logo

கவிச்சுடர் விருது


கவிச்சுடர் (Z) ஜபீர்  ஒரு அறிமுகம்
***************************************************
இறந்த நதியில் மீனின்
எச்சங்கள் கவிழ்ந்த நதியை
மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது
புதைந்த மீனின் நிழலை
தூண்டிலிட்டுக் கொண்டிருக்கிறான்
நிரம்பிய நதியில் வலையிழந்தவன்

தன் எண்ணவோட்டத்தில் எழும் அத்தனை வடிவங்களையும் அழகான கவிதை வரிகளாகப் பதிய முயற்சிக்கும் ஒரு படைப்பாளி. நமது படைப்பு குழுமத்தின், 2018 நவம்பர் மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப் பெறும் முகமது (z) ஜபீர் இலங்கையைச் சேர்ந்தவர். கொழும்பை பிறப்பிடமாகவும், ஓமான் மஸ்கட்டை வசிப்பிடமாகவும் கொண்டுள்ள கவிஞர், ஆரம்ப நாட்களில் அவ்வப்போது பத்திரிக்கைகளுக்கு எழுதி வந்தாலும், வேலை முனைப்பின் காரணமாக தொடராக எழுத முடிவதில்லை என்பது அவரின் பெரும் ஆதங்கம்.

படைப்பில் ஏற்கனவே மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரமும் பெற்றவர். சிறந்த கவிதைகளை தன் ஆக்கமாகத் தரும் கவிஞர் (Z)ஜபீரை கவிச்சுடர் விருதின் மூலம் பெருமை செய்கிறது, நமது படைப்பு குழுமம்.

கவிச்சுடர் (Z) ஜபீர் அவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வு:
***********************************************************************************
இவரது கவிதைகள் உள்மன அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக இருப்பது தனிச்சிறப்பு. காட்சியமைப்பை கவிதைக்குள் கொண்டுவந்து ஒரு படைப்பாக மாற்றும் வித்தையை அழகாக கையாளத் தெரிந்திருக்கிறார். இவருக்கு நமது படைப்பு குழுமம் கவிச்சுடர் விருது அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். எவ்வளவு நுணுக்கமாக எழுதும் வல்லமையை பெற்றுள்ள படைப்பாளி இவர் என்பது நீங்கள் வாசிக்கும் இவரது படைப்புகளிலிருந்தே தெரிந்து கொள்வீர்கள்.

இவரது கவிதைகள் இயற்கை மற்றும் வாழ்வியலை மட்டும் சார்ந்து இருக்காமல் சில படைப்புகள் அகம் சார்ந்த சிந்தனைகளோடும் சூஃபி வகைமையோடும் நகரக்கூடியவை அப்படிப்பட்ட அகம் சார்ந்து இருக்கும் படைப்புகள் இவரது தனித்தனமைகளை எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும். இந்த கவிதைப் பயணம் மேலும் தொடரவும்.. சிறப்பான படைப்புகளை தொடர்ந்து தமிழுக்கு அளிக்கவும் படைப்பு குழுமம் அவரை மனதார வாழ்த்துகிறது.

சூபித்துவமான சிந்தனைகளோடு மரணத்தையும் காதலையும் சுமந்து செல்லும் இவரது இந்தக் கவிதையின் வரிகள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. நினைவுகளால் நிரம்பும் கோப்பை...

@

ஒரு பிரவாகத்தின் பெருக்கோடு
என் மரணம் உன் கதவை தட்டலாம்

என் விடை பெறுதலின் வானம் என்
இறகை உதிர்த்து விட்டுப் போகலாம்

நழுவும் காலத்தின் அந்தியிலும்
சரிந்த வாழ்க்கையின் முனையிலும்
மரணம் காயமாக பூத்திருக்கிறது

அறுந்த உன் விரல் வழி
உன் கருணை மீட்டதா
அவமானங்களில் அமரும் உடலில்
மீதமிருப்பது வெறும் நிர்வாணமே

நீ தோல்விகளைப் பரிசாக கடத்திய
நாளொன்றில் மரணத்தின் தூரம்
என் கதவின் அழைப்பு மணியை
அழுத்திய வண்ணம்
என் வாசல் படிகளில் இறங்கிச் செல்லும்

