logo

கவிச்சுடர் விருது


இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினைப் பெறுகிறவர் கவிஞர்  ந.சிவநேசன் அவர்கள்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள ஆரியபாளையம் என்ற சிற்றூரில் தொடக்கப்பள்ளி  ஆசிரியராக பணி புரிகிறார்.

 

விவசாயத்திலும் கவிதையிலும் ஆர்வம் அதிகம் உள்ள கவிஞர்.  தனது இலக்கியம் மீதான ஆர்வத்தை கி.ரா, மேலாண்மை பொன்னுசாமி, சுஜாதா போன்ற ஆளுமைகளை வாசித்ததன் மூலம் துவங்கியதாகக் கூறுகிறார்.  இவரது முதல் கவிதைத் தொகுப்பான 'கானங்களின் மென்சிறை' படைப்பு பதிப்பகம் மூலம் கடந்த ஆண்டு வெளியானது. இரண்டாவது கவிதைத் தொகுப்பை 'ஃ வரைகிறது தேனீ' என்ற ஹைக்கூ நூலாகவும் வெளியிட்டுள்ளார். 

 

கடந்த 12 வருடங்களாக கவிதைகள் எழுதி வரும் கவிஞரின் படைப்புகள்  காலச்சுவடு, படைப்பு தகவு, கல்வெட்டு, ஆனந்தவிகடன், புரவி, வாசகசாலை, கணையாழி, தி இந்து நாளிதழ், காணிநிலம், கீற்று, நுட்பம் போன்ற பல்வேறு இதழ்களில் தொடர்ந்து  வெளியாகி வருகின்றன.

 

கடந்த ஆண்டு நடைபெற்ற கவிஞர் மித்ரா நினைவு ஹைக்கூ போட்டியிலும், கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டியிலும் இவரது ஹைக்கூக்கள் பரிசுக்குரியவைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

மேலும் பல்வேறு இதழ்களிலும் போட்டிகளிலும் ஆசிரியரது சிறுகதைகள் தனிக்கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக படைப்பு குழுமம் நடத்திய ஹைநூன்பீவி நினைவுச் சிறுகதைப் போட்டி- 2021ல் இவரது 'காக்காபொன்' சிறுகதை சிறப்புப் பரிசு பெற்றுள்ளது. அதே போன்று அய்க்கண் நினைவுச் சிறுகதைப் போட்டி 2021, அமரர் சேசஷாயி நினைவுச் சிறுகதைப் போட்டி 2021 மற்றும் மதுரை திருநங்கையர் ஆவண மையம் நடத்திய சிறுகதைப் போட்டி 2021 ஆகியவற்றிலும் இவரது சிறுகதைகள் பரிசு பெற்றுள்ளன.

இனி கவிஞரின் சில கவிதைகளைக் காண்போம்:

 

 

இவரது கவிதைகள்:

 

சில கவிதைகள் பெரும் பாட்டுப் பாடி ஒன்றுமில்லாமல் போகும். சில கவிதைகள் குறுகிய குடிசையின்  வாசலாய் காட்டி ;  பெரும் வனத்தையே  வியக்கும் வார்ப்பினையள்ளிக்  கொடுக்கும்.  இதுவும் அப்படியொரு கவிதைதான். மாட்டின் மணிச்சத்தம் கேட்டதும் ஓடிவந்து வைக்கோலை அள்ளுகிறாள் குடியானத்தி. ஆனால் அங்கு மாடு இல்லை. கூரையில் அதன் கழுத்துக் கயிறு மட்டும்  மாட்டியிருக்கிறது.  ஒன்று மாடு இறந்திருக்க வேண்டும். அல்லது விற்பனை செய்யப் பட்டிருக்க வேண்டும்அதை வாசிப்பவரின் யூகத்திற்கே விடுகிறார் கவிஞர். இப்போது மாடு என்பது மாட்டைத்தான் குறிக்கிறதா என்பதும் வாசிப்பவரின் மனவோட்டமே நிர்ணயம் செய்யும்….

 

1

மணிச்சத்தம் கேட்டு

ஓடிவந்து வைக்கோலை அள்ளினாள்

காற்றில் ஆடியது

கூரையில் மாட்டியிருந்த கழுத்துக்கயிறு

.

 

ஈன்ற மகவுக்கு தாயாக இருப்பவளை விட பன் மடங்கு மேலானவள் வளர்ப்பு தாய்.  சில வசதி படைத்தவர்கள் அவர்களின் சுகங்களுக்கு இடைஞ்சல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும், சிலர் அவர்களின் பணிச் சுமைகளின் காரணமாக குழந்தைகளை பார்த்துக் கொள்ள இயலாமல் வளர்ப்புத் தாதிகளை பணிக்கு அமர்த்துவதும் வழக்கம். பெயருக்குதான் அவள் தாதியே தவிர உண்மையில் அவளும் அக்குழந்தைக்கு ஒரு தாய்தான்.  அக் குழந்தைக்கு அம்மாவாகவே பாசத்தை ஊட்டும் ஒரு தாயின் மன நிலைதான் இக்கவிதை…..

