logo

கவிச்சுடர் விருது


இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கவிஞர் துளசி வேந்தன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமையடைகிறோம்.

பாஸ்கரன் கண்ணன் என்ற இயற் பெயர் கொண்ட கவிஞர் சிறந்த பட்டிமன்ற மேடைப் பேச்சாளரும் கூட. இவரது சொந்த ஊர் விழுப்புரம் ஆகும்.  பள்ளி, கல்லூரி படிப்புகளை சொந்த ஊரிலேயே முடித்தக் கவிஞர், பொறியியல் படிப்பை திருநெல்வேலியில் முடித்தார்.

 பள்ளிக் கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகளிலும்  பல பரிசுகளை வென்றிருக்கிறார்  , கல்லூரி படித்த  நாளில் தமிழ் தகையாளர் திரு நெல்லைக் கண்ணன் அவர்களுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக பல பட்டிமன்ற  மேடைகளில்  பங்கேற்றதுடன் விஜய் தொலைக்காட்சியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற  நிகழ்விலும் இறுதிவரை போட்டிக் கொடுத்த   போட்டியாளராகவும்  திகழ்ந்தார்.

 9 ம் வகுப்பு படிக்கும் போதே  அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடம் மானிலத்தின் சிறந்த பேச்சாளர் விருதினையும்  பெற்றுள்ளார். பின்னர் கவிதைகளின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக கவிதைகளை எழுதத் தொடங்கிய கவிஞர்,  இன்று தன்னை கவிச்சுடர் பெறும் கவிஞராகவும்  நிலை நிறுத்திக் கொண்டார்.

கவிஞரின் முதல் கவிதை தொகுப்பான படித்துறை பித்தன் என்ற நூல் கலைமாமணி அய்யா எஸ் எஸ் பெருமாள் அவர்களின் அணிந்துரையுடன் நமது படைப்பு குழுமத்தின் வெளியீடாக வெளிவந்தது. அடுத்து வெளிவரவிருக்கும் கவிதை நூலான பெறுநர் தேவதை வானவில் வீதி 143’ என்ற நூல் கலையியல் அறிவுரைஞர் கலைமாமணி ஜாஹீர் ஹுசைன் அவர்களின் அணிந்துரையுடன் படைப்பு பதிப்பகத்தின்  வெளியீடாகவே வெளி வருகிறது.

கவிஞருக்கு இனிய நல் வாழ்த்துகள்!

 இனி கவிஞரின் கவிதைகள் சிலவற்றை காண்போம்:

.பாவ புண்ணியம் கணக்கு என்பது என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி  இந்த கவிதை பேசுகிறது.  தன்னை வள்ளல் என்று சொல்லிக் கொள்பவன் கூட  அவனக்கான நியாயத் தராசில் பாவத்தின் அழுக்காகத்தான் உட்கார்ந்திருப்பான். ஒரு தர்மம் எப்போது நியாயப் படுத்தப் படும்?  இரக்கத்தின் பால் உதவும் கரங்களைத்தான் கடவுள் உடனே   பற்றிக் கொள்கிறான்! .  பிச்சைக்காரன் என்று யாரையும்  எள்ளலில் நகர்த்தி விட வேண்டாம்அவன் கடவுளாகவும் கூட  இருக்கலாம்

 

செத்த பிறகு

எனக்கானதொரு

நியாய தீர்ப்பு நாளில்,

ஒரு தராசின் முன்னே

நிறுத்தப்படுகிறேன்,

 

 கனக்குமென்

பாவமூட்டையை

முதுகில் தூக்கிவந்து,

ஒரு தராசு தட்டில்

வைக்கிறான் கடவுள்,

 

 எனது பெயர்

பொறித்திருக்குமொரு,

கறுப்புப் பெட்டிக்குள்,

தேடித்துழாவியெடுத்து

என் புண்ணியங்களை

இன்னொரு தட்டில்

அள்ளிக் கொட்டுகிறான்,

 

 அப்போதுதான்

கடவுளின் கைகளில்

கவனிக்கிறேன்,

 

அது,

வழக்கமாய்

பெருமாள் கோவில் வாசலில்,

நான் பிச்சைப் போடுமொரு

யாசகனின் கையிலிருக்கும்

பிச்சைப் பாத்திரம்,

 

 சட்டென்று,

சொர்க வாசல் திறக்கிறது,

 

கண்களை கூசும்,

அந்த ஒளிவெள்ளத்தில்

படியேறும்போது

உற்றுப் பார்க்கிறேன்,

 

அந்த யாசகனின் சாயலில்,

அப்படியே கடவுள்...

