logo

கவிச்சுடர் விருது


'வரையத் துவங்குகிறேன்
ஒரு சிறகிலிருந்து செம்போத்தை.
ஒரு சருகிலிருந்து விருட்ஷத்தை.
ஒரு துளியிலிருந்து பெருமழையை,நதியை
ஒரு இதழிலிருந்து மலரை
ஒரு கண்ணீர்த் துளியிலிருந்து நேசத்தை.
காலை நடைப் பயிற்சியின் போது'

முடிவு என்பது ஆரம்பத்தின் முதல் புள்ளி என்ற கோட்பாட்டை அழகாக இந்தக் கவிதையின் மூலம் சித்தரித்திருக்கும் கவிஞர் சிவக்குமார் அவர்கள்தான் ஏப்ரல்  மாதத்திற்கான கவிச்சுடர் விருதை நம்மிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்.

ஆழமான சிந்தனைகளுக்கும் அற்புதமான கற்பனைகளுக்கும் வடிவம் தருவதில் கவிஞர் சிவக்குமார் தனித்துவமாக விளங்குகிறார்... 

தமிழ்நாடு அரசுபொதுப் பணித் துறையில் உதவி நில வேதியியலளாராக பணிபுரியும் கவிஞர் வாசிப்பதிலும் புகைப்படங்கள் எடுப்பதிலும் கூட ஆர்வம் கொண்டவர். இவரது கவிதைகள் 'கணையாழி' ,'ஆனந்தவிகடன்' ,'மற்றும் சிற்றிதழ்களிலும் பயணப்பட்டிருக்கிறது. கவிஞர் மேலும் வனப்பயணங்களில் ஆர்வமுள்ள ஒரு பயணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது கவிதைகளைப் பற்றி ஆய்வோம்:

அடுப்பைப் பற்றவைக்கும் தீக்குச்சியில் தொடங்கும் ஒரு தேநீரின் பயணம் நாம் அருந்துவதற்காக அமர்ந்திருக்கும் அதன் காத்திருப்பில் முடிகிறது. இதுவும் கூட ஒரு ஜென் நிலைதான். ஜென் குருக்கள் தன் சீடர்களுக்கு அளிக்கும் பயிற்சியிகளில் முதன்மையாது தேயிலை நீர் தயாரித்தலாகும்..இந்தக் கவிதையும் நம்மை ஜென் நிலைக்கு கடத்துகிறது....

அடுப்பை பற்ற வைக்கிறீர்கள்.
தீக்குச்சியின் சிறு துளியை
தாவிப் பருகிப் பெருகுகிறது நெருப்பு.
கெட்டிலில் நீரை ஊற்றுகிறீர்கள்
குளுமையையிழந்து குமிழ்குமிழ்களாய்
கூச்சவிட்டபடி
கொதிக்கக் தொடங்குகிறது நீர்.
விடுபடத் துடிக்கும் தவிக்கும் நீரினுள்
தேயிலைகளை இடுகிறீர்கள்.
அங்குமிங்கும் அலைபாயும்
தேயிலைகளின் பச்சை நிறம்
மெல்ல மெல்ல
இளம் பழுப்பிலிருந்து
அடர் பழுப்பிற்கு மாறுகிறது
அடுப்பிலிருந்து கீழிறக்கிய கெட்டிலினுள்
விரிந்த இலைகளுடன் கொதிப்புகளடங்கி
அமைதியில் ஆழ்ந்திருக்கிறது
தேநீராக மாறிய நீர்
காத்திருக்கிறது நமக்காக.
வாருங்கள் நண்பர்களே
துளித்துளியாய்
கொஞ்சம்
ஜென் பருகுவோம்

