

காதல் கிடைக்காதவர்கள் காதலைத் தேடித் தவிக்கிறார்கள்… காதல் கிடைத்தவர்கள் காதலைப் புரியத் தவிக்கிறார்கள்.

 

எங்கிருந்து தொடங்குவேன் இந்தக் காதலை… எங்கு கொண்டு சேர்ப்பேன் இந்தக் காதலை?

 

ஒரே ஒரு துளிக் காதலை உள்ளங்கையில் தாங்கி…. அதுவும் ரேகைகளின் வழியே வழிந்துவிடாதபடித் தூக்கித் திரிகிறவனுக்கு மட்டுமே தெரியும் காதலின் உயிர் இருக்குமிடம்.

 

அது ஜின்னாவுக்கும் தெரியும்.

 

கஸலில் கடவுளைத் தேடுவதுபோல் பாசாங்கு செய்து… காதலைத் தேடுகிறார். 

 

அவரின் கவிதைகளில் காதல் நிறைகிறது…நிறைய நிறைய... அதில் கடவுளின் பிம்பம் தெரிகிறது.

 

ஒரே கவிதையில் மழைக்காற்றின் வாசமும்… மழையின் சிலிர்ப்பும்… மழை ஓய்ந்த தவிப்பும் தெரிகிறது.

 

ஜின்னாவின் கவிதைகள் முக்காலத்தின் உணர்வுகளையும் ஒருசேரக் கொண்டிருப்பவை...

 

காதலின் உணர்வுகளில் இப்படி கூடி முயங்கிக்கிடக்கிறான்...

 

“உன்னை 

நேரில் பார்ப்பது சுகம் 

நினைத்துப் பார்ப்பது 

அதை விட சுகம்”

 

அப்படியே அங்கிருந்து புறப்பட்டு… தான் புதையப்போகும் ஆறடி நிலத்தினைப் பார்வையிடுகிறார்.

 

அவரவர் புதைபடும் நீள அகலத்திற்கு கிடைத்துவிடுகிறது ஒரு கன்னக்குழி…

அல்லது கண்களின் குழி.

 

விழுவதும்… பின் எழுவதும்.. காதலின் வரம்.

 

ஜின்னாவின கவிதையைக் கேளுங்கள்...

 

“உனது கன்னக்குழியில் 

எனக்கான ஆறடி 

அப்படியே தெரிகிறது”

*******

 

காதலியைவிடவும் நிறையக் கேள்விகளைக் கொண்டிருக்கிறது காதல். 

 

எத்தனை கேள்விகள்…? எத்தனை வகையான கேள்விகள்? எனச் சொல்வதற்கில்லை.

 

முருங்கை மர வேதாளமே காதல்… 

 

அது நிறைய கேள்விகளுடனும்… நாம் சொற்பப் பதில்களுடனும் வனாந்திரமெங்கும் அலைந்து திரிகிறோம்...

 

தனது கவிதைப் புத்தகம் முழுவதும் காதலின் பெரும்பாண்மையான வேதாளக் கேள்விகளை விதைத்து வைத்திருக்கிறார்.

 

நீங்கள் அதற்கான விடைகளைக் கண்டறிந்தால் காதலுக்குள் எளிதாகப் பயணிக்கலாம்.

 

காதலின் கேள்விகள் இதோ வரிசைகட்டி நிற்கின்றன..

 

“இல்லை என்பதற்குள் நிறைந்திருக்கிறாய் நீ 

இப்போது உண்டு என்பதா 

இல்லை என்பதா? 

 

“உண்டு என்பதற்குள் 

மறைந்து இருக்கிறாய் நீ 

இப்போது இல்லை என்பதா 

உண்டு என்பதா?” 

 

“தவறு செய்ய முடியாத சரி நீ 

சரி செய்ய முடியாத தவறு நான் 

இதில் யார் சரி? யார் தவறு?”

****

 

காதல் நாள்பட்ட திராட்சை ரசம்…. 

காலங்களில் புதைக்கப்பட்டிருக்கும் ஒயின் வகை மது…. 

 

அதன் சுவை காலநீட்டிப்பில் கூடுகிறது.