உன் காலடி ஓசை
என் சுவாசத்துக்கிடையில் ஓர்
ஊசியாய் நுழைகிறது

உயிர் கரை சேரா மௌனத்தின்
பள்ளத்தாக்கில் புதையுண்டிருக்கும்
மரணத்தின் குரலில் மீள்தல் என்பது
ஒரு வார்த்தையல்ல

இல்லாமல் போன
ஒரு இழவு வீட்டின் வெறுமையை
நீ அறிந்ததே இல்லை

என் இழப்பின் வலி உன் இருப்பை
தீர்மானிக்கும்

உடல் பொய்யாக உருவம் தொலைந்து
உன் மனச்சுவரில்
என் நிழற்படம் மறந்து போன
என் பால்யத்தின் கதை சொல்லும்

விதியைத் துரத்தும் ஒரு அந்திமத்தின்
கணத்தில் நுழைகிறேன்
இருப்பிட்கும் இறப்பிற்கும் முடிச்சு விழும்
பிழையற்ற தருணத்தில்
திறந்து வை எனக்கான உன் வானத்தை

வேர்களின் வனாந்திரத்தில்
என் விதைகளைத் தொலைத்த திசைகளில்
உயிர்த்தெழுகிறது நமக்கான விருட்சம்

என்னால் நிரப்ப முடியாத உன் நாட்களும்
காலங்களும் ஏதுமற்றதாகிப்போய்
பொருளற்ற காலத்தின் பெருவெளியிலும்
பொருளுனரா வாழ்க்கையிலும் நாமற்றதாய்
வழிந்து கொண்டிருக்கிறது நம் காலம்

@
சமாதானம் என்பது சாயம் தோய்ந்த துணியாகவே இருக்கிறது.. மடாலயங்களும் புத்த விகாரங்களும் தத்தம் கொள்கைகளைவிட்டு நழுவிச்செல்கின்றன... வேதனையில் மடிகிறது இக்கவிதை..

மறுபடி விடைபெயருக்
கொண்டது வெற்று
சமாதானம் புதையும் நீதியில்
பூக்கிறது மாயணங்கள்

யார் தாகம் தணிப்பதற்கு
இக்கோடாரிகள் காயங்களை
அறுவடை செய்கிறது

எஜமான் கட்டளையேந்தி
நாவை விற்று நம்பிக்கை
விதைக்கிறார்கள் நம் திசை
உறங்கா தன் இனம்விற்ற
எம் தலைவர்கள் உங்கள்
நம்பிக்கையின் மீதமரும்
முட்களில் அவ்வப்போது
எங்கள் குருதியின் கறைகள்
நீங்கள் அதை விபத்தெனக்
கூவி வாந்தியெடுக்கிறீகள்

நாம் தோற்பதென்னவோ
எங்களை வெறிகொள்ளவா
எதுவரை எம் சுவடுகளின்
இருப்பைத் தொலைக்கும்வரை
அவர்களின் செவிகளில்
அறையப்பட்டுவிட்டது புத்தன்
சரணம் சிங்களன் தேசம்

என் சகோதர இனத்தின்
குருதியின் புலால் ருசியை ருசித்த
இவ்வேட்டை நாய்கள்
எம் குருதியை நுகர்கிறது
வன்மத்தின் மிகையால்

பௌத்த விகாரைகள்
அவ்வப்போது புத்தனை
வாளால் போதித்து அகிம்சையை
சிலுவையேற்றிய கோட்சேக்களின்
கூடாரமாக மாறிவருகிறது

பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில்
எம்திசை நோக்கி எப்போதும்
ஒரு தோட்டா இலக்குத்தவறாமல்
குதறும் குரூரத்துடன்
காத்துக்கிடக்கிறது

இவ்வினஅரிப்புக்கு அரசும்
அவ்வப்போது கைதட்டுவதுதே
வேதனை இனி நாமும் மாவீரர்களை
விதைப்போம்