-----

சாமியாடல் என்பது பக்தியின் ஒரு முக்கிய அம்சமாகவே இருந்து வருகிறது.. அதனைப் பற்றி சொல்லும் கவிஞர் தன் அம்மாவிற்கும் சாமி வரும் என்று தொடங்கி முடிக்குமிடத்தில் யாரும் நினைக்காத வகையில் அழகாக முடித்திருப்பார்.. அந்த சாமியின் மேல் இப்போது அம்மா வந்திருப்பதாகக் கூறும் பொருளோடு.. இதோ அந்தக் கவிதை

அம்மாவுக்கு
அபூர்வமாய் .சாமி வரும்.
விஞ்ச் ஸ்டேஷன் அருகிலிருக்கும் மகிஷாசுரமர்த்தினிதான்

என்பார்கள் காம்பவுண்டில்.
உஸ் உஸ்ஸென்று பெருமுச்செறிந்தபடி
அம்மா சொல்லும் வார்த்தைகளை
பயபக்தியோடு கேட்பார்கள்.
உனக்கு அடுத்தது பையன்தான்னு
கமலாக்கா மேல சாமி வந்துதான் சொன்னது
என்று மரகதக்கா அடிக்கடி சொல்வார்கள்.
கற்பூரம் காட்டி சாமி மலையேறியதும்
அத்தனை களைப்பாயிருக்கும் அம்மாவின்
முகத்தில் அபூர்வமானதொரு
களையிருக்கும்.
நேற்று
மகிஷாசுரமர்த்தனி கோவிலுக்கு போயிருந்தேன்.
கணகணவென்று மணியோசையுடன்
தீபாராதனை ஒளியில்
மகிஷாசுரமர்த்தினி மேல்
அம்மா வந்திருந்தது.

----

கார்ட்டூன் சேனலில் இலயித்திருக்கும் பெண் குழந்தை, இரவு சமையலில் பரபரப்பாய் இருக்கும் மனைவி இவர்களுடன் சர்க்கரை நோய்க்கான மாத்திரை போட்டுக்கொண்டு புத்தகம் படிக்கும் தந்தை ... இவர்களிடம் சாலை விபத்தில் இறந்தவனை பற்றிய செய்தியை எப்படி சொல்லுவீர்கள் என்ற கேள்வியை வைக்கிறார் கவிஞர். ஏனென்றால் இவர்கள் உடலளவில் உறுதியில்லாத நிலையில் மனதளவிலும் அவர்களிடம் பாதிப்பைக் கடத்துவது எவ்வளவு பெரிய கொடுமை...

கார்ட்டுன் சேனலில் சிரித்திருக்கும்
பெண் குழந்தையும்,
இரவுச் சமையலில் பரபரப்பாயிருக்கும் மனைவியும்
சர்க்கரை மாத்திரை போட்டுக் கொண்டு
புத்தகம் படிக்கும் அப்பாவும்
இருக்கும் வீட்டில்
நெரிசல் மிகுந்த சாலையில்
சற்றுமுன்
துடித்தடங்கினவனைப் பற்றிச் சொல்ல
அழைப்பு மணியை அழுத்தும் துணிச்சல்
உங்களில் யாருக்கிருக்கிறது.

---

பெருமழையில் நனைந்த வால்காக்கையொன்றைக் காணும் ஒருவனை தன் அருகில் இருந்தும் அதைப்பற்றி எந்தவித கவலையும் கொள்ளாமல், தனது தாய் கொடுத்த எச்சரிக்கையையும் புறம்தள்ளிவிட்டு அமர்ந்து அலகால் உடலை கோதி ஈரம் உலர்த்தும் அழகில் அவன் அதனை ரசிப்பதில் புத்தனாகிவிடுகிறான் என்ற கற்பனை இயலழகு...