 

 

மரணம் என்ன என்பதைப் பற்றி பலரும் பல கோணங்களில் அணுகி இருக்கலாம். ஆனால் கவிஞரோ முடியுள்ள தலைக்கும், மொட்டை தலைக்கும் முடிச்சிட்டு பார்க்கிறார்இதோ கவிதை…. 

 

 

.பற்றியிழுத்து

வசப்படுத்த

மரணத்திற்கொன்றும்,

மயிரிருப்பதில்லை,

 

 அது யார் கைகளிலிலும்

சிக்காத,

இறைவனின் வழுக்கை...

 

 

பகுத்தறிவு சிந்தனைகளில் கவிஞரின் ஒவ்வொரு கவிதைகளுமே மிளிர்கின்றன. சிறிய கவிதைகள் என்று எதையும்  எளிதில் கடந்து விட முடியாது. சிலுவையின்  நிழலில் இளைப்பாறும் ஆட்டுக் குட்டியின் முதுகில் பிரம்படி என்பதில் இருக்கும் படிம யுக்தியாகட்டும், அய்யர் வீட்டு பூசை அறையை பூசி மொழுகினாள் சித்தாள், மாத விடாயின் வலியுடன் என்பதில் தீட்டு என்ற தீண்டாமையைப் பற்றி கேள்வி கேட்பதில் ஆகட்டும்,  ஒவ்வொரு கவிதைகளுமே வெவ்வேறு தளங்களில் பயணித்து வியப்பை தருகின்றனமற்ற கவிதைகளையும் வாசித்து உணருங்கள்….

 

 

 ஆணியில் தொங்கும்

அப்பாவின் சட்டைக்கு,

கொஞ்சம் இயேசுவின் சாயல்...

 

 

 நீராவி எஞ்சினாகிறாள் சிறுமி,

பார்வையற்றவர்கள்

ரயிலாகிறார்கள்...

 

 

.நனைபவர்களுக்காக

பெய்யும் மழையில்,

யார் யாரோ

குடைபிடித்துப்போகிறார்கள்...

 

 

குயிலமர்ந்து பாடிய

மரமாயிருக்கலாம்,

அந்த வீணை...

 

 

சிலுவை நிழலில்

இளைப்பாறும் ஆட்டின்

முதுகு முழுக்க

பிரம்படிகள்.

 

வெறிச்சோடிய ஊரடங்கில்

மெல்லத் தழுவுகிறாள் விலைமகள்

வெறும் வயிற்றை.

 

 

அய்யர் வீட்டு பூசையறை

பூசி மொழுகினாள் சித்தாள்

மாதவிடாய் வலியோடு.

 

 

நூறு கைகளை தூக்கி

ஒற்றைக்  காலில் நிற்கிற

சாமிதானே?,

ஒவ்வொரு மரமும்.

 

 

மழையில் நனையும்

நாய் குட்டியை பார்த்ததும்

வேகம் குறையும்

காரொன்றில்,

ஏறிக் கொள்கிறார்

"கடவுள்"...

 

 

தூக்கி விட யாருமில்லாமல்

தவிக்குமொரு பாதசாரியின்

பக்கத்திலேயே படுத்துக்கிடக்கிறார்,

சாலை ஓவியமாய் கடவுள்...

 

 

பேயின் பெயரால்

ஆணியடிக்கப்பட்ட மரங்களில்,

பயமில்லாமல் பறவைகள்.