 

2

வளர்ப்புத் தாயாக இருப்பதில் அவளுக்கு யாதொரு வருத்தமுமில்லை

வளர்ப்புத் தாயாக

பணியிலிருப்பது தான் வருத்தம்

 

தன்னை நேசிக்கும் ஒருவரின் வார்த்தைகளே மகிழ்ச்சியின் மன நிலைக்கு கொண்டு செல்லும் காலத்தில் , தன்னைக் கவர்வதற்காகவே   காதலி அனுப்பும் அவளின் வாட்ஸ் அப் புகைப்படங்களால் அவனின்   அழகு கூடுவதில் வியப்பில்லை என்கிறார் கவிஞர்….

 

3

காதலியின் வாட்ஸ்அப் பக்கத்தை

திறந்து

அனுப்பிய செல்பிகளை

எடுத்துப் பார்க்கும்

ஒவ்வொரு முறையும்

அழகு கூடிக்கொண்டே வருகின்றன.

 

அம்மாவின் தோடு என்றும் புதியதாகவே இருக்கிறதாம். அதற்கு காரணம் அது எப்போதும் அடகுக் கடையில் இருப்பதால்தான் என்கிறார் கவிஞர்.  அது ஏன் அங்கு போய் தன்னை புதிதாகவே வைத்துக் கொள்கிறது என்பதைதான் இக் கவிதை சூட்சமமாக சொல்கிறது.

 

4

அதிகநாள் அடகுக்கடை வாசம்

அம்மாவின் தோடு

எப்போதும் புதிதாய்.

 

 

விடுமுறைக்கு விடுமுறை கிராமத்துக்கு  வரும் நாட்களில் எல்லாம்  பாட்டியின் மூக்குத்தி பிரகாசிக்கிறதாம். ஆம். மற்ற நாட்களில் அவள் தன்னை அழகுப் படுத்திக் கொள்ளவே விரும்புவதில்லை. காரணம் அவளின் பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் மட்டுமே அவளது அழகான உலகமெனும் போது  அவளது அலங்காரமும்  அப்போதுதானே மிளிரும். பாட்டியின் அழகு என்பது மூக்குத்தியில் மட்டும் மிளிர்வதில்லைஅவளின் அன்பு நிறைந்த மெனக்கெடல்களும்தான்.  பாட்டி இறந்த பிறகும், தன் உறவுகளை இன்னமும் தெய்வமாக இருந்து ஒன்று கூடச்செய்து அழகு பார்க்கிறாள் என்று கவிஞர் கூட்டு குடும்பங்களின் நேசத்தை நம்  கண்முன் நிறுத்துவது அழகு

 

5                               

தனிமை பூத்த நிலம்:

 

விடுமுறைக்கு விடுமுறை ஊருக்கு வரும் நாட்களில் மட்டும்

பாட்டியின் மூக்குத்தி அதிகம் பிரகாசிப்பதாகத் தோன்றும்

 

மூன்று மகன்களும்

வரும் நாளில்

தெருமுக்கில் கார் வளையும்போதே

நேராகிவிடும்

கூன் முதுகோடு கம்பீரமும்

 

கோழி நனைக்க சுடுதண்ணி

ஒருபக்கம் காய

குழம்பு செலவுக்கு அம்மியை இழுத்தரைப்பவளின்

கைகளில் அத்தனை தெம்பு

 

பேரன் பெயர்த்திகள் கண்டிராத புதுவகை தீனியெல்லாம்  அடுக்குப் பானையிலிருந்து

நிரம்பி வழிய

நகரத்துப் பண்டங்களை

நாசூக்காக ஒதுக்கிவிடுவாள்

 

பெருமழைக் காலங்களை சமாளித்தது போலவே

வயிறு காய்ந்த நாட்களில் வாரிசுகளை காத்த இரகசியமும் இரவு நேரக் கதைகளாகி

உறங்க வைக்கும்

எல்லோரையும்

 

விடைபெறும் நாளில்

பண்ணையம் பாழாய் போவது பற்றி புலம்பித் தீர்த்தாலும் ஊர் கண் படாமலிருக்க திருஷ்டி

சுற்றி அனுப்புவாள்

 

ஒரு வாரமாய் ஓடியொளிந்த ஒற்றைத் தனிமை மெல்ல எட்டிப் பார்க்க

அடுத்த பண்டிகையை  ஏக்கத்தோடு நினைத்தபடி சாய்வாள் கயிற்றுக்கட்டிலில்

 

இன்று

கிழவி மறைந்து ஆளுக்கொரு நினைவாய் அள்ளிப்போன பிறகும்

சொந்தம் வரும் நாளுக்காக

காரைவீட்டு மூலையில் காத்திருக்கிறது அவள்

ஊன்றி நடந்த கைத்தடி

 

வருடம் ஒருமுறை வந்திருந்து ஞாபகமாய் பொங்கல் வைக்க முடிவானது

வாரிசுகளுக்குள்

 

முன்பிருந்தே சாமிதான் அவள்..

இப்போதுதான் வணங்கத் தொடங்குகிறார்கள்!