பெருமழை பெய்தோய்ந்த விடியலில்
நடைபயணத்தில்
உங்களுக்கு காண வாய்க்கிறது
மிக அருகிலுள்ள கிளையொன்றிலமர்ந்திருக்கும்
பொன்னிற கதிரொளியில் மினுங்கும் பறவையொன்றை.
அதன் பெயர் வால் காக்கையென்பதை
வெகு சமீபத்தில்தான் அறிந்து கொண்டீர்கள்.
அதன் தனிமையில் பெருந்தன்மையாய்
உங்களை அனுமதித்து
சிறகுகளை உலர்த்த ஆரம்பிக்கிறது.
கூரலகால்
முதலில் முன் பின் கழுத்துப் பகுதிகளின் அடர் கருப்பை
மெதுவாக உரசுகிறது.
வெண் பட்டு சரிகையிட்ட
செம்பழுப்பு வண்ண,இடது,வலது இறக்கைகளை
கையை நீட்டி விரிப்பதைப் போல்
அகல விரித்து சுத்தம் செய்கிறது.
உங்கள் இருப்பை உணர்த்தி எச்சரிக்கும்
காகத்தின் குரலை
சில வினாடிகள் கவனித்து,அலட்சியப்படுத்தி
கழுத்தை வளைத்து செம்பழுப்பு நிற பின்னுடலை
வேகமாக உரசுகிறது.
தனுராசனம் செய்யும்
தேர்ந்த யோகாசனப் பயிற்சியாளனென
அனுபவம் முதிர்ந்த பரத நாட்டிய பெண்மணியென
ராயல் சர்க்கஸின் நெகிழுடல் பெண்ணென
முழு உடலையும் வில்லாக வளைத்து
வாலடியை அலகால் கோதும் தருணத்தில்
பார்த்துக் கொண்டிருக்கும் உங்களையும்
அது புத்தனாக்குகிறது.

----

காட்சிகளை பார்த்து வர்ணிக்கும் கவிஞனின் வரிகளுடன் எதையும் பார்க்க இயலாமல் பார்க்காது பாடும் பார்வையிழந்த குருட்டு பிச்சைக்காரனின் பாடலும் இணைந்து இந்தக்கவிதையை அழகாக்குகிறது...

ராக்கால பூஜைக்கான மணியோசை
பழனி மலையிலிருந்து
அதிர்ந்ததிர்ந்து பரவிக் கொண்டிருந்தது.
யானையின் துதிக்கையென,
மலைப் பாம்பொன்றின் உடலென

காங்கிரீட் சாலையில் நீள்கிறது நீர்த்தாரை.
உலோக உண்டியலின் குலுக்கல்களுடன்
நகரும் இசைக்குழுவில்.உடைந்த குரலில்
பார்வையற்றவர் பாடுகிறார்
நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகி என்பேன்
நல்ல அழகி என்பேன்.

----

வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அதன் உரிமையாளர்களின் வாயில் நுழைந்து வெளிவராத வாழ்க்கை வாழ்வதென்பதே பெரு வாழ்க்கை. இந்தக் கவிதையில் மகள் நிவேதிதா சுவற்றில் கிறுக்கி வைத்து விடுகிறாள்.. அம்மாவின் விரட்டலில் பயந்த குழந்தையை சேர்த்தனைத்துக் கொள்ளும், தகப்பன் அதன் மனத்துடிப்பை சம நிலையில் கொண்டுவந்த பிறகு ' என்ன வரைந்திருக்கே புரியவில்லைடா' என்று கேட்டவுடன் அதனழகை அவள் விவரிப்பதில் அவளொரு அற்புதம் என்று புரிந்த களிப்பு அவன் மனதில்...