@

உரிமைகளுக்கான வாய்ப்புகள் ஜன நாயகத்தின் பெயராலேயே மறுக்கப்படுகின்றன. கைகளைக் கட்டிவிட்டு கைதட்ட சொல்லும் அவல அரசியலின் பின்னணியில் இக்கவிதை

-----
உங்கள் லாப நஷ்டங்களை
தீர்க்க எப்போதும் எங்களை
ஓர் பொரிக்குள்ளேயே வைத்திருக்கிறீர்கள்

உங்கள் நாணய சுழற்சிக்கு
நாங்களா பகடைகள்

விதிகளும் சரத்துகளும் தீர்மானிக்கப்பட்ட பிறகே
கட்டை விரல் ஒப்புதலுக்கு
சலுகை தருகிறீர்கள்

உங்கள் கைக்குலுக்கலின்
விவாதங்கள் சவங்களையே பரிந்துரைக்கிறது

எங்கள் மறுப்பின் கேள்விகளை
களையெடுக்க எமக்கே கட்டளையிடுகிறீர்கள்
கையசைக்கும் எம் நம்பிக்கைகள்
பின்னால் கட்டப்படுகிறது

உப்பையிட்டு வளர்க்கும்
பச்சோந்திகளின் பசிக்கு
எங்கள் மாமிசங்களா மூலதனம்

முடிச்சு விழும் எங்கள்
சுயங்களின் முகங்களுக்கு
கருப்புத்துணி நெய்யப்படுகிறது

எளிதாய் கிடைத்துவிடுவதில்லை
உரிமைக்கான வாய்ப்புகள்


@ மகளைப் பிரிந்து வாடும் ஒரு தகப்பனின் தனிமை நெருப்பு அறையின் தவம் ஆகும். பழகிய நாட்கள் பாழாய் வந்து பாடு படுத்தும். சிறகுகள் வெட்டியென சிந்திக்கச் செய்யும்.. இந்தக்கவிதையும்...

********மகளெனும் தேவதை**********

என் உயிரின் வளையத்தை
உனக்காகவே தானம் செய்வேன்
தினமும் கேவல்கள் இல்லாமல் க
தவடைத்திட முடிவதில்லை
நீ இல்லாத அறையின் கதவுகளை

என் திறந்த வீடு
நீயற்று பூட்டியே கிடக்கிறது
வெறுமையின் நிழல் பூத்த அறைகளில் மௌனம் உலவுகிறது

நீ கடந்த வெற்றிடங்களில்
இடறும் என் இருப்பிடம் சாவைப்பற்றிய
கனவுகளை வரமெனப்பெறுகிறது

இயல்பாகிட்ட தனிமையின் குரல்
அரூபத்தில் புலம்பிக்கொண்டிருக்கிறது
வெறிச்சோடிய சுவர் முழுவதும்
உன் துயர் விதைத்த உரு
மேலும் கீழுமாய் நகர்கிறது
என்னுள் இருக்கும் உனது குரல்
என் மீள்வை மீதம் வைத்திருக்கிறது

என் துயரின் ஓசைகளுக்கான சொற்களோ
செவிகளோ இல்லை
உன்னுடன் பேசிக்கொள்ளாத
வார்த்தைகள் வீடெங்கும் முளைத்திருக்கிறது
என் அழைப்பை நிரப்ப மறுத்த அவை
தருவதாயில்லை நீ
விட்டுச்சென்ற இருக்கைகளை

ஓர் பிணத்தனிமை என்னை மென்றுக்
கொண்டிருக்க மதிய உணவுகள் சுவை
தரவில்லை காலையுணவுப் பருக்கைகளை
கட்டெறும்புகள் சுவைக்கிறது
பசிக்கருந்திய கவலத்தில் பழைய ருசி

உன் நினைவுகள் பூத்த கடும் சாம்பல்
நிற விடியலில் முன்நெற்றி முத்தங்கள்
இல்லாத காலை நோவுகள் போக்க
போக்கற்று என்னை நானே மறந்து விடுகிறேன்
நீயே என் கடைசிச்சொட்டுத் துயர்

உன் சிறு பிடிவாதங்களைக் கடந்து
போக முடிந்ததில்லை அழுத்தும் உன்
பார்வைகள் என் பெருவாழ்வை
சங்கடப்படுத்தி விடுகிறது உன்
சிறு கோபமும் என்னை வென்றுவிடுகிறது
நானென்பதும் நீதான் நீயேதான்