 

புதைத்த இடம் மட்டும் நினைவில் இருக்க வேண்டியது அவசியம்.

 

எனக்குள் புதைந்து கிடந்த காதலைக் கொண்டு... என் மதுக்கோப்பையை இப்போது நிறையச் செய்கிறது ஜின்னாவின் கஸல் கவிதைகள்...

 

காலங்கடந்த பின்னும் காதலியற்ற காதலில் இன்புறத் தூண்டுகிறது...

 

உங்களின் மதுக் கோப்பையினை நீட்டுங்கள்…. ஜின்னாவின் கஸல் கவிதைகள் மூலம் மதுரசம் ஊற்றுகிறேன்… 

 

இதோ முதல் துளி மது… துளித் துளியாகத் தொடங்குவோம்...

 

“தேடுவதற்கு நானே புறப்படுகிறேன் அதற்கு முன் எப்படியாவது என்னைத் தொலைத்து விட வேண்டும்”

 

இரண்டாவது மதுத்துளி இப்படியாக இருக்கிறது…

 

“உன்னிடம் தோற்றுப் போக 

நான் போருக்கு வரவில்லை காதலுக்காக 

வந்திருக்கிறேன்”

 

இப்படியாகத் தொடரும் துளிகளை…

இப்படியாக நாமே வலிய முடித்துக் கொள்ளலாம்… 

 

“தன்னையே தாழிட்டு கொள்ளும் 

ஒரு கதவைப்போல் இருக்கிறேன் 

என்னைத் திறப்பதும் நீயே 

முடுவதும் நீயே”

*****

 

காதலின் பாலபாடத்திலிருந்து தொடங்கி… காதலிக்க விரும்பும்… காதலித்துக் கொண்டிருக்கும் யாவருக்கும் வழித்துணையாக இருக்கிறது ஜின்னாவின் இக் கவிதைத் தொகுப்பு.

 

ஒரு காதலன் காதலி அருகிலிருந்து செய்யவேண்டிய அத்தனை சிறு சிறு பாசாங்கினையும்… ஆறுதலையும்… தேறுதலையும் தருகிறது இதிலிருக்கும் கவிதைகள்.

 

“நீ ஒரு அதிசயமான பொய் அது எப்போதும் உண்மையாகவே இருக்கிறது”

 

“உன்னிடம் தோற்றுப் போகவே துடிக்கிறேன் 

உன்னை விட வெற்றி பெரிதல்ல”

 

இக் கவிதைகளின் துணைகொண்டு உங்களின் காதலியைத் தேடத் தொடங்குங்கள்…

 

உங்களின் காதலனைத் தேடத் தொடங்குங்கள்….

 

யாவரும் கண்டடைவீர்கள்…

 

ஜின்னாவில் கஸல்கள் எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்….

 

இந்த கவிதைகளைப் போலவே...

 

“எப்போதும் 

எனக்கு ஆறுதலாகவே இருக்கிறாய் 

என் கண்ணீரைப் போல”

 

“எனக்குள் 

முட்களாக இருக்கிறாய் 

இருப்பினும் 

உன்னாலேயே 

காலம் கடத்துகிறேன் 

ஒரு கடிகாரமாக”

 

கடவுள் முன்பாக வைக்கப்படும் வேண்டுதல்கள் போலவே இருக்கின்றன… காதலுக்கான வேண்டுதல்களும்… ஜின்னாவின் கவிதைகளில்...

 

****

 

“நீ விட்டு சென்ற வீதிகள் 

வழி தவறி விட்டன”

 

என்ற கவிதையில் வீதிகள் மட்டுமல்ல… நாமும் வழிதவறிப் போய்விடுகிறோம்.

 

பூக்கள் அதன் காம்பிலேயே கருகிப் போவதை எந்தச் செடியும் விரும்புவதில்லை…

 

உங்களின் காதலென்ற பூவையும் உங்களுக்குள்ளயே காய்ந்து போக விட்டுவிடாதீர்கள்… என்றே வேண்டிக்கொள்கிறது ஜின்னாவின் “கடவுள் மறந்த கடவுச்சொல்” கவிதைத் தொகுப்பும்.

நினைவும் நிகழ்வும்
பிப்ரவரி 2019
1k   9   2