கொஞ்ச நேரம் அசந்துட்டேன்
எப்படி நாசமாக்கியிருக்கா பாருங்க
வீட்டு ஓனர் பார்த்தா திட்ட மாட்டாரா
சமையலறையிலிருந்து வாசிக்கப்பட்ட
குற்றப் பத்திரிக்கையைக் கேட்டு
கண் கலங்கி நின்றவளை
நெருங்கி அணைத்துக் கொண்டதும்
உடல் நடுங்க மடை திறந்து பாய்ந்தது
கண்ணீர் வெள்ளம்.
ஆதி மனிதனின் குகை ஓவியங்களைப் போன்றும்
நவீன ஓவியத்தைப் போன்றும் தோன்றும்படி
குறுக்கும் நெடுக்குமான கோடுகளால்
நிரம்பியிருந்தது சுவர்.
ஒண்ணுமே புரியலையேடா என்றேன்.
மழை நின்று சட்டென வெயிலடிப்பதைப் போல
அழுகை நின்று சிரிப்பில் குலுங்கியது உனதுடல்.
போப்பா உனக்கு ஒண்ணும் தெரியாது
நான் காட்றேன் பாரு என்றாய்
விரிந்த சிறகுகளை 
தலையை லாவகமாய் வளைத்து
சுத்தம் செய்யும் வாத்தும் அதன் துணைகளும்

குலை தள்ளிய தென்னை மரமும்
பாய்மரங்கள் அசைந்தபடி
ஆழ்கடலில் பயணம் செய்யும் கப்பலும்
சூரியனும் நிலவும் நட்சத்திரங்களும்
ஒரே சமயத்தில்
சுவரிலிருந்து வெளிப்பட்ட அற்புதத்தை நிகழ்த்தி
நிவேதிதா,
ஏதுமறியாதது போல் சிரிக்கிறாய்

----

வனப்பயணங்களில் லயிக்கும் ஒருக்கவிஞனின் கற்பனை இப்படித்தான் விரிய முடியும்...


காற்றில் அழைப்பொலியை அதிர விட்டு
இணையின் பதிலொலிக்கு ஏக்கத்துடன் காத்திருக்கும்
செம்போத்து நான்.
நீண்ட நேரமழைத்தும் இணை வாராத ஏமாற்றத்தில்
காற்றை சிதறடித்துக் குரலெழுப்பிப் பறக்கும்
மீன் கொத்தி நான்.
கிரணங்கள் நுழையா அடர் மரமொன்றில்
துணையுடன் சதா பேசிக் கொண்டிருக்கும்
மைனா நான்.

விரலென நீண்டிருக்கும் கிளையொன்றில்
இணையுடன் பரவசமாய் இணையும் மரங்கொத்தி நான்..
உயர்ந்த மரக்கிளையொன்றில்
இணையின் தோள்களில் கண்  மூடி சாய்ந்திருக்கும்
புள்ளி ஆந்தை நான்.
வலது காலை கிளையில் மோதி மோதி
திறந்திருக்கும் இணையின் செவ்வலகில்
கனியூட்டும் பச்சைக் கிளி நான்.
மர உச்சத்தில்
இணையருகிலிருக்க
ஆரஞ்சு மஞ்சள் வர்ண தொண்டை நாண்கள் அதிர அதிர
பாடிக் கொண்டேயிருக்கும் குக்குறுவான் நான்.
அந்தரத்தில் தலைகீழாய்ச் சுழன்று
இணையமர்ந்திருக்கும் மெல்லிய கிளையசைய
அமரும் கரிச்சான் நான்.
பரபரவென தேடியடைந்த இரை துள்ளும் அலகுடன்
கூடு திரும்பும் கொண்டலாத்தியும் நான்தான்.

---------

நம் வீட்டிற்கும் வரும் ஒருவரை சந்திக்கும் முன் இருக்கும் நாம் அவரை சந்திக்கும்போது இருப்பதில்லை என்பதை இந்தக் கவிதையில் அழகாகச் சொல்லியுள்ளார் கவிஞர்...


முன்னறிவிப்பின்றி
நீங்கள் வருவதாக அறிந்த
ஐந்து நிமிடங்களுக்குள் ஒழுங்குபடுத்தப்பட்ட
நீங்கள் அமர்ந்திருக்கும் வரவேற்பறை மட்டுமல்ல
அத்தனை குப்பைகளும் அடைக்கப்பட்டு
நீங்கள் காண முடியாதபடி
தாளிடப்பட்டிருக்கும் படுக்கையறையும்
சேர்ந்ததுதான் என் வீடு.
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை
நாகரிகமாகவும்,இதமாகவும்
இப்போது உங்களோடு
அந்த வரவேற்பறையில் அமர்ந்து
பேசிக் கொண்டிருக்கும்
சிவக்குமார் மட்டுமல்ல நான்.