தினமும் உனக்கொரு இரவை
சுமந்து வருகிறேன் பரிமாற
உன் விசாரிப்புகளில்லாததால் அவ்விரவுகள்
தவளைகளின் மேய்ச்சல் நிலமாகிறது
தூக்கமோ வழமைபோல்
என் புறமுதுகில் சுமை பதிகிறது

தலையணை இடுக்குகளில்
உறக்கமற்ற இரவுகளின் நகங்கள்
பழுதான விடியலின் வெளுப்பை
கருப்பாய் சாயமேற்றுகிறது

@

இறுதி உறக்கத்தின் முன் நிகழ்த்தும் மௌன போராட்டம் இரக்கமற்று சுடரும் வலியை இந்தக் கவிதை வலியுடன் ஏந்திக் கொள்கிறது..

ஓர் சாவின் கண்களில்
வெறிக்கிறது இருப்பின்
கடவாத காலம் மீளாத பயம்
ஆட்கொள்ளும் தனித்த அவலம்
வெறுமையின் கையறு நிலை
ஆழப்புதைக்கும் இருள்
இருளுக்குள் ஒலிக்கும்
வினையின் முனகல்
நெருப்பை விழுங்கிய கேவல்
ரத்தம் பருகும் உடல்
உறையும் மூச்சுக்கயிறு
உடல் உளுத்த பின்
மரணம் பெயர்துறக்கும்
இறுதியில் உயிர் விழுங்கும்
கடைசி துளியில் குரல்வளையில்
மௌனமாக நூல் கோர்க்கும்
இறுதி உறக்கம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மேலும் கவிஞரின் அற்புதமான கவிதைகள் தொடர்கின்றன உங்கள் பார்வைக்காக...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எம் நிர்வாணத்தை
ஒப்படைக்கிறீர்கள்
ஆடை உரிகிறவர்களிடம்

@
*** ஓர் அந்திமத்தின் அழுகுரல் ****

மகனே உன் மீதே என் சதைவற்றிய
வயோதிகத்தைச் சுமந்திருந்தேன்
என் தழும்புகளின்மேல் உன்னை
களிம்பாய் தடவியிருந்தேன்
உன் துணை நோக்கி என் சுவடுகள் நழுவும்போது
எனக்கான பக்கங்களை மூடிவிட்டாய்

தளர்த்த என் சிம்மாசனம் இன்று
அநாதை விடுதியில்
என் கூந்தலின் பூக்கள் சருகானபோதும்
எனது வண்ணங்களைக் கலைத்தபோதும்
உன் தந்தையை நீ சிதையூட்டி திரும்பியபோதும்
துயிலாத என்னுயிர் கெடாமலிருந்தது
நீயெனும் ஒரே வாசகமே என் சிதையை அணைத்தது

இறுதியாகப் புலன்கள் மரித்த என் சவத்தை
அநாதை விடுதியில் அறைந்த அன்றே
என் உடலை மென்ற உன் பிரசவம்
உயிர்நோக வலித்தது
முதலும் கடைசியுமாய் பூமித்தட்டில்
நானிட்ட பிச்சை நீ
துர்குப்பையாய் எறிந்துவிட்டாய் என்னை
உயிரிருந்த இடத்தில் உடலில்லை
உடலிருக்குமிடத்தில் உயிரில்லை மகனே

இனி என் மரணத்தின் நிழல்வரை
தேங்கிக்கிடக்கும் உன்னைப் பெற்ற ஊனம்
என் கருவறை கொப்புளங்களை
அறிந்ததில்லை நீ மகனே

இன்றும் என் இமைகளில் தேங்கிக்கிடக்கிறது
நீ அம்ம்மாவென முதல்முதலாய் அழைத்தபோது
விந்திய கண்ணீர் துளிகள்
அன்று பாலொழுகிய என் மார்புகள்
இன்று விறைத்துபோயிருக்கிறது

