Padaippu-TV

   6    5


பெண்ணியம்செல்வக்குமாரி:

குரல் பதிவு அழகு செறிவு அருமை

SureshBabu:

அருமையான முயற்சி..முதலில் படைப்பு குழுமத்திற்கு பாராட்டுகளும், நன்றிகளும்கவிஞர் பழனிபாரதி அவர்களின் வரித் தூரலில் நனைந்து மீள்கிறது.. ஆண்டன் பெனி அவர்களின் பார்வை..!!அத்தூரலை சற்றே மிதமாய்த் தூர செய்த நண்பர் செல்வகுமார் அவர்களின் குரல் வளம் அபாரம்!!

படைப்புகுழுமம்:

காஃபி வித் கவிதை - காஃபியை போன்றே கவிதையும் சுவையானது

IbrahimShareef:

அற்புதமான முயற்சி . . . வாழ்த்துக்கள் . . .

படைப்புகுழுமம்:

முதல் நிகழ்ச்சியே முழுமையான மகிவை தந்தது...இதற்காக உழைத்த அனைவருக்கும் அன்பின் நன்றிகள்

காஃபி வித் கவிதை...
காஃபியை போன்றே கவிதையும் சுவையானது...


நிகழ்ச்சி : 1
நமது முதல் நிகழ்ச்சியில் கவிஞர் பாடலாசிரியர் பழநிபாரதி அவர்கள் எழுதிய "ஒளி உன்னால் அறியப்படுகிறது... " என்ற நூலைப்பற்றி படைப்பாளி ஆண்டன் பெனியின் பார்வை.


நிகழ்ச்சி தொகுப்பாளர்: செல்வகுமார்
நிகழ்ச்சி வடிவமைப்பு & தயாரிப்பு: படைப்பு குழுமம்.


*****
வெறும் காற்று தான்
உன்னைத் தொட்டுத்
தென்றலானது ...


என்பது நான் அறிந்த முதல் கவிதை. எழுதிய அறிவுமதி என் முதல் கவிஞன்.
தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் பூத்திருக்கும்
ஒற்றைப் பூ என் காதல்
நீ நடந்து வருகிறாயா
இரயிலில் வருகிறாயா?

என்பது நான் அறிந்த இரண்டாவது கவிதை. எழுதிய பழநிபாரதி என் இரண்டாவது கவிஞன். அங்கிருந்து தொடங்குகிறது என் பின்னோக்கிய பயணமானது பாரதியை நோக்கியும், முன்னோக்கிய பயணமானது, எனக்காகவும் காதலித்துக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவரின் கவிதைகள் நோக்கியும்.

நானும் காதலிக்க விரும்புகிறேன். இந்தப் பூமியின் சகலத்தையும் காதலிக்க விரும்புகிறேன். நான் தேடிக்கொண்டிருக்கும் காதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே என்று எட்டையபுரத்தான் சொன்னதை அறிந்ததும், காதலைத் தேடத் தொடங்கியிருந்தேன். பாலகுமாரனின் ”யாதுமாகி நின்றாய் காளி நீ” என ஒருத்தியும் தென்படவேயில்லை. காதலை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறேன். காதலை என்னால் கொண்டாடித் தீர்க்கமுடியும். அதற்குத் திகட்டத் திகட்ட, என்னைத் திண்ணக் கொடுக்கவும் தெரியும். ஆனாலும் காதல் இன்னும் என் கண்களுக்கு எட்டவில்லை. காதலைத் தாங்கிக்கொள்ளும் தகுதியுடைய என் உள்ளங்கை ரேகைகள் இன்னும் தனித்தே இருக்கின்றன. விரல்கள் தொடு உணர்வின் பெரும் தாகத்தில் இருக்கின்றன. என் நகக் கண்கள் ஒன்றினுள்ளே யார் ஒருத்தி வாழப் போகிறாள்? என் மனது என்னைச் சுற்றியிருக்கும் காதலின் மழைவாசனையை உணருகிறது... ஆனாலும் ஒரு போதும் மழையில் நனைந்ததில்லை. என் காதல் மழைஆசையில் தன் ஈரத்தினைத் தூவிச் செல்கிறது, பழநிபாரதியின் ஒளி உன்னால் அறியப்படுகிறது கவிதைத் தொகுப்பு. காதலுக்கு தன்னைத்தானே நேந்துவிட்டுக்கொண்டவரின் வரிகளில் நனைகிறேன். அவரின் தொகுப்பு பெண்ணுருவம் கொள்கிறது. அது கொண்டிருக்கும் வரிகள் அந்தப் பெண்ணின் மனதாகவும் உடலாகவும் உடையாகவும் இன்ன பிறவாகவும் மாறிக்கொள்கின்றன. மழை வாசனையில் தொடங்கி முன் சாரலில் சிலிர்த்து பெருமழையில் நனைந்து வலுவிழந்த பின்சாரலில் மனதையும், உடலையும் இணைக்கும் ஒரு புள்ளியில் அவள் ஒரு கவிதையை எழுத்துக்கூட்டிப் படிக்கிறாள். தயங்கிய ஓர் இடத்தில் பழநிபாரதி இப்படித்தானே சொல்ல முடியும்... இந்தக் கவிதையில்
தண்ணீர்பட்டு அழிந்திருக்கும்
சில வரிகளை
இனி
நீ மட்டும் தான் வாசிக்க முடியும்