-------

குறுங்கவிதைகள் எழுதுவதிலும் கவிஞர் தன் நேர்த்தியை அழகாக செதுக்குகிறார்...

இதோ சில குறுங்கவிதைகள்:

நள்ளிரவின் நல்இருளில்
விழித்திருந்தோம்
கடிகார முட்களென.

***
கடந்து செல்பவர்களின் கருணைக்கு
சாலையில் காத்திருக்கிறார்கள்
ஓவியனும்,கரிக் கோடுகளாலான கடவுளும்.

***
நெருங்கி வரும் மீன்கள்
அறிவதில்லை
தூண்டில் புழுக்களின் மொழியை

***
எத்தனை புல்லாங்குழல்களை
இழுத்து உடைத்து
சுவைத்துச் சிதைத்து
மிதித்து நடக்கிறது யானை

***
சாலையோரம் ஈரத்தில் ஊறிக் கிடக்கும்
வெதுவெதுப்பான
இளம் பசும் பிண்டத்தில் மறைந்திருக்கிறது
வனமதிருமொரு பெரும் பிளிறல்.

***
குளிருட்டப்பட்ட பெட்டியில் மாலையுடன்
அம்மா பேரமைதியுடன் படுத்திருக்க
ஒளி ஊடுருவும் ஸ்கேல் வழியாக பார்த்துச் சிரித்தபடி
விளையாடிக் கொண்டிருக்கிறது குழந்தை.
பார்த்து நடுங்கிய என் தோள்களில் சாய்ந்து
தேம்பிக் கொண்டிருக்கிறது
மரணம்.

***
விடுபடத் தவிக்கிறது
எவரெவர் விரல்களாலோ
உருட்டி விளையாடும்படி விதிக்கப்பட்ட
யாழி வாய் உருண்டைக் கல்
பறவைகளின் இன்னொலியும்

***

கவிஞரின் மேலும் சில கவிதைகள் :

வாகனத்தை ஓரமாய் நிறுத்தி விட்டு
பதட்டத்துடன் என்னைப் போலவே
அதைக் கையிலெடுக்கிறீர்கள்.
இரண்டாவது வீட்டின் வளர்ப்புப் பூனை
கருப்பும் வெள்ளையும் பிணைந்த
தன் வலது முன்னங்காலால்
அதை தள்ளி விட்டு

மீசைகளுரசும் முகத்தால் புரட்டியதை
நல்லவேளையாக
என்னைப் போல
நீங்கள் பார்த்துப் பதைக்கவில்லை.
கீச்கீச்கீச் என பரபரத்தபடி
கண் விழிக்காத,சிறகுகள் முளைக்காத
தோலுடலுடன் குஞ்சுகளேதும்
அதற்குள் இல்லை
உடைந்த முட்டைகளின் ஈரத்தாலும்
அது நனைந்திருக்கவில்லை.
என்பதை அறிந்ததும்
என்னைப் போலவே ஆசுவாசமடைகிறீர்கள்.
பிரிபிரியாய்த் தொங்கும் பறவைக் கூட்டினை
சாலையோரமாக இறக்கி விட்டு
புன்னகையுடன் வண்டியை உயிர்ப்பிக்கும்
உங்களருகில் வருகிறேன்.
அவசரமேதுமில்லையே
ஒரு தேநீர் அருந்திச் செல்லலாமா?