 

 

வரம் தருவதை பிறகு

பார்த்துக்கொள்ளலாம்,

முதலில்

வனம் தரட்டும் கடவுள்,

"கோவில் யானைக்கு"...

 

 

இளைத்தால் அழகு

பெருத்தால் பேரழகு,

"நிலா"...

 

 

ஒரு அடைகாக்கும் சிறகிடம்

தோற்று ஓடிய

அடைமழைத்தானே நீ...!

 

 

இரண்டாவதுதான்

இயேசுவின் மரணம்,

முதலிலொரு மரம்...

 

 

தொலைந்த சூரியனை

இந்நேரம் மீட்டெடுத்திருக்கும்

இன்னொரு தேசம்...

 

 

தாராளமாய்

மண்டியிட்டு

யாசகம் கேட்கலாம்,

நி"தானத்தை"...

 

 

ஒரே நேரத்தில்

இரண்டு உளிகளில்

செதுக்குகிறது,

"மரங்கொத்தி அலகு"...

 

 

மீட்டெடுத்த கோயில் நிலத்தில்,

காட்டைப் பற்றி கனா காண்கிறது

"கோயில் யானை"...

 

 

கடவுளின் பெயரை

முணுமுணுத்துக்கொண்டே,

பிரம்பின் முன்

கைநீட்டுகிறது குழந்தை,

இப்போது

அடிவாங்குகிறார்,

"கடவுள்".

 

 

கையில் காசில்லாமல்

மருந்துக் கடை வாசலில்

நிற்கிறார் கடவுள்,

பார்க்கப் பரிதாபமாயிருந்தது,

அருகில் சென்று

என்ன வேண்டுமென்று

விசாரித்தேன்,

ஒரு வலிநிவாரணி மருந்து

வாங்க வேண்டுமென்று

சொன்னார்,

சரி நான் வாங்கித்தருவதாய் சொல்லி,

மருந்துச்சீட்டை வாங்கி பிரித்தால்

கொட்டையெழுத்தில் எழுதியிருக்கிறது,

"காலம்".

 

 

கருவறைக்குள்தான்

இருக்க வேண்டுமென்று

அவசியமில்லையே,

காற்றோட்டமான

வசந்த மண்டபத்தின்

கற்தூணொன்றில்

மறைந்துகொண்டு,

ஒரு குழந்தையோடு

விளையாடிக்கொண்டிருக்கலாமே

கடவுள்...

 

 

படிக்கத்தெரிந்த பட்டதாரி,

புத்தகத்தோடு

திரிகிறான்,

படிக்கத்தெரியாத பாமரனோ,

புத்தகமாகவே

திரிகிறான்...

 

 

அழிப்பான் வைத்திருக்காத

ஏழைக்குழந்தை,

முடிந்தவரை

பிழையில்லாமல் எழுதுகிறது...

 

 

அம்மாவிற்கு,

படைத்து வைத்த இலையிலிருந்து

குஞ்சுகளுக்கு எடுத்துப்போகிறது

காக்கையொன்று...

 

 

புயல் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல்

கப்பல்களை தயார் செய்கிறார்கள்,

"குழந்தைகள்"...

 

 

நாம் சந்தித்துக்கொண்ட

பூங்காவில்தான்,

வரிசையில் சறுக்கி

விளையாடுகிறார்கள்,

உன் குழந்தையும்,

என் குழந்தையும்...

 

 

அறைக்குள்

வந்துபோயிருக்கிறாள் அம்மா,

கழுத்துவரை

போர்த்தியிருக்கிறது போர்வை...

 

 

தகனம் முடிந்தபின்

நெருப்பு வைக்கிறது

"நினைவுகள்"...

 

 

அம்மாவின் பெயரெழுதிய

வெள்ளி சீர்த்தட்டு,

இப்போது,

அப்பாவின் பெயரெழுதிய

அடகுச் சீட்டாய்...

 

 

ஒரே ஒரு நீலச்சேலைக்கு,

எத்தனை முந்தானைகள்?

"நதிகள்"...

 

 

சம்பள நோட்டில்

காந்தியை விட

அழகாய் சிரிக்கிறான்

கடன்காரன்...