காதல் ஒரு மாயப் பிசாசு. யார் ஒருத்தியை/ஒருத்தனை காதலில் வாழவிட வேண்டும் என்ற ரகசியத்தை அது தன் கூட்டிற்குள்... பதுக்கி வைத்திருக்கிறது. அதன் இயல்பு ஒரு கோடாங்கிகாரனைப் போன்றது. எல்லோரும் கோடங்கிச் சத்தத்திற்கு ஆடிவிடமுடியாது. அது யாரை ஆட்டுவிக்கிறதோ அவரே ஆட வேண்டும்.
காதலைத் துரத்திப் பிடித்துவிட ஒடியிருக்கின்றீர்களா? எத்தனை காலம்? எத்தனை தூரம்? அதனிடம் பேசமுடிந்ததா? அது ஒரு மௌனத் துறவி. கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டிருக்கும், எப்போது வாய்திறக்கும், எப்போது கண்களைத் திறக்கும் என்பதை யாரும் யூகிக்க முடியாது. ஆனாலும் அது நம் கதவினைத் தட்டும்போது திறக்கத் தயாராகியிருக்க வேண்டும். வெற்றிடத்தைக் காற்று மட்டுமல்ல காதலும் நிரப்பும். கவிஞரின் கவிதையும் காதலின் வெற்றிடத்தை இப்படியாக நிரப்புகிறது...
யாரோ இருப்பது
போலவே இருக்கிறது
யாரும் இல்லாத இடம்

அந்த இடத்தை மனதால் நிரப்பு வேண்டும். காதலால் நிறைந்த மனதால் நிரப்பு வேண்டும். காதலால் நிறைகிறவன் இருப்பதிலும் இல்லாதிருப்பதிலும் வாழத் தெரிந்தவனாகிறான். கடும் வெய்யிலிலும் குளிர்வான். சாரல் என்பது மழையால் மட்டுமல்ல மழையிலும் வரலாம்... மழையற்ற நாட்களில் காதலாலும் வரலாம்,

காதலற்றவன் கண்களுக்கு மழை பெரும் சாபம். வலியின் உச்சம். நனைந்த தேகத்திற்கு மழை நீரைத் துப்பட்டாவிலும் தேக்கி, இன்னொரு மழையால் நனையும் சுகம் ஒவ்வொருவருக்கும் வாய்க்க வேண்டும். மழையாக நனைத்து நனைந்து மேலெழும் போது பழநிபாரதி சொல்வது போல்…

வானத்தை மூடுவதாக நினைக்கும்
மேகங்களின் வெகுளித்தனம்
உன் ஆடைகள்


என்று காதுமடல்களுக்கு பின் நின்று கிசுகிசுக்க வேண்டும். அப்போது ஒரு மழை இன்னொரு மழை தரவேண்டும் அது அப்படியே பல்கிப் பெருகி இவ் வையத்தை காதலால் வாழ்விக்க வேண்டும்.

காதல் மனது சதா ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்க, ஏங்கும் ஒவ்வொரு உடலுக்கும் ஊஞ்சல் கட்ட வேண்டும். மேலேறி இறங்கும் போது உள்ளுக்குள் பாயும் மின்சாரம் காதல் அணுக்களைத் தூண்டித் தூண்டி சாகாவரம் கொடுக்க வேண்டும். நீ காதலித்திருக்கலாம், காதலித்துக் கொண்டிருக்கலாம். காதலின் போது குறைந்தபட்சம் ஊஞ்சலாடியிருக்கிறாயா? காதலியை/காதலனை ஊஞ்சலில் இருத்திக் காற்றோடு மிதக்கவிட்டிருக்கிறாயா? ஊஞ்சல் ஆடாதவர்களை, ஊஞ்சல் பார்க்காதவர்களை நான் காதலர்கள் என்று எப்படிச் சொல்ல?