----
கூரிய முட்கள் நிறைந்த சாட்டைகளைச் 
சுழற்றியபடி வரும் 
இறுகிப் போன உங்களைப் போலில்லை 
அன்றலர்ந்த மலர்களோடு வரும் 
நெகிழ்வான அவன்.
சர்வாலங்கார பூஷிதைகளாக இருக்கும் 

உங்களைப் போலில்லை 
அலங்காரங்களற்ற 
எளிமையான அவன்.
நானறியக் கூடாதென 
நீங்கள் மறைத்த அற்புதங்களின் மீது 
ஒளியைப் பாய்ச்சியவன் அவன்.
மனதெங்கும் பல்லாயிரம் ஆசைகள் 
விரிந்து பரவுகையில்
உங்களைப் போல்
அவனென்னை
தீராத குற்றவுணர்வில் தள்ளுவதில்லை
ஆயிரக்கணக்கில் இருக்கும் உங்களை 
தனியொருவனாக சமாளிக்கும் 
அவனின் சாகசம் 
என்னை எப்போதும் வசீகரித்தபடியே இருக்கிறது
தெய்வங்களென அழைக்கப்படும் 
நீங்கள் சொல்கிறீர்கள் 
அவனை சாத்தானென்று

----
உன்மத்த பித்தேறி,
பெருஞ்செல்வத்தை,தன்மானத்தை,
சுயமரியாதையை,உத்தியோகத்தை
பெற்றோர்களை,நண்பர்களை
உறவினர்களை
குழந்தைகளை,மனைவியை
பணயம் வைத்து தோற்றேன்.
எல்லாம் இழந்தபின்
இறுதியாக
சிதிலமடைந்த உடலுக்குள் தளும்பும் உயிரை
பணயம் வைத்து ஆடுகிறேன்
திசையெல்லாம் அதிரும்படி உரக்கச் சிரித்தபடி
விரல்களுக்கிடையில்
பகடைகளை உருட்டுகிறது
மது

-----

உஷ்ணக் கதிர்களறியா இருட்குளிரும்
ததும்பும் வனத்தின் கர்ப்பத்தினுள்
சில அடிகள் தொலைவில்
மின்னும் கண்களுடன்
அருவியென மதம் வழியும்
பெரும் பிளிறலைக் கண்டதிர்ந்தேன்.
மரணம்
என்னை முத்தமிடக் குனிந்த நொடியில்
சூன்யத்தில் நிலைத்த பார்வை,
வார்த்தைகளைத் தொலைத்த இதழ்கள்,
காலம் உறைந்திருந்திருந்த உடலுடன்
புதரிலிருந்து வெளிப்பட்ட மனிதனை

இருவருமே கண்டோம்.
துதிக்கை முறுக்கி பின் வாங்கி
இருட் பச்சையில் கரைந்து மறைந்தது
பேருருவம்.
உறைந்திருந்த என்னை உலுக்கியது
வனமுதுகுடியின் கனத்த வார்த்தைகள்.
என் முப்பாட்டனின் முப்பாட்டனின்
முப்பாட்டனுமறிந்திருந்த மனிதன்.
தந்தையின் சொல்லுக்காய் தாயைக் கொன்று
தாய்ப் பாசத்தால்
அதே மழுவால்
தன் தலையையும் துண்டித்துக் கொண்டவனின்
தகப்பன்,

----
உங்கள் மகனாயிருக்கலாம்
உங்கள் சகோதரனாயிருக்கலாம்.
உங்கள் நண்பனாயிருக்கலாம்.
உங்கள் கணவனாயிருக்கலாம்.
உடுமலை பேருந்து நிலையத்தின் வாசலில்
சாக்கடையருகில்
அரை நிர்வாணமாக
கால்களை நீட்டியமர்ந்து
தரையை முத்தமிடுவது போல் குனிந்து
திறந்திருந்த வாய் வழியே வழியும்
எச்சிலுடன்
உலகம் மறந்த குடிஞன்(நன்றி கீரனூர் ஜாகிர் ராஜா).
உங்கள் உறவாக இல்லாமலுமிருக்கலாம்.
ஆனால்
உங்களது இலவசங்களில்,
எனது மாத ஊதியத்தில்
காட்டமாக எழுந்து பரவுகிறது
அவனின் வியர்வையின் நெடி.