 

 

ஜெருசலேம் நகர வீதிகளில்,

சில்லிடவைக்கும்

சாரல் மழைத்துளிகளூடே,

காலாற

நடந்து கொண்டிருக்கும், 

இயேசுவும்,

பாலஸ்த்தீனத்து, 

பாலைவன மணற்பரப்பொன்றில்,

பேரிச்சம் மரத்தடியில்

அமைதியாய் அமர்ந்திருக்கும், 

நபிகளும்,

அயோத்தி ராமர் கோவில்

வளாகத்துள்,

அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்,

செங்கற்களின் பக்கவாட்டில்

படர்ந்திருக்கும் நிழலில்

பாய் விரித்து படுத்திருக்கும், ரங்கநாதரும்,

ஒரு சேர

அணிந்திருக்கிறார்கள்,

"புல்லட் ப்ரூப் ஜாக்கெட்".

ஜாக்கெட்டின்

பின்புற காலருக்குள்

பொறிக்க பட்டிருக்கிறது,

"MADE IN FEAR"

 

 

தோல்வியை போற்று மனமே

 

 எடிசன்!!! எடிசன்!!!

"சொல்"

உன் வாழ்வின் அற்புத தருணமெது?

"இந்த உலகின் முதல் மின்விளக்கை

நான் ஏற்றிவைத்த நொடிகள்"

 

 அப்படியா?

என்ன பார்த்தாய் அந்த நொடியில்?

 

 "அந்த அறைமுழுக்க, 

பிரசாகமாய் தெரிந்த

என் தோல்விகளை".....

 

 

விளக்கின் எந்த முகமும்,

முகம் சுழிப்பதே இல்லை,

கைம்பெண்

திரித்தத் திரியென்று....

 

 

எதிரே வரும்,

நெடியேறிய, 

சாதி நாற்றம்

தாங்காமல்,

 

 அக்குளுக்குள்,

மறைந்து

கொண்டது,

துண்டு...

 

 

பற்றறுத்து

கரும்போடு

போன பட்டினத்தாரோடு,

ஒருசேர போகிறது,

கரும்பின் சுவை..

 

 

பிரம்படிப் படுகையில்

நினைவு வந்தது

பதில் "காந்தி"யென்று...

 

 

அப்பா வாங்கி வந்த,

அரபு நாட்டு சென்ட்டில்,

நெடியேறும் வியர்வை வாசம்.....

 

 

மனிதப் பிணங்களே,

வெட்டியான் என்றால்

அவ்வளவு ஏளனமா?

அந்த வெந்தாடிக் காரனுக்குப்

பிறகு,

வெட்டியான் கையில்தான்

இருக்கிறது,

எல்லா சாதிக்காரனையும்

அடிக்கிற தடி.....

 

 

கருப்பு மேலேயிருக்கிறது,

வெள்ளை கீழேயிருக்கிறது,

இந்த பியானோ மட்டுமே,

உண்மையை வாசிக்கிறது....

 

 

ஓடி உழைத்து,

வியர்த்து,

வீடு வரும் அப்பாக்களின்

கந்தலலங்காரமும்,

கந்தனலங்காரமே!

 

~ (அவன்) ~

*மார்க்ஸ்!!! மார்க்ஸ்!!!*

*கனன்றெரியும் வயிற்றோடு, 

நானுனக்கு,

எதை பகிர்ந்து கொடுப்பேன்?*,

 

 ~ (மார்க்ஸ்) ~

"கவலை வேண்டாம் தோழரே",

"பசியை பகிர்ந்து கொள்வோம்",

 

 "வாருங்கள்!!!

நானும் பசித்திருக்கிறேன்"...

 

 

கழற்றிய பிறகும் பாரமாய்,

ஹெல்மெட்டில் முட்டி விழுந்த,

தும்பியொன்றின் நினைவு....

 

 

பூமொட்டுடையும்

சப்தத்தில் விழிப்பதுதான்,

"புத்தரின் பழக்கம்"...

 

 

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.