காற்றில் ஆடும்
ஊஞ்சலில் தான்
காற்றும் ஆடுகிறது

என்று கவிஞர் உஞ்சல் கட்டுகிறார், அவளும் ஆடுகிறாள். அப்போது கயிற்றினை அசைத்து அசைத்து கைகளால் தாலாட்ட வேண்டும். சற்றே கைகளாலும் சற்றே முத்தங்களாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். முத்தங்களை முழுமையாகப் பயன்படுத்தாததில் முத்தங்களுக்கே நிறைய வருத்தம். எழுதுவதிலும் உணர்வுக்குப் பதில் நிறைய எச்சிலே தெறிப்பதால் முத்தங்கள் முடங்கிப்போய்க் கிடக்கின்றன. பழநிபாரதி முத்தங்களை எழுதுவதில் உணர்வுக்கு நெருக்கமானவர். அதனால் முத்தங்களின் சகல பாவணைகளையும் எழுதும் வரத்தை முத்தங்களே அவருக்கு வழங்கியிருக்கின்றன.

முத்தங்களின் மொழி
முத்தமாகவே இருப்பதுதான்
அதன் துயரம்

என்கிறார். இது துயரமல்ல. சலிப்புமல்ல. அந்தத் துயரத்தினை, முத்தங்களின் மொழியினை முத்தங்களால் அறிந்துகொள்ளும் அதீத ஈடுபாடாகவே நினைக்க வேண்டும். ஆழ்ந்த முத்த மொழி உறக்கம் தரும். அது ஆன்மாவின் உறக்கம். ஆழ்ந்த முத்தத்திற்குப்பின் உறக்கம் உணர்ந்ததில்லையா? அப்படியெனில் இன்னும் முத்தம் பழகவில்லை என்றே அர்த்தம். அந்த உறக்கம் ஒரு குழந்தையின் உறக்கம் போலும் இருக்கும். கடவுளிடம் பேசும் வல்லமை பெற்றது அது. அந்தக் கடவுளை காதலியென்றும் சொல்லாம் அல்ல. காதலி என்றே சொல்ல வேண்டும். பழநிபாரதியின் மொழியில் சொல்வதென்றால்
உறக்கத்தில்
குழந்தையின் மெல்லிதழ்களை
மலர வைப்பதெதுவோ
அதுவாகவே
நீ என்னை
ஆட்கொண்டிருக்கிறாய்


அவளே ஆட்கொள்ளட்டும். ஒரு குழந்தையாக நிறையட்டும். உறக்கத்தில் மலரும் இதழ்களைப் போல் மலரட்டும். குழந்தையின் மழலையில் பேசட்டும்.

காதலின் அரிச்சுவடி அறியாதவர்களுக்கு பழநிபாரதியின் கவிதைகளே துணை. ஆரம்பப் பள்ளி மாணவனைப் போல் பாவித்து மணலில் ‘அ’ எழுதிக் கற்றுக் கொடுக்கிறது. அதன் பக்கங்களை விரல் கொண்டு நகர்த்த முடியவில்லை. பக்களில் தவழ்ந்துதான் திரிய வேண்டியிருக்கிறது.

அவள் நகர்ந்து போய்விடும் துயரத்தைக்கூட…
போகிறாய் என்பதையே
மறக்கடித்துவிடுகிறது
நீ திரும்பி போகிற அழகு


என்று சொல்கிறார் பழநிபாரதி. இது அழகியலின் உச்சம். காதலைக் கொண்டாடத் தெரிந்த ஒருவரின் உளவியல் பாடம். போகிறாள் என்பதை இப்படிச் சொல்ல முடிகிறதென்றால். அவள் இல்லாதிருக்கும் நேரங்களையும் இவர் அழகாக்கிவிடுகிறார்.

இனி, முத்தங்களின் மொழியினை மட்டுமல்ல, அவளின் மொழியினையும் காதலின் மொழியினையும் பழநிபாரதியின் கவிதைகள் கொண்டே கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதன்பின் காதல் என் வாசல் வரும். தன் சாரலால் நனைக்கும். நான் காதலால் நிறைவேன்.

#படைப்பு_காஃபி_வித்_கவிதை

நினைவும் நிகழ்வும்
பிப்ரவரி 2019
1k   9   2