 

கவிஞரின் பிற கவிதைகளையும் பார்ப்போம் :

                                      

6

அம்மாவின் சுண்டுவிரல் பிடித்து

கடைக்குப் போகும் போதெல்லாம்

மறுக்க மறுக்க

ஒரு ஆப்பிளை கையில் திணித்து

கன்னம் கிள்ளும் பழக்காரம்மா

இப்போது

கூவி கூவி விற்றுக் கொண்டிருக்கிறாள்

என் தொலைந்துப் போன பால்யத்தை.

 

 

 

7                                   

ஈரத்தின் வனம்:

 

மழை கொட்டிமுடித்த

வனாந்தரத்தின் மேல்

பூவாய் மலர்கிறது வானம்

மௌனத்தின் சாயத்தை

சொட்டவிட்டு தியானிக்கின்றன இலைகள்

அள்ளிமுடித்த இரகசியத்தின் முடிச்சவிழ

சட்டென பரவுகிறது

மேகங்களின் வாசம்

ஊறிய சருகுகளின் தாகத்தை

கசிந்து நிரப்புகிறது

ஈரத்தின் இசை.

 

 

 

8                           

அக்கறை :

நடை எப்போது திறக்குமென

நடந்தபடியே இருந்த

கிழவிக்கு

கடவுளை பார்க்கும் ஆவலை

புறந்தள்ளி

அன்னதானத்தை கேட்டு

முன்நிற்கிறது வயிறு.

உறவுகள் கைவிட்டதில்

உண்ணா நோன்பிருந்தும்

பிரசாதத்தை இலையில்

ஏந்தி நகர்கையில்

சர்க்கரைப் பொங்கலை மட்டும்

மடியில் பத்திரப்படுத்துகிறாள்

பேரனுக்கு

பிடிக்குமென!

 

 

9                        

தானியக் குதிர்:

 

நதி தொலைத்தவன்

கைகளில்

மீன் முட்டைகள்.

 

 

10                    

மின்சாரமில்லா இரவு:

 

இந்த இருட்டைப் பிழிந்து

கண்மை

செய்யலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறாள்

என் மனைவி

இந்த நிலவை உருக்கி

ஐஸ்கிரீம் ஒன்றை

மூக்கெல்லாம்

ஈசிக் கொண்டிருக்கிறாள்

என் மகள்.

பாட்டி சொல்லிக்

கொண்டிருக்கும்

ராசா கதையை

கேட்டபடியே

கொறிக்கத் தோதாய்

இந்த நட்சத்திரங்கள்

சோளப்பொறிகளாய்

சிதறிக் கிடக்கின்றன

எனக்கோ போதும் போதும்

என்றாகிவிட்டது

இவற்றைப் பிடித்து

இக்கவிதைக்குள்

சிறை வைப்பதற்குள்.

 

 

11                 

பரிசு :

 

ஐஸ்கிரீம் ஒன்றை

நம்பி

உடன் வரும் சிறுமிக்கு

வழிகாட்ட

உங்கள் சுண்டுவிரல்

போதுமானதாய் இருக்கிறது.

ஆயுள் முழுதுமதன்

பால்யத்தின் நினைவுக் கோப்பையில் அந்தக் குளிர்ச்சி

பத்திரமாயும் இருக்கிறது...

பரிசுக்கு பதிலாக

கிடைக்கும்

அக்குழந்தையின் முத்தத்தை

குழந்தையின்

முத்தமாக மட்டும்

நீங்கள் பார்க்கும் வரை.

                       

12

நினைவின் பெண்டுலம்:

 

இறந்துவிட்ட

நண்பனின் முகநூல் பக்கத்தில்

நீண்ட நாள்களுக்குப் பிறகு

அவன் குழந்தையின் புகைப்படம்

பதிவேறியிருக்கிறது

 

சோகத்துக்கும் மகிழ்வுக்கும்

இடையே அலைவுறுகிறது

நினைவின் பெண்டுலம்

 

லைக் பட்டனுக்கும்

அழும் எமோஜிக்கும்

இடையில் விரல் தடுமாறிய

அந்த ஒரு கணம்

அவனுக்கே அவனுக்கானது.

 

 

 

 

13

தப்பிய வாழ்வு:

 

தொங்கும் புழுவின்

அருகில் வந்து

சிக்காமல்

தப்பிய மீனின்

கூடையளவு இன்பம்

காத்திருக்கும் தூண்டில்காரனின்

நதியளவு துக்கம்.

 

 

14

மழைப் பயணம்:

 

பேருந்திலிருந்து

இறங்கிப் போய்விட்டாள்

இரு மழைத்துளிகளை

காதில்

அணிந்தவள்

சன்னலோரக் கம்பியில்

ஆடுகின்றன

ஒரு நூறு ஜிமிக்கிகள்.

 

 

15

எது இலக்கியமெனத்

தொடங்கிய சண்டையிலிருந்து

பேச்சை முறித்துக் கொண்டவள்

புத்தாண்டுக்கு ஸ்மைலி அனுப்பியிருந்தாள்

அது

இலக்கியமாய் இருந்தது.

 

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in