-----

தடுமாறி, பின் பழகின மென்னொளியில்
தியான மண்டபத்தினுள் அமர்ந்தேன்.
சிறு சிறு ஓசைகளுமடங்கி
மூடிய கண்களுக்குள் இருள் ஒளிர்கையில்,
ஒன்றிரண்டு இருமல்களும்
சிறு குழந்தையொன்றின் அழுகுரலும்
இறுகின அமைதியில்
விழுந்து நொறுங்கிச் சிதறின.
மென்மையாய் நுழைந்து வெளியேறும்
சுவாசத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.
என்னையிழந்து காலமற்ற பெருவெளியில்
கலந்து மறைந்த நேரம்,
புகை வண்டியின் பேரிரைச்சலை,
உயர்ந்து சரிந்த துதிக்கையின்
மரணப் பிளிறலைக் கேட்டதிர்ந்து
திடுக்கிட்டு கண் விழித்தேன்.
கண்ணெதிரே,
அசைவற்றிருந்தது
பாம்பணையில் வீற்றிருந்த கருமை நிற லிங்கம்

-----

அடர்ந்த மரங்களினிடையே சூரியன் மறைந்து
வெளிறிய சாம்பல் நிறத்திற்கு வானம் மாறுகிறது.
சேத்துமடை 10 கிமீ என்றறிவிக்கும் மைல் கல்லின் மீது
மலை அணிலொன்று அமர்ந்திருக்கிறது.
நெட்வொர்க் இன்றி வெறுமையாயிருந்தது அலைபேசி.
கூடடடையும் பறவைகளின் ஒலியில்
அதிர்ந்ததிர்ந்து அமைதியாகிறது சூழல்.
கிளையொன்றை வளைத்தசைத்து
தாவுகிறது சிங்க வால் குரங்கொன்று.
சாம்பல் வானில் கருமை படந்த வேளையில்
தெளிவற்றுக் கேட்கின்ற
வனவிலங்குகளின் குரலொலிகளின் நடுவே
மலைச் சாலையில்
பழுதடைந்த வாகனத்தினுள் அமர்ந்திருக்கிற நீங்கள்,
வன தேவதையின் அழகிய இதழோரங்களில்
உதிரம் கசியும் கோரப் பற்கள் முளைப்பதைப் பார்க்கிறீர்கள்.

----

பாக்காதவங்க வந்து பாத்துக்கங்க
மொகத்த மூடப் போறேன்.
மயான அமைதியைக் கலைத்த
வெட்டியானின் குரலைப் பின் தொடரும்
மதனத்தண்ணனின் கனத்த குரல்
சிவா இங்க வாடா
கடைசி எருவும் வைக்கப்பட்டு 
முகமும் மறைக்கப்பட்ட,
தன்னுடலின் உள்ளே என்னுடலைச் சுமந்தவளின்
பொன்னுடலுக்கு தீயிடுகிறேன்
பற்றியெரியும் நெருப்பில் கருகுகிறதெனதுயிர்.
திடுக்கிட்டு விழித்தெழுந்தபோதுதான் அறிந்தேன்
வீட்டின் மொட்டை மாடியில்
வெறுந்தரையில் படுத்திருப்பதை.
எவ்வளவு கொடிய தீக்கனவென்று
நடுக்கமும் ஆசுவாசமுமாய் உணர்ந்த போது
மொட்டைத் தலையினை நனைத்து
யானுமிட்ட தீயின் வெம்மையுடன் 
கண்களின் வழி இறங்கியது
அதிகாலையின் அடர் பனி

****

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

யாழினியன்


0   676   0  
April 2021

ப.தனஞ்ஜெயன்


0   931   1  
December 2019

ம.கனகராஜன்


0   676   0  
July 2022