இனி எனதழைப்பு
அநாதை தாலாட்டு மறந்த கட்டில்கள்
இருள் படிந்த விளக்குகள்
தனிமை தூவிய இருக்கைகள்
தட்டேந்திய பருக்கைகள்
செவியெல்லாம் என்னைப்போன்ற குரல்கள்
ஆற்றிடாத அனாதைக் காயங்கள்
உறங்க மறுக்கும் என் இரவுகள்
உன் முகமாய் உரு கொள்கிறது
வேடிக்கை பார்க்கும் நீயற்ற இச்சுவர்
மரணத்தின் அழைப்பை உள் நுழைக்கிறது

உன் முகமற்ற முகமே என் பலவீனம்
உன்னைப் பற்றியே உளறிதீர்க்கிறேன்
நீ துயிலாத இவ்விரவிடம்
எனது இப்போதைய கவலையெல்லாம்
மரணமொழுகும் இவ்வறை
நாளை உனதாகிடக்கூடாதென்பதே

இறுதியாக நான்
மயானம் சுவாசிக்கும் நாளொன்றில்
நிரந்தரமாய் என் தவிப்பின்மீது
ஓர் பாறாங்கல்லை இறக்கி
பாவத்தின் சிலுவையை சுமந்து செல்கிறாய்
மூடிய காத்திருப்பின்மேல் என் மரணம் நகர்கிறது...

@
வாழ்த்துக்கள் போய்வா சகி
எந்தக் காதலில் கண்ணீர் இல்லை
வென்ற காதலும் கண்ணீர்
மீண்டதா நம்பிக்கை நரைத்ததொரு
கேள்வியில் உன் உள்ளங்கை இடைவெளி விரிய
நம் சுவாசங்கள் சுருங்கி மரணம்
நீ விட்ட பாதையை நிரப்புகிறது

உன் பிடி தளர்ந்த அடர்ந்த இரவில்
மூச்சுக்குமிழ் தொண்டை வரை இறுகி
சுருக்கம் விழும் சுவாசத்தில் நீ
வழியனுப்பிவிட்டு கடைசியாக பரிமாறிய புன்னகையை
ஒரு முறை மீட்டுக்கொள்கிறேன்
அதன் வெளியெங்கும் உதிர்ந்த பிரியத்தின்
செதில்கள்

என் விரல் உதறிக் கோபித்து
உனை திறந்து அழுத கணங்களில்
என் வலிகளைத் துறந்து உன்
விம்மல்களைத் துடைத்த மறுகணம்
என் தோள்சாய்ந்த அச்சுமைகள் என்னை
உயிர் வதைத்து அரைக்கம்பத்தில் ஏற்றியது

உன்னிடம் திருடிய கைக்குட்டையில்
உலர்ந்த உன் வியர்வையின் நெடி
உன் நேற்றைய சாயல்களை
ஜனனித்துக்கொண்டிருக்கிறது

உன் உருவம் நழுவிய என் உடலற்ற தருணங்களில்
எஞ்சியிருப்பது வெறும்
அசைவற்ற சதைப் பிண்டமே
துயரத்தின் லாகிரியால் இறுகிய கொடுந்துயரை
வெகு இழலகுவாக நிரப்பிவிடுகிறாய்
உன் புறக்கணிப்பில் மனம் பிசகிய வெற்றிடங்களில்
வலைபின்னுகிற சவத்தின் துயரம் நீ ........

என் நினைவில் விரியும் உன் அந்தியில்
நீ முழுவதுமாய் உலாவுகிறாய்
என்னைக் கடந்த பின்பும் எனதிருக்கையில்
முழுவதுமாய் நிறைகிறாய் உன்னை
விடச் சிறந்த வேறொன்றும் என்னிடமிருந்ததில்லை
பெறுவதற்கும் தருவதற்கும்

நேசங்கள் வற்றிய உன் மலட்டுத் தேகத்தில்
மலர்வதற்கு இனி முட்கள் தவிர்ந்து
வேறென்ன இருக்கிறது போய்வா சகி
உன் பயணச்சுவட்டின் சுழியில் மூழ்குமென் இறுதி மூச்சு
----------------

படைப்பாளி (Z) ஜபீர் அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

#கவிச்சுடர்_விருது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.